Published:Updated:

"நானும் கிரிக்கெட் பிளேயர்னு சொன்னேன், 'ஆல் தி பெஸ்ட்' சொன்னார், ரெய்னா!" - சாந்தனு

"நானும் கிரிக்கெட் பிளேயர்னு சொன்னேன், 'ஆல் தி பெஸ்ட்' சொன்னார், ரெய்னா!" - சாந்தனு
"நானும் கிரிக்கெட் பிளேயர்னு சொன்னேன், 'ஆல் தி பெஸ்ட்' சொன்னார், ரெய்னா!" - சாந்தனு

சினிமாவில் சாந்தனு அறிமுகம் ஆகும்போது, `இந்தப் பையன் ஷாருக்கானை இமிடேட் பண்றான்' என்றார்கள். நட்சத்திர வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவிற்குள் வந்தவருக்கு, ஏனோ தமிழ் ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லை. `சுப்ரமணியபுரம்', `காதல்', `களவாணி' என ஹிட் படங்களில் நடிக்க முதலில் அணுகியது இவரைத்தான். சில காரணங்களால் இவரது மூவி கிராப்ட் சற்று கீழே இறங்கிவிட்டது. ஆனாலும், மனம் தளராமல் தன்னைத் தேடிவரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துக்கொள்கிறார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தில் கமிட் ஆன சந்தோஷத்தில் இருந்தவர், கிரிக்கெட் வீரர் ரெய்னாவைச் சந்தித்து எக்ஸ்ட்ரா ஹாப்பி மோடில் இருக்கிறார். அவரிடம் பேசினேன். 

 ``நான் எப்போதும் ஜிம் வொர்க் அவுட் செய்வேன். தற்போது மிஷ்கின் சார் படத்தில் கமிட் ஆகியிருப்பதால், தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். சென்னை க்ரவுன் பிளாசா எதிரில் இருக்கும் ஜிம்தான் என் ஆல்டைம் வொர்க் அவுட் பாயின்ட். நேத்து காலையிலே அங்கே வொர்க் அவுட் செய்துகொண்டிருக்கும்போது திடீரென கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அவருடைய டிரெய்னருடன் ஜிம்முக்குள் வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே போய் பேசினேன். ஏன்னா, நான் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகன். குறிப்பா, ஐ.பி.எல் போட்டிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். முக்கியமா, இந்திய வீரர்களில் எனக்குப் பிடிச்ச வீரர், ரெய்னா. இடது கை பேட்ஸ்மேன்களில் கங்குலிக்குப் பிறகு ரெய்னாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கிட்ட ஐந்து நிமிடம்தான் பேசியிருப்பேன். அப்போ, என்னை ஒரு நடிகர்னு அறிமுகப்படுத்திக்காம, கிரிக்கெட்டர்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். ஏன்னா, நானும் ஒரு கிரிக்கெட் பிளேயர். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அணிக்காக விளையாடியிருக்கேன். ஒரு கிரிக்கெட் பிளேயருக்குக் கண்டிப்பா தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் டீம் பத்தி தெரிஞ்சிருக்கும். அதனாலதான், இப்படி அறிமுகம் ஆனேன்.

என்கிட்ட கிரிக்கெட் பத்திப் பேசினார். பிறகுதான், நான் ஒரு நடிகரும்கூடனு சொன்னேன். `நல்லா விளையாடுங்க... நல்லா நடிங்க, ஆல் தி பெஸ்ட்'னு சொன்னார். நானும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வந்தேன். ஏன்னா, அவர் பிஸியா வொர்க் அவுட் பண்ணிக்கிட்டு இருந்தார். ரெய்னாவைப் பார்த்த மாதிரி, ஏற்கெனவே நான் தோனி, சச்சினைக்கூட மீட் பண்ணியிருக்கேன்." என்றவர், கொஞ்சம் ஃபிளாஷ்பேக் போனார்.  

``ஸ்கூல் படிக்கிறப்போ அப்பாவோட பட ஷூட்டிங் ஏ.வி.எம் ஸ்டூடியோவுல நடந்துக்கிட்டு இருந்தது. அப்போ, சச்சின் டெண்டுல்கர் கோல்கேட் விளம்பரத்துல நடிக்க வந்திருந்தார். கேள்விப்பட்டதுமே, ஸ்கூல்ல இருந்து நேரா ஸ்பாட்டுக்குப் போய், அவரைப் பார்த்துட்டு வந்தேன். அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன். சச்சின்கூட  சில நிமிடம் பேசினேன். பிறகு, சில வருடங்களுக்கு முன்னாடி டோனியை  மீட் பண்ணேன். ஏன்னா, அவரோட நண்பர் பிரபு லட்சுமணபதினு ஒருத்தர். இப்போ அவர் உயிரோட இல்லை. தோனி சென்னைக்கு வந்தா, அவர் வீட்டுலதான் சாப்பிடுவார். தியேட்டர்ல படம் பார்க்கும்போதுதான் தோனியைப் பார்த்தேன். அந்த நண்பர், என்னை தோனிகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். அப்போ, டோனிகூட பேசியிருக்கேன். தமிழ்நாடு அசோசியன் டீம்ல இருந்தப்போ, ரவிச்சந்திரன் அஸ்வினை அடிக்கடி பார்ப்பேன். நான் பேட்டிங் பிராக்டிஸ் எடுக்கும்போது, எனக்கு அவர் பெளலிங்கூட போட்டிருக்கார்!" என்றவர், தனது கிரிக்கெட் ஆர்வம் குறித்துச் சொன்னார். 

``என் கிரிக்கெட் ஆர்வத்துக்காகவே, `வேட்டிய மடிச்சுக்கட்டு' படத்துல கிரிக்கெட் சீன் வெச்சார் அப்பா. அந்தப் படத்தோட ஒரு சீன்ல நானும் ஃப்ரெண்ட்ஸும் கிரிக்கெட் விளையாடுவோம். அப்பா என்கிட்ட சொன்னார், `கிரிக்கெட், சினிமா... ரெண்டுல எது உனக்குப் பிடிச்சிருக்கோ, அதைப் பண்ணு!'. ஆனா, நான் சினிமாவை செலக்ட் பண்ணிட்டேன். அந்தச் சமயத்துல ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் சில இடைவெளி கிடைக்கும். அப்போதான், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்காக விளையாடினேன். மத்த மாநிலங்களுக்காக 50 ஓவர் மேட்ச் எல்லாம் விளையாடப் போயிருக்கேன். அந்த ஆர்வம் இப்போவும் இருக்கு. அதனாலதான், சி.சி.எல் மேட்ச் நடக்கும்போது கலந்துக்கிறேன். தவிர, இப்போவும் ஃப்ரெண்ட்ஸ்கூட கிரிக்கெட் விளையாடுவேன். சண்டே ஃபிரீயா இருந்தா, நான், இசையமைப்பாளர் தமன், நடிகர் கலையரசன்னு எங்க கிரிக்கெட் டீமோட விளையாடக் கிளம்பிடுவோம்!" சாந்தனு வார்த்தைகளில் கிரிக்கெட் மீதான அலாதியான காதல் அப்படித் தெரிகிறது. 

அடுத்த கட்டுரைக்கு