Election bannerElection banner
Published:Updated:

``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை!" - போஸ் வெங்கட்

``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை!" - போஸ் வெங்கட்
``அஜித்துக்கு `வில்லனா’ இருந்துருக்கேன்... இப்போ ஃப்ரெண்டானு தெரியலை!" - போஸ் வெங்கட்

போஸ் வெங்கட் தனக்கு `விஸ்வாசம்' பட வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தற்போது நடந்து வரும் சினிமா ஸ்டிரைக் குறித்தும் பேசியது.

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவிருக்கும் படம், `விஸ்வாசம்'. மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் ஸ்டிரைக் காரணமாக, படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பகட்டப் பணிகளையும் சற்று நிதானமாக, கவனத்துடனேயே செய்துவருகிறது, படக்குழு. படத்தின் முக்கிய காமெடியனாக ரோபோ ஷங்கர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுதவிர, மேலும் சில நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். இந்நிலையில், `கவண்', `தீரன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த போஸ் வெங்கட் `விஸ்வாசம்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். திரைத்துறைச் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வெங்கட் இப்படத்தில் ஒப்பந்தம் ஆனது குறித்தும், சினிமாவின் தற்போதைய சூழல் குறித்தும் நம்மிடம் பேசினார். 

`` `விஸ்வாசம்' படத்துக்காக இயக்குநர் சிவா ரெடி பண்ணியிருந்த நடிகர், நடிகைகள் ஆலோசனைப் பட்டியலில் என் பெயரும் இருக்குனு என்னை அப்ரோச் பண்ணாங்க, நானும் சந்தோஷமா ஒகே சொல்லிட்டேன். மார்ச் மாசத்துலிருந்து படப்பிடிப்பு  ஆரம்பிக்கிறதா இருந்துச்சு. தமிழ் சினிமா ஸ்டிரைக் பிரச்னை போய்க்கிட்டு இருக்கிறதால, ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போகுது. இந்த வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாலேயே நான் அஜித் சார், சிவா சார் படங்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன். அஜித் சாரின் `வீரம்', `என்னை அறிந்தால்' படங்களில் அஜித் சாரோட வில்லன்களுக்காக டப்பிங் பேசியிருக்கேன். அப்போதிலிருந்தே சிவா சார், அஜித் சார் இருவரும் அவங்க படத்துல என்னை நடிக்க வைக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க. பல நாள் கழித்து, அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 30 நாள்கள் ஷூட்டிங்கிற்குத் தேதி கேட்டுள்ளார்கள். இந்தப் படத்துல சப்போர்டிங் கேரக்டரா இல்ல ஃபிரெண்ட் கேரக்டரானு தெரியலை. ஆனா, கண்டிப்பாக ஒரு பெரிய கதாபாத்திரமாக இருக்கும்னு நம்புறேன்!" என்கிறார், போஸ் வெங்கட்.

``குணச்சித்திர கேரக்டர், வில்லன் என ஒரே சமயம் பல படங்களில் நடித்து வரும் நீங்கள், இப்போது நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்புகள் நிறுத்தம் உள்ளிட்ட அறிவிப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" 

``சினிமாவில் வேலை செய்யும் தினக் கூலிக்காரர்கள் தனது கஷ்டங்களை மறந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது, நமக்கு இது பெரிய சிரமமாகத் தெரியவில்லை. ஒவ்வோரு தயாரிப்பாளரும் எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே சினிமாத் தயாரிப்பு வேலையைச் செய்து வருகிறார்கள். செல்வமணி சார் சொல்வதுபோல, ஏதோ ஒரு நிறுவனம் அதை சுரண்டிக் கொண்டிருப்பதா... இந்த வேலை நிறுத்தம் கஷ்டமானதுதான் என்றாலும், இதனால் கிடைக்கும் நன்மைகள் பெரிது. ஒவ்வொரு தொழில்நுட்பமும் தன்னை மேம்படுத்திக்கொண்டே வரும். கியூப் விஷயத்தில் மட்டும் 100 வருட ஒப்பந்தம் போட்டுக்கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளோம். இன்னும் பத்து வருடம் கழித்து இதே தொழில் வேறொரு பரிணாமத்தை அடையும். அதற்குத் தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல, தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை முறை கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பதும் இந்தப் போராட்டத்தின் அடிப்படையான விஷயம். இன்று, மின்சார பில், வரி, ஷாப்பிங் என எல்லாவற்றையும் ஸ்மார்ட் போனில் செய்து வருகிறோம். சினிமா டிக்கெட் விற்பனையும் வெளிப்படையாக இருந்தால்தான், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்லது, பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கும் நல்லது. இந்த ஸ்டிரைக் திரைத்துறையின் ஒட்டுமொத்த நன்மைக்கே!" என முடிக்கிறார், போஸ் வெங்கட்.     
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு