Published:Updated:

"முதல் காதல், கல்லூரி நட்பு, கேம்பஸ் கலாட்டாக்கள் ரீவைண்ட்..." - 'கிராக் பார்ட்டி' படம் எப்படி? #KiraakParty

விகடன் விமர்சனக்குழு
"முதல் காதல், கல்லூரி நட்பு, கேம்பஸ் கலாட்டாக்கள் ரீவைண்ட்..." - 'கிராக் பார்ட்டி' படம் எப்படி? #KiraakParty
"முதல் காதல், கல்லூரி நட்பு, கேம்பஸ் கலாட்டாக்கள் ரீவைண்ட்..." - 'கிராக் பார்ட்டி' படம் எப்படி? #KiraakParty

நீளா காலேஜ் வாழ்க்கை, மீளா காதல் இழப்பு, நிலைக்கும் நட்பு. கொஞ்சம் எமோஷன், நிறைய இசை நான்கு வருடக் கல்லூரி வாழ்க்கையை இரண்டரை மணிநேர டைரி பதிவாய்ச் சொல்கிறது, 'கிராக் பார்ட்டி' திரைப்படம். 

கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டில் ரிஷப் ஷெட்டி இயக்கி, ரக்‌ஷித் ஷெட்டி நடித்த 'கிரிக் பார்ட்டி' படத்தின் தெலுங்கு ரீமேக்தான், 'கிராக் பார்ட்டி'.

ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் கிருஷ்ணா (நிக்கில் சித்தார்த்தா). கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும், எதிலும் பெரிய நாட்டமில்லாத 'ஈஸி-கோ' இளைஞனான கிருஷ்ணா, தனது அறை நண்பர்கள் ராகேந்து மௌலி,  விவா ராகவ், ஹெமந்த் உள்ளிட்டோரை சேர்த்துக்கொண்டு அடிக்கும் லூட்டியில் படம் ஆரம்பிக்கிறது. இவர்களைக் கண்டிக்கும் ஸ்டிரிக்ட் ஆசிரியர்,  சீனிவாச மூர்த்தி ( ஹனுமந்த கௌடா) ஆங்காங்கே அட்டென்டன்ஸ் போடுகிறார்.

ஆந்திராவின் ஏதோ ஒரு ஊரின் ஒதுக்குபுறமாய் இருக்கும் அந்தக் கல்லூரியின் கனவுக் கன்னி, மூன்றாம் ஆண்டு மாணவி மீரா (சிம்ரன் பரிஞ்சா). அறிமுகக் காட்சியிலேயே நம்மை வசீகரிக்கும் மீராவை, வயதில் பெரியவள் என்றுகூடப் பார்க்காமல் கிருஷ்ணா ஒரு தலையாய்க் காதலிக்க ஆரம்பிக்கிறான். மீராவை அசத்தும் நோக்கில் ஏதேதோ செய்து மெக்கானிக் பண்டுவிடம் இருந்து (பிரம்மாஜி) பழைய கார் ஒன்றை வாங்குகிறார்கள் கிருஷ்ணா அண்ட் டீம். பண்டு இவர்களில் ஒருவராகிறார். இவர்களின் செயல்களையெல்லாம் பார்த்து சீனியர்கள் இவர்களுடன் மல்லு கட்டுகிறார்கள். இப்படிப் படு ஜாலியாகப் போக, ஒரு பெரிய எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மீராவிற்கு, கிருஷ்ணாவைப் பிடித்துப் போகிறது. இதற்குப் பிறகு கதையில் வரும் எதிர்பாராத ட்விஸ்டுகளால், மீராவுக்கு என்ன ஆனது, கிருஷ்ணா-மீரா காதலின் முடிவு என்ன, கிருஷ்ணாவை ஒருதலைக் காதலுடன் பின் தொடரும் சத்யா (சம்யுக்தா ஹெக்டே) யார்... என்பதற்கான பதில்களே, படத்தின் மீதிக் கதை.

காட்சிக்குக் காட்சி அப்படியே ரீமேக் செய்தாலும் ஒரிஜினல் படத்தின் புத்துணர்வையும் மேஜிக்கையும் தக்கவைக்க அறிமுக இயக்குநர் ஷரண் கோபிஷெட்டி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். படத்தின் திரைக்கதையை ஆந்திர சென்டிமென்டுகளுக்கு ஏற்றார்போல மாற்றியமைத்துத் திரைக்கதை எழுதியிருகிறார், தெலுங்கு 'பிரேமம்' படத்தின் இயக்குநர் சுதீர் வர்மா. வசனங்களை சந்து மொன்டேட்டி எழுதியுள்ளார்.

படத்தின் மூலக் கதையாசிரியர், ரிஷப் ஷெட்டி. நான்கு வருட இன்ஜினியரிங் கல்லூரி வாழ்க்கையை இவ்வளவு உயிரோட்டமாய் எழுதியது, தெலுங்கில் வெளிவந்த 'ஹாப்பி டேஸ்', மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்', 'பெங்களூர் டேஸ்', 'நண்பன்' ஆகிய படங்களின் சாயல் எட்டிப்பார்க்கிறது. நான்கு வருடக் கல்லூரி வாழ்க்கையில் ஒவ்வொருவரின் அனுபவங்கள் மாறலாம். அனால். இக்கதையில் இருக்கும் எமோஷன்கள் எல்லாம் நம்மைக் கல்லூரிக் காலத்திறே அழைத்துச் செல்கிறது.  கிருஷ்ணா அண்ட் டீம் போதையில் பியூனைக் கடத்தும் காட்சி சுவாரஸ்யம். படத்தின் காட்சி ஒன்றில் கிருஷ்ணா சர்ச் மணியை அடிக்க முற்பட, மீரா வேண்டாம் என்பாள். இரண்டாம் பாதியில் அதேமாதிரி ஒரு மணியை அடிக்க சத்யா கிருஷ்ணாவை ஆயத்தப்படுத்துவாள். ஒரு முரண் அழகுடன் இக்காட்சி அமைந்திருக்கும்.

பார்த்தவுடன் கவரும் சாத்வீகப் பெண்ணாக அறிமுக நாயகி, சிம்ரன் பரிஞ்சா. லிப் சின்க்கில் இருக்கும் பிரச்னையைத் தன் நடிப்பால் ஒவர்டேக் செய்கிறார். நிக்கில் சித்தார்த் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற அளவு நடித்திருகிறார். தன்னுடன் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான வெயிட்டேஜ் கொடுத்திருக்கிறார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் 'சென்னைப் பையன்' ராகேந்து மௌலி நடித்திருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாதியில் மொத்த எனர்ஜியையும் ரசிகர்களுக்கு அளிப்பவர், சத்யாவாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹெக்டே. இவரது நடனத்துக்கும், சிரிப்புக்கும் ஆடியன்ஸ் அவுட் ஆகிறார்கள். கன்னடத்திலும் இந்தக் கதாபாத்திரத்தை இவரே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கமர்ஷியலாக வெற்றிபெறத் தேவையான காதல், காமெடி, ஃபைட் என அனைத்தும் இருந்தாலும், படத்தை ஒற்றைத் தூணாகத் தாங்கி நிற்பது அஜ்னேஷ் லோக்நாத்தின் இசை. காலேஜ் கதை என்றாலே கல்சுரல்ஸ் சாங் என்றிருந்த நிலையை மாற்றி, கிருஷ்ணா அண்ட் டீம் சஸ்பென்ஷன் ஆகியதில் தங்கள் நியாயத்தை எடுத்துக்கூறுவதற்கே ஒரு பாடல் வைத்திருந்தது, புதுமை. படத்தின் அனைத்து பாடல்களுமே கதையை நகற்றிச் சென்ற விதமும், அதனைப் படமாக்கிய விதமும் அலாதி. காட்சிகளின் எமோஷன்களைக் கடத்த படத்தின் பின்னணி இசை பெரிதாக உதவுகிறது. அத்வைத்தா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு எந்த சிமிட்டல்களும் இல்லாமல் கதையை நகரச் செய்கிறது. சண்டைக் காட்சிகளும் அதை கிரிக்கெட் வர்ணணையில் படமாக்கிக் கொடுத்திருந்த விதமும் 'செம'!. இப்படிப் படம் முழுக்க விறுவிறுப்பையும் கதையுடன் நாம் ஒன்ற, படத்தொகுப்பாளர் எம்.ஆர்.வர்மா ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். கொஞ்சம் நீளமாய் இருக்கும் இரண்டாம் பாதியில் எடிட்டரின் 'கஷ்டம்' புரிகிறது. ரீமேக் படம் என்றாலே அதன் அசல் படைப்போடு ஒற்றுமைப்படுத்திப் பார்ப்பது இயல்பு என்றாலும், ஒரிஜினலைப் பார்த்திராத ரசிகர்களுக்கு இப்படம் முழுமையாக இருக்குமா? என்ற கோணத்தில் பார்த்தால் இந்தப் படம் செம ட்ரீட்!. கல்லூரி நட்பை, முதல் காதலை, கேம்பஸ் கலாட்டாக்களை சிறு கண்ணீருடன் நினைவுக்கூற நினைப்பவர்களுக்கு, இப்படம்  செம கம்பெனி.

ஒரு பாட்டில் காதல், ஒரு பாட்டில் ப்ரெண்ட்ஷிப் நிறைய நினைவுகள் சைட்டிஷ் என ஃபுல் லூட்டி அடிக்க, இந்த 'கிராக் பார்ட்டி' ஓகே!