Published:Updated:

"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

Published:Updated:
"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

“சூர்யா, நான் அதிகமுறை போட்டோஷூட் பண்ணிய நடிகர். எத்தனை போட்டோஷூட் என்று நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத அளவுக்கு அவருடன் அதிகமுறை ஒர்க் செய்து இருக்கிறேன். சினிமா, விளம்பரப் படங்கள் என்று அவரை பலமுறை ஷூட் செய்துள்ளேன். ஆனால், முதன்முதலில் அவரை எங்கு, எப்போது சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஏதோ நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமார் சாருடன் சந்தித்ததாக நினைவில் உள்ளது. 

முதன்முதலில் அவருடன் ஒர்க் பண்ணியது, ‘காக்க காக்க’ படத்துக்காகத்தான். சூர்யா-ஜோதிகா காம்பினேஷன், தாணு சார் தயாரிப்பு, கௌதம்மேனனின் அறிமுகம்... என அது ரொம்பவே ஸ்பெஷலான சினிமா அது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே போட்டோஷூட் எடுத்தோம். சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே அப்போது குஷால்தாஸ் கார்டன் என்ற ஷூட்டிங் ஸ்பாட் ஒன்று இருந்தது. அங்கு சினிமா, சீரியல் என பல ஷூட்டிங்குகள் நடக்கும். இப்போதைய பின்னி மில் லொக்கேஷன்போல, அந்த இடம் அப்போது அவ்வளவு பிரபலம். 

ஒருநாள் அதிகாலையில் அங்கு போட்டோஷூட் தொடங்கினோம். ‘அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்’ சூர்யா, அவரின் போலீஸ் ஃப்ரெண்ட்ஸ் மூவர் என மொத்தம் நான்கு பேரை வைத்து ஷூட் செய்தோம். மாடி ஜன்னலில் இருந்து டெலி மூலம் குறிபார்த்து சாலையில் நிற்கும் ஒருவரை என்கவுன்டர் செய்வதுபோலான ஷாட். இப்படி துப்பாக்கியை வைத்துக்கொண்டு சூர்யா நிற்கும் ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு தத்ரூபமாக அமைந்தது. ஒரு காட்சியை சாதாரண மனிதர் பார்ப்பதற்கும் போலீஸ் அதிகாரியாகப் பார்ப்பதற்குமான வித்தியாசத்தை அந்த போட்டோக்களிலேயே கொண்டுவந்திருப்பார், சூர்யா. அவரின் பார்வை அவ்வளவு ஷார்ப், டீடெயிலிங்காக இருக்கும். 

அதுதவிர, ஜோதிகாவைத் தனியாகவும், சூர்யா காம்பினேஷனுடனும் பிறகு ஷூட் செய்தேன். காட்டன் புடவை, அழகாக வாரிய தலை, கைகளில் அணைத்தபடி சில புத்தகங்கள்... என்று ஜோதிகாவின் அந்த காஸ்ட்யூம், லுக் அப்போது ரொம்பவே பிரபலமானது. அதற்குக் காரணம், கௌதம்மேனன். ‘இதுதான் காஸ்ட்யூம், இந்த லுக் இப்படித்தான் இருக்கணும்’ என்று தெளிவாக இருப்பார். 

வழக்கமாக தாணு சார் தன் படங்களில் வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்யத் தூண்டுவார். அது ‘காக்க காக்க’ படத்திலும் தொடர்ந்தது. அது என்னமாதிரியான படம் என்பதை பட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் மூலம் உணர்த்த வேண்டும் என்று முடிவானது. ‘இரண்டு பாக்கெட்.. அன்புச்செல்வன்’ என்ற நேம் பேட்ச்... என்று அந்த அழைப்பிதழின் முகப்பில் யூனிஃபார்ம் அணிந்த போலீஸ் அதிகாரியின் நெஞ்சுப்பகுதி மட்டுமே இருக்கும். அது, படத்துக்கான ரப்பர் ஸ்டாம்ப் போல ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது. அதற்காக சூர்யாவை யூனிஃபார்முடன் குளோஸ்அப்பில் எடுத்து இருந்தோம். அந்த அன்புச்செல்வன்தான், பின்னாளில் சூர்யா அடுத்தடுத்து நடித்த போலீஸ் கேரக்டர்களுக்குப் பிள்ளையார் சுழி. 

அடுத்து, ‘பேரழகன்’ படம். இது, ‘குஞ்சுகூனன்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் இயக்கிய சசி ஷங்கரே தமிழிலும் இயக்கினார். காலையில் வழக்கமான சூர்யா-ஜோதிகா காம்பினேஷன் காட்சிகள், மாலையில் கூனன் மேக்கப் ‘பேரழகன்’, சூர்யா-பார்வையற்ற ஜோதிகா காம்பினேஷன்... என நேரம் பிரித்து ஏ.வி.எம்மில் செட் போட்டு போட்டோஷூட் நடத்தினோம். காலையில் நடந்த ஷூட் விறுவிறுவென முடிந்தது. மதிய உணவுக்குப் பிறகு அந்த கூனன் மேக்கப் போட்டுக்கொள்ள மதியம் ஒன்றரை மணியளவில் உள்ளே போனார், சூர்யா. மணி இரண்டானது, மூன்றானது, நான்கானது... அவர் வெளியே வரவேயில்லை. நான் அந்த ஃப்ளோருக்கு வெளியே ஒரே ஒரு டியூப்லைட்டை மட்டும் ஆன் செய்யச் சொல்லிவிட்டு சூர்யாவுக்காகக் காத்திருந்தேன்.  

ஏழரை மணி இருக்கும். திடீரென ஒருவர் அருகே வந்து, ‘ஹே...’ என்று கத்தியபடி பயமுறுத்த, வெளியில இருந்து யாரோ வந்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்துப் பயந்துவிட்டேன். அந்த கூனன் கெட்டப், மேக்கப்புடன் வந்த சூர்யாவைப் பார்த்ததும் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. அந்த போட்டோஷூட் நடந்த ஓரிரு மணிநேரங்களில் குனிந்து  நிற்கவே அவர் அவ்வளவு சிரமப்பட்டார். ஆனால், முழுப்படத்திலும் குனிந்தபடி நடிக்கும்போது அவர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். 

‘ஆய்த எழுத்து’க்காக மணிரத்னம் சாருடன் வேலைசெய்தது மறக்க முடியாத அனுபவம். சூர்யாவின் பிரதர் கார்த்தி, அதில் மணி சாரின் இணை இயக்குநர். சூர்யா, மாதவன், சித்தார்த்... என ஒவ்வொருவரையும் தனித்தனியாக எடுத்தோம். சூர்யா-ஈஷா தியோல் காம்பினேஷன் ஷாட்ஸை கதிட்ரல் சாலையில் இருந்த என் பழைய ஸ்டுடியோவில் ஷூட் செய்தேன். அந்த ஷூட்டில் போட்டோ எடுப்பதைத்தவிர எனக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. ஏனெனில், தனக்கு என்னென்ன எமோஷன்ஸ் தேவை என்று மணி சார் தெளிவாகச் சொல்லிவிட்டார். உண்மையிலேயே அந்த ஷூட் மிகப்பெரிய அனுபவம். ஒரு சீனியர் இயக்குநர் ஆர்ட்டிஸ்ட்களிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.

அந்த ஷூட் போய்க்கொண்டு இருக்கும்போது கரன்ட் கட் ஆகிவிட்டது. காலை 11 மணிக்குப் போன கரன்ட் வரும், வரும் என்று அனைவரும் காத்திருந்தோம். நேரம் மட்டுமே கடந்துகொண்டு இருந்தது, கரன்ட் வரவில்லை. நானும் கார்த்தியும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். ‘மணி சார் வெயிட் பண்ணிட்டு இருக்காரே, அவர் நேரம் வேஸ்ட் ஆகுதே’ என்று உள்ளுக்குள் யோசனை ஓடிக்கொண்டு இருந்தது. ‘கரன்ட் இப்ப வர்ற மாதிரி தெரியலையே சார்’ என்றேன். ‘நோ ப்ராப்ளம் வெங்கட். வரட்டும்’ என்றவர், ரிலாக்ஸாக அந்தப் படத்துக்கான டயலாக்ஸை எழுதிக்கொண்டு இருந்தார். ‘கரன்ட் எப்ப வரும்’ என்று ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. சூர்யா, ஈஷா உள்பட அனைவரும் அமைதியாகக் காத்திருந்தனர். மதியம் 2.30-க்கு மேல் கரன்ட் வந்தபிறகு, திரும்ப ஷூட் செய்தோம். 

‘மாயாவி’ படத்திலும் ஒர்க் பண்ணினோம். அந்தப் படத்தை தன் இணை இயக்குநர் சிங்கம்புலி இயக்க, இயக்குநர் பாலா தயாரித்தார். ஆர்ட் டைரக்டர் ராஜீவன் பிரமாதமான செட்ஸ் அமைத்திருந்தார். காடு, நடுவே ஓர் ஆலமரம்... எனத் தத்ரூபமான ஒரு செட்டை இன்டோரில் அமைத்து இருந்தார். அந்த ஆலமர விழுதுகளைப் பிடித்து சூர்யாவும் ஜோதிகாவும் தொங்குவதுபோல் சில காம்பினேஷன் ஷாட்ஸ் எடுத்தோம். இன்னொரு செட் ரொம்பவே சுவாரஸ்யமாக அமைத்து இருந்தார். அதில் ஒட்டுமொத்த செட்டும் ரூமின் இடதுபுறம் சாய்ந்து படுத்திருப்பது போலவும், சுவரில் நடப்பதுபோலவும், ஃப்ளோரிங் சுவர் மீது இருப்பது போலவும், அடிக்கும் காற்றில் பறந்துகொண்டு இருக்கும் நாற்காலிகளைப் பிடித்து சூர்யா தொங்குவது போலவும் எடுத்தோம். நான் போட்டோஷூட்டுக்காக ஏகப்பட்ட ஆர்ட் டைரக்டர்களுடன் ஒர்க் செய்து இருக்கிறேன். அதில் ராஜீவனுடன்தான் அதிகமாக வேலை செய்திருக்கிறேன். 

‘கஜினி’ ஷூட் ரொம்பவே ஸ்பெஷல். இந்தியாவின் பழமையான ரயில்வே ஸ்டேஷனான ராயபுரத்தில் ஒருநாள், ஸ்டுடியோவில் ஒருநாள் என அந்தப் படத்துக்கு இரண்டுநாள் ஷூட் செய்தோம். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பது போலவும் ரயில்வே ட்ராக்கில் ஓடுவது போலவும் ஷாட்ஸ் எடுத்தோம். இப்போது அந்த ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அப்போது அதில் பின்னி மில்போல் இடிபாடுகளுடன்கூடிய பழைய போர்ஷன்ஸ் நிறைய இருந்தன. அந்தக் களத்துக்கும் கஜினியின் கதைக்கும் சரியாக இருந்தது. அதனால் ஆக்ஷன்ஸ் மூட் உள்ள போர்ஷன்களை அங்கு ஷூட் செய்தோம். 

அசினுடனான காம்பினேஷன் ஷாட்களை ஸ்டுடியோவில் எடுத்தோம். பிறகு சூர்யாவின் தலையை ஷேவ் செய்து அந்த கட் மார்க் வைத்து இரண்டு மூன்று நாள் வளர்ந்த தலைமுடி இருப்போது போன்ற விக் வைத்து ஷூட் பண்ணினோம். அந்த லுக்குக்கு எந்தமாதிரியான மேக்கப் மெட்டீரியல் சரியாக இருக்கும், அவரின் ஸ்கின் கலருடன் மேட்ச் ஆக வேண்டும்... என்று நிறைய எக்ஸ்பெரிமென்ட் செய்து பண்ணிய போட்டோஷூட். அது.

நான் ஹரி சாருடன் முதல்முறையாக ஒர்க் பண்ணிய படம், ‘ஆறு’. சூர்யா, த்ரிஷா காம்பினேஷன். அதற்கு முன் த்ரிஷாவை ‘லேசா லேசா’ உள்பட சில படங்களுக்கும் பெர்சனல் போர்ட்போலியோவுக்கும் பலமுறை ஷூட் பண்ணியிருந்தேன். ‘ஆறு’க்காக இருவரையும் வைத்து ஸ்டூடியோவில் காம்பினேஷனாக ஷூட் செய்தேன். கதைப்படி, சூர்யாவின் ஸ்கின் டோன் கொஞ்சம் கருப்பாக டல் மேக்கப்புடன் இருக்க வேண்டும். மேலும், கரடுமுரடான தோற்றம் கொண்ட ஆள் என்பதையும் பிரதிபலிக்க வேண்டும். படங்கள் ரொம்பவே நன்றாக அமைந்தன. பிறகு, ஹரி சாருடன் ‘வேல்’ படத்தில் ஒர்க் பண்ணினேன். அதிலும் சூர்யா, அசின் காம்பினேஷன். அதை ஸ்டுடியோவில்தான் ஷூட் பணணினோம். தனக்கு என்ன தேவை என்பதில் ஹரி சார் ரொம்பவே தெளிவாக இருப்பார். அப்படி ஒரு தெளிவான இயக்குநருடன் பணிபுரிவது ரொம்பவே எளிது. 

ஞானவேல்ராஜா தயாரித்து, கிருஷ்ணா இயக்கிய ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்துக்காக தூக்கம் தவிர்த்து தொடர்ந்து 24 மணிநேரம் ஷூட் செய்தோம். முதலில் சூர்யா-பூமிகா காம்பினேஷன் ஷாட்ஸை முட்டுக்காடு பகுதியில் ஷூட் செய்தோம். காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த ஷூட்டை முடித்துக்கொண்டு மாலையில் வடபழனி பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஷிப்ட் ஆனோம். அங்கு 9 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை நாலு மணிவரை ஷூட் செய்தோம். இன்னொரு நாள் ஜோதிகாவுடனான போர்ஷனை ஏ.வி.எம்மில் செட் போட்டு ஷூட் செய்தோம். 

‘வாரணம் ஆயிரம்’ ரொம்பவே ஸ்பெஷலான புராஜெக்ட். படத்துக்கான போட்டோஷூட் பிளஸ் சூர்யாவின் சிக்ஸ்பேக்கை ரிவில் செய்வது என்று டூ இன் ஒன் வேலை. அப்போது தமிழ்நாட்டில் வேறு யாரும் அவ்வளவு பெர்ஃபெக்டாக சிக்ஸ்பேக் பண்ணினது இல்லை. வேறு லெவலில் இருந்தார், சூர்யா. சிலருக்கு சிக்ஸ்பேக் பொருந்தாமல் போய்விடும். ஆனால், சூர்யாவுக்கு அவ்வளவு கச்சிதமாக செட் ஆகியிருந்தது. ஏற்கெனவே அழகாக இருக்கும் சூர்யா, இன்னும் மேன்லியாக இருந்தார். 

அந்த சிக்ஸ்பேக் அமைப்பைக் கொண்டுவருவதற்குப் பின்னால் உள்ள அவரின் உழைப்பு என்னை வியக்க வைத்தது. ஒவ்வொறு ஷாட் முடிந்தபிறகும் அவரின் பயிற்சியாளரின் மேற்பார்வையில் புஷ்அப்ஸ், க்ளென்ச்சஸ், டம்புள்ஸ் செய்து, ஆயில் பண்ணி... அதற்கேற்ற லைட்டிங் செய்து ஷூட் செய்தோம். மதியம் ஆரம்பித்த ஷூட் நைட் 11 மணிக்குத்தான் முடிந்தது. ரொம்பவே சோர்ந்துபோய் இருந்தார். 

அந்த ஷூட் முடித்ததும், நேராக பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்குச் சென்றோம். ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். வாழ்க்கையில் முதல்முறையாக சாப்பிடும் மனிதரைப்போல் தொடர்ந்து ஆர்டர் செய்து சாப்பிட்டபடி இருந்தார், சூர்யா. சிக்ஸ்பேக் கொண்டுவர நீரின் அளவைக் குறைத்தால்தான் மசில்ஸ் தெரியும் என்பதால், தண்ணீர்கூட அவ்வளவு குடிக்க முடியாது. அப்படியென்றால் சாப்பாட்டில் எந்தளவுக்கு ஸ்ட்ரிக்காக இருந்திருப்பார் என்பது புரியும். பாத் டப்பில் கேஷுவலாகப் படுத்திருப்பது, ஒரு கையில் கேப் வைத்துக்கொண்டு வெற்றுடம்புடன் நிற்பது... என்று அந்த சிக்ஸ்பேக் போட்டோஸை ‘வாரணம் ஆயிரம்’ பட புரமோஷனுக்குப் பயன்படுத்தினர். இன்றுபோல் அன்று சோஷியல் மீடியா இல்லைதான். ஆனால், அன்றே அந்தப் படங்கள் மிகப்பெரிய வைரல். 

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படத்துக்கு ஏ.வி.எம்மில் செட் போட்டு எடுத்தோம். ஒன்றிரன்று ஆக்ஷன்ஸ் ஷாட்ஸ், டான்ஸ் சீக்வென்ஸ், ரொமான்ஸ் என்று சூர்யா-தமன்னா காம்பினேஷன்களை அங்கு எடுத்தோம். அதைத்தொடர்ந்து உதயநிதி தயாரித்த ‘ஆதவன்’ படத்துக்கும் ஷூட் செய்தேன். அதில் லைட்டிங் பேட்டர்னில் வித்தியாசமான முயற்சிகளைச் செய்தேன். மொட்டை மாடியில் அமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் பைப்களுக்கு மத்தியில் தப்பிச்செல்வது,... என்று நிறைய ஆக்ஷன்ஸ் காட்சிகள். அந்த ஃப்ளோரிங்கை ராஜீவன் அமைத்து இருந்தார். அது தவிர, நயன்தாரா, சரோஜாதேவி சம்பந்தப்பட்ட ஃபேமிலி காம்பினேஷன்களையும் ஷூட் செய்தேன். 

‘சிங்கம்’ பட சீரிஸும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ‘சிங்கம்’ முதல் பாகத்தில் அனுஷ்கா  ஹீரோயின். சூர்யா-அனுஷ்கா ரொமான்ஸ் ஷாட்ஸை எடுத்து முடித்தபிறகு மாலை சூர்யாவை போலீஸ் காஸ்ட்யூமில் எடுத்தோம். முதல் பார்ட்டில் போட்டோஷூட்டை கொஞ்சம் எளிமையாகச் செய்தோம். அடுத்த பாகத்தில் ‘துரைசிங்கம்’ கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாகப் பதியவைக்கும் வகையில் ஷாட்ஸ் அமைத்திருந்தோம். 

வீட்டு வாசலில் கையில் அரிவாளுடன் நிற்பது, காக்கி யூனிஃபார்ம், நெற்றியில் குங்குமம் என்று அந்த போட்டோக்களைப் பார்க்கும்போதே பவர்ஃபுல்லாக இருக்கும். அதேபோல அடித்துக் குவிக்கப்பட்ட ரவுடிகள் மீது கால் வைத்து ஷூ லேஸ் கட்டுவது... என அதில் ஃபுல் ஆக்ஷன் மோட். ஏற்கெனவே ஹரி சாரைப் பற்றி சொல்லியிருந்தேன். ‘போலீஸ் யூனிஃபார்ம்ல பெர்ஃபெக்டா இருக்கணும்’ என்பது மட்டுமின்றி, அந்த ஊரில் குலசாமி கோயில், குங்குமம், அரிவாள், எலுமிச்சை பழம் என்று மிக்ஸ்செய்து அந்த லோக்கல் ஃபீலைக் கொண்டுவருவார். அவரின் அந்த கமிட்மென்ட்டைப் பார்க்கும்போது, நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

‘அஞ்சான்’ படத்துக்காக நிறைய முயற்சிகள். வித்தியாசமான ஹேர் ஸ்டைல். அதற்காக மும்பையில் இருந்து ஸ்டைலிஸ்ட்டை வரவைத்தோம். சூர்யாவின் லுக்குக்காக நிறைய எக்ஸ்பெரிமென்ட் செய்து இருந்தார்கள். போட்டோஸும் நன்றாக அமைந்திருந்தன. இதேபோல் ‘24’ படத்தில் ஆத்ரேயா, இளவயது கேரக்டர், விஞ்ஞானி என்று சூர்யாவை மூன்று கெட்டப்களில் ஷூட் செய்தேன். ஒரே நாளில் எடுக்கப்பட்ட அந்த மூன்று வேரியேஷன்கள் நன்றாக வந்திருந்தன. இப்படி சினிமாக்கள் மட்டுமின்றி சூர்யா நடித்த பெப்சி, ஏர்செல், பாரதி சிமென்ட், டிவிஎஸ் மோட்டார் சைக்கிள்... என்று அவரின் விளம்பரப் படங்களுக்கும் போட்டோஷூட் செய்துள்ளேன். தவிர, அவர் புது லுக் ஒன்றை முயற்சி செய்கிறார் என்றால், பெர்சனலாக ஒரு போட்டோஷூட் கண்டிப்பாக இருக்கும். 

 ‘காக்க காக்க’ மிடுக் போலீஸ் அதிகாரி, ‘பேரழகன்’ பட கூனன் கேரக்டர், 'ஆய்த எழுத்து' இளைஞன், நகைச்சுவை ‘மாயாவி’, பழிமுடிக்கத் துடிக்கும் ‘கஜினி’, துறுதுறு காதலன் டு அன்பான கணவன் ‘ஜில்லுனு ஒரு காதல்’, ‘சிங்கம்’ வரிசைகள், காலத்தை கடிகாரத்தால் மாற்றியமைக்கும் ‘24’... சூர்யாவை சினிமாவில் அவரின் ஆரம்ப நாட்களில் இருந்து கவனித்து வந்தவனாகச் சொல்கிறேன், அவரின் வளர்ச்சியையும் உழைப்பையும் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சொல்லிவிடும். அதில் பல படங்கள் ஓடியிருக்கலாம், சில படங்கள் வெற்றியைத் தராமல் இருக்கலாம். ஆனால், தன் உழைப்பில் அவர் எந்தப் படத்துக்கும் குறைவைத்தது இல்லை. 

 ‘பருத்திவீரன்’ பட போட்டோஷூட்டில் தன் தம்பி கார்த்தியை எப்படி லான்ச் செய்ய வேண்டும் என்ற சூர்யாவின் ஆர்வம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ‘லுக் இப்படி இருக்கணும்... ஹேர் இந்தமாதிரி இருக்கணும்’ என்று அந்த போட்டோஷூட்டின்போது கூடவே இருந்தார். அதில் சிவகுமார் சார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் அமீர், ஞானவேல் ராஜா டீமை ஷூட் செய்தது நல்ல அனுபவம். சூர்யாவைப் போலவே சிவகுமார் சாரும் கார்த்தியும் எனக்கு நல்ல அறிமுகம். சிவகுமார் சாருக்கு ஓர் ஓவியராக போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். ‘புதுசா என்ன பண்ணிட்டு இருக்கீங்க’ என்று விசாரிப்பார். அந்தக் காலத்தில் சென்னை பீச்சில் எடுக்கப்பட்ட அவருடைய கருப்பு-வெள்ளை போட்டோஷூட் படங்களைக் காட்டுவார். அதேபோல ‘அந்தப் பெயின்டிங் பாருங்க, இதைப் படிங்க’ என்று மோட்டிவேட் செய்துகொண்டே இருப்பார். 

நடிகர் என்பதைத் தாண்டி, சூர்யா எனக்கு நல்ல நண்பரும்கூட. போட்டோஷூட் செய்கிறோம் என்றால் சாப்பாடு அவரின் வீட்ல இருந்து வந்துடும். டயட், ஒர்க்அவுட் என்று இருப்பதால் புரொடக்ஷன் சாப்பாடு அவருக்கு செட் ஆகாது. அவரின் ட்ரெயினர் கொடுத்த விகிதாசாரத்தில் தயாரிக்ப்பட்ட ஸ்பெஷல் டிஷ் வீட்டிலிருந்து அனுப்புவார்கள். ‘நீங்களும் சாப்பிடணும்’ என்று சொல்லி பக்கத்திலேயே உட்கார வைத்துவிடுவார். நானும் அந்த சாப்பாட்டை ட்ரை பண்ணுவேன். 

ஒரு போட்டோகிராஃபராக எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கக் காரணம், அவர் பயங்கர போட்டோஜெனிக். ஹீரோக்களில் சிலர்தான் அப்படி போட்டோஜெனிக்காக இருப்பார்கள். ஒரு ஃப்ரேமில் லைட்டிங் செய்து அவர் வந்து நின்றாலே அவ்வளவு அழகாக இருப்பார். இவரின் போட்டோஷூட்டை என்ஜாய் செய்து பண்ணலாம். ஸ்கின் டோன், எக்ஸ்பிரஷன்ஸ், ஹேர் ஸ்டைல், பாடி ஸ்ட்ரெக்சர், ஆர்வம்... என்று எப்போதும் அப்படி வந்து இருப்பார். 

எந்த கெட்டப், கேரக்டராக இருந்தாலும் அவரை லைட் பண்ணி எடுக்க எனக்கு அவ்வளவு பிடிக்கும். தவிர, அவருடைய போட்டோஷூட்டில் லைட்டிங் பேட்டர்னில் அத்தனை புது முயற்சிகள் செய்துள்ளேன். எந்த லைட்டிங் பேர்ட்டர்ன்களிலும் அழகாக இருப்பார். அனைத்து லைட்டிங்குக்கும் அவரின் ஸ்கின் ஏற்றதாக அமைந்துள்ளது. அவரை போட்டோ எடுப்பது என்பது ஒரு ட்ரீட். ஒரு மாடல் போல் உள்ள ஆக்டர். என் இந்த புகைப்படப் பயணத்தில் எனக்கு அமைந்த மிகச்சிறந்த படங்கள் என்று சில கலெக்ஷ்ன்ஸ் வைத்துள்ளேன். அதில் அவருடைய படங்கள்தான் அதிகம். அதற்கு அவரின் ஆர்வமும், எந்த லுக்குக்கும் பொருந்திப்போகும் அவரின் அழகும்தான் காரணம்.

பேசுவோம்...