Published:Updated:

"எனக்கு யாராச்சும் ஃபேஸ்புக் கத்துக்கொடுங்களேன் ப்ளீஸ்!" - நிகிலா விமல் ரெக்வஸ்ட்

"எனக்கு யாராச்சும் ஃபேஸ்புக்  கத்துக்கொடுங்களேன் ப்ளீஸ்!" -  நிகிலா விமல் ரெக்வஸ்ட்
"எனக்கு யாராச்சும் ஃபேஸ்புக் கத்துக்கொடுங்களேன் ப்ளீஸ்!" - நிகிலா விமல் ரெக்வஸ்ட்

"எனக்கு யாராச்சும் ஃபேஸ்புக் கத்துக்கொடுங்களேன் ப்ளீஸ்!" - நிகிலா விமல் ரெக்வஸ்ட்

'வெற்றிவேல்' படத்தில் அறிமுகமாகி, "உன்னைப்போல ஒருத்தரை நான் பார்த்ததே இல்ல..." என்ற பாடலின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர், நிகிலா விமல். "மலையாளம்தான் என்னோட தாய்மொழி. இருந்தாலும் மலையாளத்தைவிட, தமிழ் இப்போ சூப்பரா பேசுவேன்" என்று உற்சாகத்துடன் பேசும் நிகிலா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸி. அவரின் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிக் கேட்டபோது...

" 'ரங்கா' படத்துல உங்க ரோல் என்ன?" 

"இந்தப் படத்துல சிபிராஜோட மனைவியா நடிச்சிருக்கேன். மாடர்ன் கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைக்கிறதே அபூர்வம். அதனால, இந்தக் கதைக்கு டக்குனு ஓகே சொல்லிட்டேன். இதுல எங்களுக்குக் கல்யாணமாகி ஹனிமூனுக்கு காஷ்மீர் போவோம். அங்கே எதிர்பாராதவிதமா சில சம்பவங்கள் நடக்கும். அதை நாங்க ரெண்டு பெரும் எப்படிச் சமாளிக்கிறோம் என்பதுதான் கதை." 

"சிபிராஜோட நடித்த அனுபவம்..."

"சசிகுமார் சாருக்குப் பிறகு வேறெந்த நடிகர்களுடனும் ஜோடியா நடிச்சது கிடையாது. அதுக்கப்புறம் சிபி சார்கூடதான் முதல் தடவையா ஜோடி சேர்ந்திருக்கேன். எனக்கு சாதாரணமாவே கூச்ச சுபாவம் அதிகம். ஆனா, சிபி அப்படியே எனக்கு எதிர்மறையா இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டை பயங்கர கலகலப்பா வெச்சுருப்பார். கொஞ்சம் பேசுவார்; அதிகம் ஜோக் அடிப்பார். அப்படியே சத்யராஜ் சார் மாதிரினு நெனைக்கிறேன். காஷ்மீர்ல 15 நாள்கள் ஷூட்டிங் நடந்துச்சு. அந்தக் குளிர்னால யூனிட்ல யார்கூடயும் சரியா பேச முடியலை. நானும் சிபி சாரும் ஆரம்பத்துல, 'இந்தக் காஷ்மீர் குளிர் எப்படிப்பட்டதுனா....' அப்டீன்னு ஆரம்பிச்சு எங்களோட மொத்த வரலாறையும் பேசி முடிச்சிட்டோம். இந்தப் படத்துக்கான மீதி ஷூட்டிங் சென்னையில நடக்கப்போகுது. அதுல கண்டிப்பா நான் சத்யராஜ் சாரைப் பார்க்கணும்னு கேட்டிருக்கேன். பார்ப்போம்.!"

 "சசிகுமாருக்கும் உங்களுக்குமான நட்பு..."

"எனக்கு சினிமாவை சரிவர கத்துக்கொடுத்ததே சசிகுமார் சார்தான். ஷூட்டிங் தவிர்த்து மற்ற இடங்கள்ல இவரைப் பார்க்கும்போதும், சினிமா பத்திதான் அதிகம் பேசுவார். அப்படியொரு சினிமா பைத்தியம். 'வெற்றிவேல்' படத்துல பிரபு சார், ரேணுகா மேடம்னு எல்லாரும் சீனியர் ஆர்டிஸ்ட்டா இருந்தாங்க. அதனால, எனக்கு வர்ற அத்தனை சந்தேகங்களையும் சசிகுமார் சார்கிட்டதான் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அப்போயிருந்து சார் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்."

"அடுத்து நீங்க நடிக்கிற தெலுங்குப் படத்துல என்ன ரோல், கதை என்ன?"   

" 'காயத்ரி'னு ஒரு தெலுங்குப் படத்துல மோகன்பாபு சாரோட சேர்ந்து நடிக்கிறேன். இது அப்பா-மகள் சென்டிமென்ட் பற்றிய கதை. என்னுடைய அப்பாவை சின்ன வயசுலயே என்கிட்ட இருந்து பிரிச்சிருவாங்க. வளர்ந்ததுக்கு அப்புறம் அப்பாவை எவ்வளோ கஷ்டப்பட்டு மீட் பண்றேன். அவருக்கும் எனக்கும் இருக்குற பாசப் பிணைப்பு; இத்தனை வருடம் கழிச்சுப் பார்க்கும்போது எப்படி மாறியிருக்கு என்பதுதான் கதை.'' 

"மலையாளப் படங்களைவிட தமிழ்ப் படங்களில்தான் அதிகம் நடிக்க விரும்புறீங்களா?"

"எனக்கு மலையாளமும், தமிழும் நல்லா தெரியும். நான் மலையாளப் படங்கள் மூலமா திரையுலகுக்கு அறிமுகமாகியிருந்தாலும், தமிழ்ப் படங்கள்தான் வாழ்க்கை கொடுத்திருக்கு. ஒருகட்டத்துல எனக்கு மலையாளப் படங்களே வேண்டாம், தமிழ்ப் படங்கள்லேயே நடிக்கிறேன்னு சொல்ற அளவுக்குத் தமிழ் சினிமா ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வர்றதனால, தமிழ் கத்துக்கணும்னு ஆசைப்பட்டு, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் தமிழ்லேயே பேசிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல மலையாளத்தைவிட தமிழ்ல சரளமாப் பேச ஆரம்பிச்சுட்டேன். தமிழ் சினிமா ஸ்டைலுக்கு நான் அடாப்ட் ஆகிட்டேன்ங்கிற காரணத்தனால, நிறைய மலையாளப் பட வாய்ப்புக்களை நிராகரிச்சிட்டேன். முன்னாடியெல்லாம் தமிழ் டயலாக்குகளை எழுதி மனப்பாடம் பண்ணித்தான் பேசுவேன். ஆனா, இப்போ அர்த்தம் தெரிந்து பேசுறேன், நடிக்கிறேன்."

" 'அரவிந்தண்டே அதிதிகள்' படத்துல எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிச்சுருக்கீங்க?" 

"இந்தப் படத்துல நாட்டியக் கலைஞரா நடிச்சிருக்கேன். நாட்டியதுக்குன்னு தமிழ்நாட்டுல 'கலாஷேத்ரா' அமைப்பு இருக்கிற மாதிரி கேரளாவுல 'கலாமங்களம்'னு ஒண்ணு இருக்கு. அதுல சில ஆண்டுகள் நாட்டியம் பயின்று, பின் மூகாம்பிகை கோயில்ல அரங்கேற்றம் பண்றதுக்காகப் போகும் ஒரு பெண், அங்கே என்னென்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறாங்க, கடைசியில இவங்க அரங்கேற்றம் பண்ணாங்களா, இல்லையா... என்பதுதான் கதை. நிஜமாவே என் அம்மா பரதநாட்டியக் கலைஞர். நான் சின்ன வயசுல இருந்தே பரதம் ஆடுவேன். அரங்கேற்றமும் பண்ணியிருக்கேன்."

"சமூக வலைதளங்கள் உங்களோட அதிகாரப்பூர்வமான பக்கத்தைவிட, ரசிகர் பக்கங்கள்தான் ஆக்டிவா இருக்கு..."

"எனக்கு எப்படிப்பட்ட போஸ்டுகளை சமூக வலைதளங்கள்ல போடணும்னு தெரியலை. வலைதளங்கள்ல எல்லாத்தையும் அப்டேட் பண்ணிக்குவேன். ஆனா, நான் எந்த போஸ்ட்களையும் போட மாட்டேன். எப்போதாவது ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கிற மாதிரி போட்டோஸ் எடுத்துப் போடுவேன்.  அதை ரசிகர் பக்கங்கள்ல யூஸ் பண்ணிக்கிறாங்க. சில நடிகர்கள் ரசிகர்களோட லைவ் சாட் பண்றாங்க. அது எனக்கு எப்படிப் பண்ணணும்னு தெரியலை. யாராவது கொஞ்சம் கத்துக்கொடுத்தா நல்லா இருக்கும்" என்று கொஞ்சு தமிழில் கூறி முடிக்கிறார் நிகிலா விமல். 

அடுத்த கட்டுரைக்கு