Published:Updated:

கட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்..! ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்

தார்மிக் லீ
கட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்..!  ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்
கட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்..! ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்

`The Legend is back' என்ற வாசகத்தோடு சென்னை முழுக்க ஒரு படத்தின் போஸ்டர் ஒட்டியிருப்பதை நானும் என் நண்பரும் கண்டோம். அதைப் பார்த்துவிட்டு ஆர்வம் தாங்க முடியாமல் நேற்று(30/3/18) மதிய உணவை முடித்துவிட்டு, விரைந்து எக்மோரில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டருக்குச்  சென்றோம். டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்டு டெக்னாலஜி பயன்படுத்தியிருக்கும் படத்திற்கு ஒரு ஏ.டி.எம்மில் காசை எடுத்துச் சென்று கவுன்டரில் நிற்கும்போது, `அப்பொழுது வாய்க்கப் பெறாத வாய்ப்பு இப்போ வாய்த்திருக்கிறது' என்ற இனம் புரியா சந்தோஷத்தில் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு தியேட்டரின் வாசலையடைந்தோம். படத்தின் பெயர் `நாடோடி மன்னன்', நடித்திருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

கட்டப்பைகளை சுமந்த பாட்டிகள், வேட்டியை மடித்துக்கட்டி வந்திருந்த தாத்தாக்கள் என அவர்களோடு சேர்ந்து கருப்பாடாக நானும், என் நண்பரும் திரையிரங்கத்திற்குள் நுழைந்தோம். 2 நிமிடங்கள் அமைதி நிலவியது. ராகுல் ட்ராவிட்டின் புகையிலை டிஸ்க்ளைமர் முடிந்தவுடன், `EMGEEYAR PICTURES PVT LMT' என்ற எழுத்துக்களைப் பார்த்தவுடன் தாத்தாக்களும், பாட்டிகளும் 40 வருடங்கள் குறைந்த இளைஞர், இளைஞிகளாக மாறித் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். மீண்டும் இரண்டு நிமிட அமைதி. `என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆரின் குரலைக் கேட்டவுடன் பரவசத்தில் நாலாபக்கமும் விசில் சத்தம் பறந்தது. வசனம் கண்ணதாசன், டைரக்‌ஷன் எம்.ஜி.ஆர் என்று டைட்டில் கார்டு முடிந்தவுடன், `மக்கள் ஆட்சி வாழ்க' என்ற பதாகைகளை ஏந்திய ஒரு கும்பல், `மன்னர் ஆட்சி ஒழிக' என்ற கோஷத்தோடு ஆக்ரோஷமாக நடந்துவந்தக் காட்சியில் படம் தொடங்கியது. மீண்டும் அமைதி நிலவி சுவாரஸ்யமாக படத்தைப் பார்த்த ஆரமித்த மக்கள், கூட்டத்தில் முதல் ஆளாக வந்த இளைஞரைப் பார்த்து மீண்டும் உற்சாக வெள்ளத்தில் நனையத் தொடங்கினர். இவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்த எங்களது சந்தேகக் கண்கள் திரையை நோக்கி நகர்ந்தது. `நில்லுங்கள்' எனச் சொல்லி ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்தி நிறுத்தினார் எம்.ஜி. ஆர். 

ஆர்வம் தாங்க முடியாமல் அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்த்து எங்களது முதுகெலும்பு நேரானது. அதற்கு விருந்து தரும் வகையில், 5.1 டிஜிட்டல் சரவுண்டிங் சிஸ்டத்தில் ஒட்டுமொத்த திரையரங்கமுமே அதிர்ந்தது, எங்களுக்கு மேலும் உற்சாகமூட்டியது. படம் நகர நகர பேசும் ஒவ்வொரு வசனங்களும் இரு முறை எங்களது காதில் கேட்டயதையறிந்தோம். இதை என் நண்பரிடமும் கேட்டேன். `அது ஒரு பில்டின் எக்கோ மா' எனச் சொல்லிப் புன்னகைத்தார். மறுபடியும் மறுபடியும் கேட்டதையடுத்து, சுற்றி முற்றிப் பார்த்தேன். மூன்று சீட்டுகளுக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த பெரியவர், அங்கு படத்தில் ஒவ்வொரு நடிகரும் பேசுவதுற்கு முன்னே இவர் அந்த வசனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு படத்தைத் தொடர்ந்தோம். அது நேராக எங்களை நாகனாதபுரத்தில் கொண்டுபோய் விட்டது. 

படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் படத்தில் ஒவ்வொருவரும் கையிலேந்திச் சென்ற கூர்வாளைவிட கூர்மையாக இருந்தது. ஊர்  முழுக்க மார்த்தாண்டனின் மன்னர் பதவியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது. ஆனால் அரண்மனையில் இருந்த ஒருவருக்கு மட்டும் இதில் உடன்பாடில்லை. அவர்தான் பி.எஸ்.வீரப்பன். ’அவன் இந்த நாட்டுக்கு அரசன் ஆகக் கூடாது, யார் அரசன் என்று நான் முடிவு செய்துவிட்டேன்’ என்று ஒருவரைக் கைகாட்டுகிறார். அவருக்கே உரித்தான வில்லத்தன சிரிப்போடு என்ட்ரி கொடுக்கிறார் நம்பியார். இவையனைத்தையும் பார்க்கும்போது அந்தக் காலத்துக்கேச் சென்று, படம் பார்த்ததுபோல் ஓர் உணர்வைக் கொடுத்தது. அதற்கு அடுத்த ஷாட்டிலே என் காதுகள் எங்கேயோ, எப்பொழுதோ கேட்ட ’தூங்காதே தம்பி தூங்காதே’ பாட்டு ஒலித்தது. `இது இந்தப் படம்தானா' என்ற திகைப்போடு பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த என் நண்பன், `இந்தப் பாட்டுல எவ்வளவு கருத்து இருக்கு பாருடானு எங்க அப்பா இந்தப் பாட்டைக் கேட்க சொல்லிட்டே இருப்பார்' என முணுமுணுத்தான்.

இப்படிப் பல சந்தோஷங்கள் நிறைந்த ஃபீலோடு படத்தைத் தொடர்ந்தோம். அது மீண்டும் இரத்தினபுரி என்ற ஒரு ஊருக்குக் கொண்டுபோய்விட்டது. அங்கு மார்த்தாண்டம் ஒரு குதிரையில் இருந்து இறங்கினார். அவர் பின்னாடியே சென்ற கேமரா, முகத்தைக் காட்ட முன்னாடி சென்றது. அதுவும் எம்.ஜி.ஆர். டபுள் சந்தோஷத்தில் விசில் சத்தம் அனல் பறந்தது. அதற்குப் பின் பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள் என படம் அதகளமாய் நகர்ந்தது. படம் இன்டர்வலை எட்டியது. வெளிய ஷோ கேஸில் வைக்கப்பட்டிருந்த சில வெற்றிப் படங்களின் விருதுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் படம் பார்க்கச் சென்றோம். பல சென்டிமென்ட் சீக்குவென்ஸுக்குப் பிறகு கன்னித் தீவில், ’மானைத் தேடி மச்சான் வரப்போறான்’ என்று சந்தோஷத்தில் சில பெண்கள் ஆடிக்கொண்டிருந்தனர். யாரென்ற தெரியாத முகங்களுக்கு நடுவே ஒரு பரிச்சயமான முகம். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் சரோஜா தேவி. `ஓ படத்துல இவங்களும் இருக்காங்களா' என்ற ஆச்சர்த்தோடு பல சண்டைக் காட்சிகளோடும், சில டிவிஸ்டுகளோடும் படம் க்ளைமாக்ஸை எட்டியது. 

படமும் மொத்தமாக முடிந்தது. வீரங்கன், மார்த்தாண்டனின் கொடுத்த எண்டர்டெயின்மெட்டால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து நடந்த எங்களை, `உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்டு விரைவில்’ என்று திரையில் வந்த விளம்பரம் சந்தோஷப்படுத்தியது. புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் ரிலீஸாகாததால் போர் அடிக்குது என்று சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். இதே மாதிரியான எண்ணம் உள்ளவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்ப்பதால் நாஸ்டாலஜிக் அனுபவங்களைப் பெறலாம்.