Published:Updated:

ஒட்டகப் பேரரசனும் விவசாயி நண்பனும் #TheEmperorsNewGroove

ஒட்டகப் பேரரசனும் விவசாயி நண்பனும்  #TheEmperorsNewGroove
ஒட்டகப் பேரரசனும் விவசாயி நண்பனும் #TheEmperorsNewGroove

வால்ட் டிஸ்னியின் 40-வது அனிமேஷன் உருவாக்கமான  The Emperor's New Groove திரைப்படம் மிக மிகச் சுவாரஸ்யமான கதையை அடிப்படையாகக் கொண்டது. சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் ஓர் அரசனுக்கும், உதவும் மனப்பான்மையைக் கொண்ட ஒரு விவசாயிக்கும் இடையில் நிகழும் நகைச்சுவையான சம்பவங்கள் உட்பட பல விஷயங்கள் இந்தத் திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்குக் காரணமாக அமைகின்றன. 

இன்கா பேரரசின் சக்ரவர்த்தியான குஸ்கோ, பதினெட்டு வயதில் இருக்கும் ஓர் அராத்து. பிறந்ததில் இருந்தே அனைத்துச் செல்வச் செழிப்புகளையும் அவன் அனுபவித்துக்கொண்டிருப்பதால் எளியவர்களின் துயரம் பற்றி ஏதும் அறிவதில்லை. அவன் ஆணையிடும் எந்தவொரு விஷயமும் அடுத்த நொடியே அவனுக்குக் கிடைத்தாக வேண்டும். அப்படியாகவே அவன் பழகிவிட்டான். தனக்குப் பிடிக்காதவர்களை மேலே இருந்து பள்ளத்திற்குள் தூக்கி எறிவது அவனது விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று. 

குஸ்கோவிற்கு எஸ்மா என்கிற ஆலோசகர் உண்டு. இவனை அப்புறப்படுத்திவிட்டு ‘எப்போதடா ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவோம்’ என்று காத்துக்கொண்டிருக்கிற நயவஞ்சகக் கிழவி அவள். இவளின் சதித்திட்டங்கள் பற்றி அறியாத அப்பாவியாக இருக்கிறான் குஸ்கோ. எஸ்மாவிற்கு க்ரான்க் என்கிற முட்டாள்தனமான அடியாள் உண்டு. எஸ்மா ஆணையிடும் தீயச் செயல்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினாலும் க்ரான்க்கிற்கு கருணை மனமும் ஒருபுறம் உண்டு. 

ஒரு நாள், விவசாயியும் ஊர்த்தலைவருமான பாச்சா தங்களின் குறைகளைச் சொல்ல மன்னன் குஸ்கோவைத் தேடி வருகிறான். பாச்சாவிற்கு அன்பான மனைவியும், குறும்புத்தனமான இரண்டு மகன்களும் கொண்ட குடும்பம் உண்டு. பாச்சாவின் முறையீடு எதையும் காதில் வாங்காத குஸ்கோ, பாச்சாவிற்கு உதவி செய்வதற்குப் பதிலாக உபத்திரவத்தைத் தருகிறான். “இந்த மலையில் சூரிய ஒளி இந்தப் பக்கம் விழும் நேரத்தில் பாட்டுச் சத்தம் வரும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் பிறந்த நாளை முன்னிட்டு அந்த இடத்தில் ஓர் உல்லாச விடுதியைக் கட்டப்போகிறேன். என் ஓய்வு நேரத்தை அங்கு கழிப்பேன்” என்கிறான் குஸ்கோ. 

“ஐயோ.. அங்குதான் என் வீடு இருக்கிறது” என்று அலறுகிறான் பாச்சா. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் முடிவெடுத்தால் எடுத்ததுதான்” என்று அழிச்சாட்டியம் செய்கிறான் அரசன் குஸ்கோ. 

இதற்கிடையில் குஸ்கோவைக் கொல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள் எஸ்மா. தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் விஷத்தை இரவு விருந்தின்போது குஸ்கோவிற்குத் தந்துவிடுமாறு க்ரான்க்கிற்கு ஆணையிடுகிறாள். ஆனால், க்ரான்க் செய்யும் குழப்படிகளால் மருந்தின் வீர்யம் குறைந்துவிட, குஸ்கோ ஒட்டகமாக மாறி விடுகிறான். “ஒரு கொலையைக்கூட ஒழுங்காகச் செய்ய உனக்குத் துப்பில்லையா?” என்று எரிந்து விழும் எஸ்மா, “சரி. இந்த ஒட்டகத்தைக் கொன்றுவிட்டு, சடலத்தை எங்காவது எறிந்து விட்டு வா” என்று உத்தரவிடுகிறாள். 

ஒட்டகத்தை மூட்டையில் கட்டி எடுத்துச் செல்கிறான் க்ரான்க். அந்த மூட்டை தவறுதலாகப் பாச்சாவின் வண்டியில் வந்து விழுகிறது. தன்னுடைய வீடு பறிபோகும் கவலையுடன் வீட்டிற்குச் செல்லும் பாச்சா, மன்னனின் உல்லாச விடுதி ஏற்பாட்டைப் பற்றி மனைவியிடம் சொல்லாமல் சந்தோஷமாக இருப்பதுபோல் நடிக்கிறான். 

பிறகு தன் வண்டியில் இருக்கும் மூட்டையை அவிழ்க்கும்போது அதனுள் பேசும் ஒட்டகம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். அது மன்னனின் சாயலில் இருப்பதையும் காண்கிறான். அதுவரை மயக்கநிலையில் இருந்த குஸ்கோ, கண் விழித்ததும் தன் வழக்கமான பாணியில் பாச்சாவிடம் அலப்பறை செய்கிறான். “நான் எங்கிருக்கிறேன்? என்னைக் கடத்தி வந்து விட்டாயா? நான் யார் தெரியுமா?” என்றெல்லாம் கொக்கரிக்கிறான். ஆனால், குளத்துநீரில் தன் உருவத்தைப் பார்த்ததும் தான் ஒட்டகமாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அலறுகிறான். 

“என்னை எப்படியாவது என் அரண்மனைக்கு அழைத்துப் போ” என்று பாச்சாவிடம் கேட்கிறான் குஸ்கோ. “என் வீட்டை அழித்து உல்லாச விடுதி கட்ட மாட்டேன் என்கிற வாக்கினை அளித்தால் உதவி செய்கிறேன்” என்கிறான் பாச்சா. ஆனால், குஸ்கோ இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. பாச்சாவின் எச்சரிக்கையையும் மீறி தனியாகக் கிளம்பிச் சென்று கருஞ்சிறுத்தைகளிடம் மாட்டிக் கொள்கிறான். பிறகு, சரியான நேரத்தில் பாச்சாவால் காப்பாற்றப்படுகிறான். பாச்சா எத்தனை உதவி செய்தாலும் தன் முடிவில் இருந்து மாறாத கல்நெஞ்சம் கொண்டவமான இருக்கிறான் குஸ்கோ. 

ஒட்டகத்தின் வடிவில் குஸ்கோ இன்னமும் உயிரோடு இருப்பதை அறியும் எஸ்மா ஆத்திரம் கொள்கிறாள். “அவனைத் தேடி அழித்து வருவோம், வா” என்று க்ரான்க்கையும் அழைத்துக்கொண்டு ஆவேசமாகக் கிளம்புகிறாள். 

ஒட்டகமாக மாறிய மன்னன் குஸ்கோ தன் பழைய உருவத்தைப் பெற்றானா, பாச்சாவின் வீடு பறிபோனதா, இவர்களைத் துரத்திச் செல்லும் எஸ்மாவின் நோக்கம் நிறைவேறியதா என்பதையும் விறுவிறுப்பும் சுவாரசியமும் கலந்த காட்சிகளாகச் சொல்லியிருக்கிறார்கள். 

தொடங்கியது முதல் இறுதிக்காட்சி வரை ஒரு கணம்கூட சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதே  The Emperor's New Groove அனிமேஷன் திரைப்படத்தின் சிறப்பு அம்சமாகும். திரைப்படம் வெளியானபோது அத்தனை கவனத்தைப் பெறாமல் போனாலும் ஹோம் வீடியோவாக வந்தபோது பார்வையாளர்களின் பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சி 2005-ல் ‘Kronk's New Groove’ என்கிற பெயரில் வீடியோவாக வந்தது. பிறகு தொலைக்காட்சித் தொடராகவும் வந்து வெற்றிபெற்றது. 

இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டகத்தின் வடிவில் மாறினாலும் ‘கெத்து’ குறையாமல் பந்தா செய்யும் அரசனின் பாத்திரத்தின் ரகளை ஒருபக்கம் என்றால் எஸ்மாவின் உதவியாளனான வரும் க்ரான்க்கின் லூட்டிகள் இன்னொருபுறம் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன. எந்தவொரு தீயச் செயலையும் செய்வதற்கு முன்னால் அவனுடைய நல்ல மனசாட்சியும் கெட்ட மனசாட்சியும் இருபுறமும் நின்றுகொண்டு க்ரான்க்கிடம் உரையாடுவதும் அதைக் கேட்டு க்ரான்க் குழம்பி நிற்பதும் சுவாரஸ்யமானவை. 

‘நான் ஏன் இந்தப் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டேன்?’ என்று ஒட்டகமாக மாறிய குஸ்கோ தன் கதையைச் சொல்வதுபோல் இத்திரைப்படம் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் ஃப்ளாஷ்பேக் முடிந்து சில பழைய  காட்சிகளுடன் மீண்டும் தொடரும்போது ‘இதெல்லாம் அவர்களுக்கே தெரியும். விளக்கிக்கொண்டிருக்க வேண்டாம்’ என்பது போன்ற சுயபகடிகளும் உண்டு. 

பல்வேறு விலங்குகளாக உருமாற்றம் செய்யும் மருந்தை எஸ்மா குழப்பி வைத்துவிட, அதிலிருந்து ஒவ்வொன்றாக குஸ்கோ முயற்சி செய்து வேறு வேறு உயிரினமாக உருமாறும் இறுதிக் காட்சி  அதி சுவாரசியமானது. 

John Debney அமைத்திருக்கும் பின்னணி இசையும் பாடல்களும் திரைப்படத்தின் சுவாரசியத்திற்குப் பலம் சேர்க்கின்றன. ‘My Funny Friend and Me’ என்கிற பாடல் ஆஸ்கர் விருதிற்காக நாமினேட் ஆனது. 

தன்னுடைய வீடு பறிபோவதற்குக் காரணமாக இருக்கப் போகிற குஸ்கோவிற்கு இறுதிவரை உதவி செய்துகொண்டேயிருக்கிறான் பாச்சா. எதனாலும் மனம் மாறாத மன்னன், இறுதிக்காட்சியில் பாச்சாவின் நல்லியல்பைப் புரிந்துகொண்டு நண்பனாக மாறுவதில் நமக்கெல்லாம் ஒரு நீதியுள்ளது. 

Mark Dindal அற்புதமாக இயக்கியிருக்கும் இத்திரைப்படம், குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும்  ரசித்துப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.