Published:Updated:

அமேஸான் ப்ரைமில் வெளியான புது சீரிஸ்... ’Deception’ எப்படியிருக்கு?

தார்மிக் லீ
அமேஸான் ப்ரைமில் வெளியான புது சீரிஸ்... ’Deception’ எப்படியிருக்கு?
அமேஸான் ப்ரைமில் வெளியான புது சீரிஸ்... ’Deception’ எப்படியிருக்கு?

மேஜிக்கை வைத்து தொழில் செய்து வந்த இரட்டையர்களுக்கு, அதே மேஜிக்கால் ஒரு சிக்கலும் ஏற்படுகிறது. இரட்டையர்களில் ஒருவரை மாட்ட வைக்கத் தீட்டிய அந்தத் திட்டத்தில் தவறுதலாக இன்னொருவர் சிக்குகிறார். சிறையில் இருக்கும் தன் சகோதரனை காப்பாற்ற மற்றொரு சகோதரர் செய்வது என்ன... இதுதான் அமேஸான் ப்ரைமில் வெளியாகியிருக்கும், `டிசெப்ஷன்' எனும் டி.வி சீரிஸ் சொல்லும் கதை.

மார்ச் 11-ல் இருந்து இதுவரை மூன்று எபிசோடுகள் வந்துள்ளது. இதற்கு கிறிஸ் ஃபெடக் என்பவர் கதை எழுதியுள்ளார். ஜேக் கட்மோர் ஸ்காட், இல்ஃபெனஷ் ஹடேரா, லெனோரா க்ரிக்லோ, ஜஸ்டின் சான், லல்லா ராபின்ஸ் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். இதே ஜானரில் பல டி.வி சிரீயஸ் வந்திருந்தாலும், `டிசெப்ஷன்' சீரியஸில் என்ன ஸ்பெஷல்? ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் `மேஜிக்'. தன் கூடப் பிறந்த அண்ணன், அவர் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிப்பார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது தம்பி ஒரு சிறு குற்றத்தைச் செய்துவிட்டு அவரை சிறையிலிருந்து மீட்டு வர புறப்படுவார். இந்தக் கதைக்களத்தில் இன்றுவரை சிறந்து விளங்குவது `ப்ரிஸன் ப்ரேக்'. இருப்பினும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டதே. இதே ஜானரில் வெளியாகி முடிந்திருக்கும் மற்றொரு டி.வி சீரிஸ் `தி மென்டலிஸ்ட்'. இவற்றில் இருந்து வேறுபடுத்திக்காட்ட இந்தக் கதையின் படைப்பாளி கிறிஸ் ஃபெடக் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். அது வசனம், ஸ்க்ரீன் ப்ளே, எடிட்டிங், கதை என எல்லாவற்றிலுமே பிரதிபலிக்கின்றது. ப்ளேக் நீலேய், நாதானியல் ப்ளூம் என்ற இந்த இசையமைப்பாளர்களும் த்ரில்லர் ரக இசையின் மூலம் கச்சிதமாக வேலை செய்திருக்கிறார்கள். 

இப்போது இந்த சீரிஸுக்கு வருவோம்.  கேமரன் ப்ளாக் - ஜோனாதன் ப்ளாக் இருவரும் மேஜிக் செய்யும் இரட்டையர்கள். அதில் உலக புகழ் பெற்ற மேஜிஷியனாக திகழ்பவர் கேமரன் ப்ளாக். இவர்கள் இரட்டையர்கள் என உலகத்துக்குத் தெரியாது. இதுதான் இவர்களின் கம்பெனி சீக்ரெட்டும். ’என்ன பாஸ் ஸ்பாயிலரைச் சொல்லிட்டீங்களே?’ - இதுதானே உங்க மைண்ட் வாய்ஸ். கவலைப்படாதீங்க இந்த விஷயத்தை கிறிஸ் ஃபெடிக் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவார். ஒரு நாள் தனது மேஜிக் ஷோவை முடித்துவிட்டு, அதே ஷோவைப் பார்வையிட வந்திருக்கும் ஒரு பெண்ணோடு டேடிங் செல்வார் ஜோனாதன். டேட்டிங் செஷன், கில்லிங் செஷனாக மாறிவிட, ஜோனாதன் அழைத்துச் சென்ற பெண் எதிர்பாராத விதமாக நடக்கும் அசம்பாவிதத்தில் இறந்துவிடுவார். அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் இவர் முகம் பதிவாகிடுவிடும். இவர் உலகப் புகழ் என்பதால் மறுநாள் காலையில் போலீஸ் இவரைக் கைது செய்துவிடும். அப்பொழுதுதான் இவர்கள் இரட்டையர்கள் என்பது அனைவருக்கும் தெரிய வரும். கேமரன் ப்ளாக்கிற்கு தீட்டிய திட்டத்தில் எதிர்பாராத விதமாக ஜோனாதன் சிறை சென்றுவிடுவார். `உன்னைக் காப்பாற்றியே தீருவேன்’ எனச் சபதம் எடுக்கும் ஜோனாதன் தன்னிடம் இருக்கும் மேஜிக் திறமையை வைத்து FBIயில் சேர்ந்துவிடுவார். வேலையைச் செய்துக்கொண்டே, தன் சகோதரரின் இந்நிலைக்குக் காரணமானவர்களை தேடும் வேட்டையிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். இதுதான் இந்த சீரிஸின் கதைக்களம்.

இதில் நம்மைக் கவர்வது மேஜிக். அனைவருக்குமே மேஜிக் என்ற விஷயம் மிகவும் பிடிக்கும் என்ற ஒரு காரணமே போதும். ஒரே ஃபளோவில் ஒட்டுமொத்த எபிசோடுகளையும் பார்க்க வைத்துவிடும். இதில் அசறவைக்கும் மற்றொரு விஷயம் திரைக்கதை. அவ்வளவு பிரமாதமாய் நகரும். 45 நிமிடங்கள் கொண்ட இந்த சீரிஸில் ஆரம்பித்த இடம் முதல் முடியும் வரை சுவாரஸ்யத்துக்கு எந்தவித பஞ்சமுமே இருக்காது. வீக்கெண்டுகளில் சிறந்த பொழுதுபோக்காக `டிசெப்ஷன்' இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சீரிஸின் ஈர்ப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹீரோ ஜேக் கட்மோர் ஸ்காட்.  நடிப்பை `ஜஸ்ட் லைக் தாட்' என டீல் செய்துள்ளார். யோசிக்க வைக்கும் வசனங்களாகட்டும், மேஜிக் மேனுக்கே உரிய வல வல பேச்சாகட்டும், தன் தம்பியை அவ்வவ்போது மிஸ் பண்ணும் போது இவர் கொடுக்கும் ஃபேஸ் ரியாக்‌ஷன் ஆகட்டும் அனைத்திலும் கலக்கியிருக்கிறார். இனி வரும் எபிசோடுகளின் கதைகளை வெவ்வேறு ஆட்கள் எழுத உள்ளனர். மில்லியன்களுக்கும் மேல் வியூஸ்களைக் கடந்துள்ளது. 

`மென்டலிஸ்ட்', `கேஸ்டில்', `லிமிட்லெஸ்' என இதே ஜானரில் பல டி.வி.சீரிஸ் வந்திருக்கிறது. கிரிட்டிக்காக சொல்ல வேண்டுமென்றால் இதை மட்டும்தான் சொல்ல முடியும். கதைக்கு எந்த வித மாற்றத்தையுமே ஏற்படுத்தவில்லை. இதைத் தவிர்த்துவிட்டு டிசெப்ஷனைப் பார்க்க ஆரம்பத்தில் அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு கட்டாயம் உங்களை வெயிட் பண்ண வைக்கும்.