Published:Updated:

`` ‘கதையெல்லாம் கேட்காம போய் நடிடா’னு விஜய் சேதுபதியை அனுப்பிவெச்சேன்..!’’ - விதார்த்

`` ‘கதையெல்லாம் கேட்காம போய் நடிடா’னு விஜய் சேதுபதியை அனுப்பிவெச்சேன்..!’’ - விதார்த்
`` ‘கதையெல்லாம் கேட்காம போய் நடிடா’னு விஜய் சேதுபதியை அனுப்பிவெச்சேன்..!’’ - விதார்த்

`` ‘கதையெல்லாம் கேட்காம போய் நடிடா’னு விஜய் சேதுபதியை அனுப்பிவெச்சேன்..!’’ - விதார்த்

தேர்ந்தெடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களைக் கையிலெடுத்து, சினிமாவில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருப்பவர், `மைனா' விதார்த். அந்தப் படத்துக்குப் பின், `குற்றமே தண்டனை', `குரங்கு பொம்மை', `ஒரு கிடாயின் கருணை மனு' எனப் பல படங்களில் நடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றியும் ஜாலியாகப் பேசுகிறார் விதார்த்.

``நீங்க நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறீங்க. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே இதைப் ப்ளான் பண்ணிட்டீங்களா?''

``என் வாழ்க்கையை நாளைக்கு நான் ப்ளான் பண்ணா இன்னைக்கு எனக்கு போர் அடிச்சிரும். என்னன்னு தெரியாத வரைக்கும்தான் சுவாரஸ்யம். நான் உள்ள வந்தப்போ, நல்ல படங்கள் நடிக்க மட்டும்தான் வந்தேன். அப்புறம், படங்கள் போகப் போக எவ்வளவு சம்பளம்னு கேட்க ஆரம்பிச்சுட்டேன். எனக்கு வரிசையா நாலு படம் தோல்வியடைந்ததாலதான், நான் கவனிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் நான் நடிச்ச நல்ல படம், `குற்றமே தண்டனை'. அதுக்கு முன்னாடி `வெண்மேகம்'னு ஒரு நல்ல படம், யாருக்குமே தெரியாம போயிருச்சு. ஆனால், அதை எடுத்த விதத்துல பெருசா ரீச் ஆகலை. அப்புறம் `ஆள்', `காடு'னு படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். அதுக்குப் பின்னாடிதான் நல்ல வரவேற்பு கிடைச்சது.  ஒரு நல்ல படம் கொடுக்கணும்னா என்ன பண்ணணும், அதுக்கு நம்மளேதான் தயாரிக்கணும்னு பண்ண படம்தான், `குற்றமே தண்டனை'. `கிடாயின் கருணை மனு' படத்துடைய கதையைக் கேட்டு நானே தயாரிக்கிற ஐடியாவுல இருந்தேன். எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்ததால அப்போ என்னால பண்ண முடியல. அப்புறம் எனக்கு ஒரு நல்ல படமா அமைஞ்சது, `குரங்கு பொம்மை'.'' 

``என்ன மாதிரியான கதைகள் உங்ககிட்ட வருது. அதை எப்படி தேர்ந்தெடுக்குறீங்க?``

``நான் கதையைத் தேர்ந்தெடுக்குறதுக்கு முக்கியக் காரணமா கூத்து பட்டறையைத்தான் சொல்லுவேன். அங்க எனக்கு படிக்கிற பழக்கம் இருந்தது. ஒவ்வொரு கதை கேட்கும்போதும் ஒவ்வொரு புத்தகம் படிப்பேன். நான் கமர்ஷியல் படம் பண்ண மாட்டேன்னு சொல்லலை. அதுல மக்களுக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தணும். `ஆயிரம் பொற்காசுகள்'னு ஒரு படம் பண்ணியிருக்கேன். அந்தப் படம் முழுக்கவே காமெடிதான். அது வெறும் காமெடிப் படம்னு மட்டும் சொல்லிற முடியாது, அதுக்குள்ள ஒரு க்வாலிட்டியும் இருக்கு. அது படம் பார்க்கும்போது உங்களுக்குப் பிடிக்கும். அதே மாதிரி `வங்கி'னு ஒரு படம் பண்றேன். கதையைத் தாண்டி மேக்கிங்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது. இன்னும் ரெண்டு படம் பண்றேன். அதுலேயும் ஏதாவது புதுசா இருக்கும்.''

``விஜய் சேதுபதி கூத்துப் பட்டறையிலதான் வேலை பார்த்தார். அவர்கூட பேசியிருக்கீங்களா?''   

``அவர் அங்க கேஷியராதான் வேலை பார்த்தார். அவருக்கு நடிக்க ஆசை இருக்குங்கிறதே ரொம்ப நாள் கழிச்சுதான் தெரியும். அங்க நடக்குற விஷயங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா பங்கெடுத்துக்க ஆரம்பிச்சார். கூத்து பட்டறையில ஸ்ட்ரீட் ப்ளே பண்ண ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு நாடகங்கள் பண்ற வேலை இருந்ததால், விஜய் சேதுபதியா ஒரு டீம் ஆரம்பிச்சு ஸ்ட்ரீட் ப்ளே நிறைய பண்ணார். அதுலதான் அவர் நடிக்க ஆரம்பிச்சார். அப்புறம் குறும்படங்களிலேயும் நடிக்க ஆரம்பிச்சோம். ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல முதல்ல என்னைத்தான் பேசியிருந்தாங்க, அதுக்காக அட்வான்ஸும் வாங்கிட்டேன். சில காரணங்களால என்னால பண்ண முடியல. சீனு ராமசாமி சார் என்கிட்ட ஃபோன் பண்ணி, ’விஜய் சேதுபதி எப்படி’னு கேட்டார். ’அவன் ரொம்ப நல்ல பையன், நடிக்குறதுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கிற பையன். அந்த கதாபாத்திரதுக்கும் கரெக்ட்டா இருப்பான்’னு சீனு சார்கிட்டேயும்; ’கதை எதுவும் கேட்காத போய் பண்ணுடா’னு விஜய் சேதுபதிகிட்டயும்  சொன்னேன். அப்புறம் நிறைய நல்ல படங்கள் பண்ணுனார். அதுல எனக்கு என்ன படங்கள் பிடிச்சிருக்கோ, அவனுக்கு என்னுடைய படங்களில் எது பிடிச்சிருக்கோ அதுக்கு மட்டும்தான் ஃபோன் பண்ணி பேசிக்குவோம். எல்லா படங்களுக்கும் பேசிக்க மாட்டோம்.'' 

``அந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டோம்னு ஃபீல் பண்ணீங்களா?''

``நான் ஃபீல்லாம் பண்ணலை. அப்படிப் பார்த்தா ’மைனா’ படத்துக்கே வேற ஒருத்தர்தான் கமிட் ஆகியிருந்தார். நான் எதுக்குமே ஃபீல் பண்ணவே மாட்டேன். நமக்கு என்ன கிடைக்கணுமோ அதுவாவே கிடைக்கும். `எண்ணை தேய்ச்சு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்'னு பழமொழியே இருக்கு. ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல எனக்கு முன்னாடி ஒருத்தர் கமிட்டாகியிருந்தார். அவரால பண்ண முடியல சீனு சார் என்கிட்ட கேட்டார். எனக்கு அப்புறம் விஜய் சேதுபதிக்கு போயிருச்சு. நான் இதுக்கு ஃபீல்லாம் பண்ணலை.'' 

``விகடன் நம்பிக்கை விருதுகள்ல பாரதிராஜா உங்களுக்கு விருது கொடுத்துட்டு ரொம்பப் புகழ்ந்தார். தமிழ் கலைஞர்கள்ல யதார்த்தமா நடிக்கிறதுல, விதார்த் ரொம்ப முக்கியமான ஆள்னு அவரே சொல்லியிருக்கார். அதை எப்படி ஃபீல் பண்றீங்க?''

``பாரதிராஜா சார் படத்துல நடிக்கணுங்கிற ஆசை எல்லாருக்குமே இருக்கும். ’குரங்கு பொம்மை’ படத்துல எனக்கு அவருக்குமான சீன் ஒரு நாள்தான். இருந்தாலும் அவருக்கான சீனை ஷூட் பண்ணும்போது நான் தினமும் போயிருவேன். சினிமாவைப் பத்தி நிறைய சொல்லுவார். ரொம்ப இயல்பாவும் பேசுவார். நான் உங்க படத்துல நடிக்கணும்னு ஆசைப்படுறேனு சொன்னேன். அப்புறம் ஒரு நாள் அவரே என்னை ஆபிஸுக்கு வரச் சொல்லி, ’நான் ஒரு படம் பண்ணலாம் ப்ளான் பண்றேன், வேற ஒருத்தரைத்தான் நான் நினைச்சிருந்தேன், ஆனா எல்லாரும் உன்னைச் சொல்றாங்க நீ பண்ணுயா’னு சொன்னார். முதல் நாள் போய் நடிச்சேன், அப்போ அவருக்கு அவ்வளவு திருப்தியில்லை. அப்புறம் ஒவ்வொரு நாளு ஷூட் போயிட்டே இருந்தது. நான் பண்ண சீனையெல்லாம் எடிட்டிங் பண்ணிப் பார்த்தார். பார்த்துட்டு, ’டேய் நீ நடிக்கிறியா இல்லையான்னு தெரியலையே டா, வேற ஏதோ ஒண்ணு பண்ணுறீயேடா’னு சொன்னார். அப்புறம் ஷூட்டிங் போகப் போக என் நடிப்பைப் பார்த்துட்டு என்னைக் கட்டிபிடிச்சார். என்னை இவர் புகழ்ந்தார்ங்கிறதுக்காக சொல்லலை. ஆனா எனக்கு அது பெருமையா இருக்கு. அவர் படங்கள்ல நடிக்க மாட்டோமான்னு ஏங்குற எத்தனையோ பேர்ல நானும் ஒருத்தனா இருந்தேன். அப்படி இருக்கும்போது அவர்கிட்ட பாராட்டுகள் வாங்குனது ரொம்பப் பெருமை இருக்கு.'' 

அடுத்த கட்டுரைக்கு