Published:Updated:

படமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு..! - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி?

படமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு..! - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி?
படமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு..! - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி?

`இகரஸ்’ என்பது கிரேக்கக் கடவுள் ஒன்றின் பெயர். இகரஸின் தந்தை டேடலஸ், அவருக்கு மெழுகால் செய்யப்பட்ட இறக்கைகளை அளித்து, கடலுக்கு மிக அருகிலும், சூரியனுக்கு மிக அருகிலும் பறக்கக் கூடாது என நிபந்தனை அளிக்கிறார். குறுகிய நிலப்பகுதியில் பறப்பதை விரும்பாத `இகரஸ்’ உயர உயர பறக்கிறார். சூரிய வெப்பத்தால் இறகுகளில் இருக்கும் மெழுகு உருக, கடலில் விழுந்து சாகிறார் `இகரஸ்’. இந்த கிரேக்க புராணக் கதை தன் லட்சியத்தை மீறிச் செயல்படுபவனின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

`இகரஸ்’ இந்த ஆண்டிற்கான `சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. 2017 ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியான இந்த ஆவணப்படம் விளையாட்டுத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. 

`இகரஸ்’ ஆவணப்படத்தின் இயக்குநர் ப்ரைன் ஃபொகெல். அவருக்கு உலகின் மிகப்பெரிய சைக்கிள் ரேஸில் வெற்றிபெற வேண்டும் என்பது கனவு. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் ரேஸில், ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தால் கூட, யாரிடமும் சிக்காமல் வென்றுவிடலாம் என்பதை ப்ரைன் அறிகிறார். இதை அம்பலப்படுத்தும் முயற்சியில்தான் ஈடுபடப்போவதாக ஆவணப்படத்தின் தொடக்கத்தில் ப்ரைன் கூறுகிறார். 

இந்த முயற்சிக்காக அவர் தன்னையே பரிசோதனை செய்யவுள்ளதாகவும் கூறுகிறார். ஊக்க மருந்து பயன்படுத்தியும், எந்த விதமான சோதனைகளிலும் சிக்காமல் தப்பிக்க உதவுவதற்காக அவருக்கு ஒரு ரஷ்ய விஞ்ஞானி கிரகோரி ராட்சென்காவ்வின் தொடர்பு கிடைக்கிறது. ரஷ்ய நாட்டின் விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துக்கு எதிரான அரசு நிறுவனத்திற்கு அன்றைய தலைவராக இருக்கிறார் ராட்சென்காவ்.

அமெரிக்காவில் இருக்கும் ப்ரைனும், ரஷ்யாவில் இருக்கும் ராட்சென்காவ்வும் வீடியோ கால்களில் பேசி கலந்தாலோசித்து, ப்ரைன் எந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் பகிர்கின்றனர். ராட்சென்காவ் அமெரிக்காவிற்கே வந்து ப்ரைனுக்கு உதவுகிறார். 
சில நாள்களுக்குப் பிறகு, ஊக்க மருந்துகளுக்கு எதிரான சர்வதேச நிறுவனத்தில் வெளியிட்ட ஆவணத்தில் ராட்சென்காவ் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து அளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

உலக அரங்கில் தனக்கு தலைகுனிவு ஏற்படுவதை விரும்பாத ரஷ்ய அரசு, ராட்சென்காவ் என்ற தனிமனிதரைக் குறி வைக்கிறது. இதை அறிந்துகொள்ளும் ராட்சென்காவ், ப்ரைன் உதவியோடு அமெரிக்கா வந்தடைகிறார். உலக விளையாட்டு வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை இருவரும் வெளிக்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துணை அதிபர் முட்கோ முதலானோரின் கட்டளைக்கேற்ப ரஷ்ய உளவுத்துறையும் இந்த ஊழலில் பங்கேற்றது அம்பலப்படுத்தப்படுகிறது. இந்த உண்மைகளை வெளியில் கொண்டுவந்த ராட்சென்காவ் அமெரிக்காவின் சாட்சிகள் காப்பகத்தின் கீழ் பாதுகாப்பாக வாழ வைக்கப்படுகிறார். 

முதலில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் ரேஸில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தொடங்கி, எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் உலகின் மிகப்பெரிய வல்லரசான ரஷ்யாவுக்கு 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தடை பெற்றது, தடையைத் தாண்டி மீண்டும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நுழைந்தது என த்ரில்லர் திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது `இகரஸ்’.

`இகரஸ்’ ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதைப் பெற்றபோது ப்ரைன் ஃபொகெல், `இந்த விருதை ராட்சென்காவ் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன். உண்மையை உலகிற்கு சொல்வதற்கான முக்கியத்துவத்தை `இகரஸ்’ உணர்த்துகிறது’ என்றார். 

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட முழு நீள ஆவணப்படங்களில் முதன்முதலாக ஆஸ்கர் விருது பெற்றது `இகரஸ்’. தன் வாழ்வின் லட்சியங்களை மீறி கடலில் விழுந்த `இகரஸ்’ போல, தன் அதிகாரத்திற்குட்பட்டு செய்த குற்றங்களை உலகிற்குச் சொன்ன ராட்சென்காவ் அமெரிக்காவில் எங்கேயோ உயிருக்கு பயந்து பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

ராட்சென்காவ் சொல்வதில் உண்மை இருக்கலாம்; பொய் இருக்கலாம். ஆனால், விளையாட்டுத் துறையில் அவர் அம்பலப்படுத்திய ஊழல்களின் சாத்தியங்கள் நிச்சயமாக இருக்கின்றன என்று பல வல்லுநர்கள் ஆதாரங்களோடு குறிப்பிடுகின்றனர். ஊக்க மருந்துகள் பயன்படுத்தாமல் நேர்மையாக விளையாடும் வீரர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற, சர்வதேச விளையாட்டு நிறுவனங்கள் நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய தருணம் இது. `இகரஸ்’ அதைத்தான் உணர்த்துகிறது.    

பின் செல்ல