Published:Updated:

``இன்ஸ்பிரேஷனான நீங்களே இப்படி பண்ணலாமா?" கார்த்திக் நரேன் கேள்விக்கு என்ன சொல்கிறார் கெளதம் மேனன்? - 'நரகாசூரன்' சர்ச்சை #VikatanExclusive

``இன்ஸ்பிரேஷனான நீங்களே இப்படி பண்ணலாமா?" கார்த்திக் நரேன் கேள்விக்கு என்ன சொல்கிறார் கெளதம் மேனன்? - 'நரகாசூரன்' சர்ச்சை #VikatanExclusive
``இன்ஸ்பிரேஷனான நீங்களே இப்படி பண்ணலாமா?" கார்த்திக் நரேன் கேள்விக்கு என்ன சொல்கிறார் கெளதம் மேனன்? - 'நரகாசூரன்' சர்ச்சை #VikatanExclusive

``இன்ஸ்பிரேஷனான நீங்களே இப்படி பண்ணலாமா?" கார்த்திக் நரேன் கேள்விக்கு என்ன சொல்கிறார் கெளதம் மேனன்? - 'நரகாசூரன்' சர்ச்சை #VikatanExclusive

``சிலநேரங்களில் ஒருவர்மீது நாம் வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னும், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நாம் செய்யாத தவறுக்காக நம் கனவு சிதைக்கப்படுவதுதான் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பாத தருணமாக இருக்கும்" - ‘நரகாசூரன்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் கார்த்திக் நரேனின் இந்த ட்வீட்டால் தமிழ் சினிமாவில் சலசலப்பு. இதற்குப் பதில் அளிக்கும் விதமாகக் கௌதம் மேனன், கார்த்திக் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்தார். அதற்கு பதிலளித்த கார்த்திக், `எந்த இளம் இயக்குநர்களுக்கும் இதைச் செய்யாதீர்கள். வலிக்கிறது 'என ட்வீட் செய்திருக்கிறார். 

கார்த்திக் நரேன், தன் அறிமுகப்படமான `துருவங்கள் 16' மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர். ‘இந்தச் சின்ன வயசுல இப்படியொரு படம் கொடுக்க முடியுமா’ என்று அவரைக் கொண்டாடினார்கள். ‘இவரோட அடுத்த படம் என்னவாக இருக்கும்’ என்ற பலரின் எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்தது, ‘அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித் நடிக்க கௌதம் மேனன் தயாரிக்கிறார். படத்தின் பெயர் நரகாசூரன்’ என்ற அவரின் அடுத்த பட அறிவிப்பு. படப்பிடிப்பு முடிந்து ‘நரகாசூரன்’ தயாராக இருக்கும் சூழலில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த சூழலில், படம் பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அவரிடமிருந்து இந்த ட்வீட்தான் வந்திருக்கிறது. 

யோசிக்காமல் யார்மீது தவறான நம்பிக்கை வைத்தார், என்ன பிரச்னை, இந்த ட்வீட் மூலம் அவர் உணர்த்த விரும்புவது என்ன... இந்த ட்வீட் பற்றி அறிய கார்த்திக் நரேனை தொடர்புகொண்டு பேசினேன். 

"படம் நல்லவிதமாத்தான் ஆரம்பிச்சுது. நடுவுல கெளதம் மேனன் சார் எங்களைப் பிரச்னையில் மாட்டிவிட்டுட்டு போய்விட்டார். அவர், படத்துக்கு காசே போடலைங்கிறதுதான் உண்மை. நாங்க சொந்த காசைப் போட்டுதான் படத்தை முடிக்க வேண்டியதாயிடுச்சு. எங்களுக்கு இன்டஸ்ட்ரியில யாரையுமே தெரியாது. நாங்க கெளதம் மேனன் சாரை நம்பித்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தோம். உள்ளே போனதுக்குப் பிறகு, எங்களை வேற ஒருத்தவங்ககிட்ட கைமாத்திவிட்டுட்டு அவர் வெளியே போயிட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக்கூட வந்து பார்க்கவேயில்லை. 

அதனால எங்க முதல் படத்துல கிடைச்ச பணத்தை இதுல போட வேண்டியதாகிடுச்சு. அதையும் வெளிய எடுக்க முடியலை. படத்தை நவம்பர்ல முடிச்சு, ஜனவரில ரிலீஸ் பண்றதா இருந்தோம். தன் படங்களோட ஷூட்டிங்குக்காக எங்களை இப்படி சிக்கவெச்சுட்டாரோனு தோணுது. ‘படத்தைத் தயாரிக்கிறேன்’னு இவர் சொன்னதுமே, ‘சரி நம்மளை பிடிச்சுப்போய்தான் இப்படி சொல்றார்’னு நினைச்சேன். ஆனா, உள்ள போனபிறகுதான் தன் பிரச்னைகள்ல சிக்கவைக்கத்தான் எங்களை உள்ள கொண்டு வந்திருக்காருன்னே தெரிஞ்சுது. எங்களை ஒரு பலியாடு மாதிரி ஆக்கிட்டாங்க. ‘செப்டம்பர் 16-ம் தேதி ஷூட் ஆரம்பிக்கலாம்’னு பிளான் இருந்துச்சு. ஆனா, செப்டம்பர் 10 வரை எந்த ஃபண்டும் வரலை. படம் ஆரம்பிக்குமா இல்லையாங்கிற மாதிரிதான் இருந்தோம். திடீர்னு செப்டம்பர் 12-ம் தேதி பத்ரி சாரை அறிமுகப்படுத்திவெச்சு, ‘இவர் பாத்துப்பார். நான் ஃபைனலா பார்த்துக்குறேன்’னு சொல்லிட்டுப்போனார். படத்துக்கு பாதி பணம் போட்டதே பத்ரி சார்தான். அவரும் இல்லைன்னா படம் ட்ராப் ஆகியிருக்கும். 

நான் கெளதம் சாருக்கு போன்கால், மெசேஜ்னு பண்ணிட்டே இருந்தேன். ஆனால், எதுக்குமே அவர்கிட்டயிருந்து பதில் இல்லை. ஓர் இயக்குநருக்கு ரெண்டாவது படம் எவ்வளவு முக்கியம்னு கெளதம் சாருக்கு நல்லாவே தெரியும். அது தெரிஞ்சும் இப்படியானதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தப் படத்தை நம்பித்தான் எங்க டீம் இருக்கு. ஆனா, இந்தப் பிரச்னை உடனடியா முடியுற மாதிரியும் தெரியலை. படம் சென்சாருக்கு ரெடியா இருக்கு. நிறைய பேருக்கு சம்பள பாக்கியும் இருக்கு. இதுக்காக வாங்கிய பணம்தான் அவரோட மத்த புராஜெக்ட்ஸுக்குப் போயிருக்குன்னும் கேள்விப்பட்டோம். எவ்வளவு நாள்தான் நாங்க வெயிட் பண்றது. ஒரு கட்டத்துக்குமேல எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. பயங்கர மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கோம். 

இந்தப் பிரச்னை எப்ப முடியும்னு தெரியலை. தவிர ஒரு க்ரியேட்டர் ரொம்பநாள் சும்மா இருந்தா அது எல்லாரையுமே பாதிக்கும். இப்ப, `நாடக மேடை'ங்கிற என் அடுத்த படத்தை அறிவிச்சிருக்கேன். ஃப்ரெண்ட்ஸை வெச்சு கம்மியான பட்ஜெட்ல இதைப் பண்ணலாம்னு இருக்கோம். ஆனா, கையில இருந்த பணமெல்லாத்தையும் `நரகாசூரன்'ல போட்டதால இதை ஆரம்பிக்கிறதுக்கும் எங்க கிட்ட பணமில்லை. நான் உள்பட இன்னைக்கு உள்ள நிறைய இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கிற மனிதர் கௌதம் சார். இந்த விஷயத்துல அவர் உடனடியா செயல்பட்டு படத்தை வெளியே கொண்டுவர உதவணும்" என்று முடித்தார் கார்த்திக் நரேன் ஆதங்கத்துடன். 

கார்த்திக் நரேனின் வருத்தங்களுக்கு கெளதம் மேனனின் பதில் என்ன என்பதை அறிய அவரிடம் பேசினேன். “எனக்குத் தெரிஞ்சு இதில் எந்தப் பிரச்னையுமே இல்லை. நல்லாதான் போயிட்டு இருக்கு. நான் 9 கோடி ரூபாய் இதுல இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன். இங்க ஒவ்வொரு படமும் தாமதமாகப் பல காரணங்கள் இருக்கும். என் `துருவ நட்சத்திரம்', `எனை நோக்கிப் பாயும் தோட்டா' படங்களும் ஒரு வருஷமா இன்னும் ரிலீஸ் ஆகாமத்தானே இருக்கு. அதேமாதிரி இந்தப் படத்துக்கும் ஒரு பயணம் இருக்கு. அவர் யாரெல்லாம் வேணும்னு கேட்டாரோ அவங்களை எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி கொடுத்தாச்சு. ஒரு நல்ல டீமை உள்ளே கொண்டுவந்து அவருக்கு சப்போர்ட்டா இருக்க வெச்சோம். படத்தையும் 41 நாள்ல முடிச்சு கொடுத்துட்டார். ரிலீஸ் தேதிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். 

அரவிந்த்சாமி சம்பளமா ஒரு குறிப்பிட்ட தொகை கேட்டார். அவருக்கு முக்கால்வாசி கொடுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு. அதைக் கொடுத்தா அவர் டப்பிங் பேசிடுவார். அதுக்கு சரியான டைம்ல கொடுத்து படத்தை ரிலீஸ் பண்ணுவோம். எதுக்கு அவசரப்படணும்? கரெக்டான ரிலீஸ் தேதி அமையணும். படம் மூணு நாலு வாரம் தியேட்டர்ல ஓடணும்னு நினைக்குறேன். தவிர, அவர் இதுவரை எனக்கு கால் பண்ணி பேசுனதே கிடையாது. அவர் படம் போட்டு காட்டும்போது நல்லா இருக்குனு சொல்லி சின்ன கரெக்‌ஷன்ஸ் மட்டும் சொல்லிட்டு வந்துட்டேன். எனக்குப் பின்னாடி பார்ட்னர்ஸ், பணம் கொடுத்தவங்கனு ஒரு டீமே இருக்கு. அவங்க எல்லாரும் சேர்ந்துதான் படம் எப்போ ரிலீஸ் பண்ணணும்னு முடிவு பண்ணணும். 

கார்த்திக் இப்போ அடுத்த படத்தை ஆரம்பிச்சுட்டார். அவருக்கு எந்தப் பிரச்னையுமே இல்லை. இந்தப் படத்தை எப்போ ரிலீஸ் பண்ணா சரியா இருக்கும்னு ஃபீல் பண்றோமோ அப்போ ரிலீஸ் பண்ணுவோம். அவர் ஒரு படம்தான் பண்ணிருக்கார். அவர் நல்லதுக்குதான் இதைச் சொல்றோம்னு பத்து பதினைஞ்சு படங்கள் பண்ணின பிறகு, புரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன். படம் பண்றது என்பது இங்கு அவ்வளவு ஈஸியான விஷயமா இல்லை. 

அவர் படம் பண்ணிக்கொடுத்துட்டார். அடுத்த வேலைக்கு அவர் போகலாம். எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். நல்ல ஃபிலிம்மேக்கர், அவர் நல்லா வரணும். இன்னும் 10 நாள்ல படத்தோட ரிலீஸ் தேதி அறிவிப்பு வரும். நான் இந்தப் படத்துல இன்வால்வே ஆகலைனு அவர் சொன்னதா சொல்றீங்க. நாங்க யாரைக் கூட்டி வந்தோமோ அவங்கக்கூட அவங்க வீட்லயேதான் இருந்தார் நரேன். இப்போகூட பத்ரி சொல்ற தேதியிலதான் படமே ரிலீஸ் ஆகும். 

நான் தயாரிப்பாளர் சங்கத்துல பொறுப்புல இருக்கேன். இப்போ சினிமா இன்டஸ்ட்ரில என்ன பிரச்னை போயிட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். அதுக்கான மீட்டிங்னு ஓடிட்டு இருக்கேன். இந்த நேரத்துல, ‘எங்க படத்தை ரிலீஸ் பண்ணணும்’னு பேசிட்டு இருக்க முடியுமா. கார்த்திக் நரேன் ஃபீல் பண்றாருங்கிறதுக்காக இந்தப் படத்தை உடனடியா ரிலீஸ் பண்ண முடியாது. 10 நாளுக்கு மேல தியேட்டர்ல ஓடுற மாதிரிதான் படத்தை ரிலீஸ் பண்ணுவோம். எங்களுக்கும் போட்ட காசை எடுக்க வேண்டாமா" என்கிறார் கௌதம் மேனன். 

கௌதம் மேனன், கார்த்திக் நரேன் இருவம் அமர்ந்துபேசி ‘நரகாசூரன்’ படத்தை நல்லபடியா வெளிய கொண்டுவாங்க பாஸ், வாழ்த்துகள்.

அடுத்த கட்டுரைக்கு