Published:Updated:

"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

Published:Updated:
"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மியூசிக் அகாடமிக்குப் பின்னாலிருந்த புதுப்பேட்டை தோட்டத்தெரு. என் அப்பா கிடைச்ச சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தார். என்கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான்தான் கடைக்குட்டி. எங்க வீடு ரொம்ப சின்னதாதான் இருக்கும். மிடில் கிளாஸ் ஃபேமிலி நாங்க. என் மாமா எங்க வீட்டுக்கு மாடியில் இருந்தார். மியூசிக் அகாடமியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். எங்க அம்மாவுக்கும் கர்நாடக மியூசிக் நல்லாத் தெரியும்!" - 'அப்போ இப்போ' கதையை உற்சாகமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார், நடிகர் சின்னி ஜெயந்த்.

நாங்க தெலுங்கு பேசுவோம். அதனால என்னை சின்னினு கூப்பிடுவாங்க. ஆனா, என் பெயர் சின்ன நாராயண சாமி. சினிமாவில் நடிகன் ஆனதுக்குப் பிறகு என் பெயரை சின்னி ஜெயந்த்னு இயக்குநர் ஜே.மகேந்திரன் சார் மாத்தி வெச்சார். நியூ காலேஜில் படிச்சேன். சின்ன வயசுல மியூசிக் அகாடமியில் நிறைய நாடகங்கள் பார்ப்பேன். என் வயசிலே இருக்கிற யாரும் இந்த அளவுக்கு நாடகங்கள், கர்நாடக மியூசிக் கேட்டவர்கள் இருக்க மாட்டாங்கனு சவாலே விடுவேன். ஏன்னா, நான் பொறந்த ஏரியாவே அந்த இடம்தானே.  ஒய். ஜி. மகேந்திரன் காலத்து நாடகங்கள், இங்கிலீஷ் நாடங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். குழந்தையா இருக்கும்போதே சிவாஜி சார் நாடகங்கள் பார்க்கப் பிடிக்கும். அவர் நாடகத்தில் நடிக்கும்போது அதைப் பார்க்க ஓடிவிடுவேன். ஒருமுறை அவர் நடித்த நாடகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி இறந்துட்டார். உடனே, ஓ...னு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்போ, அங்கேயிருந்த கிதார் ஆர்டிஸ்ட் ஒருத்தர், 'ஏன் அழறீங்க'னு கேட்டார். 'சிவாஜி மாமா செத்துப் போயிட்டார்; அதான் அழறேன்'னு சொன்னேன். அதுக்கு அவர், 'டேய்... நாடகத்துல செத்த மாதிரி நடிச்சாரு. பின்னாடி போய் நில்லுங்க. அவர் உயிரோட நிற்பார். போய்ப் பாரு'னு சொன்னார். ஓடிப் போனேன். அங்கே இருந்த எல்லோரும் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க'னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் அவங்ககூட சேர்ந்து, 'வாழ்க'னு கத்துனேன். அப்போ எனக்கு ஆறு வயசுதான். சிவாஜி சாரோட வெறித்தனமான ரசிகன் நான். அவர் நடித்த படங்களைப் பார்க்க ஃபர்ஸ்ட் டே போயிருவேன். அவரை ரசிச்ச அளவுக்கு நான் ரசிச்ச இன்னொரு நபர் இருக்கார். அவர்... யாருன்னா...!

"நான் இருந்த புதுப்பேட்டை கார்னர் தெரு கார்னர் வீட்டு பக்கமா ஒருத்தர் நடந்து போயிட்டிருந்தார். அவரை அடிக்கடி அந்த வீட்டில் பார்ப்பேன். ஆனா, யாருனு தெரியலை. அந்த சமயத்தில் ஸ்கூலைக் கட் அடிச்சிட்டு நண்பர்களோட சினிமாவுக்குப் போயிருந்தேன். அந்தப் படத்துல நான் பார்த்த நடந்து போன நபர் நடிச்சிருந்தார். 'என்னடா... இந்த அங்கிள் சினிமாவுல நடிச்சிருக்காரே'னு எனக்குள்ளே நினைச்சுக்கிட்டேன். அடுத்தநாள், அந்த வீட்டுப் பால்கனியில நின்னுக்கிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லோரும், 'வாடா அவர்கிட்ட போய்ப் பேசுவோம்'னு கூட்டிக்கிட்டு போனாங்க. கையில சிகரெட்டோட மாடியில நின்னுக்கிட்டு இருந்தார், அவர். 'அங்கிள்... நீங்கதானே அந்தப் படத்துல நடிச்சீங்க'னு கேட்டேன். 'ஆமா...'னு சொல்லிச் சிரிச்சார். அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர்.... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! நாங்க பார்த்த அந்தப் படம், 'அபூர்வ ராகங்கள்'. ரஜினிகாந்த் சாரை சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடியே பார்த்த என் வயது நடிகர்கள் நான் மட்டும்தான். சினிமாவில் நடிக்கிறதுக்காக ரஜினி சார் போட்டோ எடுத்து கொண்ட ஸ்டூடியோ பேர்கூட எனக்குத் தெரியும். அப்போ எனக்குப் 13 வயசு. அந்த ஸ்டூடியோ பெயர், ஜெயா ஸ்டூடியோ!  

சிவாஜி சார் நடிப்பை மத்தவங்க நடிக்கிறது கஷ்டம்.  ரஜினி சார் திரும்புனா, நின்னாகூட கை தட்டுறாங்க. அவர் பெரிய ஹீரோவா வளர வளரப் பார்த்திருக்கிறேன். அதுவரைக்கும் அவர் அந்த வீட்டிலேயேதான் இருந்தார். போயஸ் கார்டன் வீட்டுக்கு ரஜினி குடிபெயர்ந்து போகும்போது, நான் நியூ காலேஜில் படிச்சுக்கிட்டு இருந்தேன். என் காலேஜ் நாட்களில் கலை நிகழ்ச்சியில் 'சங்கராபரணம்' படத்தில் ரஜினி நடிச்சிருந்தா எப்படி இருக்கும்னு நடிச்சுக் காட்டினேன். என் நடிப்புக்குப் பசங்க, விசில் அடிச்சுக் கை தட்டுனாங்க. இப்படியும் நடிக்கலாம்னு எனக்குக் கத்துக்கொடுத்தது ரஜினி சார்தான். என் நண்பர்கள், 'நீயும் சினிமாவுக்குப் போடா... உன் தெருவில் இருந்த ரஜினி சினிமாவில் நடிகர் ஆயிட்டார், நீயும் ஆயிடலாம்!'னு சொல்வாங்க. உடனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். அங்கே டைரக்டர் ஜே.மகேந்திரன் சாரின் உதவி இயக்குநர்கள் வருவாங்க. அவங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டுக்கிட்டே இருப்பேன். அவங்க எனக்கு வாய்ப்பு கொடுத்த படம்தான், என் முதல் படம் 'கை கொடுக்கும் கை'.

நான் நடிச்ச முதல் படத்தோட ஹீரோ, ரஜினி சார். நமக்குப் பிடிச்ச ஹீரோவோட படமே நமக்கு முதல் படமா அமைஞ்சிருச்சேனு சந்தோஷப்பட்டேன். ஆனா, சின்னப் பையனா என்னைப் பார்த்த ரஜினி சாருக்கு அப்போ என்னை ஞாபகம் இல்லை.ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் 'உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே'னு கேட்டார். அதற்கு பிளாஷ்பேக் காட்சியைச் சொன்னேன். 'ஓ... அது நீதானா!'னு ஆச்சரியமா கேட்டார். நாம ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணா, அது நமக்குக் கிடைச்சே தீரும்ங்கிறதுக்கு உதாரணம் இது. சினிமாவுல நடிக்க வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமா மிமிக்ரி ஆர்டிஸ்டா வேலை பார்த்தேன்.  

ரஜினியுடன் நடிச்சுட்டேன், சிவாஜி சாருடன் நடிக்கணும்னு சான்ஸ் தேடிக்கிட்டே இருந்தேன். 'மலையூர் மம்மட்டியான்' படத்தோட டைரக்டர் ராஜசேகர் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அவர் சிவாஜி சாரை வெச்சு எடுத்த படம், 'லட்சுமி வந்தாச்சு'. இந்தப் படத்தோட ஷூட்டிங்கின்போது டைரக்டர் என்னை சிவாஜி சாரிடம் அறிமுகப்படுத்தினார். மதிய சாப்பாடு முடிஞ்சதும் சிவாஜி சார் சேர்ல உட்கார்ந்துக்கிட்டே தூங்குவார். அப்போது, சிவாஜியின் உதவியாளர் திருக்கோணம் முதுகைப் பிடித்துக்கொடுத்து சிவாஜி சாருக்கு மசாஜ் பண்ணிவிடுவார். தொடர்ந்து ரெண்டுநாள் இதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். மூணாவது நாள், 'கொஞ்ச நேரம் முதுகைப் பிடிச்சு விடுறியா, நான் பாத்ரூம் போயிட்டு வந்திடுறேன்'னு திருக்கோணம் சார் சொல்ல, 'நல்ல வாய்ப்பு இது!'னு உடனே சரினு சொல்லிட்டேன். சிங்கத்துக்கே மசாஜ் பண்ற வாய்ப்பை எப்படி விடமுடியும்... அவ்ளோ சந்தோஷம் எனக்கு. சிவாஜி சார் நல்லாத் தூங்கிட்டிருந்தார். கொஞ்சநேரத்துல திருக்கோணம் வந்துட்டார். நான் மசாஜ் பண்றதை நிறுத்திட்டு, திருக்கோணம் சாருக்கு வழிவிட்டேன். சிவாஜி சார் கண்ணை மூடியே சொன்னார், 'டேய்... நீயே அமுக்குடா!".

தூக்கத்துல இதை எப்போ கவனிச்சார்னு எனக்கு ஒரே ஆச்சரியம். 'தம்பிக்கு, சொந்த ஊர் குற்றாலமா?'னு கிண்டல் அடிச்சார்.அப்புறம் என்னைப்பத்தி விசாரிச்சார். அன்னைக்கு ஷூட்டிங் முடிஞ்சதும் இயக்குநர்கிட்ட, 'இவனுக்கு எத்தனை நாள் வொர்க்'னு கேட்டார். 'இன்னும் நாலு நாள் இருக்கு'னு அவர் சொல்ல, 'நான் இருக்கிறவரை இவனும் ஷூட்டிங்ல இருக்கட்டும்!'னு சொன்னார் சிவாஜி. அதுக்கு அப்புறம் அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டு போய் எல்லோர்கிட்டேயும் அறிமுகப்படுத்தி வெச்சார்,  சாப்பாடு போட்டார். அவர் மகன் ராம்குமாரும் நானும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம். சிவாஜி சார் தேர்தலில் நின்னப்போ, அவருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்னேன். தேர்தல்ல அவர் தோத்துட்டார். 'மக்களுக்குக் கொடுத்து வைக்கலை; அவ்ளோதான்!'னு நினைச்சுக்கிட்டேன். இப்போ ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்திருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒருவேளை எதிர்காலத்துல நானும் அரசியலுக்கு வரலாம். 

இப்படி என் சினிமா டிராவல் போயிட்டிருந்தது. காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல மட்டுமே கிட்டத்தட்ட 40 படங்கள் நடிச்சிருக்கேன். அதில், பெரும்பாலான படம்  சூப்பர் ஹிட். யூத்தாவே நிறைய படம் நடிச்சிருக்கேன். முக்கியமா, 'இதயம்' படம் எனக்கு மிகப்பெரிய பெயரை சம்பாதிச்சுக் கொடுத்த படம். படத்தோட இயக்குநர் கதிரும் நானும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னப்பவே, 'இந்தப் படம் சூப்பரா ஓடும்'னு சொன்னேன். ஒருதலைக் காதலை அழகாகச் சொன்ன படம். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல நடிக்க முதல்ல சுஹாசினியைக் கமிட் பண்றதா இருந்துச்சு. அவங்க கால்ஷீட் கிடைக்காததால புதுமுக ஹீராயினை நடிக்க வெச்சாங்க. படத்துல ஹீரோயினைக் கலாய்ச்சு ரெண்டு பாட்டு இருக்கும். அந்த ரெண்டு பாட்டுக்கும் என்னை டான்ஸ் ஆடச் சொன்னாங்க. நான் முடியாதுனு சொல்லவே, பிரபுதேவா, ராஜூசுந்தரம் ரெண்டுபேரும் டான்ஸ் ஆடியிருப்பாங்க. 

கார்த்திக் சார்கூட நிறைய படம் பண்ணியிருக்கேன். காலேஜ் படிக்கும்போது என் பேஜ்மேட் அவர். 'கிழக்கு வாசல்' படம் பண்ணப்போ நான் கல்யாணம் பண்னேன். அரேஞ்ச் மேரேஜ். ஆனா, இப்பவும் நிறைய லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம். ரெண்டு பசங்க இருக்காங்க. காலேஜ் படிக்கிறாங்க. பெரியவன் பி.ஹெச்.டி பண்றான். சின்னவன் டெலாயிட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். பசங்களை ஏன் இவ்வளவு பெரிய படிப்பு படிக்க வைக்குறீங்கனு பலபேர் கேட்டாங்க. சினிமாவில் எப்போ வேணாலும் நடிக்கலாம், படிப்பு அப்படியில்லை. என் மனைவி ஸ்கூல் வெச்சிருக்காங்க. தவிர, ஈவென்ட் மேனேஜ்மென்ட்டும் நடத்திக்கிட்டு இருக்காங்க. நானும் அவங்ககூட சேர்ந்து அந்த வேலைகளைப் பார்த்துக்கிறேன். என்னைவிட என் மனைவி ரொம்ப பிஸி. தவிர, கோயம்புத்தூர் பக்கத்தில் அம்மா ஊரில் நான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ, அடுத்தடுத்து ரெண்டு படங்களை டைரக்‌ஷன் பண்ணலாம்னு இருக்கேன். விரைவில் அதுக்கான அறிவிப்புகள் வரும்!" நம்பிக்கையுடன் முடிக்கிறார், சின்னி ஜெயந்த்.