
ஆவணப்படம்

ஒரு சம்பவம்
இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கு முதல் நாள் அது நிகழ்ந்தது. பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணம். தோக் லோனா பகுதியில் உள்ள ஜீலம். அதிகாலை நேரம். ஒரு மனிதன், தன் சகோதரனின் வீட்டுக்கு வருகிறான். அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் மகளைப் பார்க்கிறான். அருகே மருமகன், சற்றுத் தள்ளி சகோதரனின் மனைவியும் அவளின் தாயும்... அந்த மனிதனுக்குக் கொஞ்சம்கூடத் தயக்கம் இல்லை. ஒரு துப்பாக்கியை எடுக்கிறான். நால்வரையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தலைமறைவாகிறான். அந்தக் குற்றவாளியைக் காவல்துறை தேடிவருகிறது. அது, ஆணவக்கொலை!
இப்படி, ஒரே ஒரு சம்பவம் மட்டும் இல்லை. பாகிஸ்தானில், ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆணவக்கொலைக்குப் பலியாகிறார்கள். இந்தச் சமூக அவலத்தைப் பின்புலமாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம் `எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னெஸ் (A girl in the river: The price of forgiveness)’. 2016-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது (Best short subject Documentary) இதற்குக் கிடைத்திருக்கிறது. பாகிஸ்தானின் அதே பஞ்சாப் மாகாணத்தில், ஒரு பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியை, நெஞ்சதிரவைக்கும் காட்சிகளாக விவரிக்கிறது இந்த ஆவணப் படம்.
சபாவுக்கு 19 வயது. ஒரு மருத்துவமனை, அறுவைசிகிச்சைப் படுக்கையில் படுத்திருக்கிறார். சுற்றிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் நிற்கிறார்கள். முகத்தில் ஆழமான காயம். இடது உதட்டில் தொடங்கி, இடது கண் முனை வரைக்கும் துப்பாக்கியால் சுட்டதால், சதை பிய்ந்துகிடக்கிறது. ‘அய்யோ... காப்பாத்துங்க... காப்பாத்துங்க. வலி உயிர் போகுதே!’ என்கிற சபாவின் அலறலுடன் ஆரம்பமாகிறது படம்.
அதற்கடுத்த காட்சியில், ஓர் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு, காவல்துறை குற்ற விசாரணை அதிகாரி அலி அக்பர் சம்பவத்தை விவரிக்கிறார்... ‘இங்க வெச்சுத்தான் சபாவின் அப்பாவும் சித்தப்பாவும் அவளை அடிச்சு, உதைச்சு, ஒரு துப்பாக்கியால மூளையைக் குறிவெச்சு சுட்டாங்க. கடைசி விநாடியில அவ தலையை அசைச்சதால குண்டு முகத்துல பாய்ஞ்சிடுச்சு. அவளை அப்படியே ஒரு கோணிப்பையில போட்டு, ஆத்துல தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க. ஆழம் அதிகம் இல்லாத பகுதி... சபா எப்படியோ தப்பிச்சுட்டா...’

குஜ்ரன்வாலா பகுதியில் வசிக்கும் சபாவுக்கு, குவய்ஸர் உடன் நான்கு ஆண்டுகளாகக் காதல். அதிகமும் போனில்தான் உரையாடல். வெகு சில சந்தர்ப்பங்களில்தான் இருவரும் நேரில் சந்தித்திருக்கிறார்கள். இவர்களின் காதல் வீட்டுக்குத் தெரியவர, சபாவின் சித்தப்பா எதிர்க்கிறார். குவய்ஸரின் குடும்பத்தார் தங்களைவிட வசதிக் குறைவான வர்கள், ஏழ்மையானவர்கள் என்பதைக் காரணமாகச் சொல்கிறது மொத்தக் குடும்பமும். அதோடு, சபாவின் சித்தப்பா, தன் மைத்துனனைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார். சபா, வீட்டாரின் பேச்சைக் கேட்காமல், குவய்ஸரை அழைத்துக்கொண்டு போய் ஒரு நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்கிறார்.
“நாங்க ரெண்டு பேரும் முழுசா ஒரு நாள்கூட சேர்ந்து வாழலை. ரெண்டு மணி நேரம்தான் சேர்ந்து இருந்திருப்போம். அதுலயும் நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்குற சந்தர்ப்பம் கிடைக்கலை” என்கிறார் சபா.
அன்று இரவு அப்பாவும் சித்தப்பாவும், சபாவின் மாமியார் வீட்டுக்கு வருகிறார்கள். தங்களோடு சபாவை அனுப்பிவைக்கும்படியும், தக்க மரியாதைசெய்து, சீர்வரிசையோடு திருப்பி அனுப்புவதாகவும் சொல்கிறார்கள். சபாவுக்கு எந்தத் தீங்கும் நேராது என குரானின் மீது சத்தியமும் செய்கிறார்கள். சபாவும் தயக்கத்தோடு அவர்கள் வந்த காரில் ஏறுகிறார். வழியில் ஓர் ஆற்றங்கரையில் வைத்து சபாவை அடித்து, அவரைத் துப்பாக்கியால் சுட்டு, ஆற்றில் வீசிவிட்டுப் போகிறார்கள். ஆற்று நீரில் இருந்து எழுந்த சபா, தூரத்தில், இருட்டில் ஒரு மோட்டார் சைக்கிளின் ஒளியைப் பார்க்கிறார். மெள்ள அந்தத் திசையை நோக்கி நடந்து, ஒரு பெட்ரோல் பங்க்கை அடைகிறார். சிலர் உதவியால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாமே சபாவின் வார்த்தைகளிலேயே விவரிக்கப்படுகின்றன.
‘இது பாவம். கடவுளுக்கு செஞ்ச துரோகம். என்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்னு குரான் மேல சத்தியம் செஞ்சதாலதான் நான் அவங்களோட போனேன். நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேன். இனிமே இந்த நாட்டில் வசிக்கும் என் சகோதரர்கள், சகோதரிகள் யாருக்கும் இது மாதிரி நடக்கக் கூடாது’ என முடிவெடுக்கிற சபா நீதிமன்றத்துக்குப் போகிறார்.
சபாவின் தங்கை அக்ஸா, தங்கள் குடும்பத்தின் மேல் அக்கம்பக்கத்தாருக்கு இருக்கும் மரியாதையையும் பயத்தையும் விவரிக்கிறார். அம்மா மக்ஸூடாவும் தன் கணவருக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். சபாவின் தங்கையைக் காட்டி, “இவ ஒழுங்கா இருந்தான்னா, நாங்களே நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு குடுப்போம். சபா மாதிரி செஞ்சானா, இவளுக்கும் தண்டனை நிச்சயம்” என்கிறார்.
சிறையில் இருக்கும் சபாவின் சித்தப்பா முகம்மது, “எங்க அண்ணன் செஞ்சது ரொம்ப சரி. எல்லாமே கௌரவத்துலதான் இருக்கு” என்கிறார். சபாவின் அப்பா மக்ஸூது, “அவ எங்க மானத்தை வாங்கிட்டா. ஏன் அவ வீட்டைவிட்டு இன்னொருத்தனோட போகணும்? அவளுக்கு என்ன குறை வெச்சேன்? மூணு வேளை சாப்பாடு போடலை? எனக்கு கௌரவம்தான் முக்கியம். ஒரு பெரிய பாத்திரத்துல இருக்குற பால்ல ஒரு துளி மூத்திரம் விழுந்தா, மொத்தப் பாலும் நாசமாகிடாது? அது மாதிரிதான் இதுவும். அன்னிக்கி மட்டும் அந்த குவய்ஸர் இருந்திருந்தான்னா, அவனையும் கொன்னுருப்பேன். இது எல்லாமே என் குடும்பத்தோட மரியாதைக்கும் கௌரவத்துக்காகவும் தான்” என்கிறார்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய சபா, மாமியார் வீட்டில் வாழ்கிறார். சபாவுக்காக வாதாடும் வழக்குரைஞர் ஆஸாத் ஜமால், “பாகிஸ்தானில் ஆணவக்கொலைகள் சட்டரீதியாக கொலைக் குற்றமாகத்தான் கருதப்படுகின்றன. இருந்தாலும், மகளைக் கொன்ற அப்பாக்களை, குடும்பம் மன்னித்துவிடுவதால், வழக்கு பிசுபிசுத்துப்போய் அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்” என்கிறார். இடையில் சபாவின் அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களும், சில பெரியவர்களும் சபாவின் வழக்குரைஞர், மாமியார் ஆகியோரைப் பார்த்து சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள். சபா மன்னித்துவிட்டால், அவரின் தந்தையும் சித்தப்பாவும் விடுதலையாகிவிடுவார்கள் என்று எடுத்துச் சொல்கிறார்கள்.
வழக்குரைஞர் ஆஸாத் ஜமாலோ, “சட்டம் எல்லாருக்கும் ஒண்ணுதான். ஆனா, இப்படி மன்னிச்சுவிடுறதாலதான், யாரு வேணாலும் ஆணவக்கொலை செய்யலாம்கிற நிலை இங்கே ஏற்படுது” என்கிறார். கடைசியில் சபா, பெரியவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவும், இறங்கிவரவும் வேண்டியதாகிவிடுகிறது.
“நல்லதோ கெட்டதோ, நாலுபேர் உதவி நமக்குவேண்டியிருக்கு. இவங்களைப் பகைச்சுக்கிட்டு வாழ முடியாது. அக்கம்
பக்கத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சுதானே ஆகணும்?” என்கிறார் இந்த சமரசப் பேச்சில் ஈடுபட்ட குவய்ஸரின் அண்ணன். சபா, தன் அப்பாவையும் சித்தப்பாவையும் மன்னித்துவிட்டதாக நீதிமன்றத்தில் சொல்ல, அடுத்த நாளே இருவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இது நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு... “வெளிப்படையா அவங்களை நான் மன்னிச்சிட்டாலும், மனசளவுல நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேன்” என்கிறார் சபா.

சபாவின் அப்பாவோ, “இப்போ எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? ஊர்ல எல்லாரும் என்னை மரியாதையோட பார்க்கிறாங்க. நான் செஞ்சது சரின்னு நிறையப்பேர் என்கிட்டேயே சொல்றாங்க. என் சின்னப் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நல்ல வரன் எல்லாம் தேடி வருது” என அடுக்கிக்கொண்டே போகிறார்.
‘ எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்’ ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷமீன் ஓபெய்ட் சினாய். ஏற்கெனவே இவருடைய ‘சேவிங் ஃபேஸ்’ என்ற ஆவணப்படம் 2012-ம் ஆண்டில், (Best short subject Documentary) ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இது, பாகிஸ்தானுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருது.
சட்டத்தின் பார்வைக்கு வராமல் மறைக்கப்படும் ஆணவக்கொலைகளே பாகிஸ்தான், இந்தியா ஆகிய இந்த இரு நாடுகளிலும் வெகு அதிகம். அவை வெளிச்சத்துக்கு வந்தால், மரணப் புள்ளிவிவரக் கணக்கு இரு மடங்கு அதிகமாக இருக்கும். தந்தைக்கும் சிற்றப்பனுக்கும் எதிராக சபாவின் குரல் காவல்நிலையத்தில் பதிவானதால்தான் இந்த ஆவணப்படம் சாத்தியமானது.