Published:Updated:

வேற்றுக்கிரக இயந்திர நாயும் குறும்புக்காரச் சிறுமியும்! #LiloAndStitch #MovieRewind

வேற்றுக்கிரக இயந்திர நாயும் குறும்புக்காரச் சிறுமியும்!  #LiloAndStitch #MovieRewind
வேற்றுக்கிரக இயந்திர நாயும் குறும்புக்காரச் சிறுமியும்! #LiloAndStitch #MovieRewind

அயல் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் ஓர் இயந்திர நாய், ஒரு குறும்புக்காரச் சிறுமியுடன் இணைந்து, குடும்பம் என்கிற அமைப்பின் அன்பை உணரும் நெகிழ்ச்சியான திரைப்படம்தான் Lilo And Stitch. நகைச்சுவையும் பரபரப்பும் இணைந்த காட்சிகள் அழகிய அனுபவமாக மாற்றுகின்றன. ஆஸ்கர் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடராகவும் தனது பயணத்தைத் வெற்றிகரமாகத் தொடர்ந்துள்ளது. 

அது ஓர் அயல்கிரகம். 'ஜும்பா' என்கிற கோணங்கித்தனமான விஞ்ஞானி ஒருவர், சட்டவிரோதமான பரிசோதனைகளைச் செய்கிறவர். 626 என்று பெயரிடப்பட்ட ஓர் இயந்திரத்தைத் தயார்செய்கிறார். உருவத்தில் குட்டி நாயின் வடிவில் இருக்கும் அது, அராத்துத்தனமான மிஷின். இதைக் கண்டறியும் அரசாங்கம், சமூகப் பாதுகாப்பு கருதி, அந்த இயந்திரத்தை அப்புறப்படுத்த உத்தரவிடுகிறது. விஞ்ஞானியையும் சிறையில் அடைக்கிறது. 

இந்நிலையில், அரசு அதிகாரிகளை ஏமாற்றிச் சாமர்த்தியமாக தப்பிக்கும் இயந்திர நாய், விண்ணியந்திரம் மூலம் பூமியின் ஒரு தீவுக்கு வருகிறது. ‘அந்த நாயை எப்படியாவது தேடிப்பிடித்து வந்தால் உமக்குச் சுதந்திரம்” என்று விஞ்ஞானியிடம் பேரம் பேசுகிறது அரசாங்கம். உதவிக்கு ஓர் ஏஜென்ட்டையும் அனுப்புகிறது. தான் கண்டுபிடித்த தொல்லையைத் தேடி நொந்தவாறு கிளம்புகிறார் ஜும்பா. 

ஹவாய்த் தீவுகளில் ஒன்று, குவாய். அங்கு வசிக்கும் 'லிலோ' என்கிற கறுப்பினச் சிறுமி, மேற்குறிப்பிட்ட இயந்திர நாய்க்குச் சமமான அராத்து. சக மாணவர்களை அடிப்பதும் கடிப்பதும் அவளது பொழுதுபோக்குகளில் ஒன்று. ஆனால், அவளுடைய பின்னணி சோகமானது. அவளது பெற்றோர், கார் விபத்தில் இறந்துவிட்டார்கள். அக்கா நானியின் பராமரிப்பில் இருக்கிறாள். லிலோவின் குறும்புத்தனங்களைச் சமாளிக்க முடியாமல் கோபம் உண்டானாலும், தங்கையின் மீது அளவற்ற அன்பும் இருக்கிறது. லிலோவின் தனிமையைப் போக்க, ஒரு வளர்ப்பு நாயை வாங்கித்தரத் தீர்மானிக்கிறாள் நானி. அதற்கான கடைக்கு இருவரும் செல்கிறார்கள். அயல்கிரகத்திலிருந்து பூமியில் வந்துவிழுந்த இயந்திர நாய், சாலை வாகனங்களில் அடிபட்டு எப்படியோ அந்தக் கடைக்கு வந்துசேர்கிறது. இந்த வித்தியாசமான நாயைப் பார்த்ததும், ‘இதுதான் வேண்டும்’ என்று அடம்பிடித்து வாங்குகிறாள் லிலோ. இயந்திர நாயும் சமர்த்தாக மாற்றிக்கொண்டு நடிக்கிறது. ‘ஸ்டிச்’ என்று அதற்குப் பெயரிடுகிறாள் லிலோ. 

ஆனால், அந்த நாய் செய்யும் குறும்பினால் நானிக்கு வேலை பறிபோகிறது. அதேநேரம், சிறுமி லிலோவை, நானி சரியாகப் பார்த்துக்கொள்வதில்லை என்ற புகாருடன் வருகிறார் ஒரு சோஷியல் வொர்க்கர். தனது தங்கையை இழந்துவிடுவோமோ என்கிற கவலை நானிக்கு. இன்னொரு பக்கம், இயந்திர நாயான ‘ஸ்டிச்’சைத் தேடி விஞ்ஞானி ஜும்பா அலையும் போராட்டம். ஸ்டிச் அவர்களிடம் பிடிபட்டதா, லிலோவுக்கு என்ன ஆனது என்பதை நெகிழ்வும் சுவாரஸ்யமும் கலந்த காட்சிகளாகச் சொல்லியிருக்கிறார்கள். 

வால்ட் டிஸ்னி தயாரிக்கும் அனிமேஷன் திரைப்படங்களின் அசத்தலான தரம், இதிலும் தொடர்கிறது. சுவாரஸ்யமான திரைக்கதையும் உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட துல்லியமான சித்திரங்களும், அற்புதமான கற்பனைவளமும் Lilo And Stitch திரைப்படத்தை உன்னதமாக்குகின்றன. 

குறும்புத்தனங்களும் அடாவடியான செயல்களும் செய்வதில் ஒரேமாதிரியான குணாதிசயம் பெற்றிருக்கும் லிலோ மற்றும் ஸ்டிச், நண்பர்களாவது மிகப் பொருத்தமானது. தனது ஆதர்ச பாடகரான எல்விஸ் ப்ரெஸ்லியின் நடனத்தை ஸ்டிச்சுக்குக் கற்றுத்தருவதும், ஸ்டிச் போடும் காட்டுத்தனமான ஆட்டத்தைப் பார்ப்பவர்கள் அலறியடித்து ஓடுவதும் கலகல மசாலா. குடும்பம் என்கிற அமைப்பின் அருமைத் தெரியாமல் சோகத்தை உணர்வதிலும் இருவரும் சரியான ஜோடியே. 

லிலோவின் குடும்ப புகைப்படத்தைப் பார்த்துவிட்டு தனக்கான குடும்பத்தை ‘ஸ்டிச்’ தேடுவதும், ‘விரும்பினால் நீ எங்கள் வீட்டு உறுப்பினராக இருக்கலாம்’ என்று லிலோ சொல்வதும் நெகிழ்வான காட்சிகள். நான்கு கண்கள்கொண்ட விஞ்ஞானி ஜும்பா, ஒற்றைக் கண் அரசு ஏஜென்ட் என எல்லாமே சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. கறுப்பினத்தவர்களைப் பிரதான பாத்திரங்களாகவைத்து தயாரித்த காரணத்துக்காகவே இத்திரைப்படத்தைப் பாராட்டலாம். 

அழிக்கும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரம், மனிதர்களின் அன்பில் கரைந்து உருமாறும் இத்திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார்கள் Chris Sanders மற்றும் Dean DeBlois. பழங்குடியின் பாரம்பர்யமான தன்மை கலந்து வரும் பாடல்களும் ரசிக்கத்தக்கவை. இசையமைப்பாளர் Alan Silvestri தன்னுடைய சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார். 

குழந்தைகளுடன் ரசிக்கத்தக்க, தவறவிடக்கூடாத திரைப்படம் Lilo And Stitch. 
 

பின் செல்ல