Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

லகம் முழுவதும் 4.6 கோடி மக்கள், அடிமைகளாக வாழ்வதாக ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ஆஸ்திரேலியாவின் வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன். உலகிலேயே அதிக அளவில் அதாவது 1.83 கோடிப் பேர் அடிமைகளாக வாழ்வது இந்தியாவில்தான். இதற்கு அடுத்து சீனாவில் 33.9 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 21.3 லட்சம் பேரும், வங்கதேசத்தில் 15.3 லட்சம் பேரும் அடிமைகளாக வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர், விருப்பத்துக்கு மாறாக தொழிற்சாலைகளிலோ, பண்ணைகளிலோ, பாலியல் தொழிலாளியாகவோ வாழ்ந்துவருகிறார்கள் என அதிரவைக்கிறது இந்த ஆய்வு அறிக்கை!

`பெரிய நடிகர்களின் வாரிசு என்றால் ஈஸியாக ஹீரோவாகிவிடலாம்; தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை என்பதற்கு நானே உதாரணம். எவ்வளவு பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் படம் தொடர்ந்து ஃப்ளாப் என்றால், அடுத்த பட வாய்ப்பு கிடைக்காது. நான் பட வாய்ப்புகள் இல்லாமல் கடந்த சில வருடங்களாக சும்மா இருக்கிறேன். யாரும் தோல்வி படங்களில் நடிக்க வேண்டும் என நடிப்பது இல்லை. ஆனால், என் படங்கள் தோல்வியில் முடிந்துவிட்டன’ எனப் புலம்பியிருக்கிறார் அபிஷேக் பச்சன்!

பிட்ஸ் பிரேக்

டென்னிஸ் மூலம் `100 மில்­லியன் அமெ­ரிக்க டாலர் பணப் பரிசை முதலில் எட்டப்போவது யார்?’ என்ற போட்டியில் ரோஜர் ஃபெடரரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் நோவாக் ஜோகோ­விச்­. வெறும் டென்னிஸ் வெற்றிகள் மூலம் கிடைக்கும் பந்தயப் பணத்தில், 100 மில்லியன் டாலர்... இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 673 கோடி சம்பாதித்து சாதனைப்படைத்திருக்கிறார் ஜோகோவிச். இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் உள்பட 64 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கும் ஜோகோவிச், சுலபமாக 150 மில்லியன் டாலர் சாதனையையும் முதலில் எட்டுவார் என்கிறார்கள் டென்னிஸ் நிபுணர்கள்!

பிட்ஸ் பிரேக்

சச்சினின் சாதனையை உடைத்திருக் கிறார் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக். `மிக இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்’ என்ற சாதனை, கடந்த 10 வருடங்களாக சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. `31 வயது, 10 மாதங்கள், 10 ஆயிரம் ரன்கள்’ என்பது சச்சினின் சாதனை. அதை `31 வயது 5 மாதங்க’ளில் கடந்திருக்கிறார் குக். உலகிலேயே இங்கிலாந்து அணிதான் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்பதோடு, குக் இன்னும் 5-6 வருடங்கள் விளையாடுவார் என்பதால், சச்சினின் அதிகபட்ச 15,921 ரன்களையும் குக் கடந்துவிடுவார்’ என்கிறார் முதன்முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த சுனில் கவாஸ்கர்!

பிட்ஸ் பிரேக்

`ஹாரிபாட்டர்’ வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மீண்டும் `ஹாரிபாட்டர்’ வருகிறார். சினிமாவாக அல்ல... நாடகமாக. `ஹாரிபாட்டர் அண்ட் தி கர்ஸ்ட் சைல்ட்’ என்கிற இந்த நாடகத்தை ஜே.கே.ரௌலிங் எழுதவிருக்கிறார். `ஹாரிபாட்டர்’ கதை, விட்ட இடத்தில் இருந்து சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை இது. வளர்ந்து பெரிய மனிதனாக ஆகிவிட்ட ஹாரி, இதில் வரப்போகிறார். இந்த நாடகத்தின் `ஹாரிபாட்டர்’ பாத்திரத்தில் முதல்முறையாக ­­டேனியலுக்குப் பதிலாக ஜேமி பார்க்கர் என்பவர் நடிக்க இருக்கிறார்!

பிட்ஸ் பிரேக்

`அபூர்வ சகோதரர்கள்’ அப்பு போல குள்ளமான மனிதராகத் தோன்றுகிறார் ஷாரூக் கான். இந்தப் படத்தை இயக்கப்போவது `தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' இயக்குநர் ஆனந்த் எல் ராய். முட்டியை மடக்கி நடித்து சிரமப்படாமல், முழுக்க முழுக்க கிராஃபிக்ஸிலேயே ஷாரூக் கானைக் குள்ள மனிதராக மாற்றுகிறார்கள். இதற்காக `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' படத்தின் கிராஃபிக்ஸ் டீம் மும்பை வந்து இறங்கியிருக்கிறது!

பிட்ஸ் பிரேக்

தமிழகத்தில் `அம்மா உணவகம்’ என்றால்... ஆந்திராவில் `அண்ணா உணவகம்’. தமிழகத்தில் அம்மா உணவகம் செம ஹிட் என்பதால் இதே ஐடியாவை ஆந்திராவில் தொடங்குகிறார் சந்திரபாபு நாயுடு. முதல் உணவகம் ஆகஸ்ட் மாதம் விஜயவாடாவில் உள்ள ஆட்டோ நகர் பகுதியில் தொடங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளதால், இந்த இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த உணவகம் 3.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது!