Published:Updated:

"இது தொடர்ந்தால், இன்னொரு பாலசந்தரோ பாரதிராஜாவோ கிடைக்கமாட்டார்கள்!" - ஆர்.கே.செல்வமணி #TamilCinemaStrike

"இது தொடர்ந்தால்,  இன்னொரு பாலசந்தரோ பாரதிராஜாவோ கிடைக்கமாட்டார்கள்!" - ஆர்.கே.செல்வமணி #TamilCinemaStrike
"இது தொடர்ந்தால், இன்னொரு பாலசந்தரோ பாரதிராஜாவோ கிடைக்கமாட்டார்கள்!" - ஆர்.கே.செல்வமணி #TamilCinemaStrike

கியூப், யூ.எஃப்.ஓ கட்டணப் பிரச்னை தீரும்வரை புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் அண்மையில் முடிவு எடுக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. அதுபோக, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நேற்று சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய செல்வமணி, "தமிழ் திரைப்படத்துறையின் நலனுக்ககாவும் அதனை சீரமைப்பதற்காகவும் தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். மார்ச் 16 முதல் உள்ளூரிலும், 23-ம் தேதி முதல் வெளியூர் படப்பிடிப்புகளும், திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளும் நிறுத்தி வைக்கப்படும். படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால், தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்தான். ஆனால், இதைக் குறைந்தகால இடராக எடுத்துக்கொண்டு சினிமா எதிர்காலத்தில் செழிப்பாக இருக்க இந்தக் கஷ்டங்களை நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். தொடர்ந்து சில வருடங்களாகவே சினிமா தொழிலாளர்கள் சம்பளம் வாங்குவதே கஷ்டமாக இருக்கிறது. காரணம், எல்லாத் தயாரிப்பாளர்களுமே நஷ்டத்தில் இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அது அவர்களது தவறு என விட்டுவிடலாம். ஆனால், மொத்த திரையுலகிற்குமே இவ்வாறான பிரச்னை என்றபோது, அரசாங்கம் தலையிட்டு இந்தப் பிரச்னைகளைத்  தீர்த்துவைக்க வேண்டும். இந்திய திரைப்படத்துறையினால் நேரடியாக இரண்டு லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக மூன்று லட்சம் நபர்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. சினிமாத்துறையை நம்பி இருக்கும் இவர்கள் அனைவருடைய வாழ்க்கையுமே கேள்விக்குறியாக இருக்கிறது. இதைச் சீரமைக்க வேண்டியது அரசாங்கத்தோட தலையாய கடமை. அரசாங்கம் ஒரு கார்ப்பரேஷன் அமைக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் என எல்லாத் துறையைச் சார்ந்தவர்களும் அதில் இருக்க வேண்டும். யாருக்கும் பிரச்னை வராமல் இந்தத் தொழிலை நடத்த அரசாங்கம் வழி செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு நஷ்டம் வரும்போது வலிமையுள்ள அமைப்புகள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு, மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன என்ற நிலைமைக்குத் தள்ளும் நிலை ஏற்படுகிறது. 

2017-ல் தமிழ்ப் படங்களின் சக்சஸ் ரேட் 11 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. ஆனால், வெற்றிபெற்ற அந்த 22 படங்களின் தயாரிப்பாளர்களுக்கு லாபமா என்றால், இல்லை. ஓரிரு படங்கள் மூலமாகக்கூட தயாரிப்பாளருக்கு லாபம் வராமல் இருக்கிற சூழலால், சினிமாத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அப்போது புரொடக்‌ஷனில் இருந்து ஐந்து பேர் செய்ய வேண்டிய வேலையை நாலு பேரை வைத்து செய்யச் சொல்கிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அட்ஜஸ்ட் செய்து நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இனி, எங்களால் அட்ஜஸ்ட் செய்ய முடியாது. கியூப் பிரச்னை, தயாரிப்பாளருக்கான பிரச்னை என்று நினைக்காமல் அரசாங்கம் இதிலுள்ள குற்றம் குறைகளை ஆராய்ந்து ஒழுங்கமைக்க வேண்டும். 2,500 தியேட்டர்கள் இருந்தபோது, 'ஏ' சென்டரில் 1,000 தியேட்டர்களும், 'பி' சென்டரில் 800 தியேட்டர்களும் 'சி' சென்டரில் 600 தியேட்டர்களும் இருந்தது. மக்கள் தங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்ப மூன்று சென்டர்களிலும் சமமாகப் படம் பார்த்து வந்தனர். நஷ்டம், ஒழுங்கற்ற கட்டமைப்பு இந்த மாதிரியான விஷயங்களால் பி, சி சென்டர்களில் இருக்கும் தியேட்டர்கள் மூடப்பட்டது. மீதமுள்ள தியேட்டர்கள் மேட்டுக்குடி மக்கள் பார்ப்பதற்குத் தகுந்த மாதிரியான தியேட்டர்களாகவே இருக்கின்றன. அப்போது, திரைப்படங்களை உருவாக்குபவர்கள் 'பாகுபலி', 'எந்திரன்' மாதிரி இந்தியா முழுக்கப் பெரிய அளவில் ரிலீஸாகும் வகையில் படங்களையே எடுத்தால்தான் சரியாக இருக்கும் என நினைக்கின்றனர். இந்த மாதிரியான சூழல் இருந்தால் இன்னொரு பாலசந்தரோ, பாரதிராஜாவோ உருவாக முடியாத நிலைமை உண்டாகியிருக்கிறது. மேலும், தமிழ் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் படமே உருவாகாது. மேட்டுக்குடி மக்கள் மட்டும் பார்க்கும் அளவு திரைப்படங்கள் வந்தால், மற்ற மக்களின் நிலை என்ன ஆகும்?  அதற்கு, தமிழக அரசுதான் வழிவகை செய்ய வேண்டும்.

எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடியோ பார்லர் அமைத்ததுபோல, தமிழ்நாடு முழுக்க 10,000 சின்னத் திரையரங்குகள் அமைத்துத் தரவேண்டும்.  இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால், பலரின் குடும்பம் நன்றாக இருக்கும். இது குறித்துப் பேசப்பட்டு வருவதாகச் செய்திகள் வந்தன. அப்படி இல்லாத பட்சத்தில் நாங்கள் அனைவரும் மாபெரும் ஊர்வலமாகச் சென்று முதலமைச்சரிடம் எங்கள் கோரிக்கைகளைக் கொடுக்க இருக்கிறோம். இது கியூப், தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் எனத் தனித்தனியான கோரிக்கைகள் அல்ல. ஒட்டுமொத்த சினிமாத்துறைக்கான கோரிக்கை" என்றார்.