Published:Updated:

``எங்கே மதிக்கிறாங்க... அதான் `காக்கி சட்டை’க்குப் பிறகு கதை எழுதலை..!’’ லிவிங்ஸ்டன்

``எங்கே மதிக்கிறாங்க... அதான் `காக்கி சட்டை’க்குப் பிறகு கதை எழுதலை..!’’ லிவிங்ஸ்டன்
``எங்கே மதிக்கிறாங்க... அதான் `காக்கி சட்டை’க்குப் பிறகு கதை எழுதலை..!’’ லிவிங்ஸ்டன்

1985-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படம், இன்று டிஜிட்டல் ரீ மாடல் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கதை எழுதிய நடிகர் லிவிங்ஸ்டனின் பேட்டி.

ராஜசேகர் இயக்கத்தில் கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் 1985-ம் வருடம் வெளியான திரைப்படம் `காக்கி சட்டை.' படம் ரிலீஸாகி 30 வருடங்களைக் கடந்த நிலையில், இப்போது இந்தப் படம் ரீ-ரிலீஸாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்துகொண்டிருப்பதால் எந்தப் புதிய தமிழ்ப் படமும் திரையரங்குகளில் ரிலீஸாகாமல் உள்ளது. இதனால், சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸாகி அதிக தியேட்டர்கள் கிடைக்காத படத்தை ரீ-ரிலீஸ் செய்துகொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில்தான் டிஜிட்டல் வடிவில் 'காக்கி சட்டை' படம் ரிலீஸாகியுள்ளது. 

இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அப்போது சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், படத்தில் வில்லனாக நடிகர் சத்யராஜ் நடித்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். படத்தில் அவர் பேசிய 'தகடு தகடு' வசனம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்றைய இளம் தலைமுறையினர் வரைக்குமே இந்த வசனம் பெரிய ரீச். இந்தப் படத்துக்கான வசனத்தை நாராயணசாமி எழுதியிருந்தார். மேலும், இந்தப் படத்துக்கான கதையை, நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான நடிகர் லிவிங்ஸ்டன் எழுதியிருப்பார். ஆனால், இந்தப் படத்துக்கான கதையை எழுதியவர் இவர்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இன்று படம் ரீ-ரிலீஸ் ஆவதையொட்டி நடிகர் லிவிங்ஸ்டனிடம் படம் குறித்த நினைவுகளைப் பற்றி பேசினேன். 

''இந்தப் படத்துக்கான கதையை நானும் நண்பர் ஜி.எம்.குமாரும் சேர்ந்துதான் எழுதினோம். படமும் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், எங்களின் பெயரை டைட்டில் கார்ட்டில்கூட போடவில்லையே'' என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் லிவிங்ஸ்டன். தமிழ் சினிமாவில் கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மதிப்பேயில்லை. மலையாளம், இந்தியில் கதாசிரியர்களுக்கு நல்ல மதிப்புயிருக்கிறது; நல்ல வசதி, வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், நம்ம சினிமாவில் அப்படியில்லை. அதனாலதான் கதாசிரியர் தொழிலையே விட்டுவிட்டேன். ஏன்னா, கதாசிரியராகச் சில படங்கள் வொர்க் பண்ணியிருக்கேன். 'கன்னிராசி', `அறுவடைநாள்' படங்களுக்கெல்லாம் நான்தான் கதை எழுதினேன். என் குரு பாக்யராஜ் சார்தான் எனக்கு எல்லாம் கத்துக்கொடுத்தார். 

’’ 'காக்கி சட்டை' படத்தை பற்றி கேட்டாலே எனக்கு கசப்பான நினைவுகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஏன்னா, ஒரு படத்துக்கு 60 சீன்ஸ் இருந்தால் போதும். ஆனா, இந்தப் படத்துக்காக நானும், ஜி.எம்.குமாரும் 600 சீன்ஸ் எழுதியிருந்தோம். ஆறு மாசம் வொர்க் பண்ணினோம். ஆனா, எங்கள் பெயரை கதை இலாக்காவில் போட்டுவிட்டார்கள். இந்தப் படத்துக்கு புரொடியூசர் ஆர்.எம்.வீரப்பன். அவரை பார்க்க தினமும் ஆபீஸ் போய்விடுவோம். சத்யா மூவிஸ்கிட்டதான் கதை சொன்னோம். உடனே, எங்க கதைக்கு ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம்தான் ராஜசேகர் சாரை டைரக்டராகக் கமிட் செய்தார்கள். இந்தப் படத்துக்காக நாங்க எழுதுன 600 சீன்ஸில் பாதி சீன்ஸ் மட்டும் 'காக்கி சட்டை' படத்துக்காக யூஸ் பண்ணிட்டு. மத்த சீன்ஸ்யெல்லாம் `தம்பிக்கு எந்த ஊரு', `விக்ரம்' படங்களில் சேர்த்துக்கிட்டாங்க. 'காக்கி சட்டை' படத்தை எடுக்கும்போதுதான் `தம்பிக்கு எந்த ஊரு' படத்தையும் ராஜசேகர் டைரக்‌ஷன் பண்ணிட்டிருந்தார். அதனாலேயே, இங்கே ரிஜெக்ட் ஆகுற சீன்ஸையெல்லாம் அந்தப் படத்துல சேர்த்துட்டார். இது எங்களுக்கு கவலையைக் கொடுத்தது. ஆனா, எங்க பெயரைக்கூட டைட்டில் கார்டில் சேர்க்கவில்லை. இது எல்லாம் சாமி சத்யமா உண்மை. இந்தப் படத்தில் வொர்க் செய்ததால் கமல் சாரின் நட்பு எனக்கு கிடைத்தது. அவருக்கு என் வொர்க் பிடிச்சிருந்துச்சு. அதனாலே, அவருடைய வீட்டுக்கு அழைச்சிட்டு போய் சாப்பாடு போட்டார். ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகினார். இன்னும் அந்த நினைவுகள் ஞாபகமிருக்கு. அவருடைய படங்கள் ரிலீஸ் ஆச்சுனா கூப்பிட்டு போட்டுக் காட்டுவார். அவர் செய்யும் உடற்பயிற்சிகள் பத்தியெல்லாம் சொல்வார். நான்தான் அவருடன் டச்சில்லாமல் போய்விட்டேன். படத்துக்கு `காக்கி சட்டை'னு பேர் வெச்சது ஜி.எம்.குமார்தான். அவருடைய அப்பா டி.எஸ்.பி. அதனால் படத்துக்கு இப்படியொரு பெயரை அவன் வெச்சான். நாங்க கஷ்டப்பட்டு எழுதுன ஸ்க்ரிப்ட் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதது எனக்கு வருத்தம்தான். ஆனா, இப்ப அந்தப் படம் ரீ-ரிலீஸ் ஆகுது. படம் வெற்றிடைய வாழ்த்துகள்'' என்று சொல்லி முடித்தார் நடிகர் லிவிங்ஸ்டன்.

அடுத்த கட்டுரைக்கு