Published:Updated:

"ரஜினி, கமல் சார்... இந்தக் கேள்வியை மக்கள் கேட்டா, என்ன பதில் சொல்வீங்க?" - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே #TamilCinemaStrike

"ரஜினி, கமல் சார்... இந்தக் கேள்வியை மக்கள் கேட்டா, என்ன பதில் சொல்வீங்க?" - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே #TamilCinemaStrike
"ரஜினி, கமல் சார்... இந்தக் கேள்வியை மக்கள் கேட்டா, என்ன பதில் சொல்வீங்க?" - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே #TamilCinemaStrike

சினிமா ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. இதனால், புதிய படங்கள் எதுவும் ரிலீஸாகமால் இருக்கிறது. மேலும், இன்று முதல் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என அறிவித்திருந்தனர். இதனால், ஷூட்டிங் எதுவும் நடக்காமல் இருக்கிறது. இதற்கிடையில் சினிமாவின் ஜாம்பவான்களாகிய ரஜினியும், கமலும் தங்களின் அரசியல் பிரவேசத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் கமல் தனது அரசியல் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலைகளில் முனைப்புடன் இருக்க, ரஜினியோ இமயமலைக்கு ஆன்மிகப் பயணமும் சென்றுள்ளார். இதனால், இவர்கள் இருவரும் ஸ்டிரைக் குறித்த எந்தவொரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. சினிமாவைச் சேர்ந்த பலரும் இதை விமர்சித்துவரும் நிலையில், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் தனது டிவிட்டர் கணக்கில், 'கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம். கோடம்பாக்கம் சேவையே இப்போதைய தேவை' என ரஜினி, கமலைக் குறிப்பிட்டிருந்தார். ஜே.எஸ்.கே.சதீஷிடம் பேசினேன்.  

''மூன்று வாரங்களாக புதிய தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆகாமல் ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. சினிமாத்துறையில் உச்சத்திலிருந்த ரெண்டுபேர் அரசியலுக்கு வந்துட்டாங்க. கண்டிப்பா, அவங்க மக்களுக்கு நல்லது செய்றதுக்காகத்தான் வந்திருக்காங்க. நானே, ரெண்டுபேரையும் நேரடியா போய்ப் பார்த்து வாழ்த்து தெரிவித்து டிவீட் போட்டேன். ஏன்னா, நம்ம சினிமாத்துறையிலிருந்து அரசியலுக்குப் போனா, சந்தோஷம்தான். ஆனா, இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரச்னை சினிமாவில் நடந்துக்கிட்டு இருக்கும்போது, ஏன் சின்ன கவனம் இந்த விஷயத்தில் செலுத்தக் கூடாது. இவங்க ரெண்டு பேருக்கான வாய்ஸுக்கு வேல்யூ அதிகம். அதுக்கான ரிசல்ட் பாஸிட்டிவாக அமையும். நான் கேள்வி கேட்கிறதுக்கும், விஷால் மாதிரியான ஒருத்தர் பொறுப்பிலிருந்து கேள்வி கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ரஜினி, கமல் சார் இருவரும் இணைந்தே ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணிப் பேசினால், நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஊருக்கே நாம அறிக்கை கொடுத்துக்கிட்டு இருக்கோம். நல்ல விஷயங்களைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா, சினிமாவில் இருக்கும் பிரச்னை குறித்து இவர்கள் ஏன் பேசுவதில்லை? பிரச்னையின் தீர்வுக்காக அவர்கள் பேசுவது கடமையில்லையா? அவர்களிடம் பண உதவி எதுவும் கேட்கவில்லை. இதைப்பற்றி பேசுங்கள் என்றுதான் சொல்கிறோம். வீட்டுல ஒரு பிரச்னைனா, குடும்பத் தலைவர் பேசினால்தான் பத்துப் பேரில் ஆறு பேராவது கேட்பார்கள். அதேமாதிரிதான் இந்தப் பிரச்னையும். கியூப், தியேட்டர் உரிமையாளர்களை அழைத்துப் பேசணுமில்லையா? இல்லைனா, அரசாங்கத்திடமாவது பிரச்னையைத் தீர்க்கச் சொல்லி கேட்கணும். இதெல்லாம் ஏன் செய்யமாட்டேங்கிறாங்க. நாளைக்கு மக்களே அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்... இது அவர்களுக்கு மைனஸ்தானே? இதெல்லாம் சின்னதா ஒரு நெகட்டிவ்தானே? 

நான் போட்ட டிவிட்டைப் படித்து, 'தயாரிப்பாளர் கவுன்சிலில் இதைப் பதிவுசெய்திருக்கலாம்' என்றே சொன்னார்கள், சமூகவலைதளத்தில் சொல்லக்கூடாதா என்ன... விஷால் தலைமையில் நடக்கும் இந்த ஸ்டிரைக் கியூப் பிரச்னைக்காக மட்டுமே நடக்கவில்லை. சினிமாவின் ஒட்டுமொத்தப் பிரச்னைகளுக்காகவும் நடக்கிறது. வெறும் 22,000 ரூபாய் கியூப் கட்டணத்திற்காக மட்டும் நாங்கள் போராடவில்லை. தியேட்டரில் பாப்கார்ன், தண்ணீர் பாட்டில் மூன்று மடங்கு விலை அதிகமாக விற்கப்படுகிறது. பார்கிங் கட்டணமும் அதிகம். மாற்று மொழி சினிமாக்களை ரிலீஸ் செய்யும்போது தமிழ் சினிமாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து ரிலீஸ் செய்யுங்கள். வருடத்துக்கு 52 வாரங்கள்தாம் இருக்கின்றன. இதில்தான், 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ்னு எல்லா மொழிப் படங்களும் ரிலீஸ் ஆகும்போது, தமிழ்ப் படங்களுக்கான ஸ்கிரீன்ஸ் குறைவாகவே கிடைக்கிறது. டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'துருவங்கள் பதினாறு' படம்  ரிலீஸ் ஆகும் போது முதல் வாரத்தில் ஒரு ஷோதான் கொடுத்தாங்க. அப்புறம் நல்லா இருக்குனு தெரிஞ்சவுடனே, ஸ்கிரீன்ஸை அதிகரிச்சாங்க. இதில், லாபம் தியேட்டர்காரங்களுக்குத்தான். ஏன்னா, முதல் வாரம் ரிலீஸ் ஆச்சுனா தயாரிப்பாளருக்குக் கிடைக்கிற ஷேரிங் அதிகம். அடுத்தடுத்து வரும் வாரங்களில் ஷேரிங்ஸ் குறைவு. இப்படித்தான் இருக்கு, தயாரிப்பாளர்களின் நிலைமை. தவிர, நடிகர்களின் சம்பளத்தில் ஒரு வரையறையைக் கொண்டுவரணும். மினிமமாக இவ்வளவு சம்பளம் கொடுங்க; படம் ஓடினால் அவர்களுக்கு ஒரு ஷேரிங்... இப்படிச் செய்யலாம். நடக்கும் ஸ்டிரைக் முப்பது நாள் தொடர்ந்தாலும் ஒரு திருப்புமுனையோடு வரவேண்டும். அப்போதான் சினிமாத்துறை நல்லாயிருக்கும். 

கடுகளவு பிரச்னைக்காகப் போராடிக்கிட்டு இருக்காங்க. ஆனா, மலையளவு பிரச்னை கொட்டிக் கிடக்கு. ஹீரோக்களின் சம்பளம் கண்டிப்பாகக் குறைய வேண்டும். பணம் கொடுக்குற தயாரிப்பாளர்களின் முக்கியப் பிரச்னை இது. படத்துக்கான விளம்பரம் கொடுப்பத்தில்கூட கட்டுப்பாடு கொண்டு வரணும், ஹீரோக்களை ஏ.பி.சினு மூணு தரத்துல பிரிச்சு சம்பளத்தைக் கொடுக்கணும். இதுக்கெல்லாம் உடன்படுற ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கணும். முடியாதுனு சொல்ற ஹீரோக்களை, அவங்களே படம் எடுத்து நடிச்சிக்கட்டும்!" என்கிறார், சதீஷ்.