Published:Updated:

``குறைந்த சம்பளம்.. ஆனா மனசுக்கு நிறைவான வேலை" அனுபவம் பகிர்கிறார் தியேட்டர் ஆபரேட்டர் ஆரிஃப்!

``குறைந்த சம்பளம்.. ஆனா மனசுக்கு நிறைவான வேலை" அனுபவம் பகிர்கிறார் தியேட்டர் ஆபரேட்டர் ஆரிஃப்!
``குறைந்த சம்பளம்.. ஆனா மனசுக்கு நிறைவான வேலை" அனுபவம் பகிர்கிறார் தியேட்டர் ஆபரேட்டர் ஆரிஃப்!

``குறைந்த சம்பளம்.. ஆனா மனசுக்கு நிறைவான வேலை" அனுபவம் பகிர்கிறார் தியேட்டர் ஆபரேட்டர் ஆரிஃப்!

`சினிமா' என்னும் மாய உலகம், காலங்காலமாக நம்மோடு தொடர்ந்துவரும் கலையாத கனவுலகம். அப்படிப்பட்ட சினிமாவை, அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை  நமக்குக் காட்டி வருபவை திரையரங்குகள். இவை ஒருகாலத்தில், `டூரிங் டாக்கீஸ்', `சினிமா கொட்டகை', `கீற்றுக் கொட்டகை', `டென்ட் கொட்டகை' எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. நவீன யுகத்தின் வளர்ச்சியால் திரை அரங்குகளில் பல இன்றைக்கு அழிந்துபோய்விட்டன. 

ஒரு பெரிய மணற்பரப்பில் பாமர மக்களும் அமர்ந்துகொண்டு, படுத்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு சொகுசாகப் படம் பார்க்கும் சொர்க்கபுரியாக இருந்தன அன்றைய `டூரிங் டாக்கீஸ்கள்'. அத்துடன், இயற்கையான காற்றோட்டமும், சிலுசிலுப்பான மணலும் பல நூறு ஏசி-யிலும் கிடைக்காத குளிர்ச்சியை மக்களுக்குத் தந்தன அந்த டாக்கீஸ்கள். சாதி, மத இன வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைத்ததில் டூரிங் டாக்கீஸ்களின் பங்கு மிக அதிகம். அத்தகைய டூரிங் டாக்கீஸ்களில் சினிமாக்களைக் காண பல கிலோ மீட்டர் வரை மாட்டுவண்டிகளிலும், சைக்கிள்களிலும், நடந்துசென்றும் பார்த்த மனிதர்கள் ஏராளம். 

புதிய மல்டிபிளஸ் தியேட்டர்கள், மால்களில் தியேட்டர்கள், 4K வசதியுடன் கூடிய பிரம்மாண்ட தியேட்டர்கள்,  ஆன்லைன் புக்கிங், டிஜிட்டல்  மற்றும் கியூப் தொழில்நுட்பம், அபரிமிதமான கட்டணம், உள்ளே நுழையும் முன்னே கறுப்பு டீஷர்ட் அணிந்த சோதனை நபர்கள் என இன்று பல  திரையரங்குகளின் வடிவமே மாறிவிட்டது. அப்படி, இன்று திரையரங்குகள் நவீனமயமாகிவிட்டாலும் அன்றைய `டூரிங் டாக்கீஸ்' களில் அடைந்த  மகிழ்ச்சி, இன்றைக்கு நவீன மால்களில், அதிநவீனத் தொழில்நுட்பத் திரையரங்குகளில் கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன்படி, திருச்சியில் பல நவீனத் திரையரங்குகள் வந்துவிட்டாலும் ஐம்பது ஆண்டுகள் பழைமையான ராமகிருஷ்ணா டாக்கீஸுக்கு என்று மக்களிடத்தில் தனி வரவேற்பு உண்டு. அதுபோன்ற டாக்கீஸ்களை இன்றும் காணும் நாம், அந்த டாக்கீஸையே வாழ்வாதாரமாகக் கொண்ட ஆபரேட்டர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதைக் காண ஒருநாள் அந்த டாக்கீஸுக்கு விசிட் அடித்தோம். திரையரங்கின் முகப்பிலேயே அஜித், தனது தம்பிகளுடன் தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார் 'வீரம்' பட போஸ்டரில். உள்ளே, ஆபரேட்டர் இருந்தார்.

``படம் போட இன்னும் அரைமணி நேரம் டைம் இருக்குங்களே" என்றார் ஆபரேட்டர். ``சார், உங்களிடம்தான் பேச வேண்டும்'' என்று நாம் விளக்கியவுடன் நம்மிடம் பேச அமர்ந்தார். 

``என் பேரு ஆரிஃப்ங்க. இந்தத் தியேட்டர்லதான் 26 வருஷமா ஆபரேட்டரா இருக்கேன். எனக்குச் சொந்த ஊரு முசிறி பக்கத்துல காட்டுப்புதூர்ங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே தியேட்டர் ஆபரேட்டர் ஆகணும்ங்கறதுதான் ஆசை. என் ஸ்கூல் ஃப்ரெண்டு ஆபரேட்டரா இருந்தாரு. அவரைப் பார்க்கவும் எனக்கு ஆசை இன்னும் அதிகமாயிடுச்சு. பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கப்புறம் 1983-ல  எங்க ஊருலயே இருந்த அருள்வேலன் டாக்கீஸுக்குச் சும்மா போயிட்டு வந்துட்டு இருந்தேன். எப்படிப் படம் ஆபரேட் பண்றாங்க என்பதை நல்லா கவனிச்சிட்டு இருந்தேன். வீட்டுல எல்லாரும் என்னைத் திட்டிக்கிட்டே இருந்தாங்க. நான் அதையெல்லாம் கண்டுக்கலை. அப்புறம் எம்.டி.கே. தியேட்டர்லயும் அசிஸ்டென்ட் ஆபரேட்டரா சேர்ந்தேன். 100 ரூபா சம்பளம் வாங்கினேன். அப்புறம் 1988-ல ஆபரேட்டர்க்கு லைசென்ஸ் அப்ளை பண்ணினேன். அதுக்கு, ஒரு வருஷம் அசிஸ்டென்ட்டா வேலை செய்யணும். அந்த சர்டிஃபிகேட்டைச் சென்னையில இருக்குற ஆபரேட்டர் அமைப்புல கொடுக்கணும். அதுக்கப்புறம் பேப்பர்ல எப்போ வரணும்னு சொல்லுவாங்க. நாங்க போய்ப் பரீட்சை எழுதுவோம். அதுக்கப்புறம்தான் நம்ம கையில லைசென்ஸ் கொடுப்பாங்க'' என்றவர், சிறிது மூச்சுவிட்டுப் பின் தொடர்ந்தார்.

``ஆபரேட்டரா சுத்திட்டு இருக்கேனு எனக்கு யாரும் முதல்ல பொண்ணு கொடுக்கலை. அப்புறம் என்னைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டுத்தான் பொண்ணு கொடுத்தாங்க. அதுகப்புறம் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நாங்கெல்லாம் திருச்சிக்கு வந்துட்டோம். 1991 ஆகஸ்ட்டுல இந்த டாக்கீஸுக்கு வந்து சேர்ந்தேன் . 1,500 ரூபா சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். இப்போ 6,000 ரூபா வாங்கிட்டிருக்கேன். அப்போலாம் உடம்பு நல்லா ஆரோக்கியமா இருந்துச்சு. அந்த ஃபிலிம் ரீல் சுத்துறதையெல்லாம் அவ்வளவு விரும்பிச் செய்வோம். இப்ப கியூப் வந்ததுக்குப் பிறகு சோம்பேறித்தனம் அதிகம் வந்துடுச்சுங்க. ஒரு பட்டனைப் போட்டா இன்டர்வல் வரைக்கும் எங்களுக்கு வேலையே இல்லை. அதுக்கப்புறம் அடுத்த பட்டன போட்டா படமே முடிஞ்சிடும். எல்லாம் காலம் மாறிப் போயிடுச்சி. இங்க  பெரும்பாலும் நாங்க பழைய படங்களைத்தான் ஓட்டுவோம். எப்போதாவது புதுசா ரிலீஸ் பண்ணுவோம். எங்ககிட்ட பிரின்ட்டும் இருக்குது. கியூபும் இருக்குதுங்க. `துப்பாக்கி' படம் வரைக்கும்தான் ஃபிலிம் பிரின்டுல வந்துச்சுங்க. அதுக்கப்புறம் எல்லாமே கியூபுதான். இப்ப நான், மேனேஜர்னு மொத்தம் ஆறு பேர் இந்த டாக்கீஸ்ல வேலை செய்றோம்ங்க. எங்களுக்குச் சம்பளம் போக தீபாவளி அப்போ மட்டும் ஒருமாச சம்பளத்தைப் போனஸா கொடுப்பாங்க" என்றவர் சற்றே நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்.  

``அப்போவெல்லாம் இந்த டூரிங்கை விட்டு நான் வெளியே போனா நல்ல மரியாதை கிடைக்கும்ங்க. டாக்கீஸ்ல இருக்கும்போது சாப்பாடு, டீயினு அடிக்கடி ஏதாவது கொடுத்துட்டே இருப்பாங்க. சாதாரணமா ஒரு டீக்கடைக்குப் போனாகூட,  `ஆபரேட்டர் வர்றார்பா... வழி விடுங்கப்பா'னு சொல்வாங்க. வீட்டுக்கு வெளியேதான் மரியாதை எல்லாம். வீட்டுக்குள்ளே, நிறைய தடவை திட்டு வாங்கியிருக்கேன். எத்தனையோ ஃபங்ஷன்ல என்னால கலந்துக்க முடியாம போயிடுச்சுங்க. என் மனைவி மட்டும்தான் போய் கலந்துக்குவாங்க. ஒருநாள் என் தம்பிக்குக் கல்யாணம். அன்று காலையில கிளம்பும்போதே என் தம்பி, `அண்ணே.. சீக்கிரம் வந்துடுங்க' சொன்னான். நானும் தலையாட்டியபடி வந்தேன். இன்னொரு ஆபரேட்டர்கிட்ட லீவ் சொல்லிட்டுப் போயிடலாம்னு இங்க வந்து பார்த்தா அவரு எனக்கு முன்னே லீவு சொல்லிட்டுச் சபரிமலைக்குப் போயிருக்காரு. அவருக்கும் சேர்த்து நான்தான் வேலை செய்யணும். கியூப்னா விட்டுட்டுப் போயிடலாம். அப்போ பிரின்டு. கூட இருந்தே ஆகணும். வேலையெல்லாம் முடிஞ்சி வீட்டுக்குப் போனதும் தம்பி, `ஏன் அண்ணா... கல்யாணத்துக்கு வரலை'னு கேட்டான். என் வேலை பத்தி அவனுக்குத் தெரிந்ததால பிறகு சமாதானமாயிட்டான்'' என்றவரிடம் சவுண்டு எஃபெக்ட்ஸ், ரீல் பற்றிக் கேட்டோம். 

``முன்பு, படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது... எக்ஸ்டிரா சவுண்டு, எபெக்ட்ஸ்லாம் நாங்களே போடுவோம். விஜய் படம் `துள்ளாத மனமும்

துள்ளும்', `பிரியமானவளே' படத்துக்கெல்லாம் அப்படி இருக்கும்ங்க எஃபெக்ட்ஸ்லாம். அந்தக் காலத்துல ரீல் போடுறப்ப நிறைய கூத்து நடக்கும்ங்க. ஒரு ரீலுக்குப் பதினாலு சக்கரம். இன்டர்வல் வரைக்கும் ஏழு சக்கரம். ஒரு சில படங்களுக்கு நான்கு சக்கரத்திலயே இன்டர்வல் வரும். இதனால திடீர்னு ரீல் மாறிடும். பிறகு, ரீல பார்க்குறப்பவே தெரிஞ்சிடும் சீன் மாறி வருதுனு. உடனே, மக்கள் கண்டுபிடிக்குறதுக்குள்ளேயே நாங்களே சரி பண்ணி போட்டுடுவோம். 

இந்த டாக்கீஸ்ல அப்போல்லாம் ரஜினி ரசிகர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ரஜினி படங்கள் வந்துட்டா பேனர் கட்டுறது, மாலை போடுறது, படம் போடுறதுக்கு முன்னாடி ஆரத்தி எடுக்குறதுனு நல்லா கொண்டாடுவாங்க. அவங்களை பார்க்குறப்போ கமல் ரசிகர்கள் கம்மியாத்தான் பண்ணுவாங்க. இப்போ, போன தடவை `வெற்றிவிழா' போட்டிருந்தோம். அந்தப் படத்துக்கு கமல் ரசிகர்கள் நல்லா வெடி வெடிச்சு, தாம்தூம்னு சவுண்ட் போட்டு நல்ல வரவேற்பு கொடுத்தாங்க. இந்த டாக்கீஸ்ல இப்போ விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குதுங்க. அஜித் படத்துக்கு அப்போ இருந்து ரசிகர்கள் நிறைய பேர் வருவாங்க. ஆனா, லேடீஸ் கூட்டம் இருக்காது. ஆனா, விஜய் படத்துக்கு லேடீஸ் அதிகம் வர்றதால இங்கே நல்ல வரவேற்பு இருக்குது. 

எங்க ஓனர் பேரு ராமகிருஷ்ணா. அவர் பேர்லதான் இந்தத் தியேட்டர் இருக்குது. அவரு, 2012-ல இந்தத் தியேட்டரை வேறொருத்தருங்ககிட்ட வித்திட்டாரு. நானும் உடனே வேலையை விட்டு நின்னுட்டேன். இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைய தேடுறப்போ, `20 வருஷமா தியேட்டர்ல இருந்தீங்க.. உங்களுக்கு வேற என்ன வேலைங்க தெரியப்போகுது' அப்படினு சொல்வாங்க. பேக்கரில ஒருமாசம் வேலை செஞ்சேன். தியேட்டர் நினைப்பாவே இருந்துச்சு. ஒரு வருஷத்துக்கு மேல என்னால தியேட்டரைப்  பிரிஞ்சி இருக்க முடியலை. 2013-ல மறுபடியும் நமக்கு இதுதான் உலகம்னு இங்கேயே வந்து மறுபடியும் சேர்ந்துட்டேன். 

இந்தத் தியேட்டர்ல  நிறைய படம் நூறு நாள் ஓடுச்சிங்க. இப்ப ஜி.எஸ்.டி வந்ததுக்குப் பிறகு எந்தப் படமும் எங்களுக்குப் பெரிய லாபம் கொடுக்கலைங்க. சமீபத்துல, `மெர்சல்' படம் ஊர் முழுக்க ஓடி முடிச்சதுக்குப் பிறகு அந்தப் படத்தோட 50 நாள்ல இருந்து, அந்தப் படத்தை நாங்க ஓட்ட ஆரம்பிச்சோம். ரெண்டு வாரத்துக்கு மேல நல்லா ஓடுச்சிங்க. நல்ல கூட்டம். அதுலயும், பொண்ணுங்க கூட்டம் அதிகமாக இருந்துச்சு. கடந்த ஒரு வருஷத்துல எங்களுக்கு நல்லா கை கொடுத்த படம் `மெர்சல்'தாங்க. இப்போ அஜித்தோட `வீரம்' போட்டிருக்கோம்'' என்று எழுந்தவர், "ஒருநிமிஷம் இருங்க தம்பி" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். 

மணிச்சத்தம் ஒலிக்கிறது. கதவுகள் மூடப்படுகின்றன. தேசிய கீதத்துடன் தொடங்குகிறது `வீரம்'  படம். படத்துக்கான பட்டனைத் தட்டிவிட்டு மறுபடியும் நம்மிடம் வந்தவர், "இன்று  ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வேற... நல்ல கூட்டம்ங்க" என்றபடி,  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் காலங்களிலிருந்து வெளியே வந்தார் ஆரிஃப். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்ப ஆயத்தமானபோது,  திரையைப் பார்த்தோம். அஜித்தின் என்ட்ரி ஆரம்பமாக, திரையரங்கம் விசில் சத்தத்தால் ஆரவாரமானது. 

அடுத்த கட்டுரைக்கு