Published:Updated:

'மேனரிஸத்தில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை சார்லைஸ் தெரான், அழகோ அழகு... அதைத்தவிர?!" - #Gringo படம் எப்படி?

தார்மிக் லீ
'மேனரிஸத்தில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை சார்லைஸ் தெரான், அழகோ அழகு... அதைத்தவிர?!" - #Gringo படம் எப்படி?
'மேனரிஸத்தில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை சார்லைஸ் தெரான், அழகோ அழகு... அதைத்தவிர?!" - #Gringo படம் எப்படி?

'மேனரிஸத்தில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை சார்லைஸ் தெரான், அழகோ அழகு... அதைத்தவிர?!" - #Gringo படம் எப்படி?

கேன்னபாக்ஸ் என்ற நிறுவனம் கஞ்சா செடியிலிருந்து இரு மாத்திரையை உருவாக்க மெக்ஸிகோவிற்குப் பயணப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார். அங்கு சென்றபின் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வேலைப் பயணம், கொலைப் பயணமாக மாறிவிடுகிறது. இந்தச் சிக்கல்களுக்குள் ஒழிந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதே, Gringo படத்தின் க்ளைமாக்ஸ். 

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹரால்டு சோயின்கா (டேவிட் ஒயிலோவா) என்பவர் அவரது நண்பர் ரிச்சர்டு ரஸ்க் (ஜோயல் எட்ஜர்டன்) நடத்தி வரும் கேன்னபேக்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்ல முடிவெடுக்கும் ரிச்சர்டு, அவரது கூட்டாளி எலைன் மார்கின்ஸனுடன் (சார்லைஸ் தெரான்) கலந்துரையாடி, கஞ்சா செடியிலிருந்து மாத்திரையை உருவாக்க முடிவெடுக்கிறது. போதைப் பொருள்களுக்குப் பெயர்போன இடம் மெக்ஸிகோ என்பதால், அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ புறப்பட முடிவெடுக்கிறார்கள். மாத்திரை தயாரிப்பிற்காக அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தோடு கூட்டணி அமைக்கவும் முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்துகொண்ட ஹரால்டு அவர்களோடு மெக்ஸிகோ செல்வதற்கு இவரும் தன் பங்கிற்கு ஒரு முடிவை எடுக்கிறார். இப்படி அவரவர்கள் எடுத்த முடிவு, மெக்ஸிகோ சென்றபின் ஏதோ ஒரு பிரச்னையின் தொடக்கமாக மாறிவிடுகிறது. அது அனைத்தும், ஹரால்டு சோயின்கோவின் கழுத்துக்குக் கத்தியாக வருகிறது. மெக்ஸிகோ முழுவதும் பலபேர் பல காரணங்களோடு இவரை வலைவீசி தேடிவருகின்றனர். அந்தக் காரணங்கள் என்னென்ன, பிரச்னைகள் என்னென்ன என்பதை டார்க் காமெடி கலந்த ஆக்‌ஷனில் சொல்ல முயற்சிசெய்திருக்கிறார், இயக்குநர் நேஷ் எட்ஜர்டன்.  

வழக்கமான ஹாலிவுட் சினிமா டெம்ப்ளேட்டில்தான் இந்தப் படமும் தயாராகியிருக்கிறது. `We're the millers, `Central intelligence', `Horrible bosses' என இந்த ஜானரில் எக்கச்சக்க படங்கள் வந்திருக்கின்றன. இப்படிப் பல ஜாலி கேலி படங்களின் வரிசையில், 'க்ரிங்கோ'வும் இடம்பெறுமா என்றால், கேள்விக்குறிதான். ஏதோவோர் இடத்திற்குப் பயணப்படும்வரை திரைக்கதை தத்தளிக்கும், அதற்குப் பின் சூடு பிடித்து காமெடி, ரன்னிங், சேஸிங், ஆக்‌ஷன்... என சிலபல `ஜானர்' மசாலாக்களை லேசாகத் தூவி, முடிவில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்துவிடுவார்கள். இதுதான் ஹாலிவுட் சினிமாவில் பயன்படுத்திவரும் பாரம்பர்ய டெக்னிக். ஆனால், `க்ரிங்கோ' படத்தைப் பொறுத்தவரை மெக்ஸிக்கோவிற்குச் சென்றபின்னும் திரைக்கதையில் ஏகப்பட்ட இடங்களில் திணறல்கள். ஆங்காங்கே வொர்க் அவுட்டான காமெடிகள், ஒட்டாத ஆக்‌ஷன் காட்சிகள், சூழலின் பரபரப்பைக் கார் போகும் வேகத்தில் மட்டுமே காட்டியது... எனப் படத்தின் நிறைய இடங்களில் ஓட்டைகள். டேவிட் ஓயிலோவா, ஜோயல் எட்ஜர்டன், சார்லைஸ் தெரான் ஆகிய மூன்று கதாபாத்திரங்களைத் தவிர, தேண்டி நியூட்டன், சார்ட்லோ காப்லி, அமாண்டா செய்ஃப்ரெடு எனப் படத்தில் இருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் கதைக்குப் பொருந்தாத வடிமைப்பாக இருக்கிறது. 

படத்தில் என்டர்டெயின்மென்டாக இருந்தது, சார்லைஸ் தெரானின் நடிப்பு. சாவேஜ் ரக வசனங்கள், காப்பரேட் முதலாளிகளுக்கே உரித்தான இதயமற்ற குணாதிசயம் எல்லாம் பக்கா. அணிந்திருக்கும் காஸ்ட்யூமில் தொடங்கி, உதட்டில் வைத்திருக்கும் லிப்ஸ்டிக் வரை... கதாபாத்திரமாவே மாறி நடித்திருக்கிறார், சார்லைஸ். இவருடைய கதாபாத்திர வடிவமைப்பிற்குக் கொடுத்த மெனக்கடலை படத்தின் திரைக்கதையிலும் பயன்படுத்தியிருக்கலாமே இயக்குநரே. இவர்களைத் தவிர, டேவிட் ஒயிலோவா, ஜோயல் எட்ஜர்டன் என இருவரும் கதைக்குத் தகுந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள். படம் மெக்ஸிக்கோவில் பயணப்படும்போது, அங்கிருக்கும் இடங்களையாவது படமாக்கி, நட்டாஷா, எட்வர்டின் ஒளிப்பதிவை அழகாக்கியிருக்கலாம், அதிலும் ஏமாற்றம். கிறிஸ்டோஃப் பெக்கின் இசையமைப்பும் படத்திற்கு எந்த வகையிலும் உதவாமல்போனது கூடுதல் சோகம். கதையாக படத்தில் எந்தவிதக் குறையும் இல்லை. கதைக்குத் தேவையான விஷயங்களை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருந்தால் இந்தப் படத்தின் டிராவல் செம ஜாலியாக இருந்திருக்கும். 

ஆங்காங்கே இடம்பெற்ற விறுவிறுப்பைப் படம் முழுவதுமே பயன்படுத்தியிருந்தால், `க்ரிங்கோ' அடித்திருக்கும் ஹிட் மேங்கோ! 

அடுத்த கட்டுரைக்கு