Published:Updated:

"பியூட்டி சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ்மீது பொறாமை, சாம் சி.எஸ் ரகசியம்..!" - 'ஆலாலிலோ' ஸ்வாகதா

தார்மிக் லீ
"பியூட்டி சாய் பல்லவி,  ஜி.வி.பிரகாஷ்மீது பொறாமை, சாம் சி.எஸ் ரகசியம்..!" - 'ஆலாலிலோ' ஸ்வாகதா
"பியூட்டி சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ்மீது பொறாமை, சாம் சி.எஸ் ரகசியம்..!" - 'ஆலாலிலோ' ஸ்வாகதா

"பியூட்டி சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ்மீது பொறாமை, சாம் சி.எஸ் ரகசியம்..!" - 'ஆலாலிலோ' ஸ்வாகதா

சினிமா சார்ந்த வேலையைத் தேர்வு செய்து, அதை நமக்குப் பிடித்த வேலையாக மாற்றிக்கொள்ள சில மெனக்கெடல்களைப் போட்டால் மட்டுமே 'சினிமா' சாத்தியமாகும், அதற்கும் நம்மைப் பிடிக்கும். அப்படிப் பத்து வருடங்களுக்குமேல் முயற்சி செய்து, இறுதியாக `கரு' படத்தின் மூலம் தனித்துத் தன் குரலை மக்களுக்கு அடையாளம் காட்டியவர், ஸ்வாகதா. `Music is universal language of mankind' என்ற வாக்கியம் கொண்ட சுவரோடு பிணைப்பில் இருந்த கதவைத் திறந்து வரவேற்றவர், கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் சொல்லத் தொடங்கினார்.   

"இசைமேல எப்போ ஆர்வம் வந்தது?''

``நான் பிறந்து வளர்ந்து எல்லாம் மதுரை. சின்ன வயசுல இருந்தே இசைமேல எனக்கு அலாதி அன்பு இருந்தது. ஸ்கூல் படிக்கிறப்போ, `நீ மியூஸிக் போ, உனக்கு நான் ஆன் டியூட்டி போடுறேன்'னு சொல்லி என்னை நிறைய போட்டிகள்ல கலந்துக்க வெச்சுருக்காங்க. அதேசமயம், நான் நல்லாவும் படிப்பேன், அதனாலயே என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் படிக்கிறதுக்கு பெங்களூர் போனேன். அங்கே போனதுக்குப் பிறகு என்னால பாடவே முடியலை. படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்குற காலேஜ்ங்கிறதால பாடுறதுக்குப் பெருசா ஸ்கோப் இல்லாம போயிருச்சு. இருந்தாலும் பொய் சொல்லிட்டு சென்னை வந்து, இங்கே சில போட்டிகள்ல கலந்துக்குவேன். சென்னையில வேலை கிடைச்சப்போதான், இங்கே வந்தேன். அதனால நான் பார்க்குற வேலையை விட்டுட்டு நிறைய மியூஸிக் டைரக்டர்ஸ் ஆபீஸுக்குப் போய் நான் பாடுன பாட்டைக் கொடுத்துட்டு வந்தேன். 2009-10 ரெண்டு வருடமும் இதைத்தான் பண்ணிட்டு இருந்தேன். இத்தனை வருடத்துக்கு அப்புறம் இப்போதான் `கரு' படம் மூலம் எனக்கு சினிமாவுல சான்ஸ் கிடைச்சிருக்கு!"  

``இந்தப் பாட்டுக்கு உங்களை எப்படித் தேர்வு செஞ்சாங்க?''

``சாம் எனக்கு நல்ல நண்பர். `விக்ரம் வேதா' படம் வந்தப்போ நான் அமெரிக்காவுல இருந்தேன். படத்தோட வெற்றியை சாம்கூட இருந்து கொண்டாட முடியாம போயிருச்சு. இதுக்காக சாம்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த நேரத்துலதான் சாம் என்கிட்ட, `உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு, நீ பண்ணா நல்லாயிருக்கும்'னு சொன்னார். சாமுக்கு என்னுடைய குரல் நல்லாவே தெரியும். தனியா டெமோனு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. நான் டைரக்டர் யாரு, நடிகர் யாரு, எந்த மாதிரி பாட்டுனு எதுவும் கேட்காம அமெரிக்காவுல இருந்து சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். இங்கே வந்தபிறகுதான், விஜய் சார் இயக்குற `கரு' படத்துக்காகப் பாடப் போறேன்னு தெரிய வந்தது. முதல்ல எனக்கு சாம் நல்ல நண்பர், அதுக்காக என்னனுகூட கேட்காம கிளம்பி வந்தேன், அப்புறம் விஜய் சார் படம்னு தெரிஞ்சதும், யார் இந்தப் படத்துல நடிக்கிறாங்கனுகூட கேட்காம பாடுறதுக்கு ஒப்புக்கிட்டேன். ஏன்னா, எனக்கு விஜய் சாரை அவ்ளோ பிடிக்கும். சாமுக்கு `விக்ரம் வேதா' படத்துக்கு அப்புறம் வர்ற படம், `கரு'. அதனால எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். எங்களுக்கு ஜி.வி.பிரகாஷைப் பார்த்தா ரொம்பப் பொறாமையா இருக்கும். காரணம், விஜய் சார் பண்ற எல்லாப் படங்களுக்குமே அவர்தான் இசையமைப்பார். இப்படிப் பல எக்ஸைட்மென்ட்டோடதான் இந்தப் படத்தோட வேலையை ஆரம்பிச்சோம்." 

``மதன் கார்க்கி வரிகள், சாம் சி.எஸ். இசை, விஜய் இயக்கம்... இந்தத் தருணத்துல பாட்டு பாடும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க?''

``பாட்டோட சூழ்நிலை, இதுக்கு மதன் கார்க்கி சார்தான் வரிகள் எழுதுறார்னு தெரிஞ்சதும் ரொம்ப ஆர்வமாகிட்டேன். வரிகள் எழுதி ரெக்கார்டிங்கும் தயாராகிருச்சு. பாட்டோட வரிகள் எல்லாம் ரொம்ப எமோஷனலா இருந்தது. சாம் பத்தி யாருக்கும் தெரியாத விஷயத்தை உங்களுக்குச் சொல்றேன். குரல் நல்லாயிருக்கு, பயங்கர ஸ்ருதியோட பாடுறீங்க, ரொம்ப எஃபோர்ட் போடுறீங்க... இப்படி எதுவும் அவருக்கு வேண்டாம். அந்தச் சூழ்நிலை கொடுக்குற உணர்வை அப்படியே பாட்டுலேயும் வெளிப்படுத்துனாதான், சாமுக்குப் பிடிக்கும். யுவன் ஷங்கர் ராஜா இந்த மெத்தடைதான் ஃபாலோ பண்ணுவார், அதேமாதிரிதான் இவரும். இதையெல்லாம் மனசுல வெச்சிட்டுதான் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பிச்சேன். விஜய் சார் கேட்டுட்டு, `ரொம்ப அழகா இருக்கு, இதுல என்ன வேணாலும் மாத்துங்க, பாடுன ஆளை மட்டும் மாத்திடாதீங்க'னு சாம்கிட்ட சொல்லியிருக்கார். இப்படிச் சொன்னதும் சாமுக்கும் ஒரு நம்பிக்கை வந்துருச்சு. சாம் என்கிட்ட `இந்தப் பாட்டை நீங்கதான் பாடப் போறீங்க, விஜய் சாருக்கும் உங்க குரல் ரொம்பப் பிடிச்சிருச்சு, ஃபைனல்ல நீங்க ஏதாவது சொதப்பினா, ஆளை மாத்திடுவோம்'னு கிண்டலா சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. விஜய் சாருக்கு என்னை அப்போ யாருன்னே தெரியாது.  இப்படித் தெரியாத ஒரு பொண்ணோட குரலை இவ்வளவு வெல்கம் பண்றார்னு எனக்கு அவரை இன்னும் அதிகமாப் பிடிச்சது. பாட்டோட ஃபைனல் ரெக்கார்டிங் ஆரம்பிச்சது. பல மணிநேரம் கழிச்சு, ஒரு வழியா முழுப் பாட்டையும் பாடி முடிச்சிட்டேன். பாடும்போது நடுவுல நான் ரெண்டு மூணு வார்த்தைகளை முழுங்கிருப்பேன். அப்படிப் பண்ணது கரெக்ட்டான ஃபீலைக் கொடுத்ததுனு, அதையே சாம் ஓகே பண்ணிட்டார்.'' 

``பாட்டைக் கேட்டுட்டு வீட்டிலேயும், வெளியிலேயும் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?''

``பாட்டு எல்லாருக்கும் பிடிச்சது. நிறைய இடங்கள்ல இருந்து என்னைப் பாராட்டினாங்க. என் அப்பா அம்மாவும் என்னை ரொம்பவே பாராட்டினாங்க. தனியா என்னைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினது, இதுதான் முதல் தடவை. `நாம கரெக்ட்டான ரூட்லதான் போயிட்டிருக்கோம்'னு நம்பிக்கை வந்தது. எங்க வீட்டுல என்னையும் சேர்த்து நாலு பொண்ணுங்க. எல்லோரையும் பசங்க மாதிரிதான் வளர்த்தாங்க. உங்களுக்குப் பிடிச்சதைப் பண்ணுனு சுதந்திரம் கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சது. ஆனா, வேலை பார்த்துட்டு இருந்தா சரியா வராதுனு பார்க்குற வேலையை விட்டுட்டுப் பாடுறதுக்கு வாய்ப்பு தேடிட்டு இருந்தேன். என்னைத் தவிர, என்கூட பிறந்த மூணு பேரும் ஓரளவு செட்டில் ஆகிட்டாங்க. `ஸ்வாகதா மட்டும் இப்படி இருக்காளே'னு வீட்டுல ஃபீல் பண்ணாங்க. இந்தப் பாட்டைக் கேட்டுட்டு வந்த ஃபீட்பேக்ஸ் பார்த்துட்டு அவங்களுக்கு நம்பிக்கை வந்திருச்சு. இவங்களைத் தவிர, மிலிட்ரியில இருந்து ஒருத்தர் எனக்கு ஃபேஸ்புக்ல மெசேஜ் அனுப்பியிருந்தார். `நான் ராத்திரி பகல்னு ஃபுல்லா உன் பாட்டைத்தான் கேட்டுட்டு இருக்கேன், இங்க அவ்ளோ கஷ்டங்கள்லேயும் இந்தமாதிரி பாட்டைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கு'னு சொன்னார். இது மாதிரி சிலர் சொல்லும்போது, ரொம்பவே சந்தோஷமா இருக்கு!." 

``இந்தப் பாட்டு படத்தோட பார்க்கும்போது எப்படி இருந்தது?''

``விஷுவலா இந்தப் பாட்டை பார்க்கும்போது ரொம்பவே சூப்பரா இருக்கும். கேட்குறப்போ எந்தமாதிரி ஃபீல் கொடுத்ததோ, அதைவிட அதிகமா பார்க்கும்போதும் ஃபீல் ஆகும். சந்தோஷமான ஒரு சூழல்ல வர்ற பாட்டு. இந்தப் பாட்டுல சாய் பல்லவியும், குட்டிக் குழந்தையும் அவ்வளவு அழகா நடிச்சிருந்தாங்க. இதுக்குமேல எதுவும் சொல்லமுடியாது. படத்தோட பார்க்கும்போது, இந்தப் பாட்டை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவீங்க!" என நம்பிக்கையோடு பேட்டியை முடித்தார், ஸ்வாகதா.

அடுத்த கட்டுரைக்கு