Published:Updated:

’சொன்ன வார்த்தையைக் காப்பாத்துனா அதுக்கு பேரு நேர்மை இல்லை; இயல்பு..!’ - விஜய் சேதுபதி பன்ச்கள் #VikatanPressMeet

சமீபத்தில் நடந்த விகடன் பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி சொன்ன பன்ச்களின் தொகுப்பு...

’சொன்ன வார்த்தையைக் காப்பாத்துனா அதுக்கு பேரு நேர்மை இல்லை; இயல்பு..!’ - விஜய் சேதுபதி பன்ச்கள் #VikatanPressMeet
’சொன்ன வார்த்தையைக் காப்பாத்துனா அதுக்கு பேரு நேர்மை இல்லை; இயல்பு..!’ - விஜய் சேதுபதி பன்ச்கள் #VikatanPressMeet

சமீபத்தில் நடந்த விகடன் பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி சொன்ன பன்ச்களின் தொகுப்பு இதோ...

1.பழைய சோறு சாப்பிட்டா தொப்பை வந்திடும்னு திட்டுறாங்க. ஆனா, அந்த நீச்சத் தண்ணியில இருக்கற சுகம் இருக்கே, அது தனி!

2.சினிமாங்கிறது முதல்ல மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி இருக்கணும். அதேபோல, பெரும் தொகை முதலீடா போடப்படுற ஒரு தொழில் இது. போட்ட பணம் திரும்ப வரணும். இது இரண்டையும்தான் முதல்ல நான் கவனிக்கிறேன். பிறகுதான் எனக்குன்னு இருக்கிற எத்திக்ஸ். 

3.என் படங்கள்ல தேவையில்லாத கவர்ச்சியை நான் விரும்ப மாட்டேன். ‘கருப்பன்’ படத்துல முதலிரவுக் காட்சி. ‘இன்னசன்ட்டான ரெண்டு பேர் முதன்முதலா சந்திக்கிற அந்தக் காட்சியில, எதுக்கு இடுப்பு தெரியுற சீன்’னு இயக்குநரிடம் கேட்டேன். இதுவும் ஒரு சமூக அக்கறையே. 

4.கணவனை இழந்த பெண்ணைப் பொட்டு வைக்க வலியுறுத்தின காட்சிகள் என் படத்துல பார்த்திருப்பீங்க. இப்படியும் அரசியல் பேசலாம்.

5.ஒரு ராஜா போர்ல ஜெயிச்சுட்டு காட்டு வழியா நாடு திரும்பிட்டிருக்கார். கொலைப்பசி. வழியில் அழகா ஒரு மான் தென்படுது. வில் எடுக்கிறார். அந்தப் பக்கமா ஒரு புலி. ‘ராஜா என் வீட்டுல என் குட்டிக எனக்காகக் காத்திருக்கு’னு மான் சொல்லுது. யோசிச்ச ராஜா புலி மேல அம்பை விட்டுட்டார். கீழே சாஞ்ச புலி ராஜாவிடம் கேட்டது, `எனக்கு மட்டும் குடும்பம் குட்டிகள் இல்லையா?’னு. இங்கே எது தர்மம்னு கதை முடியும்.

6.தமிழ்நாட்டு மக்கள் இப்ப அநாதைகளா விடப்பட்டிருக்கறாங்க. பிரச்னைகளைப் போய்ச் சொல்லணும்னா கேக்க நாதி இல்லை. நல்ல தலைவன் இல்லை. என்ன ஒரு நல்ல விஷயம்ன்னா, வேற வழி இல்லாம மக்களே போராடத் தெருவுக்கு வந்திருக்காங்க.

7.தூத்துக்குடியில ஒரு தொழிற்சாலையை எதிர்த்துப் பெண்கள்லாம் திரண்டிருக்காங்க. விழிப்பு உணர்வு வந்து மக்கள் வலுவாகி ஒண்ணு சேர்ந்திருக்காங்க. இது ஒரு வகையில் நல்லதுதான்.

8.நேசிக்கிற மாதிரி சினிமாவில் நடிக்கலாம். இயல்பு வாழ்க்கையில் அது முடியாது.

9.நடிகர்கள் அரசியலுக்கு வர்றதை பூதாகரமா பேசறது மீடியாதான். ஏன் அரசியலுக்கு வர்றீங்கன்னு ஒரு நடிகனை யாரும் கேள்வி கேட்க முடியாது. வர்ற நடிகர்கிட்ட ‘என்ன கொள்கை வச்சிருக்கீங்க’ன்னு கேளுங்க. ஏன் வர்றீங்கன்னு கேக்கறது தப்பு ப்ரோ!

10.ஆசைப்படுங்க. நேர்மையா ஆசைப்படுங்க. அப்படி ஆசைப்படுற பிண்டத்தோட ஆசையை சுத்தியிருக்கிற இந்த அண்டம் நிறைவேத்தித் தரும்.

11.நாமளா எதையும் நிரூபிக்கணும்னு அவசியமில்லை. ஸ்பெஷலா தெரியணும்னும் அவசியமில்லை. எல்லாம் சரியா நடக்கும். அதுவும் தானாவே நடக்கும்.

12.சினிமா எடுக்கிறது நாம விருப்பப்பட்டுச் செய்றது. ஆனா, அந்தப் படத்தை வியாபாரம் செய்றது இருக்கே, அந்த இடத்தோட தன்மையே வேற. இதுக்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பலை. குறை சொன்னா நான் புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான்.

13.நான் படம் எடுக்கத்தான் வந்தேன். கொள்ளையடிக்க வரலை. என்னோட மனசுல தயாரிப்பாளரா நிறைவாவே உணர்றேன். எங்க அப்பா இப்ப இருந்தா, நான் சினிமா எடுக்கறது அவரை சந்தோஷப்படுத்தியிருக்கும்.

14.மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க. நம்புங்க, எல்லோரும் ஒருநாள் செத்துப்போறவங்கதான். இது தெரிஞ்சாலே போதும். அன்பு, கருணையெல்லாம் தானா வந்திடும்.

15.விமர்சனம் செய்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதில் தப்பில்லை. ஆனா, ஒரு ரசிகன் தியேட்டர்ல எழுந்து  கைதட்றான்னா, அவன் மனசுல நினைச்சது ஸ்க்ரீன்ல காட்டப்படுதுன்னுதானே அர்த்தம்.

16.நேர்மைக்கும் இயல்புக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு விஷயத்தை என்னால பண்ண முடிஞ்சா முடியும்னு சொல்லுவேன். அப்படிச் சொல்லி, அதை முடிச்சுத் தந்தா அதுக்குப் பேர் நேர்மையில்லை; இயல்பு.

17.வெளியில இருந்து பார்த்து, ஒருவர் நேர்மையானவர்னு சர்ட்டிஃபிகேட் தந்துட முடியாது. ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்கும் ஒருத்தனுக்குத்தான் அந்த நேர்மை பத்தித் தெரியும்.

18.சொந்த நாட்டுப் பிரச்னையைப் படமா எடுத்தீங்கன்னா, இன்னைக்கு ரிலீஸ் பண்ண விடுவாங்களான்னு தெரியல.

19.யார் சினிமாவுக்கு வந்தாலும் சினிமாவைப் புரிஞ்சுகிட்டு, கத்துக்கிட்டு, ஈடுபாட்டோட இயங்கணும். ஜெயிச்சவங்ககிட்ட இருந்து மட்டுமே கத்துக்கணும்னு இல்லை. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட இருந்துகூட ஒரு நடிகன் கத்துக்கலாம்.

20.ஒரு நடிகையோட ஒரு படம்தான் நடிக்கணுமா என்ன? நடிகையோட கேரியர் ரொம்பச் சின்னது. அதுல ஒரு படம் நடிச்சவங்க திரும்ப நடிக்கக் கூடாதுன்னு கண்டிஷன்லாம் போடுறது நியாயமில்லை. 

21.நான் ஒரு படத்துக்காகக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கலாம். ஆனா, நான் ‘கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்’னு  மக்களுக்குத் தெரியக் கூடாது.

22.ஒரு நல்ல செயலைச் செய்துட்டு ஸ்லோமோஷன்ல நடந்து வந்தாலே அது ஹீரோயிசம்தான்.

23.என்னோட படங்களில் வழக்கமான ஹீரோயிசம் இல்லாம இருக்கலாம். ஆனா, எல்லாப் படங்களிலுமே ஹீரோயிசம் வேற வேற ரூபத்துல இருக்கத்தான் செய்யுது.

24.பேரன்பும், பெருங்கருணையுமே கடவுள், அல்லது இந்த அன்பு, கருணை வழியேதான் கடவுளை அடைய முடியும்னு நான் நம்பறேன்.

25.சக மனுஷன் மீது காட்டுகிற அன்பும் கருணையுமே ஆன்மிகம்னு சொல்வேன். பெரியாரைக் கடவுள் மறுப்பாளர்ங்கிற ஒரே கோணத்துல இங்க பார்க்கிறாங்க. பொதுவா தலைவரோட கருத்துங்கிறது அவரோட சொந்தக் கருத்து மட்டுமில்லை. அது ஒரு தொடக்கப் புள்ளி.

26.‘கடவுளுக்காகக் கொலை செய்யத் தயார்’னு நினைக்கிறவன்தான் என்னைப் பொறுத்தவரை நாத்திகவாதி. ‘என்ன பண்ணினாலும் கடவுள் நம்மைத் தண்டிக்க வரமாட்டார்’னு அவன் நம்பறான். 

27.மக்கள்கிட்ட வந்து தெளிவா பேசணும்கிறதே அரசியல்வாதிகளுக்கு என் முதல் கோரிக்கை. நாட்டின் நிலைமையை மக்கள்கிட்டப் பேசி விளக்குங்க. ஒரு கையெழுத்துப் போடுறது மூலமா எல்லாம் சரியாகிடாது.

28.ரசிகன் நல்லா இருக்கணும்னு விரும்பறேன். கோஷம் போட்டுட்டே அவன் தேங்கிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். எனக்கு சாதகமா ரசிகர்களைப் பயன்படுத்துற எண்ணம் எனக்கு இல்லை.

29.இருபது முதல் முப்பத்தஞ்சு வயசு வரை சந்திக்கிற அவமானங்களே, சிந்திக்க வைக்கும்கிறதை நான் உணர்ந்திருக்கேன். அவமானம் ஒவ்வொருத்தருக்கும் தேவை.

30.திருநங்கைகளை  வீடும் ஒதுக்குது; சமூகமும் ஒதுக்குது. ஆனா, விதிக்கப்பட்ட நாள் வரைக்கும் இங்க வாழ்ந்தாகணும். அவங்களோட நிலைமை மாறணும்; நிச்சயம் மாறும்.

31.நம்முடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு, பணம்னு நான் நம்பினேன். எந்த அளவுக்கு உச்சமா நம்பினேனோ, அந்த அளவுக்கு அது பொய்னு உணர்ந்துகிட்டேன். 

32.தமிழ்நாட்டோட இப்போதைய அரசியல் நிலைமை எப்படி இருக்கு​?​
''ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்.''

33.ஒரு ஷோவுல ​​யாரைக் கடத்திட்டுப் போகணும்னு கேட்டப்ப, நயன்தாரானு சொன்னீங்க​.​ அவங்ககூட​ ஜோடியாவும்​ நடிச்சிட்டீங்க​.​ உங்க கையால ஆனந்தவிகடன் விருதும் அவங்களுக்கு ​ கொடுத்திட்டீங்க. ​இதையெல்லாம்  நினைச்சுப் பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணும்​?​
''ஆண்டவன் கட்டளை.''

34.உங்க ஃபேமிலிய நெனைச்சுப் பாக்கறப்ப என்ன படம் தோணும்​?​
''சேதுபதி.''

35.நீங்க நேரடி அரசியலுக்கு எப்ப வருவீங்க?
''ரம்மி.''

36.நீங்க நல்லா நடிச்ச போர்ஷன் படத்துல வராம எடிட்டிங்ல கட் ஆனா என்ன நெனைப்பீங்க?​
''நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்.''

37.சினிமால ஹிட் ஆகறதுக்கான ஃபார்முலா என்ன​?​
''ஆரஞ்சு மிட்டாய்.''

38.நீங்க ​பேய்த்தனமா நடிச்ச படம்?  
''இதற்குத்தானே​ ஆசைப்பட்டாய்​ பாலகுமாரா?''