மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

ரிதுபர்னோ கோஷ் (1963-2013)

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

றுபதைக் கடந்த பிரபல இயக்குநர் அவர்.  தனது படைப்புகளில் தன்னை எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியைக் கையாளுபவர். இவர் இயக்குகிறார் என்றால், அந்தப் படங்களுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் விருதுகள் நிச்சயம். அன்பான மனைவி. அறிவும் பண்பும் ஒருங்கிணைந்த மகன். தலைமுறையின் அடுத்த வாரிசைச் சுமந்தபடி அழகான மருமகள். மகிழ்ச்சியான வாழ்க்கை. திடீரென இயக்குநரின் வாழ்வில் நுழைகிறார் ஓர் இளம்பெண்.

இரவு உணவுக்கு குடும்பத்தோடு அமரும் போதெல்லாம் தொலைபேசி அழைப்பு வருகிறது. இயக்குநர் குற்றஉணர்வுடன் மகனையும் மனைவியையும் பார்க்கிறார். பதிலளிக்க மெளனமாக எழுந்து போகிறார். வயதான மனைவி, பொங்கும் உணர்ச்சிப்பெருக்குடன் மகனைப் பார்க்கிறார். தாயைப் பார்ப்பதா... தந்தையைக் கேட்பதா? மகனுக்கோ தர்மசங்கடம்.

இயக்குநரின் மனம் கவர்ந்த அந்தப் பெண், மகனின் வயதுடையவர். இயக்குநரின் படத்தில் நாயகியாக நுழையும் அவள், இயக்குநரின் மனதினுள்ளும் ஊடுருவிவிடுகிறாள். இதுவரை அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இனி என்ன நிகழும்... இன்னும் சில நாட்களில் பேரப்பிள்ளையைப் பார்க்கப்போகும் இந்த வயதான காலத்தில்?

இந்தக் கதையைப் படிக்கும்போது நம் ஊரில் சில இயக்குநர்களின் கதை நினைவுக்கு வருகிறதா? இது, வங்காள மொழியில் பிரபல இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் 2010-ம் ஆண்டில் வெளிவந்த `அபோஹோமான்’ படத்தின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் அத்தனை மாநிலத்தவர்க்கும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரை ஒப்பிட்டுப்பார்க்கும் மனோபாவம் எழும். இது வங்காள மொழியில் வெளியானபோது, `சத்யஜித் ரேவுக்கும் வங்காள நடிகை மாதாபி முகர்ஜிக்குமான உறவைப் பேசுகிறது’ என்று அங்கேயும் கிசுகிசுத்தார்கள்.

கதையை ஒரு நேர்கோட்டில் படிக்கும்போது மிகமிகச் சாதாரணமாகத் தோன்றும். சின்ன ஃப்ளாஷ்பேக்குகள், புதிய கதைசொல்லல் உத்திகள் மூலம் இதை ஓர் உலகத்தரமான படைப்பாக மாற்றியிருப்பார் கோஷ்.

ரிதுபர்னோ கோஷ், வங்காள மொழியில் ஒரு புது அலை இயக்குநர். சத்யஜித் ரேவுக்குப் பின்னரான வங்கமொழி சினிமாவில் புது முத்திரை பதித்தவர். மனித உணர்வுகளைத் திரையில் நுணுக்கமாகக் கையாளுவதில் முடிசூடா மன்னர் சத்யஜித் ரே. வங்காளத் திரையுலகில் ரேயைத் தொடர்ந்து மனித உறவுகளின் வினோதங்களையும் உணர்வுகளையும்  வாழ்வியலுக்கு மிக நெருக்கமாக விவரித்த ஒரே இயக்குநர் ரிதுபர்னோ கோஷ்.

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

விளம்பரப்பட இயக்குநர், பாடலாசிரியர், இலக்கியவாதி, திரைப்பட இயக்குநர், நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்த உன்னதக் கலைஞர். ரிதுவின் அப்பா சுனில்கோஷ் ஓர் ஓவியர். சில விவரணப் படங்களையும் இயக்கியுள்ளார். ரிது படித்தது இளங்கலை பொருளாதாரம். 

சத்யஜித் ரேதான் இவரின் ஆதர்ஷ புருஷர். அவர் பாதையிலேயே கொல்கத்தாவின் புகழ்பெற்ற விளம்பர நிறுவனத்தில்  பணியில் சேர்ந்தார். ``அவர் இங்கிருந்த காலம் நிறுவனத்தின் பொற்காலம்’’ என்கிறார் உடன் பணியாற்றிய சுப்ரதோ ராய். “விளம்பரங்களைப் பொதுவாக 30 விநாடிகளில் நுகர்வோருக்குக் கடத்தவேண்டும். அவ்வாறு சொல்லும் சங்கதி, சட்டென மனதில் பதிய ஒரு வரியில் `டாக் லைன்’ எனப்படும் `முத்திரைச் சொல்’ உருவாக்குவதில் ரிது மிகப் பிரபலமாக விளங்கினார். 1980-களில், ஆங்கிலத்தில் தரப்படும் விளம்பர வாசகங்களை ஒரு சடங்குபோல் பிராந்திய மொழியில் மொழிபெயர்க்கவேண்டும். அதற்கு ரிதுபர்னோ உருவாக்கிய பெங்காலி வாசகங்கள் அவருக்குத் தனித்த அடையாளத்தைத் தேடித்தந்தன. அடிமட்ட பெங்காலிகளையும் கவர்ந்திழுத்தன. அவர் விளம்பர உலகில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்தார்” என்கிறார் சுப்ரதோ ராய்.

விளம்பரத்தில் பெற்ற அனுபவத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது ரிதுவின் வாழ்க்கை. தான் வேலை செய்த அதே விளம்பர நிறுவனத்துடன் இணைந்து சொந்தமாக ஒரு விவரணப்பட நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதன் வளர்ச்சியாக 1992-ம் ஆண்டில் பெங்காலித் திரையுலகில் அடியெடுத்துவைக்கிறார். இவர் முதன்முதலாக இயக்கிய படம் `ஹயரர் அங்கிடி’ மூன் மூன் சென் மற்றும் பசந்தா செளத்ரி நடித்தனர். 1994-ம் ஆண்டில் அபர்ணா சென், தேபா ராய் நடிக்க ‘உன்னிசே ஏப்ரல்’ மற்றும் 1997-ம் ஆண்டில் `தஹன்’ ஆகிய படங்களை இயக்கினார். இங்கிருந்து தொடங்கியது ரிதுவின் விருது வாழ்க்கை.  ‘உன்னிசே ஏப்ரல்’ - சிறந்த படம்  மற்றும் தேபா ராய் - சிறந்த நடிகை என இரண்டு  தேசிய விருதுகள் பெற்றது. ‘தஹன்’ படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது.

 `தஹன்’ படம், கொல்கத்தாவில் பொதுவெளியில் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிஜ வாழ்வியலைப் பேசியது.  அதிகாரவர்க்கம் மற்றும் பொதுவெளியில் மழுங்கிவரும் சமூக அக்கறையையும் சற்று பரிகாசத்துடன் பேசுகிறது `தஹன்’. ரிதுவின் படங்கள் பெரும்பாலும் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் காணும் சம்பவங்களே. சமூகம் சார்ந்த நம் நிஜவாழ்வின் பிரதிபலிப்பை முன்னிறுத்தியதால் வணிகரீதியான வெற்றியுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் அங்கீகாரம் பெற்றன.

கதைசொல்லலில் கதாபாத்திர வடிவமைப்பு முக்கியப் பங்கை வகிக்கிறது. அதை வெறும் கற்பனைப் பாத்திரமாக விவரிக்க கோஷ் என்றும் விரும்பியது இல்லை. பெரும்பாலான பாத்திர வடிவமைப்பை நிஜ மனிதர்களிடம் இருந்தே எடுத்துக்கொண்டார். பாத்திர உருவாக்கம் தனித்துவமுடன் அமையும்போது கதை நகர்வதற்கான முரண்பாடுகள் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது ரிதுவின் அசராத நம்பிக்கை. உண்மைச் சம்பவங்கள் ஆகட்டும், இலக்கியமாகட்டும் கோஷின் ஒரே கொள்கை,  உணர்வுகளை நுணுக்கமாக அணுகிக் கதை சொல்வது.

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

ரவீந்தரநாத் தாகூரின் கதையைப் பின்புலமாகக்கொண்டு `சோக்கர்பாலி’யைப் படமாக்கும்போது எல்லோரிடமும்  பெரும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் எதிர்ப்புஉணர்வும் இருந்தன. தேசியக் கவிஞரின் படைப்பை இயல்பு குறையாமல் படமாக்க முடியுமா என்பதுதான் அது. ஐஸ்வர்யா ராய்க்கு முதல் வங்காளப் படம். தாகூரின் படைப்பை காட்சிக்குக் கொண்டு வந்து, உலகத்தரமாக்கினார் கோஷ்.

`தோசர்’ படத்துக்கு இவர் பயன்படுத்தியது கறுப்பு வெள்ளை. வண்ணத் திரைப்படங்கள் உலகைக் கோலோச்சிக்கொண்டிருக்கும்போது மீண்டும் கறுப்பு வெள்ளையில் படமா? ஆச்சர்யமாகக் கேள்வியை எழுப்பிய பலர், படத்தைப் பார்த்த பின், `இந்தக் கதையை இப்படிச் சொன்னால்தான் சரியாக இருக்கும்’ என்று ஆமோதித்தனர். `தோசர்’ படத்தில் ஓர் ஆணின் முறையற்ற உறவைப் பற்றி விவாதித்தார். கணவனுக்கு இன்னொரு உறவிருக்கிறது எனத் தெரிந்த பின், அவன் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், கட்டுப்பாடான இந்திய மனைவி என்ன செய்வாள் என்ற எதிர்பார்ப்பைச் சொல்கிறது `தோசர்’. இதில் கறுப்பு வெள்ளை என்பதை ஓர் அழகியல் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார்.

வங்க மொழித் திரையுலகம் மிகச் சிறியது. நம் தமிழ், தெலுங்கு, இந்தி வியாபாரச் சந்தையோடு ஒப்பிடும்போது, இதன் சந்தையும் மிகமிகச் சிறியது. எனினும், பாலிவுட்டின் பிரபலங்கள் ரிதுவின் படங்களில் நடிக்க வரிசைகட்டி நின்றனர். ஒரு படைப்பாளிக்கு மொழி என்பது, இசையைப்
போன்றே இன்னோர் ஒலிதான். உடல்மொழி, பாவனை, நிகழும் களம், கதை சொல்லல் முறை இத்துடன் உச்சரிப்பும் ஓர் அங்கம். அது பேசும் பொருளைவிட, பேசும்விதம் ரிதுவின் படங்களில் தனித்தன்மை பெறுகிறது. அவரின் படங்களில் துருத்தல் இசை எதுவும் இருக்காது. கதை நிகழும் இடங்களில், பின்புலங்களில் அந்தச் சூழலுக்குரிய  (எழும்) சத்தங்களே காட்சிக்கு மிக உறுதுணையாக ஒரு வசனமோ, உரையாடலோ செய்ய வேண்டியதைச் செய்யும்.

ஒலி எனும் இடத்தில் உரையாடல், இசை மட்டும் அல்ல, `ஆம்பியன்ஸ்’ எனப்படும் சூழல் சார்ந்த ஒலியை இவர் பயன்படுத்தும் வித்தை நமக்கு அந்த நிகழ்விடத்தில் இருக்கும் நெருக்கத்தைத் தருகிறது. ரிதுவின் படங்களில், பாலிவுட் பிரபலங்கள் நடிக்க முன்வந்தபோது படத்தை உலக அளவில் கொண்டுசெல்ல மொழியில் சிறு சமரசம் செய்துகொண்டார் ரிது.

ஐஸ்வர்யா ராய் பச்சனைத் தொடர்ந்து `த லாஸ்ட் லியர்’ எனும் படத்தில் அமிதாப் பச்சன், ரிதுவின் இயக்கத்தில் நடித்தார். நீண்ட வெண்ணிறத் தலைமுடி, செதுக்கப்பட்ட தாடி, ஒரு கையில் மதுக்கோப்பையும் இன்னொரு கையில் தாளம் போட்டபடி படபடவெனப் பேசும் ஷேக்ஸ்பியர் நாடக நடிகராக அமிதாப்பின் நடிப்பு, ‘த லாஸ்ட் லியர்’ படத்தின் உச்சம். அமிதாப்பின் சந்தையை மனதில்கொண்டு, கதை உலகளவில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தை ஆங்கிலத்தில் எடுத்தார் ரிதுபர்னோ கோஷ். இதிலும்  ஒரு காதல். முதுமையில் ஏற்படும் புதிய உறவு, அதன் சிக்கல். ப்ரீத்தி ஜிந்தா, அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா என பாலிவுட்டின் பெரும் பட்டாளமே இப்படத்தில் அமிதாப்புடன் போட்டிபோட்டு நடித்தனர்.

 `லாஸ்ட் லியர்’ படம் 2007-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்தது. இந்தப் படத்தில் அமிதாப்புக்கு விருது கிடைக்கவில்லை எனினும் இதில் நர்ஸாக நடித்த ஷெஃபாலி ஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

அமிதாப்பைத் தொடர்ந்து ரிதுவின் `அந்தர்மஹால்’ எனும் வங்காள மொழிப் படத்தில் அபிஷேக் பச்சனும் நடித்தார். இப்படி பாலிவுட்டின் `பிக் பி ஃபேமிலி’ என அழைக்கப்படும் ஒட்டுமொத்த பச்சன் குடும்பத்தையும் இயக்கியவர் ரிதுபர்னோ.

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

கோஷுக்கு பாலிவுட் சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்து வரவேற்றாலும் அவர் இயக்கியது ஒரே ஒரு படம்தான். அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த `ரெயின்கோட்’. அது, பிரபல ஓ.ஹென்றியின் ‘கிஃப்ட் ஆப் மேகி’ சிறுகதையை அடிப்படையாகக்கொண்டது. சர்வதேசத் திரைப்படத் தயாரிப்பாளர் மிதாக் கஸிமி இந்தத் திரைக்கதையில் கவரப்பட்டு  ஆங்கிலத்தில் தயாரித்த படம்தான் `த்ரோ ஹர் ஐஸ்.’

20 வருடத் திரையுலக வாழ்வில்  இவர் இயக்கியது 20 படங்கள். இதில் 12  படங்கள் தேசிய விருதுகளையும், அதைவிட அதிகமான அளவில் சர்வதேச விருதுகளையும், உலகம் முழுவதும் பல திரைவிழாக்களில் திரையிடல் கௌரவமும் பெற்றது.

தேசிய விருதுகள் மட்டுமின்றி பூஷன் சர்வதேச விருது, லாகர்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இருமுறை தங்க சிறுத்தை விருது, கார்லோவி சர்வதேசத் திரைப்பட விழாவில் இருமுறை கிறிஸ்டல் குளோப் விருது, தியோவெல் சர்வதேச விழாவில் தாமரை விருது, சிகாகோ திரைவிழாவில் தங்கமகன் விருது... என்று பட்டியல் நீள்கிறது. இயக்குநராக வெற்றி கண்ட கோஷ், ‘அரெக்ட்டி ப்ரேமர் கொல்போ’ எனும் ஒரியப் படத்திலும், ‘மெமரீஸ் இன் மார்ச்’ எனும் ஆங்கிலப் படத்திலும் நடிகராகவும் வெற்றிபெற்றார்.

ரிதுவின் சொந்தவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை வெளிப்படையாக ஆதரித்த ஒரு சிலரில் ரிதுபர்னோ கோஷும் ஒருவர். இதுவே அவருக்கு சமூகத்தில் பல்வேறு உளவியல் நெருக்கடிகளை உண்டாக்கின. தன் வாழ்வு விருப்பம் போலவே ரிதுபர்னோ கோஷ் ஒரிய மொழியில் ஓரினச் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்ட `அரெக்ட்டி ப்ரேமர் கொல்போ’ எனும் படத்தில் ஓரினச்சேர்க்கையாளராகத் தோன்றினார். இதற்காக இவர் பிரத்யேகமாக மார்பக அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார்.

 தூக்கமின்மை நோய், சர்க்கரை வியாதி, மன உளைச்சல் என இருந்த கோஷுக்கு இந்த அறுவை சிகிச்சை மேலும் தொந்தரவாக மாறியது. ஒரு கட்டத்தில் அவர் தனிமைப்பட்டே கிடந்தார். சுற்றமும் சூழலும் வெளியில் சகஜமாகத் தோன்றினாலும் மறைமுகமாக அவருக்கு மேலும் மேலும் நெருக்
கடியைத் தந்துகொண்டேயிருந்தன. இதன் உச்சம் தாங்காமல் தனது கடைசிப்படமான `சத்யன்வெஷி’ இயக்கி முடித்த நிலையில் 2013-ம் ஆண்டு, மே 30-ம் தேதி வீட்டில் செத்துக்கிடந்தார் கோஷ்.  `ரிதுவின் மரணம் எனது தனிப்பட்ட இழப்பு’ என்று கண்ணீர் சிந்தினார் பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன். படைப்புகளை மீறி, ஒரு கலைஞனின் சொந்த வாழ்க்கையில் சமூகத்தின் ஒழுக்கம் சார்ந்த உளவியல் நெருக்கடி நேரும்போது அவன் எதிர்கொள்ளும் அவஸ்தைக்கும் அவலத்துக்கும் துயர சாட்சி ரிதுபர்னோ கோஷ்.

இருபது படங்கள் இயக்கியுள்ள ரிதுபர்னோ கோஷின் பத்துப் படங்கள் தேசிய அளவில், சர்வதேச அளவில் பாராட்டு பெற்றவை. அவை...

அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

உன்னிசே ஏப்ரல் – தாய்க்கும் டீன் ஏஜ் மகளுக்குமான உறவைப் பேசும் கதை.

அபோஹமான்
– மகனின் வயதுடைய நடிகையுடனான ஓர் இயக்குநரின் உறவு.

பரிவாளி – தனிமையில் வசிக்கும் ஒரு பெரிய வீட்டின் உரிமையாளர் தன் வீட்டை படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடுவதால் எழும் விளைவுகள்.

சோக்கர்பாலி – விடலை வயது காதல். விசுவாசத்துக்கும் காதலுக்கும் இடையேயான போராட்டம். ரவீந்திரநாத் தாகூரின் நாவலான `சோக்கர்பாலி’யை அடிப்படையாகக்கொண்டது.

தோசர் – துரோகம் செய்த கணவன் விபத்தில் பாதிக்கப்பட, மனைவியின் முடிவு என்ன என்பது கதை.

தி லாஸ்ட் லியர் – ஒரு ஷேக்ஸ்பியர்  நாடக நடிகனின் சினிமா வாழ்க்கை.

ஷுப முகூர்த் – பிரபல நடிகையின் மரணத்தைத் தொடர்ந்து விலகும் மர்மங்கள். பிரபல ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டியின் கதையை அடிப்படையாகக்கொண்டது.

டிட்லி – அபர்ணா சென்னும் கொங்கணா சென்னும் தாய் மகளாகவே நடித்த அம்மா – பெண் உறவின் உன்னதம்.

ரெயின் கோட் – ஓ.ஹென்றியின் `கிஃப்ட் ஆஃப் மேகி’யை அடிப்படையாகக்கொண்ட திரைக்கதை.

அந்தர்மால்
– பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழும் காதல் கதை.