Published:Updated:

``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..!'' - வேதனையில் பரத்

சுஜிதா சென்
``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..!'' - வேதனையில் பரத்
``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..!'' - வேதனையில் பரத்

``தமிழ் சினிமா கண்டுக்காம இருந்த சமயங்கள்ல எனக்குக் கைகொடுத்தது மலையாள சினிமாதான். மூன்று படங்கள் மலையாளத்துல நடிச்சேன். ``லஜ்ஜாவதியே...`பாடலுக்கு ஆடுன தமிழ் பையன்’னு இன்னும் அந்த மக்கள் என்னை ஞாபகம் வெச்சிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. மலையாளத்துல `மாஸ் படம்', `மாஸ் ஹீரோ'ங்கிற கான்செப்ட்களுக்கு இடமே கிடையாது. கதை நல்லா இருந்தா அங்க எல்லாருமே மாஸ் ஹீரோதான். அப்படியான நல்ல படங்களை தூக்கிவெச்சு கொண்டாடுறது மலையாள ரசிகர்களின் வழக்கம்...” - பரத்தின் வார்த்தைகளில் அத்தனை ஆதங்கம். `பாய்ஸ்’, `காதல்’, `வெயில்’... போன்ற படங்கள் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றவர் இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து... 

``அப்ப தமிழ்ல நல்ல கதைப்படங்கள் வர்றது இல்லைனு சொல்றீங்களா?”

``நான் சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களுக்கும் மேலாச்சு. இந்த 15 வருஷங்கள்ல சினிமா நிறைய மாறியிருக்கு. ஆனால், ஆடியன்ஸ் கொஞ்சம்கூட மாறலை. இங்க பண்ணும் புது முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவுது. இங்க மண்சார்ந்த நல்ல கதைப்படங்கள் வந்து ஐந்து வருஷத்துக்கு மேல ஆகுது. அந்த மாதிரியான படங்களுக்கு தமிழ்ல மதிப்பே இல்லாம போச்சோனு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. அதைத்தான் சொன்னேன்.

இப்ப நான் நடிச்சுட்டு இருக்குற நான்கு படங்களுமே வித்தியாசமான படங்கள். 'சிம்பா', மனுஷனுக்கும் ஒரு நாய்க்கும் இடையிலான நட்பை சொல்ற படம். படம் முழுக்க நானும் நாயும்தான் உரையாடிட்டே இருப்போம். இந்தப் படத்தை அப்படியொரு மேக்கிங்ல அழகா டைரக்ட் பண்ணியிருக்கார் அரவிந்த் ஸ்ரீதர். அடுத்ததா `பொட்டு’ படம். இது முழுக்கமுழுக்க டார்க் காமெடி படம். இதில் இனியா, நமிதானு இரண்டு ஹீரோயின்கள். இவர்கள்ல எனக்கு ஜோடி யார் என்பதை நீங்க படம் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும். 

`காளிதாஸ்’ என்ற படத்தில் முதல்முறையா போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இதில் சண்டைக்காட்சிகளுக்காக அத்தனை கஷ்டப்பட்டிருக்கோம். ரஷ் பார்க்கும்போது, `ஆக்‌ஷன் செமயா ஒர்க்கவுட் ஆகியிருக்கே’னு நமக்கே தோணுது. காமெடி, ஆக்க்ஷன், சோஷியல் மெசேஜ்னு எல்லாம் கலந்த மசாலா படமா இருக்கும். அடுத்து, திரில்லர் அண்ட் ஆக்‌ஷன் படம், `எட்டு'. இப்படி வெரைட்டியான ரோல்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். இந்தப் படங்கள் அனைத்தும் ஸ்ட்ரைக் முடிந்ததும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். யெஸ், இது எனக்கு சினிமாவுல இரண்டாவது இன்னிங்ஸ்.”

`` `வெயில்’, `பட்டியல்’, `வானம்’னு நீங்க நடிச்ச டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அப்படி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்தா நடிப்பீங்களா?”

``நீங்கள் சொல்லும் இந்த டபுள் ஹீரோ சப்ஜெட் படங்கள் அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமானவை. இப்படி இரண்டு ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்ப வந்தாலும் நிச்சயம் நடிப்பேன். ஆனா, சின்ன கேரக்டர் ரோல் மட்டும் பண்ணுங்கனு சொன்னா நிச்சயம் பண்ண மாட்டேன். இன்னும் அந்தளவுக்கு நான் கீழ போகலை. சினிமாவுல மாஸ் ஹீரோவா நடிக்கிற அளவுக்கு இன்னும் எனக்குக் காலம் இருக்குனு நினைக்கிறேன்.”

``தமிழ் சினிமாவுல இப்ப நடந்துட்டு இருக்கிற ஸ்ட்ரைக் பற்றி உங்க கருத்து என்ன?”

``இந்த ஸ்ட்ரைக், தமிழ் சினிமாவின் நிலைத்தன்மையைக் கெடுத்துட்டு இருக்கு. ஆனால், இது அவசியம்னு சொல்றாங்க. விஷால் என் நெருங்கிய நண்பர். அவர் ஒண்ணு நெனச்சா, அதை செய்துமுடிக்காம விடமாட்டார். அதேமாதிரி இந்த ஸ்ட்ரைக் பிரச்னையையும் எந்தவொரு பாதிப்பும் இல்லாம தீர்த்து வைப்பார்னு நம்புறேன். இங்க எல்லாரும் சினிமாக்காரங்களை ஈஸியா குறை சொல்லிடுறாங்க. ஆனா, எங்க பிரச்னை எங்களுக்குத்தான் தெரியும். நடிகர்களோட சம்பளத்தை குறைக்கணும்னு சொல்றாங்க. படங்கள் நடிக்காம வீட்ல இருக்குற சமயங்கள்ல அவங்க எப்படி மேனேஜ் பண்ணுவாங்க என்பதையும் யோசிக்கணும். அதனால முடிந்தவரை சினிமாவைப் பற்றி குறைகூறாம இருக்குறது நல்லது."