Published:Updated:

''நோ ஸ்மோக்கிங் சிகரெட்.... நோ கிளாமர் தேவதாசி..!'' தன்ஷிகா

''நோ ஸ்மோக்கிங் சிகரெட்.... நோ கிளாமர் தேவதாசி..!'' தன்ஷிகா
''நோ ஸ்மோக்கிங் சிகரெட்.... நோ கிளாமர் தேவதாசி..!'' தன்ஷிகா

''நோ ஸ்மோக்கிங் சிகரெட்.... நோ கிளாமர் தேவதாசி..!'' தன்ஷிகா

வித்தியாசமான கதைகளங்களாகத் தேடி நடிப்பவர் தன்ஷிகா. தான் நடிக்கும் படங்களில் தனக்கான முக்கியத்துவத்தை வைத்து படங்களை ஓகே செய்பவர். இவர், சமீபத்தில் `சினம்' என்னும் குறும்படத்தில் தேவதாசியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் கிட்டத்தட்ட பதினாறு விருதுகளை வென்றுள்ளது. மேலும், இந்தக் குறும்படத்துக்கான இசையை ஜி.வி.பிரகாஷ் செய்திருக்கிறார். படம் உருவான விதம் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் ஆனந்த் மூர்த்தியிடம் பேசினேன். 

``தன்ஷிகாகிட்ட படத்தோட ஒன்லைனைச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. `முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுங்க, படிச்சுட்டு சொல்றேன்’னு சொன்னாங்க. `படிச்சவுடனேயே, ``கதை என்னை ரொம்ப டிஸ்டப் பண்ணிருச்சு. கண்டிப்பா நடிக்கிறேன்'னு சொன்னாங்க. 

படத்துல மொத்தம் ரெண்டு ஹீரோயின்ஸ். அதிலொருவர் இந்தி நடிகை பிடிட்டா பேக். அவங்க இந்தப் படத்துல பெங்காலி பெண்ணா நடிக்குறாங்க. தன்ஷிகா தமிழ்ப் பெண்ணா நடிக்குறாங்க. இதில் தன்ஷிகா சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண். தனக்கு நடந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் கடந்து போய் கொல்காத்தாவில் வசிப்பாங்க. அதுவும், தன்ஷிகா தன்னுடைய அப்பாவாலேயே பாதிக்கப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டிருப்பார். தனக்கு நடந்த கொடுமைகளை ஆவணப்படமாக எடுக்கணும்னு பிடிட்டாகிட்ட சொல்லுவாங்க. ஏதோ சாதாரண விஷயமாகயிருக்கும்னு கதை கேட்குற பிடிட்டாவுக்கு தன்ஷிகா வாழ்க்கையில் கஷ்டப்பட்டது ரொம்ப வருத்தத்தை தரும். உடனே, இந்தக் கதையைப் படமாக்குவாங்க. 

மொத்தம் இந்தப் படம் பதினாரு விருதுகள் வாங்கியிருக்கு. அதில் கல்கத்தா ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மட்டும் எட்டு விருதுகள் வாங்கியிருக்கு. இதே போன்று நார்வே, இத்தாலியில் நடந்த  ஃபிலிம் ஃபெஸ்டிவலிலும் விருது வாங்கியிருக்கு. இன்னும் நிறைய விருதுகள் கிடைச்சியிருக்கு. இந்த விருதுகளால் எங்க டீமே மகிழ்ச்சியாக இருக்கு.

நாம் எல்லோரும் பெண்களுக்கான சம உரிமை, ஜாதியில்லைனுலாம் பேசிட்டிருக்கோம். ஆனால், இதெல்லாம் பேச்சில் மட்டும்தான்யிருக்கிறது. ஆண்களுடைய ஆதிக்கம்தான் இன்னும் பெண்கள் மீதிருக்கிறது. அதைச் சுட்டிகாட்டும் படம்தான் இது. இதுக்கு

 இத்தனை விருதுகள் கிடைச்சிருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம். கீதையில் ஒரு வார்த்தை சொல்லுவாங்க. `பழி வாங்குறது சந்தோஷமான விஷயம்'னு. இந்தப் பெண் எப்படிப் பழிவாங்குனாங்க, அந்தப் பாதிப்பு எப்படியிருந்துச்சுனு சொல்லியிருக்கேன். நீங்க பார்த்த கதைகள்தான். ஆனா, புதிய பரிமாணத்தில் இருக்கும். 

இசைக்காக ஜி.வி.பிரகாஷிடம் கேட்டேன். `இதுவரைக்கும் குறும்படங்களுக்கு இசையமைச்சது இல்லை ப்ரதர். நீங்க படம் காட்டுங்க. நல்லாயிருந்தா பண்றேன்'னு சொன்னார். அப்புறம் படம் பார்த்துட்டு, `மனசு ரொம்ப கனமாயிருக்கு ப்ரோ. எமோஷனாலயிருக்கு. பண்றேன்'னு ரெண்டு நாளுல பண்ணிக் கொடுத்தார்.  படத்துக்கு சவுண்ட் இன்ஜினீயரா சம்பத் ஆழ்வார் வொர்க் பண்ணியிருக்கார். இவர் ஒலிப்பதிவுக்காகப் பெரிய, உயர்ந்த விருதெல்லாம் வாங்கியவர். இந்தி சினிமாவில் நிறைய வொர்க் பண்ணியிருக்கார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்தப்போ `சினம்' படத்தை பார்த்துட்டு ஒலிப்பதிவு நானே பண்றேன்னு சொல்லி முடித்துக்கொடுத்தார்.

இந்த மாதிரியான கதையை முழுப் படமாக எடுப்பது ரொம்பக் கஷ்டம். அப்படியே எடுத்தாலும் சென்சார் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். அதனால்தான் இந்தக் கதையைக் குறும்படமாக எடுத்தேன். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி மனசை உருக்கும்விதமாகயிருக்கும். முக்கியமா எல்லோரையும் கரைத்துவிடும். க்ளைமாக்ஸ் காட்சியில் ரவீந்தரநாத் தாகூர் எழுதுன பெங்காலி பாட்டு ஒண்ணு வரும். அதுக்கு சூப்பரா ஜி.வி இசையமைச்சிருக்கார். கண்டிப்பா இந்தப் படத்துக்காக ஜி.விக்கு அவார்டு கிடைக்கும்’’ என்றார் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி. இவரைத் தொடர்ந்து நடிகை தன்ஷிகா இந்தக் குறும்படம் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``இந்தச் சமூகத்தில் பெண்கள் எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்குறாங்க அப்படிங்குற விஷயத்தை இந்தப் படத்தில் டைரக்டர் ஆனந்த் மூர்த்தி சொல்லியிருக்கார். முக்கியமா வேலைக்குப் போற பெண்கள். டைரக்டர் அவருடைய ஷார்ட் ஃபிலிமில் சொல்ற அந்தப் பெண் அவளுடைய வாழ்க்கையில் ரொம்ப தைரியமான முடிவை ஒரு முக்கியமான இடத்தில் எடுப்பாள். அந்த முடிவு அவளையே அர்ப்பணிக்குற மாதிரியிருக்கும். இந்தப் பெண்ணை இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாக்குனது அவளுடைய அப்பா. அவரை தண்டிக்குறதுக்காக அவ இந்த முடிவை எடுப்பா. இதெல்லாம் என்னை ரொம்ப ஈர்த்தது. முழு ஸ்க்ரிப்டையும் படிச்சவுடனே ரொம்பக் கஷ்டமாயிருச்சு. ஸ்க்ரிப்ட் படிச்சவுடனே அவருக்கு போன் பண்ணி, `என்னங்க பண்ணி வெச்சியிருக்கீங்க'னு சொன்னேன். இந்தப் படம் நம்ம பண்ணலாம். படத்தோட ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் லைவ்வா டயலாக்ஸ் பேசுவோம்னு சொன்னார். முழு டயலாக்ஸையும் அனுப்புனார். ஒரு பத்துப் பக்கத்துக்கு டயலாக்ஸ் ஷீட் இருந்துச்சு. ஓகே, இதை சவாலா எடுத்து பண்ணுவோம்னு முயற்சி பண்ணுனோம். பட், ஷூட்டிங் ஸ்பாட்டில் லைவ்வா எங்களால் ரெக்கார்டு பண்ண முடியல. அதனாலே, டப்பிங்யே பேசிட்டோம். நானே டப்பிங் பண்னேன். 

இந்தப் படத்துல என் கேரக்டரில் நடிக்கும் போது எனக்குள்ளே ஃபீல் வர ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா, எந்தப் பெண்ணாயிருந்தாலும் இப்படியொரு சூழ்நிலையை க்ராஸ் பண்ணமாலே வரமாட்டாங்க. டயலாக்ஸ் பேசும் போது என்னை அறியாமல் நானே அந்த கேரக்டரில் மூழ்கிட்டேன். நான் நடிக்குற ஃபர்ஸ்ட் ஷார்ட் ஃபிலிம் இது. நல்ல கதையா இருந்தா ஷார்ட் ஃபிலிம் நடிக்குறதுல தப்பில்லை. பெரிய ஆக்டர்ஸ் பண்ணக்கூடாதுனு எதுவும் இல்லை. இண்டர்ஷேனல் ஃபெஸ்டிவலுக்குப் படம் போகும்னு டைரக்டர் சொன்னார். அதுக்காக மட்டும் பண்ணல. அவருக்கு எதாவது ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சேன். அதனாலேயே இந்தப் படம் நடிச்சேன். எனக்கான முடிவுகளை நான்தான் எடுப்பேன். நல்லது கெட்டது என் பெற்றோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. இந்தப் படத்துல நான் தேவதாசியா நடிச்சிருக்கேன். ஆனா, க்ளாமரான சீன்ஸ் எதுவுமிருக்காது. ரொம்ப நீட்டா படத்துல டைரக்டர் சொல்லியிருக்கார். ஆனா, இந்தப் படத்தை பற்றி டைரக்டர் ஆனந்த் மூர்த்தி பிரஸ்கிட்ட சொன்னப் போது, தேவையில்லாத சில ஹெட் லைன்ஸ்  வந்துச்சு. அது எனக்குக் கஷ்டமாயிருந்துச்சு. இப்படியொரு ஹெட் லைன்ஸ் போடுறாங்களேனு பெண்ணாயிருந்து கஷ்டப்பட்டேன். ஆனா, இது எல்லாத்தையும் மீறி படத்துல நான் என்ன பண்ணியிருக்கேன்னு எனக்குத் தெரியும். தப்பான படங்கள் பண்ணக்கூடாதுங்குறதுல தெளிவாயிருக்கேன்'' என்றவரிடம், இந்தப் படத்துக்காக நீங்க சிகரெட் பிடிக்கிற மாதிரி சில ஸ்டில்ஸ் வந்துச்சே... அந்தக் காட்சிகளில் எப்படி நடிச்சீங்க என்று கேட்டேன்.

``ரெண்டு ஷாட்ல சிகரெட்டை நான் கையிலே வெச்சிருக்கிற மாதிரி சீன்ஸ் வரும். ஆனா, நான் சிகரெட்டை வாயில வெச்சுப் பிடிக்குற மாதிரி ஒரு ஷாட்கூட இருக்காது. ஜஸ்ட் சிகரெட்டை கையில பிடிச்சிருக்க மாதிரிதான் இருக்கும். எந்தக் காட்சியிலும் ஸ்மோக் பண்ற மாதிரி இருக்காது. படம் பார்த்தா உங்களுக்கே தெரியும். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்'' என்று சொல்லி முடித்தார் நடிகை தன்ஷிகா. 

அடுத்த கட்டுரைக்கு