Published:Updated:

’நீங்க டைரக்‌ஷனில் கில்லி... ஆனால், தயாரிப்பில் ஏன் இப்படி?’ - கெளதம் மேனனுக்கு ஒரு ரசிகனின் கடிதம்!

’நீங்க டைரக்‌ஷனில் கில்லி... ஆனால், தயாரிப்பில் ஏன் இப்படி?’ - கெளதம் மேனனுக்கு ஒரு ரசிகனின் கடிதம்!
’நீங்க டைரக்‌ஷனில் கில்லி... ஆனால், தயாரிப்பில் ஏன் இப்படி?’ - கெளதம் மேனனுக்கு ஒரு ரசிகனின் கடிதம்!

’நீங்க டைரக்‌ஷனில் கில்லி... ஆனால், தயாரிப்பில் ஏன் இப்படி?’ - கெளதம் மேனனுக்கு ஒரு ரசிகனின் கடிதம்!

வணக்கம் கெளதம்...

நான், உங்கள் ரசிகன். 'மின்னலே' முதல் 'அச்சம் என்பது மடமையடா'வரை நீங்கள் இயக்கிய எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். ‘மின்னலே’வை மாதவனுக்காகப் பார்த்த நான், அதன் பிறகு உங்களின் படங்களை உங்களுக்காக மட்டுமே பார்த்துவருகிறேன். 

‘இப்படியொரு காதல், காதலி நமக்கு அமையாதா...’ என்று பார்ப்போரை ஏங்கவைக்கும் கதாபாத்திர அமைப்பு. பூவினால் வருடினால்கூட கீறல் விழுந்துவிடுமோ என்று தயங்கும் அளவுக்கான மெல்லிய காதல்கள்... இப்படி நீங்கள் கட்டமைக்கும் காதல்கள், காதல் ஜோடிகள் ஒவ்வொன்றும் எங்களை வேறொரு உலகத்துக்கு கூட்டிச்செல்கின்றன. டெரர் வில்லன்களை கட்டமைத்த நீங்கள், 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்தில் காதலர்களுக்குள்ளான ஈகோவையே வில்லனாக்கியது அழகியல். சேர்வார்களா, மாட்டார்களா என்று பதறவைத்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக்-ஜெஸ்ஸி இணையை மறக்கமுடியுமா? இப்படி அதிரடி ஆக்ஷனோ, மென்பஞ்சு காதலோ... உங்கள் படங்களில் வரும் காதல், கவிதை. 

ரீமாசென், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, ஆண்ட்ரியா, த்ரிஷா, சமீராரெட்டி, சமந்தா, அனுஷ்கா, மஞ்சிமா மோகன்... இப்படி கதாநாயகிகள் அனைவரும் உங்களின் படங்களுக்காக செய்து அனுப்பப்படுகிறார்களா அல்லது அவர்களே அப்படி மாறிக்கொள்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. காட்டன் புடவை, சுடிதார், அள்ளி முடிந்த, அவிழ்த்துவிடப்பட்ட கூந்தல்... எளிமையான அலங்காரங்கள்தான். ஆனால், அந்த எளிமையே மிகப்பெரிய அழகு! 

ஹாரிஸ் ஜெயராஜை ‘மின்னலே’ மூலம் நீங்கள்தான் அழைத்துவந்தீர்கள். உங்கள் இணை, இசையில் ஒரு புதிய பாதையை எங்களுக்குத் திறந்துவைத்தது. ஒரு படத்தில் ஒரு பாடல் பிரபலமாவதே பெரும் போராட்டமாக இருந்த சமயத்தில், ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘என்னை அறிந்தால்’ என்று நீங்கள் இணைந்து தந்த படங்களின் எல்லாப் பாடல்களுமே ஹிட்டடித்தன. உங்கள் காம்போவின் ‘துருவ நட்சத்திரம்’ பாடல்களுக்காகக் காத்திருக்கிறோம். இந்த இணை பிரிந்தபோது, நீங்கள் வேண்டிவிரும்பிப் போய் நின்ற ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுடன் இணைந்து தந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்களும் எங்கள் இசை ஆர்வத்தை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச்சென்றன. பெரிய பிரபலம் இல்லாத தர்புகா சிவாவை ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வுக்குள் அழைத்து வந்து மயங்க வைக்கிறீர்கள். 

இவர்களின் இசையால் பாடல்கள் பேசப்படுகின்றனவா... உங்களின் காட்சியமைப்பால் பேசப்படுகின்றனவா... என்று பிரித்துச் சொல்லமுடியாத அளவுக்கு காட்சியையும் இசையையும் கலக்கவைக்கும் லாகவம் எல்லாருக்கும் கைவந்துவிடாது. அது உங்களுக்கு அமைந்திருப்பது மிகப்பெரிய வரம். இத்தனைக்கும் ‘அவர்கள் தரும் முதல் டியூனை அப்படியே எடுத்துவந்துவிடுவேன்’ என்று உங்களின் நேர்காணல்களைப் படிக்கையில், அந்த ரிக்கார்டிங்கில் அருகிலிருந்து லயித்ததுபோன்ற பிரமிப்பு. 

இதேபோல, உங்கள் இசையின் ஆகப்பெரிய பலம், கவிஞர் தாமரை. அவர் சிறந்த கவிஞர் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டியது இல்லை. ஆனால், அவரின் மொழியும் உங்களின் திரைமொழியும் போட்டிபோடும் அந்தத் தருணங்களில், நான் என்னைத் தொலைத்திருக்கிறேன். ஒன்றா... இரண்டா... அதற்கு அநேகப் பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம். 

உங்கள் பட ஹீரோயின்களில் பலர், உங்களின் கண்டுபிடிப்பே. அவர்களைத் தவிர, சில ஹீரோக்களுக்கு உங்களின் படங்கள் கம்பேக்காக அமைந்தன. உதாரணத்துக்கு சூர்யா. எப்படி அவருக்கு நந்தா படத்தைச் சொல்கிறோமோ அப்படி, உங்களின் ‘காக்க காக்க’வை மறக்கமுடியுமா? ‘என்னை அறிந்தால்’ பட ‘விக்ட’ராகவே மாறி நின்றஅருண் விஜய், டேனியல் பாலாஜி, ஜீவன், டான்சர் சதீஷ்... இப்படி பலரை பட்டியலிடலாம். 

ஹீரோவை கெத்தாகவும் வில்லனை வெத்தாகவும் காட்டி, வில்லனை அடித்துத் துவைத்தெடுக்கும் காட்சிகளை வைத்தே கமர்ஷியல் போலீஸ் கதை செய்துவந்த தமிழ் சினிமாவில், வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ‘வில்லனின் அடுத்த மூவ் எப்படி இருக்குமோ’ என்று ஹீரோவை அல்லுவிட வைத்த உங்களின் படங்கள் ரொம்பவே ஸ்பெஷல். யதார்த்த உடல்மொழியும் முரட்டுக் கோபமுமாக ஹீரோவுக்கு நிகராக வில்லனையும் ரசிக்கவைக்கும் வகையில் திரைக்கதையாக்கிய ‘காக்க காக்க’வைப் பார்த்தபோது, கமர்ஷியல் சினிமாவில் உங்களின் தனித்துவம் புரிந்தது. ‘காக்க காக்க'வில் தொடங்கிய பாண்டியாவின் வில்லத்தனம் களம் மாறி, ‘வேட்டையாடு விளையாடு'வில் அமுதன்-இளமாறன், 'என்னை அறிந்தால்' விக்டர்... என்று உங்களின் திரைக்கதையினால் தொடர்ந்து வாழ்கின்றனர். 

இப்படி பல வகைகளில் நான் விரும்பும், பிரமிக்கும் இயக்குநர் கௌதமுக்கு தயாரிப்பு என்பது பெரும் சுமையாக இருக்கிறதோ என்று நினைக்கவைக்கின்றன உங்களைச் சுற்றி நிகழும் சமீபத்திய நிகழ்வுகள். வெறும் இயக்குநராக இருந்தவரை... உங்கள் பயணம் பிரச்னைகள் இன்றி சுமூகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், தயாரிக்கத் தொடங்கிய பிறகே உங்களுக்கு பிரச்னைகள் தொடங்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சொந்தப்படமாக இருந்தால், கிரியேட்டிவிட்டி சுதந்திரம் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதன்மூலம் வரும் அழுத்தங்கள் உங்களுக்குள் இருக்கும் கலைஞனை பாதிக்கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். 

‘நடுநிசி நாய்கள்’, ‘ஏக் தீவானா தா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘வெப்பம்’, ‘தங்க மீன்கள்’, ‘தமிழ்ச்செல்வ னும் தனியார் அஞ்சலும்’, ‘நரகாசூரன்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, விஜய்யை வைத்து திட்டமிட்ட 'யோஹன் அத்தியாயம் ஒன்று', ரிலீஸுக்கு காத்திருக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவநட்சத்திரம்'... இப்படி நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த, தயாரிக்கத் தொடங்கி, பிறகு கைமாற்றிவிட்ட, டிராப்பான... என்று படங்கள் தயாரிப்பதில் உங்களுக்கு எங்கோ சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கலால் ஏற்பட்ட பணப் பிரச்னையையும், அதனால் உங்களிடம் இருந்து பலர் பிரிந்து சென்றதையும், வந்துசேர்ந்த நீதிமன்ற வழக்குகளையும் செய்திகள் மூலமாக நானறிவேன். இந்தப் பிரச்னைகளில் யார் சரி, யார் தவறு என்பதை தள்ளி நின்று உங்களை ரசிக்கும் என்னால் சரியாகச் சொல்லமுடியாது. அந்த விவாதத்துக்குள்ளும் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால், கௌதம்மேனன் என்றும் நான் ரசிக்கும் இயக்குநராக நல்ல படைப்புகள் தரவேண்டும் என்பதே என் விருப்பம். 

ஒரு க்ரியேட்டராக நீங்கள் கில்லி. ஆனால், ஒரு தயாரிப்பாளராக ஆரம்பத்தில் இருந்து நிறைய சொதப்பல்கள். எங்களுக்கு தயாரிப்பாளர் கெளதமைவிட இயக்குநர் கெளதமைத்தான் பிடித்திருக்கிறது. ‘தயாரிப்பாளராக நீங்கள் மிச்சம் வைத்திருக்கும் சிக்கல்களைத் தீர்த்துவிட்டு, ரிலாக்ஸாக வெளியே வாருங்கள், உங்களை இயக்குநராக வைத்துப் படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். மீண்டும் முழு நேர இயக்குநராக க்ளாசிக் படங்களைக் கொடுப்பீர்கள் எனக் காத்திருக்கிறோம். 

யெஸ், வீ ஆர் வெயிட்டிங்! 

இப்படிக்கு 
‘இயக்குநர்’ கௌதம்மேனனின் ரசிகன்

அடுத்த கட்டுரைக்கு