Published:Updated:

"பாசக்கார ரேவதி அம்மா... செம சேட்டை செய்யும் ஆறு பேர் நாங்க!" 'அழகு' சஹானா ஷெட்டி

ரெண்டு பிளஸ். எனக்குப் பிடிச்ச ரேவதி மேடமுடன் நடிக்கிறேன். கூடப் பிறந்தவங்க யாருமில்லாத எனக்கு, பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸ்னு அஞ்சு பேர் கிடைச்சிருக்காங்க.

"பாசக்கார ரேவதி அம்மா... செம சேட்டை செய்யும் ஆறு பேர் நாங்க!" 'அழகு' சஹானா ஷெட்டி
"பாசக்கார ரேவதி அம்மா... செம சேட்டை செய்யும் ஆறு பேர் நாங்க!" 'அழகு' சஹானா ஷெட்டி

"வீட்டுல ஒரே பொண்ணு. என்கூடப் பிறந்தவங்க யாருமில்லை. அதனால நிறைய நாள் வருத்தப்பட்டிருக்கேன். அந்த ஏக்கத்தை 'அழகு' சீரியல் நிவர்த்தி செய்திருக்குது. சீரியல்ல சகோதர, சகோதரிகளா வரும் நாங்க அஞ்சு பேரும், நிஜத்துலயும் அதே பாசத்தோடுதான் இருக்கிறோம்" - உற்சாகமாகப் பேசுகிறார், சஹானா ஷெட்டி. சன் டிவி 'அழகு' சீரியலில் நடித்துவருபவர்.

``ஆக்டிங் கரியர் எப்போது தொடங்கியது?"

"பூர்வீகம் ஆந்திரா. ஆனா, படிச்சு வளர்ந்ததெல்லாம் சென்னைதான். குடும்பத்தில் பலரும் இசைத்துறையைச் சார்ந்தவங்க. நானும் சின்ன வயசுலேருந்து மியூசிக் கத்துக்கிறேன். வீட்டுலயே மியூசிக் வகுப்புகளும் எடுத்திருக்கேன். நான் இசைத்துறையில வொர்க் பண்ணணும்னு வீட்டுல ஆசைப்பட்டாங்க. ஆனா, எனக்கு சினிமாவுலதான் அதிக ஆர்வம். அதுக்கு வீட்டுல சம்மதம் கிடைக்கலை. ஸ்கூல் முடிச்சதும், விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். அதுக்கும் வீட்டில் மறுத்துட்டாங்க. வேற கோர்ஸ்ல சேர்ந்தேன். அப்போது ஆக்டிங் வாய்ப்பு வந்துச்சு. அதனால, படிப்பைத் தொடர முடியலை. அப்போதான், டி.ஆர் சாரின் 'ஒருதலைக் காதல்' படத்தில் ஹீரோயினா கமிட் ஆனேன். ஆனா, அந்தப் படம் பாதியிலயே ட்ராப் ஆகிடுச்சு. அப்புறம் 'சலீம், 'தாரைத் தப்பட்டை' உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சேன். புதுயுகம் சேனல்ல, 'காகிதம்' டெலிஃபிலிம்ல ஹீரோயினாவும் நடிச்சேன். அப்புறம் வீட்டுலயும் என் நடிப்புக்குச் சம்மதிச்சுட்டாங்க."

`` அழகு' சீரியல்ல என்ட்ரி ஆனது எப்படி?" 

"சினிமாவுல மட்டும்தான் நடிக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல `அழகு' சீரியல்ல நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. 'சீரியலா?'னு முதல்ல தயங்கினேன். நடிகை ரேவதி மேம் லீடா பண்றாங்கனு கேள்விப்பட்டேன். சின்ன வயசுலருந்து ரொம்பப் பிடிச்ச நடிகை. அவங்களோட நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பலை. உடனே நடிக்க ஒப்புகிட்டேன். 'அழகு' சீரியல் என் கரியர்ல பெரிய பிரேக் கொடுத்திருக்குது. சீரியல்ல நடிச்சா சினிமா வாய்ப்பு வராதுனு நினைச்சேன். இப்போ சினிமா வாய்ப்புகளும் வருது. பல படங்கள்ல நடிச்சும் கிடைக்காத புகழ், ஒரு சீரியல் மூலமா கிடைச்சியிருக்கு. இப்போது மலையாளத்தில் ஒரு பெரிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறேன்."  

``ரேவதியுடன் நடிக்கும் அனுபவம் பற்றி..."

"அவங்களோடு பழகினதில்லை. அதனால அவங்க எப்படியான கேரக்டர்னு எனக்குத் தெரியலை. தொடக்கத்தில் அவங்ககிட்ட போய் பேசவே தயங்கினேன்; பயந்தேன். 'ஏன் தயங்குறே; சகஜமா பேசு. நான் உன் அம்மா மாதிரிதான்'னு சொன்னாங்க. ரொம்பவே ஃப்ரெண்ட்லியா பழகினாங்க. நடிச்சுக்காட்டுவாங்க. நாங்க நடிக்கிறதுப் பிடிச்சிருந்தா, மனதாரப் பாராட்டுவாங்க. புதுப் புது ஐடியாஸ் கொடுப்பாங்க. காஸ்டியூம், மேக்கப் விஷயத்துலயும் நிறைய ஆலோசனைகள் தருவாங்க. அதெல்லாம் எங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ரொம்பவே ஜாலியா எல்லோர்கூடயும் பழகுவாங்க. பெரிய நடிகைங்கிற எந்தப் பிம்பத்தையும் காட்டிக்க மாட்டாங்க. சீரியல்ல நாங்க ரொம்பவே அன்பான அம்மா-பொண்ணா இருப்போம். ஷூட் இல்லாத தருணத்துலயும் அப்படித்தான். அவங்களை அம்மானுதான் கூப்பிடுவேன். அவங்க பொண்ணை அடிக்கடி செட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. அவங்க குழந்தையோடு விளையாடுவோம்."

``டீம்ல யார் அதிகமா சேட்டை பண்ணுவாங்க?"

``தொடக்கத்தில் எங்களுக்குள் பெரிய அறிமுகம் இல்லை. எனவே, சகோதர சகோதரிகளா நடிக்கிற நாங்க அஞ்சு பேரும் லிமிட்டாதான் பேசிப்போம். இப்போ எங்க கூட்டத்தில் ஸ்ருதி சிஸ்டரும் சேர்ந்திருக்காங்க. சீரியல்ல நாங்க அநியாயத்துக்குப் பாசக்காரங்களா இருப்போம். அப்படி நடிச்சு நடிச்சு, நிஜத்துலயும் பாசக்காரங்களா மாறிட்டோம். கூடவே எங்களுக்குள் சேட்டையும் அதிகமாகிடுச்சு. என் ரெண்டாவது மற்றும் மூணாவது அண்ணன்களா வரும் மணி, நிரஞ்சன் ரெண்டு பேரும் ஓவர் சேட்டை பண்ணுவாங்க. தலைவாசல் விஜய் அப்பாவும் அன்பா பழகுவார்." 

``மெடிக்கல் படிக்கணும்னு ஃபீல் பண்ணி நடிச்ச அனுபவம் பற்றி..." 

"சீரியல்ல, நான் மெடிக்கல் படிக்க ரொம்ப ஆசைப்படுவேன். ஆனா, திடீர்னு வந்த நீட் எக்ஸாம்ல என் மதிப்பெண் குறைஞ்சுடும். அதனால மெரிட்ல சீட் கிடைக்காது. அப்போ எப்படியாச்சும் நான் மெடிக்கல் படிச்சே ஆகணும்னு அழுது கதறுவேன். அது பார்க்கிற ஆடியன்ஸூக்கு, அனிதாவின் மனநிலையை நான் வெளிப்படுத்துற மாதிரி இருக்கும். நான் காலேஜ்ல படிச்சதில்லை. ஆனா, நீட் எக்ஸாமால பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களின் உணர்வை என்னால நல்லா உணர முடியுது. நடிக்கிற எனக்கே இப்படின்னா, நிஜ மாணவர்களுக்கு எப்படி இருக்கும்? நினைக்கவே பயமா இருக்குது. நீட் எக்ஸாம் வேண்டாம் என்பதுதான் என்னோட எண்ணமும்."