Published:Updated:

சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!

சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!
சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!

சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!

இன்றைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோயின்களில் 90 சதவிகிதம் மற்ற மாநிலத்தில் இருந்துதான் களமிறங்குகிறார்கள், களமிறக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து கமிட்டாக அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு கோலிவுட்டிற்குள் ஒன்றிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ஒரு தமிழ் படத்திலாவது நடித்து முகம் தெரிந்தால்தான் அவர்களைக் கொண்டாடுவார்கள், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவார்கள். ஆனால், இன்றோ ஒரு படத்தில்  கமிட்டாகி அதற்கான ஸ்டில்ஸ் வெளியே வந்தவுடனேயே அவர்கள் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித் தமிழில் இன்னும் தங்களின் நடிப்பில் ஒரு படம்கூட வெளிவராத நிலையில், ஒரு சில கதாநாயகிகளின் பெயர்கள் முன்னனி ஹீரோயின்களின் வரிசைக்கு பிறகு பேசப்பட ஆரம்பித்திருக்கிறது. அப்படி கோலிவுட் பக்கம் பறந்து வந்த பைங்கிளிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
 

சாய் பல்லவி : 

இவர் பெயரை சொன்னால் தெரியாத ஆட்களே இருக்கமாட்டார்கள். 'பிரேமம்' படம் மூலம் மலர் டீச்சராக அனைவர் மனதையும் கவர்ந்தவர், இன்னும் தமிழில் ஒரு படம்கூட நடிக்கவில்லை என்றால், 'அப்படியா?' என்பார்கள் பலர். மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கான சில கொள்கைகளுடன் தன் பெயரை மீண்டும் நிலைநிறுத்தி வருகிறார். மலர் டீச்சர் கோலிவுட் பக்கம் எப்போது வருவீர்கள்? என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழ, அழகாக தன் 'கரு' கதையின் மூலம் கோலிவுட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார், இயக்குநர் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் 'என்.ஜி.கே' என அடுத்தடுத்து படங்களின் மூலம் தமிழ் சினிமா சாய் பல்லவியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. 

ராஷி கண்ணா : 

ஹிந்தி, தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தமிழ் சினிமாவிற்குள் இப்போதுதான் என்ட்ரி கொடுத்துள்ளார். சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதுபோக, 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப் ஆகியோருடன் ராஷி கண்ணாவும் சேர்ந்து நடித்துள்ளார். 'மற்ற மொழிப் படங்கள் நிறைய பண்ணியிருந்தாலும், தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் கோலிவுட்டில் வலம் வருகிறார் ராஷி. தற்போது, ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அடங்க மறு' படத்தில் நடித்து வருகிறார். 

ஹூமா குரேஷி :

இந்தி, மராத்தி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஹூமா குரேஷி. 'பில்லா 2' படத்தில் அறிமுக நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அவருடைய மற்ற கமிட்மென்ட்ஸ் காரணமாக அதில் நடிக்க முடியாமல் போனது. துணை நடிகையாகத் தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்த ஹூமா குரேஷி, தற்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'காலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கவுள்ளார். முதல் தமிழ் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் என்பதால், அவரது க்ராஃப் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறது. 

ஷாலினி பாண்டே : 

'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரு படமே இவரை இந்திய சினிமா முழுக்கப் பேசவைத்தது. அந்தளவிற்குத் தன் நடிப்பிலும் எக்ஸ்ப்ரஷனிலும் கலக்கியவரை கோலிவுட் இயக்குநர்கள் அப்ரோச் செய்து, தமிழ்நாட்டுப் பக்கம் அழைத்து வந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமாருடன் '100% காதல்', ஜீவாவுடன் 'கொரில்லா' என அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி'யின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தில் விக்ரம் மகன் துருவிற்கு ஜோடியாக இவர்தான் நடிக்கிறார் என்ற செய்திகளும் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு. 
 

மேகா ஆகாஷ் : 
 

தெலுங்கில் 'லை' என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்த 'ஒரு பக்கக் கதை'. இந்தப் படத்தை முடித்த கையோடு கெளதம் வாசுதேவ் மேனன் கண்ணில்பட, 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்பப்பு அமைந்தது. இந்தப் படத்தின் 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி' பாடலைப் பார்த்து மறுவார்த்தை பேசாமல் மறுபடியும் தொடர்ந்து ரிப்பீட் மோடில் பார்த்தனர், தமிழ் சினிமா ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுடன் 'பூமராங்' படத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை நடிகர்கள், கலைஞர்கள் வந்தாலும் வரவேற்கத் தவறியதில்லை கோலிவுட். இனியும் தவறாது. போதாக்குறைக்கு இந்த ஸ்டிரைக் காரணத்தினால் இவர்கள் நடித்த படங்கள் வெளியாகமல் இருக்கிறது. ஸ்டிரைக் முடிந்து படங்கள் ரிலீஸானால், இவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கலாம். 
 

அடுத்த கட்டுரைக்கு