Published:Updated:

தமிழ் சினிமா ஸ்டிரைக்குக்கான தீர்வைச் சொல்லும் கிறிஸ்டோபர் நோலன்..!

தமிழ் சினிமா ஸ்டிரைக்குக்கான தீர்வைச் சொல்லும் கிறிஸ்டோபர் நோலன்..!
தமிழ் சினிமா ஸ்டிரைக்குக்கான தீர்வைச் சொல்லும் கிறிஸ்டோபர் நோலன்..!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இந்திய வருகை எதைக்குறித்து என்பதைப் பற்றிய கட்டுரை...

உலகளாவிய அளவில், தயாரிப்பு முதல் திரையிடல்வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் சினிமா துறை மாற்றம் பெற்றிருக்கிறது. இன்று, படங்கள் முழுக்க டிஜிட்டல் கேமராக்கள்மூலம் படமாக்கப்பட்டு, கிராஃபிக்ஸ், படத்தொகுப்பு, ஒலிக்கலவை என அனைத்தும் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டு, டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள் மூலமாகவே திரையிடப்படுகிறது. ஒரு பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு முன், ஃபிலிம் ரீலில் படங்கள் பதிவுசெய்யப்பட்டு, நெகட்டிவ்களாக அதை லேப்கள் மூலம் பல வேதியியல் புராசஸ் மூலம் நாம் திரையில் பார்க்கக்கூடிய கலர் படமாக மாற்றப்படும். பிறகு, அதை ஒலியுடன் இணைத்து மாஸ்டரிங் செய்து, அதிலிருந்து பிரதி எடுத்து, ரீல்களைப் பெட்டிகளில் அடைத்து, விநியோக உரிமையைப் பெற்றுள்ள திரையரங்குகளுக்கு அனுப்புவார்கள். இந்தப் பாரம்பர்ய தயாரிப்பு முறையும், திரையிடல் முறையும் பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்தப் பாரம்பர்ய முறை அழிந்ததற்குக் காரணம், டிஜிட்டல் கேமராக்கள். தனது முதல் படம் தொடங்கி இன்றுவரை ஃபிலிம் ரீல் கேமராக்களில் படங்களை எடுத்துவருபவர், ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.

 'டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் செலவு குறைவானது' என உலகெங்கும் வரவேற்கப்பட்ட நிலையிலும், அதன் தரம் பெரிய விவாதங்களுக்கு உள்ளாகிவருகிறது. இந்த ஃபிலிம் தொழில்நுட்பம் குறித்த ஒரு கருத்தரங்கில் பங்குபெற, நேற்று குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார். 'ஃபிலிம் ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் சார்பில், சிறப்பு விருந்தினராக மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள நோலன், பல இந்தியப் பிரபலங்களைச் சந்திக்க உள்ளார்.   

நேற்று, அவருக்கு நடந்த வரவேற்பு விழாவில் கமல்ஹாசன், நோலனைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில், தத்தம் படங்கள் குறித்தும், ஃபிலிம் தொழில்நுட்பம்குறித்தும் பேசியுள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கிறிஸ்டோபர் நோலன் 2015ல் கமல் நடித்து வெளிவந்த 'பாபநாசம்' படத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். கமல் அவருக்கு, 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் பிரதியை வழங்கியுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதே பதிவில், 'டன்கிரிக்' (முழுக்க முழுக்க ஃபிலிம் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட) படத்தை டிஜிட்டல் திரையிடலில் பார்த்ததற்கு நோலனிடம் மன்னிப்புக் கோரியதாகவும் பதிவிட்டிருந்தார். 

இந்தியாவின் தலைசிறந்த சினிமா கலைஞர்களுடன் 'ரீஃபிரேமிங் தி ஃபியூச்சர் ஆஃப் தி ஃபிலிம்' என்ற தலைப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், அமீர் கான், சுதீப் சாட்டர்ஜி, மணிரத்னம், ஷாருக் கான், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த 30-க்கும் அதிகமானோருடன் இன்று நடக்கும் வட்டமேஜை கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளார் கிறிஸ்டோபர் நோலன். இந்தக் கருத்தரங்கின் இறுதியில், ஃபிலிம் தொழில்நுட்பத்தில், நோலன் இயக்கத்தில் தயாரான ’இன்டர்ஸ்டெல்லார்’ மற்றும் 'டன்கிர்க்' படங்களை 35mm மற்றும் Imax 70mm ஃபிலிம் ரீல் ப்ரொஜெக்டர்கள் மூலம் சிறப்புத் திரையிடலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, மும்பை கார்னிவல் சினிமாஸ் திரையரங்கிலுள்ள பழைய 70mm ப்ரொஜெக்டர் மீண்டும் சீர்செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் பிரதி அடங்கிய ரீல் பெட்டிகளை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதிசெய்திருக்கிறார்கள்.

Photo Courtesy: Mirrorsnow

இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை மாணவர்களுடன் நடக்கவிருக்கும் சந்திப்பை முடித்து, தனது தாயகத்திற்குத் திரும்புகிறார். இன்றைக்கு, தமிழ் சினிமா ஒரு பெரிய ஸ்டிரைக், பேரணி வரை சென்றுள்ளதற்கு டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம் ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இத்தகைய ஒரு கருத்தரங்கம் நடப்பது முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கிறிஸ்டோபர் நோலனைப் போல தமிழ் சினிமாவும் ஃபிலிம் தொழில்நுட்பத்தைக் கைவிடாமல் இருந்திருந்தால், இன்று இந்த ஸ்டிரைக்கே வந்திருக்காது. இதுதான் தமிழ் சினிமா ஸ்டிரைக்கிற்கான தீர்வாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவுதான் என்றாலும், பிற்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளில் மாட்டாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த வழி. 

அடுத்த கட்டுரைக்கு