Published:Updated:

’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..!’’ - நடிகர் கருணாகரன்

’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..!’’ - நடிகர் கருணாகரன்
’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..!’’ - நடிகர் கருணாகரன்

சினிமா ஸ்டிரைக் நடந்து கொண்டிருப்பதால் நடிகர் கருணாகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அவரது பேட்டி. இதில் அவர் சினிமா ஸ்டிரைக் மற்றும் நடிகர் கருணாகரன் ஸ்ட்ரைக்கினால் தனது சினிமா வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்

தமிழ் சினிமாத்துறையில் தற்போது ஸ்டிரைக் நடந்துவருவதால், சினிமா கலைஞர்கள் இந்த நேரத்தை தங்களது குடும்பத்துடன் செலவிட்டு வருகின்றனர். நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்று வந்திருக்கிறார். நடிகை நயன்தாரா நீண்ட நாள்களுக்குப் பிறகு, கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். காமெடி நடிகர் கருணாகரன் ஸ்டிரைக் ஆரம்பத்திலிருந்து ட்விட்டரில் சில ட்வீட்டுகளைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு போன் செய்தேன். 

''ரொம்ப ரிலாக்ஸா வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்'' என்று  பேச ஆரம்பிக்கிறார் நடிகர் கருணகாரன். ’’சினிமா ஸ்டிரைக் நடந்துக்கிட்டிருக்கு. அதனாலே ரொம்ப போர் அடிக்குது. சரி வீட்டிலே நம்ம பசங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்னு அவங்ககூட ஜாலியா ஊர் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவங்க ஸ்கூல் படிக்குறாங்க. அவங்களுக்கும் சம்மர் ஹாலிடே விட்டாச்சு. ஸோ, அவங்ககூட வீட்டிலேயும், வெளியேயும்னு நேரம் செலவிடுகிறேன். வெளியூர், வெளிநாடு எங்கேயாச்சும் போகலாம்னு பார்த்த ஸ்டிரைக் எப்போ முடியும்னு தெரியல. திடீரென்னு எப்போ வேணாலும் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம். எப்போ ஷூட்டிங் போவோம்னுதான் இருக்கு. ஆனா, இப்போ வீட்டிலே சும்மாயிருக்குறதே பழகிரும் போல. 

ஆனா, இந்த ஸ்டிரைக் முடிஞ்சிருச்சுன்னா, கொஞ்சம்கூட ரெஸ்ட்டே இல்லாம ஷூட்டிங் போயிட்டிருக்கும். கால்ஷீட் பிரச்னை வராமலிருந்தால் சரி. இந்த சினிமா ஸ்டிரைக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என் வெயிட் குறைஞ்சிருச்சு. ஏன்னா, கரெக்ட் டைமுக்கு சாப்பிட்டு தூங்காமல், வீட்டிலேதானே இருக்கோம்னு இஷ்டத்துக்கு சாப்பிட்டு தூங்குனேன். அதனாலேயே, வெயிட் கம்மியாயிருச்சு. நான் வீட்டிலேயே இருக்குறது என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும். 

வெளியே யாராவது மீட் பண்ணலாம்னு நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த்தைப் போய் பார்த்தேன். அவங்க ரெண்டு பேரும் ஃபிட்னஸ் ப்ரீக். அதனாலே ஜிம் வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்காங்க. கிரிக்கெட்கூட விளையாடாமல் ஜிம்லேயே ஓடிக்கிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி புரொபஸ்னலா கிரிக்கெட் என்னால விளையாட முடியாது. நான் ஜாலிக்கு விளையாடுவேன். அவங்க சீரியஸா விளையாடுவாங்க.

இந்த ஸ்டிரைக் நாலு, அஞ்சு நாளுல முடியுற ஸ்டிரைக் இல்லை. கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு மேலாக நடந்துக்கிட்டிருக்கு. தயாரிப்பாளர் சங்கத்தினர் நியாயமான கோரிக்கைகள்தான் வெச்சியிருக்காங்க. இதில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகதான் முடிவு இருக்கணும். அப்போதான் சினிமா துறைக்கு நல்லது. ஏன்னா, எத்தனையோ தயாரிப்பாளர்கள் இப்போ படம் பண்ணாம இருக்காங்க. அதுக்கு காரணம் அவங்க பார்த்த நஷ்டம்தான். ஒரு படம் எடுத்து அதில் தயாரிப்பாளர்களுக்கு பயன் இல்லையென்றால் அது வேஸ்ட்தானே. ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு அவங்க நஷ்டத்தை மட்டும் பார்த்தால் எப்படி.? அதனால், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஸ்டிரைக் பிரச்னைனால நல்லது நடக்கணும். சுமூகமான தீர்வு கிடைக்கணும்னு நினைக்குறேன். 

ஸ்டிரைக் முடிஞ்சதும் என்னுடைய நிறையப் படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். 'இன்று நேற்று நாளை' படத்தின் டைரக்டர் ரவிக்குமார், சிவிகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்தில் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறேன். சிவாகூட நடிக்கணும்னு நானும் ரொம்ப நாளாவே எதிர்பார்த்திருந்தேன். அஜித் சார்கூட 'விவேகம்' படத்துல் நடிச்சுட்டேன். இந்தப் படத்துல என் காமெடி ரோல் என் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவங்க,'நல்ல நடிச்சிருக்கடா''னு சொன்னாங்க. விஜய் சார்கூட ஒரு முக்கியமான படத்துல நடிக்க எனக்கு சான்ஸ் வந்துச்சு. ஆனால், சில காரணங்களால் என்னால் அந்தப் படத்துல நடிக்க முடியவில்லை. அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் விஜய் சார் நடித்த 'நண்பன்'. இந்தப் படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்திடமிருந்துதான் என்னிடம் கேட்டாங்க. அப்போ, நான் சினிமாவுக்கு அறிமுகமாகவேயில்லை. 'நண்பன்' படத்தில் நடித்திருந்தால், அதுதான் என் முதல் படமாக இருந்திருக்கும். சீக்கிரமே விஜய் சார் படத்திலும் நடிக்கணும்’’ என்றார் நடிகர் கருணாகரன்.

அடுத்த கட்டுரைக்கு