Published:Updated:

``மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்!" - உற்சாக சாந்தனு

``மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்!" - உற்சாக சாந்தனு
``மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்!" - உற்சாக சாந்தனு

``மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்!" - உற்சாக சாந்தனு

`` 'நந்தலாலா' படத்திலேயே சாந்தனு கமிட் ஆகியிருக்கணும். ஆனா, இது கொஞ்சம் லேட்'னு சொன்னார் மிஷ்கின் சார். என்னோட வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம், மிஷ்கின் சாரை சந்தித்ததுதான். கண்டிப்பா இனி என்னோட சினிமா பயணம் வெற்றி அடையும்னு நம்புறேன்!" என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் சாந்தனு. 

"சினிமாவின் அடுத்த கட்டம் மிஷ்கினுடனா?"

" 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தோட தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், மிஷ்கின் சாருக்கும் ரொம்பநாள் முன்னாடி ஒரு மீட்டிங் நடந்துச்சு. அப்போ மிஷ்கின் சார், 'சாந்தனு முன்னவிட இப்போ ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டான். அடுத்தப் படத்துல ஹீரோவா நடிக்க வெச்சா, உங்களுக்கு ஓகேவா'னு ரவி சார்கிட்ட கேட்டதும், சார் 'டபுள் ஓகே' சொல்லிட்டார். அப்படியே 'இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்'னு ரவி சார் சொன்னார். 

'சாந்தனு ரொம்பத் திறமையான பையன். ஆனா, அவருடைய திறமையை நிரூபிக்கிற மாதிரியான படங்கள் அமையலை. கண்டிப்பா இந்த வாய்ப்பு மூலமா, சாந்தனுவுக்குப் பெரிய எதிர்காலம் காத்துகிட்டு இருக்கு. பாக்யராஜ் சார்கிட்டதான் நான் சினிமா கத்துக்கிட்டேன். அவருக்கு ஏதாவது நன்றிக்கடன் செலுத்தணும்னு ரொம்ப நாளா நெனச்சுட்டு இருந்தேன். இப்போ அந்த வாய்ப்பு சாந்தனு நடிக்கிற படத்தை தயாரிப்பது மூலமா கிடைச்சிருக்கு'னு ரவி சார் சொல்லி சந்தோஷப்பட்டார். 

ஒருநாள் ராத்திரி ரவி சார்கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு, 'உன்கிட்ட ஒரு முக்கியமான நபர் பேசணுமாம், இரு அவர்கிட்ட போனைத் தர்றேன்'னு சொன்னார். அப்போ மிஷ்கின் குரலைக் கேட்ட எனக்கு, அவ்வளவு சந்தோசம். வானத்துக்கும், பூமிக்கும் குதிக்காத குறைதான். 'ரவி சாரும், நானும் சேர்ந்து படம் பண்ணப்போறோம். அதுக்கு நீதான் ஹீரோ'னு சொன்னார். என்னால அதை நம்பவே முடியலை. இது எனக்கு மட்டும் இல்லை, என் நிலைமையில இருக்கிற எல்லாருக்கும் மறக்கமுடியாததா இருக்கும். அப்போ, 'சார் உங்களை மீட் பண்ண முடியுமா'னு நான் கேட்டேன். ' சரி... உடனே என்னோட ஆபீஸுக்கு வா'னு சொன்னதும், அங்கே போய் நேரா அவர் கால்ல விழுந்துட்டேன். இப்படித்தான் இந்தப் படத்துல கமிட் ஆனேன். இப்போவரை மிஷ்கின் சார் என்னை ஏன் ஹீரோவா நடிக்க வைக்கணும்னு ஆசைப்படுறார்னு தெரியலை." 

"பாக்யராஜ் எப்படி ரியாக்ட் பண்ணார்?" 

"அப்பாவும் மிஷ்கின் சாரும் நல்ல நண்பர்கள். மிஷ்கின் சாரோட முதல் படமான 'சித்திரம் பேசுதடி' படத்தை முதல்ல அப்பாகிட்டதான் போட்டுக் காட்டினார். அப்போ, அப்பாகூட நானும் போயிருந்தேன். அவரோட முதல் படம் பார்த்ததுல இருந்தே மிஷ்கின் சாரோட வேலைகள் அத்தனையும் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் 'துப்பறிவாளன்' படத்துல வில்லன் ரோல்னாலும் பரவாயில்லைனு நடிச்சார். என்னை மிஷ்கின் சார் நடிக்க வைக்கிறார்னு, சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தைகள் இதுதான், 'மிஷ்கின் ஒரு சிறந்த படைப்பாளி. அவர் மூலமா வாழ்க்கையில உனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு. உன்னை அவர்கிட்ட அப்படியே ஒப்படைச்சிடு. உன்னோட நடிப்பில் இருந்து லுக் வரைக்கும் பக்காவா பார்த்துக்குவார்'னு சொன்னார். அப்பா எனக்கு சினிமா சார்ந்த அறிவுரைகளை தருவதே ரொம்ப அபூர்வம். 'கண்டேன்' படத்துல பார்வைக் குறைபாடு உடைய கேரக்டர்ல நான் நடிக்கும்போது, சில அறிவுரைகளைக் கொடுத்தார். அவங்க எப்படி சாப்பிடுவாங்க, எப்படி ரோடு கிராஸ் பண்ணுவாங்கனு சொல்லிக்கொடுத்தார். அதுதான் என் சினிமா வாழ்க்கையில அவர் பண்ண அறிவுரை. வீட்ல இருக்கிற எல்லாருமே சினிமாவுல இருக்கிறதுனால, சினிமா தவிர்த்து மத்த விஷயங்களைப் பத்தி பேசுறதுலதான் ஆர்வமா இருப்போம்."

"கீர்த்தியை இப்போ டிவி நிகழ்ச்சிகள்ல பார்க்கவே முடியலையே"

"கீர்த்தி இப்போ ஒரு சின்ன பிரேக்ல இருக்காங்க. கொஞ்சநாளைக்கு முன்னாடி கலர்ஸ் டிவியில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறதுக்குக் கூப்பிட்டாங்க. இப்போதைக்கு ஃப்ரீ-லான்ஸிங்கா நிறைய வேலையில கமிட் ஆகியிருக்கிறதுனால, முழுநேர சேனல் வேலைகளுக்குப் போகமுடியலை. இதெல்லாத்தையும் மீறி நல்ல நிகழ்ச்சி கிடைச்சதுனா, மீண்டும் தொகுத்து வழங்குவதை தொடங்கிடுவாங்க." 

"ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல உங்களின் ஒருநாள் எப்படி இருக்கும்?"

"ஒரு படம் முடிந்தது அடுத்தபடம் ஆரம்பிக்கிற இடைவெளியில் நிறைய கதைகளைக் கேட்பேன். 'முப்பரிமாணம்' படம் ரிலீஸாகி, ஒரு வருடம் முடிஞ்சுடுச்சு. இந்த ஒரு வருடம் நான் பண்ணிட்டு இருந்த ஒரே வேலை கதை கேட்கிறது மட்டும்தான். அப்படி ரெண்டு கதைகளுக்கு ஓகே சொல்லிருக்கேன். மிஷ்கின் சாரோட படம் முடிந்தவுடனே, அந்தப் படங்களுக்கான வேலைகளை ஆரம்பிக்கணும். 

"பார்த்திபன் படத்துல நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"சினிமாவுல பெரிய அங்கீகாரம் இருக்குற ஒருத்தவங்களோட வேலை பார்க்கும்போது கிடைக்கிற அனுபவத்துக்கு ஈடுஇணையே கிடையாது. பார்த்திபன் சார் அந்த மாதிரியான ஞானத்தை அள்ளிக்கொடுக்குற அறிவுப்பெட்டகம். நாம சாதாரணமா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனாலே போதும், நம்மளை எப்படி அந்தக் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி செட் பண்றதுனு அவருக்குத் தெரியும். 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்காக பிரபுதேவா சார் பண்ண கோரியோகிராஃபி என் நடனத் திறமையை இன்னும் அதிகப்படுத்துச்சு."

``சினிமாவுல உங்களுக்கு இருக்குற நெருங்கிய நண்பர்கள் பத்திச் சொல்லுங்க"

``சினிமாவுல இருக்கிற நண்பர்கள் எல்லாரும் ரொம்ப உதவிகரமா இருக்குறாங்க. உதாரணத்துக்கு, 'முப்பரிமாணம்' படத்துல 26 சினிமா பிரபலங்கள் ஒரு நடனம் ஆடணும்னு முடிவு எடுத்தோம். அப்போ நான் ஒரு ஃபோன் கால் பண்ணேங்கிறதுக்காகவே, அசோக் செல்வன், ஆர்யா, பாபி சிம்ஹா, கலையரசன்னு நிறைய பேர் வந்திருந்தாங்க. விஷால், விஷ்ணு, விக்ராந்த், பரத், சிபி, சக்தி, ஆதவ் கண்ணதாசன்... என் நண்பர்கள் பட்டாளம் பெருசு! 

விஷாலுக்கு மத்தவங்களுக்கு உதவி பண்ணணும்ங்கிற மனப்பான்மை அதிகமா இருக்கு. தனக்குப்போக மத்தவங்களுக்கு 'தானம்- தர்மம்' என்ற கொள்கையை இவர் பின்பற்றுவதுக்கு மாறாக, தன்கிட்ட இருக்கிற எல்லாத்தையுமே மத்தவங்களுக்கு வாரி வழங்கணும்னு நினைப்பார். அவர் அரசியல்ல தலைதூக்குனா, கட்டாயமா மக்களுக்கு நல்லதுதான் பண்ணுவார். தலைவனுக்கான அத்தனை திறமைகளும் விஷால்கிட்ட இருக்கு. நாங்கெல்லாம் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' மேட்ச் ஆடும்போதுகூட, விஷால் எங்க எல்லாரையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவார்."

"'சுப்ரமணியபுரம்', 'காதல்', 'களவாணி' ஆகிய படங்கள்ல நீங்கதான் நடிக்கிறதா இருந்துச்சு..."

"உண்மைதான். 'கதை பிடிக்காம நான் விலகிட்டேன். அப்பா இந்தப் படங்களையெல்லாம் மறுத்துட்டார்'னு நிறைய பேர் சொல்றாங்க. அப்படி எதுவுமே கிடையாது. அப்போ வேறு சில படங்கள்ல நடிக்கிறதுக்கு கமிட் ஆயிருந்தேன். அப்போதான் நான் சினிமாவுல காலடி எடுத்து வெச்ச நேரம். கொஞ்சம் பொறுமையா போகலாம்னு நெனச்சேன். இதெல்லாம் நம்ம கைமீறிப்போன விஷயங்கள். இப்போ அதுக்கெல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி மிஷ்கின் சார் படத்துல கமிட் ஆகியிருக்கேன்!" என்று நம்பிக்கையுடன் முடித்தார், சாந்தனு.   

அடுத்த கட்டுரைக்கு