Published:Updated:

பிரௌன் ஹேர்ஸ்டைல், சந்திரகுப்த மௌரியர்... அஜித் போட்டோஷூட் வித் அஜித் ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 3

பிரௌன் ஹேர்ஸ்டைல்,  சந்திரகுப்த மௌரியர்... அஜித்  போட்டோஷூட் வித் அஜித் ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 3
பிரௌன் ஹேர்ஸ்டைல், சந்திரகுப்த மௌரியர்... அஜித் போட்டோஷூட் வித் அஜித் ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 3

நடிகர் அஜித்துடனான தன் 25 ஆண்டுகால புகைப்படப் பயணத்தை போட்டோகிராபர் ஜி.வெங்கட்ராம் ‘கிளாசிக் கிளிக்ஸ்’ பகுதியில் பகிர்ந்துகொள்கிறார்.

1980களில் அஜித் ஒரு மாடல். நான் அப்போது சரத் ஹக்சரிடம் அசிஸ்டென்ட் போட்டோகிராஃபர். அப்போது பிரின்டில் வரும் பல விளம்பரங்களுக்கு அஜித் மாடலிங் செய்துகொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் அவரை முதலில் சந்தித்தேன். வெடவெடவென ஒல்லியாக இருப்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... தான் நடிக்கும் விளம்பரப் படங்கள் மட்டுமின்றி மறற மாடல்களை வைத்து ஷூட் செய்யும் போர்ஷனிலும் அஜித் எங்களுடனேயே இருபபார். ‘எப்படி ஷூட் பண்றாங்க, எப்படி லைட்டப் பண்றாங்க’ என்று கவனிப்பார். அன்றே அவருக்கு போட்டோகிராஃபியில் அந்தளவுக்கு ஆர்வம்.

தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்ட்டீரியர் சம்பந்தப்பட்ட ஒரு போட்டோஷூட். இரவு 9 மணிக்கு தொடங்கிய ஷூட் மறுநாள் காலை 6 மணிவரை போனது. அப்போது திடீரென வந்த அஜித் ‘ஐ வான்ட் டு ஸீ த லைட்’ என்றவர் முழு நைட்டும் எங்களுடன் அமர்ந்து லைட்டிங் பண்ணுவதை கவனித்ககொண்டே இருந்தார். இத்தனைக்கும் அன்று ஹோட்டலின் லாபி, ரூம், கிச்சன் என்று வெவ்வேறு இடங்களுக்கு தகுந்தாற்போல் லைட்டிங் செய்து ஷூட் செய்தோம். தவிர அங்கிருந்த உணவுகளையும் சில ஷாட்ஸ் எடுத்தோம். ஒவ்வொரு இடம், சூழலுக்கு தகுந்தாற்போல் எப்படி லைட்டிங் செய்கிறார்கள் என்பதை ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.  

அன்று அவர் போட்டோகிராஃபரும் கிடையாது, ஒரு மாடல். ஆர்வம் என்றால் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் இருப்பார்கள். ஆனால் 9 மணிநேரம் முழு இரவும் ஒரு ஷூட்டில் டிராவல் பண்ணுவது அவரின் ஆர்வத்தை புரியவைத்தது. ஷூட் முடிந்து மறுநாள் காலை காரை எடுத்துக்கொண்டு, ‘ஓகே சீ யூ’ என்றபடி அவர் சென்றது ஏதோ நேற்று நடந்ததுபோல் உள்ளது. 

அது, சிட்டி யூனியன் பேங்க் விளம்பர ஷூட். சாணக்கியரும் சந்திரகுப்த மௌரியரும தாயம் விளையாடுவதுபோன்ற ஒரு ஷாட். அதில் அஜித் சந்திரகுப்த மௌரியர். சாணக்கியராக நடிக்க ஒல்லியான தோற்றம்கொண்ட ஒரு ஆள் தேவை. ஆனால் உடனடியாக ஆள் கிடைக்கவில்லை. அப்போது சரத் ஹக்ஷர், ‘சாணக்கியரா நீயே பண்ணிடு. அஜித் மட்டும்தான் ஃபோகஸ்ல இருப்பார்’ என்றார். பூணூல் போட்டு சாணக்கியர்போல் வேஷம்போட்டு அஜித்தின் எதிரில் உட்கார்ந்தேன். என் முதுகுப்பக்கத்தில் இருந்து அஜித்தை ஷூட் செய்யும் ஷாட். ரொம்பவே தமாஷான காட்சி. ‘நாமளும் அஜித்துடன் மாடல் பண்ணிட்டு இருக்கோம்’ என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.

மாடலிங்கில் இருந்து பிறகு அவர் சினிமாவுக்குள் வந்துவிட்டார். ஆனால் அவ்வபோது போர்ட்போலியோ செய்வது தொடர்ந்தது. அப்படி பண்ணியதுதான் அந்த போட்டோஷூட். கொஞ்சம் நீளமான முடியுடன் வந்தார்.  வழக்கமாக சினிமாவுக்கு போட்டோஷூட் செய்யும்போது, சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தை மனதில் வைத்து செய்வோம். ஆனால் அன்று ஃபேஷன் மாடல்போல் ஷூட் செய்வோம் என்று ஷாட்ஸ் திட்டமிட்டோம். ஜாக்கெட்ஸ், ரேஸ் சைக்கிள்... என்று அன்று எடுத்த அந்த போட்டோக்களைப் பார்த்தால் ஸ்டைலிங், லைட்டிங் அடிப்படையில் அவை ஏதோ இன்று எடுக்கப்பட்டவைபோல் இருக்கும். 

இப்போது அவர் விளம்பரங்களில் நடிப்பது இல்லை. ஆனால் அவரின் பல விளம்பர வீடியோக்களுக்கு நான் போட்டோகிராஃபி செய்துள்ளேன். அதில் முக்கியமானது நெஸ்கஃபே சன்ரைஸ் காப்பி விளம்பரம். இவரும் சிம்ரனும் சேர்ந்து நடித்த ‘வாலி’ படம் ரிலீஸ் சமயம் என நினைக்கிறேன். அதனால் அந்த ஹிட் காம்பினேஷனை விளம்பரத்தில் கொண்டுவந்தனர். பாண்டிச்சேரி யில் ஒரு பழைய பங்களாவில் ஷூட் பண்ணினோம். ராஜீவ்மேனன் ஃபிலிம் பண்ணினார். நான் போட்டோஷூட் பண்ணினேன். அது நல்ல அனுபவம். 

அவரின் சினிமா என்று பார்த்தால் ‘அட்டகாசம்’ படத்துக்குத்தான் முதலில் ஷூட் பண்ணினேன். சரண் சார் டைரக்ஷன். ‘இரண்டு டிரான்ஸ்ஃபர்மேஷன் வேணும்’ என்றார் சரண் சார். அந்த இரண்டு லுக்கையும் ஒரேநாளில் எடுத்தோம். வெள்ளை வேட்டி சட்டை, கழுத்து சங்கிலிகள், பிரேஸ்லெட் என்று நிறைய நகைகள் போட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் டான் கேரக்டரை ஷூட் செய்தோம். ஹேர் ஸ்டைல், பட்டன் கழண்டு இருக்கும் சட்டை,, கையில் விதம்விதமான ஆயுதங்கள்... என்று நிறைய எடுத்தோம். 

நிறைய அரிவாள்களை வரிசையாக நட்டு வைத்து அதன் வழியே அஜித் சார் பார்ப்பதுபோன்ற ஒரு ஷாட். அதுதான் போஸ்டராக வந்தது. இன்றும் அந்த போட்டோஸை அவரின் பல ரசிகர்கள் வைத்திருப்பதை கவனிக்கிறேன். ஆட்டோவுக்கு பின்னால் ஒட்டிவைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கிறேன். தவிர பூஜாவுடன் ரொமான்டிக் லுக்கிலும் சில ஷாட்ஸ் எடுத்தோம். 

இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் நினைவுக்கு வருகிறது. ஏதாவது புதிதாக லுக் முயற்சி செய்கிறார் என்றால் ஒரு போட்டோஷூட் நிச்சயம் இருக்கும். அப்படி ஒருநாள் திடீரென போன் செய்தார். ‘ஸ்டுடியோ வர்றேன். டக்குனு ஒரு போட்டோஷூட் பண்ணணும்’ என்றார். ‘என்ன விஷயம்’ என்றேன். ‘வந்து சொல்றேன்’ என்றவர் அடுத்த அரைமணிநேரத்தில் வந்தார். ‘வேறொரு லுக் முயற்சி பண்ணலாம்னு நினைக்கிறேன். சலூன் போயிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். 

2 மணிநேரம் கழித்து வந்தவர், ஒட்டுமொத்தமாக மாறி இருந்தார். தலை முடி, கண் புருவம் முழுவதும் புரவுன் கலராக மாற்றி இருந்தார். என் ஸ்டுடியோவில் இருந்த யாருக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை. ஏனெனில் கண் புருவத்தை மாற்றினால் ஆள் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம். எனக்கே, ‘யார்றா இது ஃபாரினர் மாதிரி வர்றாங்க’ என்று யோசித்து பிறகுதான் அஜித் என்று ஆச்சர்யமாகப் பார்த்தேன். 

அந்த லுக் நன்றாகவே இருந்தது. ‘நல்லா இருக்கு. ஆனால் நீங்கன்னே தெரியலை. செட்டாகுமானு முயற்சி பண்ணிப் பார்ப்போம்’ என்றேன். எடுத்தோம். நல்ல ஷாட்ஸ் கிடைத்தன. ஆனால் அவர் அனுமதியின்றி அதை ஷேர் பண்ண முடியாது. பிறகு சென்றவர் பிரவுன் கலரை மாற்றி பழையபடி திரும்பி வந்தார். அந்த நார்மல் லுக்கிலும் ஷூட் செய்தேன். சில நடிகர்கள் புது லுக் முயற்சி செய்து பார்ப்போம் என்றால் யோசிப்பார்கள். ‘இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ என்று தயங்குவார்கள். ஆனால் இவர் அப்படி கிடையாது, ‘எப்படி இருக்குனு முயற்சி பண்ணி பார்ப்போமே’ என்று நிறைய சோதனை முயற்சிகள் செய்வார். அதுதான் அஜித் சாரின் பலம் என நினைக்கிறேன். 

அடுத்து சரண் சாருடன் மீண்டும் ‘அசல்’. சிவாஜி  புரொடக்ஷன் சார்பாக ராம்குமார் சார் தயாரித்த படம். இன்டர்நேஷனல் டான் கேரக்டர். தாடி, மீசை, தலைமுடி, கூடவே சிகார்... என்று ஒட்டுமொத்தமாக வித்தியாசமான தோற்றம். ஃப்ளைட்டை பிடிக்கச் செல்லும்போது,  பேக் எடுத்துக்கொண்டு நடப்பது... இன்டர்நேஷனல் லுக் வரணும் என்பதற்காக முயற்சி செய்தோம். போட்டோகிராஃபரா என்ஜாய் பண்ணி பண்ணிய படம். 

காரணம், அஜித் சாரை ஷூட் செய்யும்போது ரசித்து லைட்டிங் செய்யலாம். அழகானவர் என்பதால் எந்தக்கோணத்தில் எந்த லைட்டிங்கிலும் அழகாக வரும். ‘அசலுக்கு எடுத்த போட்டோஸை இப்பவும் அவரின் ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப்பட போஸ்டர் வந்ததும், ‘ரொம்ப நல்ல லுக்ல வித்தியாசமா இருக்கு’ என்று அஜித் சார் எனக்கு போன் செய்து சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறது.


 

தொடரந்து பில்லா - 2. சக்ரி டோலட்டி டைரக்ஷன். மிஸ் இண்டியா பார்வதி ஓமணக்குட்டன் காம்பினேஷன். அதில் லுங்கி கட்டிக்கொண்டு இருக்கும் லோக்கலான கேரக்டர், ஸ்டைலாக கோட் ஷூட்டில் இருக்கும் டான் கேரக்டர் என்று இரண்டு கேரக்டர்கள். நிறைய கூலர்ஸ் பயன்படுத்தி எடுத்தோம். முழுப் படத்தையும் கோவாவில் எடுத்து இருந்தார்கள். ஆனால் போட்டோஷூட்டுககு டைம் இல்லாததால் சென்னை ஸ்டுடியோவில்தான் எடுத்தோம். லுங்கி கட்டியிருக்கும் கேரக்டர் மீதே அந்த கோட் சூட் கேரக்டையும் சூப்பர் இம்ப்போஸ் செய்து போஸ்டராக வந்தன. அதற்கும் நல்ல வரவேற்பு. லுக்கி லுக்கில் ஒரு பாடி லாங்குவேஜ், கோட் சூட்டில் வேறொரு ஸ்டைல் என்று வித்தியாசமாக வந்தன. வீடியோ ஷூட்செய்யும்போது அந்த வித்தியாசத்தை எளிதாக கொண்டுவந்துவிடலாம். ஆனால் ஒரு போட்டோவில் அந்த வித்தியாசத்தை கொண்டுவருவது ரொம்பவே கஷ்டம். அதை அஜித் அழகா பண்ணியிருந்தார. 

அவரை 90களில் இருந்து 25 வருஷங்களுக்கும் மேலாக கவனித்து வருகிறேன். அன்று போட்டோகிராஃபியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை இன்றும் தக்கவைத்திருப்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஒரு ப்ரொஃபஷனல் போட்டோகிராஃபராக இதில் உள்ள தொழில்நுட்பத்தை, நுணுக்கத்தை, அடுத்தடுத்த வளர்ச்சியை கற்க வேண்டியது என் வேலை. ஆனால் அவர் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர். அவரும் அதே அளவுக்கு அப்டேட்டாக இருப்பதான் பெரிய ஆச்சர்யம். 

ப்ரொபஷனல் போட்டோகிராஃபர்கள் வைத்துள்ள அத்தனை கேமரா கிட்டும் அவரிடம் இருக்கும். எங்கே வெளிநாடு போனாலும் கேமராவை எடுத்துச்சென்றுவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களை கேண்டிட்டாக எடுத்ததையும் இயற்கை காட்சிகளை எடுத்ததையும் அவ்வப்போது ஷேர் செய்வார். சமீபத்தில் வீட்டிலேயே ஒரு ஸ்டுடியோ செட் பண்ண வேண்டும் என்று சொல்லி ‘என்னென் எக்யூப்மென்ட்ஸ் வாங்கலாம்’ என்று கேட்டார். நானும் என் யோசனைகளை சொன்னேன். இன்று நடிகர் என்பதைத்தாண்டி நண்பராக, சக போட்டோகிராஃபராக அன்று மாடலாக இருந்த அதே பிணைப்பும் அன்புமாக எங்கள் பயணம் தொடர்கிறது.”

அடுத்த கட்டுரைக்கு