Published:Updated:

``சிவராத்திரி... பாட்டுல நடிக்கவேமாட்டேன்னு அடம்பிடிச்சேன்!'' - 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், நடிகை ரூபிணி பகுதி 3

கமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள். ஒன்று, கெளதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க.

``சிவராத்திரி... பாட்டுல நடிக்கவேமாட்டேன்னு அடம்பிடிச்சேன்!'' - 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், நடிகை ரூபிணி பகுதி 3
``சிவராத்திரி... பாட்டுல நடிக்கவேமாட்டேன்னு அடம்பிடிச்சேன்!'' - 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், நடிகை ரூபிணி பகுதி 3

``எனக்கு சின்ன வயதிலிருந்து பரதம் ஆடுவது பிடிக்கும். முறையாக பரதம் கற்றுக் கொண்டேன். நிறைய மேடைகளில் பரதம் ஆடியிருக்கிறேன். பரதம் ஆடுவதற்காக சின்ன வயதிலேயே உலகம் முழுக்கச் சுற்றியிருக்கிறேன். அப்போது, ஒரு ரிகர்சலுக்காக பரதநாட்டியக் கலைஞர் குருஜி கோபிகிருஷ்ணா வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்தியில் பெரிய டைரக்‌டராக இருந்த ஹிரிகேஷ் முகர்ஜி அங்கே இருந்தார். அவர் மூலம் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன்!" - சினிமா தனக்கு அறிமுகமான தருணத்தை அப்படியே நம்மிடம் கடத்துகிறார், நடிகை ரூபிணி.

``குழந்தை நட்சத்திரமாகத்தான் இந்தியில் அறிமுகமானேன். `மிலி' என் முதல் படம். அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்திருந்தார். ஷீட்டிங் ஸ்பாட்டில் எத்தனையோ குழந்தைகள் இருந்தாலும், என்னை மட்டும் கூப்பிட்டு டைரக்டர் ஹிரிகேஷ் முகர்ஜி சாக்லேட் கொடுப்பார். ஏன்னே தெரியாது, எப்போதும் எனக்கு அவரிடமிருந்து ஸ்வீட் கிடைக்கும். அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். அப்போ எல்லாம் `பேபி கோமல்' என்றால், ரொம்ப ஃபேமஸ். ஏன்னா, கோமல்தான் என் நிஜப்பெயர்!" - தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், ரூபிணி.  `மனிதன்', `அபூர்வ சகோதர்கள்', `மைக்கேல் மதன காமராஜன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். 

``என் சொந்த ஊர் மும்பை. குடும்பத்தில் யாரும் சினிமாவைச் சேர்ந்தவர்கள் இல்லை. சினிமாவிலிருந்து எனக்கு சப்போர்ட் செய்வதற்குக்கூட யாருமில்லை. கடவுள் அருளால்தான் சினிமாவுக்குள் நான் வந்தாக நினைக்கிறேன். என் அம்மா ஒரு டாக்டர். அப்பா லாயர். மூன்று தலைமுறைகளாகவே எங்கள் குடும்பம் லாயர் குடும்பம்தான். 

பரதம் கற்றுக்கொண்டேன்; படித்தேன். சினிமாவில் நடித்தேன். நிறைய கலை நிகழ்ச்சிகளுக்குப் போவேன். அப்போது என்னைத் தேடி நிறைய சினிமா வாய்ப்புகள் வரும். ஆனா, என் அம்மா செலக்டிவாதான் நடிக்க அனுப்புவாங்க. அந்தச் சமயத்தில், `Payal ki jhankaar'னு ஒரு இந்திப் படம். ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம்தான் தயாரிப்பு. அந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோல் பண்னேன். அந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு என்ட்ரி ஆச்சு.  

பிறகு ரஜினி சார் நடித்த இந்திப் படத்தில் நடித்தேன். அப்போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அப்புறம் நிறைய இடைவெளி வந்துருச்சு. அப்போது, தென்னிந்தியாவில் குச்சிப்புடி அகாடமி ஒன்று இருந்தது. அங்கே குச்சிப்புடி கற்றுக்கொள்ள வந்தேன். ஜெயலலிதா அம்மா அங்கேதான் குச்சிப்புடி கத்துக்கிட்டாங்க. அவங்களோட குச்சிப்புடி ஆசிரியர்தான், எனக்கும் ஆசிரியர்!

அப்போ அறிமுகமான பூர்ணிமா பாக்யராஜ் அக்கா என்னைப் பார்த்துவிட்டு நடிக்கக் கூப்பிட்டாங்க. பூர்ணிமா அக்காவுக்கு மும்பைதான் சொந்த ஊர். என் அம்மா பூர்ணிமா அக்காவின் ஃபேமிலி டாக்டர். அவங்கதான் என்னை பாக்யராஜ் சாரின் `சார் ஐ லவ் யூ' படத்தில் கமிட் பண்ணாங்க. அப்படியே மணிவண்ணன் சாரின் `தீர்த்தக் கரையினிலே', விஜய்காந்த் சாரின் `கூலிக்காரன்', ரஜினியின் `மனிதன்' என ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகிவிட்டேன். எல்லாப் படமும் ஒரே வருடத்தில் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

நான்கு படங்களையும் முடித்துவிட்டு மும்பைக்குப் போயிட்டேன். அப்போது டைரக்டர் வாசு சார் எனக்குப் போன் பண்ணினார். `என் படத்தில் நீ நடிக்கணும்'னு சொன்னார். அப்போ எனக்கு எக்ஸாம் இருந்தது. காலேஜ் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. வாசு சார் அவருடைய `என் தங்கச்சி படிச்சவ' படத்தில் என்னைத்தான் நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆவலாக இருந்தார். என் அம்மா, `இல்லை சார், அவளுக்குப் பரிட்சை இருக்கு, நடிக்கமுடியாது'னு சொன்னாங்க. சார் விடவே இல்லை. உதவி இயக்குநரையெல்லாம் அனுப்பி ஒருவழியா என் அம்மாகிட்ட ஓகே வாங்கிட்டார். `பொள்ளாச்சியில்தான் படத்தின் ஷீட்டிங் நடக்கப்போகுது. ஷீட்டிங் முடிந்தவுடன் நேரா மும்பைக்குப் ஃபிளைட் பிடிச்சுப் போயிடலாம்'னு சொல்லி, அந்தப் படத்தில் நடிக்கவைத்தார். 

அந்த நேரத்தில் கன்னடப் படம் ஒன்றில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். சிக்மகளூரில் ஷூட்டிங். `என் தங்கச்சி படிச்சவ' படத்தின் தயாரிப்பாளர் மோகன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சைக்கிளிலேயே வந்து கால்சீட் வாங்கிட்டுப் போனார். அப்புறம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். 

ஆச்சர்யமாக இருக்கு... எல்லா முன்னணி ஹீரோக்கள்கூடவும் படம் பண்ணிருக்கேன். ரஜினியுடன் `மனிதன்' படம் பண்ணும்போது எனக்குப் 16 வயசுதான். அந்தப் படத்தில் இடம்பெற்ற `காளை காளை..' பாடல் நல்ல ரீச். அப்போது, ரஜினி மராத்தி மொழியில் என்னிடம், 'நீ பெரிய டான்ஸர். நான் அப்படியில்லை'னு சொல்வார். ரொம்ப டவுன்ட் டூ எர்த் பெர்சன் ரஜினி. அப்போது அவருடன் நடிக்கும்போதெல்லாம் எவ்வளவு பெரிய ஆளோட நடிக்கிறோம்ங்கிற விஷயம் எனக்குத் தெரியாமபோச்சு. `மனிதன்' படத்துக்கு முன்னாடியே ரஜினியுடன் இந்திப் படம் ஒன்றில் நடித்திருந்ததால், எனக்கும் ரஜினிக்கும் நல்ல புரிதல் இருந்தது. `மனிதன்' பெரிய சக்சஸ் ஆகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கு. இந்தியில் இருக்கும் பலர் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும்போது, எனக்குக் கிடைச்ச அந்த வாய்ப்பு பெருமைதான்!  

`மனிதன்' படத்துக்குப் பிறகு `ராஜா சின்ன ரோஜா' படத்திலும் ரஜினியுடன் நடித்தேன். அதில் எனக்குக் கேமியோ ரோல். ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் ஷூட்டிங் நடக்கும். ரஜினி சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வந்துடுவார், ராத்திரி எவ்ளோ நேரம் ஆனாலும் முகம் சுளிக்காமல் நடிப்பார். கொஞ்சம்கூட பந்தா காட்டாத நடிகர். இந்தியில் இருக்கும் பெரிய நடிகர்கள் எல்லாம் இப்படி இருப்பாங்கனு சொல்லமுடியாது!" என்றவர், கமல் பற்றிச் சொல்கிறார். 

``கமல், என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி இருந்தார். கமல் சாரின் சிஸ்டர் நளினி மும்பையில் இருந்தாங்க. அவங்க நல்ல டான்ஸர். என்னை எப்போதும் பரத நாட்டிய கிளாஸூக்கு அம்மாதான் அழைத்துச் செல்வார். அப்போது நளினி அக்கா எனக்கு நல்ல பழக்கம். கமல் சார் மும்பைக்கு நளினி அக்காவைப் பார்க்க வரும்போது, கமலைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். இந்தியில் ஒரு டெலிவிஷன் ஷோ பண்ணேன். அப்போது என்னுடன் கமல் சாரும் அதில் நடித்தார். ஆனால், அது பாதியிலேயே நின்றுவிட்டது!. 

பிறகு, கமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கமல் சாரின் தயாரிப்பு. படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள். ஒன்று, கெளதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க. நான், `அப்பு' கமலின் காதலி கேரக்டரை செலக்ட் பண்ணேன். ஏன்னா, படத்தில் அப்பு ரோல் ரொம்ப முக்கியம்ல... அதனாலதான்.  

பட ரிலீஸூக்கு முன்னாடி பலபேர், `ஏன் கெளதமி ரோல் பண்ணவில்லை'னு கேட்டாங்க. அப்பு கேரக்டரைப் பார்க்கும்போது ஒரே ஷாக். எப்படிக் கமல் இந்த கேரக்டரைப் பண்ணினார் என்று... அதற்குப் பிறகு கமலுடன் `மைக்கேல் மதன காமராஜன்' பண்னேன். இந்தப் படத்தில் `சிவராத்திரி...' பாட்டு வரும். அந்தப் பாட்டை ஷீட் பண்ணும்போது, இப்படி ஒரு கிளாமர் பாட்டுல நடிக்கமாட்டேன்னு அவ்ளோ அழுதேன். ஏன்னா, எனக்கு அந்தப் பாடல் பிடிக்கவே இல்லை. கமல் சாரிடம், `நானும், நீங்களும் கிளாசிகல் டான்ஸர். இந்தமாதிரி பாட்டு வேணாமே'னு சொன்னேன். ஆனால், அதைக் கமலும், டைரக்டரும் கேட்கவே இல்லை. ரொம்ப ரகளை பண்ணினேன். 

அழுதுகொண்டே ஷூட்டிங்கில் இருந்த ஊர்வசி அக்காவிடம், `இப்படி ஒரு பாடலில் நடிக்க, எனக்கு இஷ்டமே இல்லை'னு சொன்னேன். ஊர்வசி அக்கா, `கவலைப்படாத... இது வெறும் சினிமாதானே, நடி'னு சொன்னாங்க. இப்படி ஒரு பாட்டுல நடிக்க, எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது.  

இந்தப் பாட்டின் ஒரு வரியை மட்டும் 9 நாள்கள் ஷூட்டிங் செய்தார்கள். பாட்டை எடுத்து முடிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அதேமாதிரி, இந்தப் பாட்டில் மனோரமா ஆச்சி எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பதுபோல காட்சி இருக்கும். மனோரமா ஆச்சிக்குக் கமல்தான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். படத்தில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் காட்சியின்போது எல்லோரும் ஜாலியாக இருந்தோம். இனி இதுமாதிரி ஒருபடம் பண்ணுவது சாத்தியமில்லை. 

ரஜினி சாரின் `உழைப்பாளி' படத்திலும் `ஒரு மைனா மைனா' என்ற பாட்டில் நடிக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை. வாசு சார் சொன்னதுக்காக சம்மதிச்சேன்.  

என் கரியரில் முக்கியமான படம், `பத்தினி பெண்'. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி மேடமோட வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படத்திற்காக `சிறந்த நடிகை'னு மாநில அரசு விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை வாங்கினேன். அப்புறம் ஒருநாள் ஜெயலலிதா அம்மா அவரோட வீட்டுக்கு என்னை அழைத்தார், பயந்துகொண்டே போனேன். ஏனெனில், எதற்காக நம்மைக் கூப்பிட்டார் என்ற சந்தேகம். `பிளாக் கேட்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு கொடுத்த விருதை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்களோ?'னு நினைச்சேன். கிட்டத்தட்ட 45 நிமிடம் ஜெயலலிதா அம்மா என்னிடம் பேசினார். `நீ தென்னிந்தியப் பெண்ணா'னு கேட்டார், `இல்லை. பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பைதான்'னு சொன்னேன். `எப்படி நடிக்க வந்த'னு கேட்டார். விவரங்களைச் சொல்லிக்கொண்டே, `உங்களுக்குக் குச்சிப்புடி கற்றுக்கொடுத்த குருதான், எனக்குக் கத்துக்கொடுத்தார்'னு சொன்னேன். அப்போது என் கையைப் பிடித்துப் பேசினார். அவங்க கை மல்லிகைப் பூ மாதிரி அவ்வளவு மென்மையாக இருந்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது. 

தமிழ் சினிமாவில் ஃபேமஸாக இருக்கும்போதே அப்பா, அம்மா திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மும்பைக்குப் போயிட்டேன். அப்படியே கொஞ்சநாள் அமெரிக்காவுல இருப்போம்னு முடிவெடுத்திருந்த சமயம். அப்போ என் அப்பா, அம்மா, `உனக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவரையே திருமணம் செய்துகொள். உனக்கு மும்பையில் இருக்கிற பையன் பிடிக்கலைனா, அமெரிக்காவுல இருந்து மாப்பிள்ளையைக் கைகாட்டினாலும் ஓகேதான்'னு சொன்னாங்க. அமெரிக்கா கிளம்பிட்டேன். ஒரு வருடம் இருந்தேன். ஆனா, எனக்கு அங்கே யாரையும் பிடிக்கலை. 1999-ல் இந்தியா வந்தேன். 2000-ல் வீட்டில் பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 

என் வீட்டுக்காரர் பிசினஸ்மேன். இப்போ, வாழ்க்கை ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு இருக்கா, பெயர் அனிஷா. 13 வயசு ஆகுது. கல்யாணம் முடிஞ்சு அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனால், பரதநாட்டியத்தை மட்டும் விட மனசு இல்லை. இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன், கத்துக்கொடுத்துக்கிட்டும் இருக்கேன். 

சென்னைக்கு வரும்போது சினிமா ஆட்கள் சிலரைச் சந்திப்பேன். பூர்ணிமா பாக்யராஜ் அக்காவுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். ரஜினி சாரிடம் எப்போதாவது பேசுவேன். மும்பையில்தான் மது, சுதா சந்திரன் இருக்காங்க... அவர்களை அடிக்கடி பார்ப்பேன். எப்போதும் லொட லொடனு எல்லோருடன் பேசிக்கொண்டே இருப்பேன். என் பொண்ணு சொல்வா, `என்னம்மா நீ... அம்மா மாதிரியே இல்லை, இன்னும் குழந்தை மாதிரியே இருக்க!'னு கமென்ட் அடிப்பா. 

`விஜபி 2' படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக தாணு சார், தனுஷ் எல்லோரும் மும்பை வந்திருந்தப்போ அவங்களைச் சந்திச்சேன். ரஜினி சார் மும்பை வந்தாலும், பார்ப்பேன். நல்ல ரோல் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியாவது சென்னைக்கு வந்துட்டுப் போகலாம்ல... பார்ப்போம், சென்னைக்கு வர்ற நாள் சீக்கிரமே வரலாம்!" என முடித்தார், நடிகை ரூபிணி.