Published:Updated:

"சிம்புவின் கருத்து எங்களுக்கு மகிழ்ச்சி!" - விஷால் நெகிழ்ச்சி

"சிம்புவின் கருத்து எங்களுக்கு மகிழ்ச்சி!" -  விஷால் நெகிழ்ச்சி
"சிம்புவின் கருத்து எங்களுக்கு மகிழ்ச்சி!" - விஷால் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் தொடரும் ஸ்டிரைக் காரணமாக பல தரப்பட்ட கருத்துகளுக்கு ஆளாகியுள்ளது, தயாரிப்பாளர்கள் சங்கம். சங்கத்தின் முடிவிற்கிணங்க, கடந்த மூன்று வாரமாக புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சென்னையில் நடந்து வந்த தமிழ் சினிமா ஷூட்டிங்குகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தை முழுமனதாக ஆதரிப்பது என தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனமான, 'ஃபெப்சி' அறிவித்தது. எனினும், விஜய் 62 உள்ளிட்ட சில படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது. இதனைக் கண்டித்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும்  எதிர்மறையாய்க் கருத்து தெரிவித்து வந்தனர். ஒவ்வொரு படக்குழுவினரும்  தவிர்க்க முடியாத காரணங்கள் தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்அனுமதி பெற்றதன் காரணமாகத்தான் இந்தப் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் இந்த ஸ்டிரைக் தொடர்பாக, நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடந்த தயாரிப்பாளார்கள் சங்கம், ஃபெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அந்தந்தந்த அமைப்பின் தலைவர்கள் விஷால், ஆர்.கே.செல்வமணி மற்றும் விக்ரமன் தலைமையில் அதன் உறுப்பினர்களிடையே நடந்த இந்தக் கூட்டத்தில், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக்சுப்புராஜ், கண்ணன்,  தங்கர்பச்சான், ஜெயம் ராஜா, மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தாணு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கே.எஸ்.ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கடைசியாக நடிகர் சிம்பு கலந்துகொண்டார்.


ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த வேலை நிறுத்த முடிவை விளக்கிக் கூறினார். இயக்குநர்கள் சங்கத்துடன் நடந்ததுபோல் ஒளிப்பதிவாளர்களுடனும், நடிகர் சங்கத்தினருடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். திரைப்பட தயாரிப்புத் துறையில்  எந்த ஒரு தடங்கலும், கஷ்டமும் இல்லாத வண்ணம் ஆவண செய்யவே இந்த வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், இதை வேலை நிறுத்தம் என்பதைவிட திரைத்துறையை சீரமைக்கும் பணியாகவே செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார், விஷால்.

"தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் சினிமா குடும்பம்தான். இங்கு எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என சில விஷயங்களை முன் வைத்திருக்கிறோம். டிஜிட்டல் நிறுவனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. வாடகை டாக்ஸியில் சவாரி செய்தால் வாடகை மட்டும்தான் கொடுக்க முடியும். வண்டிக்கான ஈ.எம்.ஐ தொகையை அந்தந்த வண்டி உரிமையாளர்கள்தான் தரவேண்டும். அந்த அடிப்படையில், திரையரங்கு புரொஜெக்டர்களுக்கு 12 வருடங்களாக உரிய பணத்தை செலுத்திவிட்டோம், இதற்கு மேலும் அவர்கள் வசூலிக்கும் வி.ப்.எஃப் கட்டணங்களைத் தயாரிப்பாளர்கள் செலுத்தவே முடியாது.  இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக ரஜினியை சந்தித்து விளக்கி ஆதரவு பெறப்படும்." என்றார், விஷால். ஆலோசனைக் கூட்டத்தின் பாதியில் தனுஷின் வுண்டர்பார்  நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் வினோத், 'காலா' படத்தின் சென்சாருக்குத் தேவையான தயாரிப்பாளர் சங்கக் கடிதத்தைக் கேட்டதில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வெளியேறினார்.

இதைப்பற்றி பேசிய விஷால் சிம்புவைப் பாரட்டினார். மேலும், "சட்டசபையில்கூட சலசலப்பு ஏற்படுகிறது. சிம்பு இந்தக் கூட்டத்துக்கு வந்து அவரின் கருத்தைத் தெரிவித்தது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சில விஷயங்களில் அவர் முன்வைத்த கருத்துகளை நாங்கள் பரிசீலனைக்கு எடுக்கவுள்ளோம். நடிகர்களின் சம்பளத்தைக் குறைகக்ச் சொல்லும்முன் எல்லா விஷயத்திலும் வெளிப்படைத் தன்மை வேண்டும். இதே கருத்தை முன்வைத்தே நாங்கள் திரையரங்குகளிடம் கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் விற்பனை கேட்டு வருகிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, இந்த நிலை தொடரும்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு