Published:Updated:

செந்தில் மட்டும் சமாதானம் ஆகியிருந்தார்னா... அய்யோ அதை நினைச்சுப் பார்க்கவே முடியலை..! #HBDSenthil

தார்மிக் லீ
செந்தில் மட்டும் சமாதானம் ஆகியிருந்தார்னா... அய்யோ அதை நினைச்சுப் பார்க்கவே முடியலை..! #HBDSenthil
செந்தில் மட்டும் சமாதானம் ஆகியிருந்தார்னா... அய்யோ அதை நினைச்சுப் பார்க்கவே முடியலை..! #HBDSenthil

சினிமாவில் வேலை செய்வதையே பலரும் பாக்கியமாக நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலக் கலைஞர்களைப் பெற்றமைக்காக சினிமாவே பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த வரிசையில் கண்டிப்பாக நகைச்சுவை ஜாம்பவான் செந்திலுக்கும் ஓர் இடம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இருக்கும். அப்படிப்பட்ட கலைஞனின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய ஒரு பகிர்வு.  

செந்திலுடைய பதினேழு வயதில் அவரது தந்தை திட்டிவிட்ட காரணத்தினால் சொந்த ஊரான ராமநாதபுரத்திலிருந்து கிளம்பி, சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். இங்கு பல விதமான மனிதர்களைச் சந்தித்தது போல், எண்ணெய்க் கிடங்கு, பார் என பல இடங்களில் பல விதமான பணிகளையும் சந்தித்துள்ளார். மறுபக்கம் கலை மேல் இருக்கும் ஆர்வத்தில் பல நாடகங்களில் நடித்து மக்களை மகிழ்வித்துக்கொண்டும் இருந்தார். இதற்கு நடுவில் இவரது வீட்டில் இவரைத் திரும்ப வரச் சொல்லி சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் எதற்கும், வலைந்துகொடுக்காத செந்தில், சென்னையிலேயே இருந்து தன்னுடைய கலைப்பயணத்தை தொடந்துகொண்டிருந்தார். ஒருவேளை சமாதானத்துக்கு சாய்ந்துகொடுத்து ஊருக்கே திரும்பிப் போயிருந்தால், தமிழ் சினிமா இப்படியொரு மகத்தான கலைஞனை இழந்திருக்கும். அதை இப்போது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இவரது முடிவு பிற்காலத்தில் கவுண்டமணிக்கும் சாதகமாக அமைந்தது.

கலையின் மீதுள்ள காதல், நகைச்சுவையின் மீதுள்ள ஈர்ப்பு, மற்றவர்களை மகிழ்விக்கும் போது கிடைக்கும் போதை... இவை அனைத்தும் ஒன்றிணைந்து பல படங்களில் இவரை நடிக்க வைத்தது. ஆரம்ப காலப் பாடங்களில், பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அவ்வவ்போது சில படங்களில் தலைகாட்டி வந்தார் செந்தில். ஐந்து வருடங்களாக தொடர்ந்து விடாமுயற்சியோடு சினிமாவில் ஜொலிக்க தன்னால் முயன்றளவு முயற்சி செய்துகொண்டே இருந்தார். `தனியா ஏன்டா ராஜா கஷ்டப்படுற அதான் நான் இருக்கேன்ல' என்ற ரகத்தில் ஒருவர் தோளில் செல்லமாக தட்டிக்கொடுத்து இவருடன் கூட்டு சேர்ந்தார் ஒரு மனிதர். அவர் பெயர்தான் கவுண்டமணி. பிற்காலத்தில் கவுண்டமணி என்று கூகுலில் தேடினால் அதற்கடுத்து செந்தில் என்ற பெயரும் வரும் என்று தெரியாமலே அப்பொழுது இருவரும் ஜோடி சேர்ந்தனர். அதன் பின்னர் இருவரையும் தனித்தனியாக திரையில் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. 

குறிப்பிட்ட காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் டாப்பிக்கை எடுத்தால், அதில் சொர்ப்ப நடிகர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். குறிப்பாக, தற்பொழுதுள்ள நகைச்சுவையின் நிலைபாடு போல் இல்லாமல் அப்பொழுது ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களிடமும் ஒவ்வொரு தனித்துவம் இருந்தது. அந்தக் கால சினிமாக்களில் தனித்துத் தெரிவதென்பது சாதாரண காரியமல்ல. வெறும் வாழைப்பழம், க்ரீஸ் டப்பா, பெட்ரமாஸ் லைட் எனஇவைகளை வைத்தே வயிறு குழுங்கச் சிரிக்க வைத்தவர்கள் கவுண்டமணி - செந்தில். இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டுவந்தனர்.  ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் எனப் பல நடிகர்கள் உச்சத்தில் இருந்த சமயம்; அந்த சமயத்திலும் அனைவருடனும் ஜோடி சேர்ந்த இந்தக் கூட்டணி, படத்தின் ஹீரோக்களைவிட தங்களது நகைச்சுவைகளின் மூலம் ரசிகர்களை வெகுவாக கட்டியிழுத்தனர். காதல் ஜோடிகளுக்குக்கூட கிடைக்காத `கெமிஸ்ட்ரி' என்ற வரம் இவர்கள் இருவருக்கும் கிடைக்கப்பெற்றது. `அண்ணே இல்லேன்னா இந்தப் படத்துல நான் நடிக்க மாட்டேன் சார்' என செந்தில் சொன்னது இருவரின் பாசத்துக்கான அடையாளம். 

அதுமட்டுமின்ற தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகர்களுக்கு செந்தில்தான் ஃபேவரைட் காமெடியன். மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கும் இவர்தான் ஆல் டைம் ஃபேவரைட் காமெடி நடிகராம். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். செந்திலுக்கும் ஶ்ரீதேவியை ரொம்பப் பிடிக்குமாம். ஆனால் இதுவரை செந்தில் ஶ்ரீதேவியைப் பார்த்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் எதார்த்தமாக ஏர்போர்டில் சந்தித்துள்ளார். இதுவரை இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளும் தருணம் இருவருக்குமே அமையவில்லை. இவரைப்போல் பல கலைஞர்களுக்கும் செந்தில் ரொம்பவும் பிடித்த நடிகர். நமக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன?!

பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் அண்ண்ண்ண்ண்ணே...