Published:Updated:

வித்தியாசத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கும் விசித்திரமானவர் இந்த ஹீத் லெட்ஜர்..! #HBDHeathLedger

தார்மிக் லீ
வித்தியாசத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கும் விசித்திரமானவர் இந்த ஹீத் லெட்ஜர்..! #HBDHeathLedger
வித்தியாசத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கும் விசித்திரமானவர் இந்த ஹீத் லெட்ஜர்..! #HBDHeathLedger

`பேட்மேன்' படத்தில் ஹீரோ கிறிஸ்டியன் பேலைவிட அதிகமாக பேசப்பட்டது ஜோக்கர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஹீத் லெட்ஜர். அவரது பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிய ஒரு பகிர்வு.

ஹீத் லெட்ஜர்...

ஒரு சிலரை, ஒரு சிறு வட்டத்துக்குள் சுருக்குவது கடினம். தான் யாரென்று நிரூபிக்க, ஒரு சிலருக்கு இந்தச் சின்ன உலகமே போதாது. அந்த ஒரு சிலருள் ஹீத் லெட்ஜரும் ஒருவர். அவரின் பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிய ஒரு பகிர்வு.

ஹீத் லெட்ஜர், சிறு வயதில் தான் இருக்கும் வீட்டின் சீலிங்கில், நட்சத்திரங்கள் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டி, `இங்க நான் போவேன், ஒரு நாள் நான் நடிகரா வருவேன்' என அவரின் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதைத் தாண்டி, ஹீத்துக்குப் பிடிக்கும் மற்றொரு விஷயம், சதுரங்க ஆட்டம். பல போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறார். பள்ளியில் ஆரம்பித்து பர்சனல் ஷேரிங் வரை அவருக்கு எல்லாமே அவரது அக்கா கேட் லெட்ஜர்தான். அக்காவுக்கு அடுத்தபடியாக ஹீத்துக்கு மிகவும் நெருக்கமானவர், அவரது நண்பர் ட்ரெவர் டிகார்லோ. இருவரும் சேர்ந்துதான் சினிமாவுக்குள் நுழையும் கனவைத் தீட்டியிருக்கிறார்கள். அதோடு சேர்த்து, லீசா ஸேன் என்ற ஒரு காதலியும் கிடைத்தார். அவர் வந்த பிறகுதான், ஹீத் லெட்ஜரின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

லீசா, ஹீத்துக்குள் இருக்கும் ஆற்றல் வளத்தையும், திறமையையும் உணர்ந்து, மிகப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார். ஹீத்தை சந்தோஷப்படுத்தவும், சர்ப்ரைஸ் செய்யவும், லீசா செய்த சின்னச்சின்ன விஷயங்கள்கூட ஹீத்துக்கு நம்பிக்கையூட்டியதோடு, நடிகராக வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. அந்தச் சமயத்தில், ஹீத்துக்கு அறிமுகமான மேட் அமட் என்பவர், `10 Things I hate about you' எனும் படத்தின் ஸ்க்ரிப்ட்டை, அவரது நண்பரிடமிருந்து வாங்கிக்கொடுத்திருக்கிறார். அதில், பேட்ரிக் என்பவரின் கதாபாத்திரம் ஹீத்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர்தான் படத்தின் நாயகன். அதன்பின்னர், ஆடிஷனுக்குச் சென்ற ஹீத், பரிந்துரைகளின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் படத்துக்குப் பிறகுதான், தன்னை ஒரு நடிகராக ஹீத் உணர்ந்துள்ளார். இவையனைத்தும் நடக்கும்போது அவருக்கு வயது 20.

அவரின் வீட்டுக்குச் சென்றால் கலைகளாலும், கலைஞர்களாலும் சூழப்பட்டிருப்பார். அவருக்கு அவரே பாடம் கற்பித்துக்கொள்ள எதையாவது செய்துகொண்டே இருப்பார். அதை முறையாகவும் பயின்று செய்ய மாட்டார். `ஒரு விஷயம் நன்றாக வர வேண்டுமா, வித்தியாசமாக வர வேண்டுமா' என்று தேர்வுசெய்யும் சூழலுக்கு ஹீத் தள்ளப்பட்டால், அவர் தேர்ந்தெடுப்பது வித்தியாசத்தைத்தான். எல்லா விஷயங்களிலும் வித்தியாசத்தையே விரும்பினார், ஹீத். இது, அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலும் பிரதிபலித்தது. 

`பேட்மேன்' என்ற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டின் கதையை முற்றிலும் மாற்றி எழுதி, தன் படத்தில் அதை வேறு விதமாகப் பயன்படுத்தியவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன். ஹீத் லெட்ஜர், அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். அவர் நடிப்பு உச்சம்தொட்ட படங்கள் பல இருந்தாலும், அவர் நடிப்பையும் மெனக்கெடலையும் சுட்டிக்காட்டிச் சொல்லும் படம் `தி டார்க் நைட்'. அவரின் நடிப்பைக் கூறுவதற்கு முன் டி.சி காமிக்ஸின் ஜோக்கர் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு சின்ன விளக்கம் கூறுகிறேன். ஜோக்கருக்கு முன் பேட்மேன் கதாபாத்திரத்துக்கே இவர் பரிந்துரைக்கப்பட்டார். 

யார் இந்த ஜோக்கர் :

DC காமிக்ஸ், 1940-ல் ஜோக்கர் எனும் கதாபாத்திரத்தை அறிமுகம்செய்துவைத்தது. ஜோக்கருக்கான பின் கதை எதுவும் அப்போது எழுதப்படவில்லை. 1989-ல் வெளிவந்த `பேட்மேன்' படத்தில், ப்ரூஸ் வெயினுடைய சிறு வயதில், அவரின் பெற்றோர்களை ஜாக் நேப்பியர் என்பவர் சுட்டுக் கொன்றுவிடுவார். அதற்காக, பேட்மேனாகத் தன்னை உருமாற்றி, ஜாக் நேப்பியரை பலி வாங்க, இருவருக்கும் நடக்கும் சண்டையின்போது, நேப்பியரை ஒரு கெமிக்கல் தொட்டியில் தள்ளிவிடுவார் பேட்மேன். அதிலிருந்த ரசாயனத்தால் அவரது முகம் கோரமாக மாறிவிடும். அதன்பின்னர், ஜோக்கராக மாறி பேட்மேனை கொல்லப் புறப்படுவார். இதுதான் அந்தப் படம் சொல்லும் கதை. இதுபோல, பல படங்களில் அந்த கதாபாத்திரத்தின் சித்திரிப்புகள் அதிகமாகிவந்தது. ஆனால் நோலனின் படத்தில், `ஜோக்கர்' என்பவரை இதுவரை காட்டாத மாதிரி காட்டியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட ஆள்தான், ஹீத் லெட்ஜர். நோலனைப் பொறுத்தவரை சினிமாமீது இருக்கும் பார்வையும், ஐடியாலஜியும் முற்றிலும் மாறுபட்டது. அதனால்தான், ஜோக்கர் கதாபாத்திரங்களுள் மட்டுமில்லாமல், வில்லன் கதாபாத்திரங்களுக்குள்ளேயே தனித்துத் தெரிந்தார் இந்த ஜோக்கர்.  

அதற்கு சிறந்த உதாரணமாக, ’பேட்மேன்’ படத்தையும், அதில் இடம்பெற்ற ஜோக்கர் கதாபாத்திரத்தையும் சொல்லலாம். பொதுவாக, சினிமாவில் இடம்பெறும் நெகட்டிவ் கேரக்டர்களிடமும், சைக்கோ கொலைகாரர்களிடமும், `என் குடும்பத்துக்காக இப்படிப் பண்றேன்', `இந்த உலகமே என்னை வெறுக்குது', `பணம், பதவிக்காகப் பண்றேன்', என சில ஜஸ்டிஃபிகேஷன் இருக்கும். `இந்த உலகத்தில் நல்லது கெட்டதுனு எதுவும் கிடையாது, நீ எப்படி இருக்கணும்ங்கிறதை நீதான் முடிவு பண்ணணும்' இதுதான் ஜோக்கருடைய கான்செப்ட். `எதிரியாக இருந்தால்கூட கொலை செய்யக் கூடாது, தன்னால் எந்த உயிரிழப்பும் நேர்ந்துவிடக் கூடாது' இதுதான் பேட்மேனின் மிகப் பெரிய பலம். அந்த பலத்தையே பலவீனமாக மாற்றி, பேட்மேனை அழிக்கும் முயற்சியைத்தான் ஜோக்கர் (ஹீத் லெட்ஜர்) செய்வார். பேட்மேனோடு சேர்த்து, அவருக்குள் இருக்கும் ப்ரூஸ் வெயினின் உணர்ச்சிகளையும் தூண்டி, ஏதோவொரு முடிவை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுவார். இந்த உணர்வைப் பார்வையாளர்களுக்கும் கடத்துவதுதான் மிகப் பெரியே சவாலே. அதை இவ்விருவரும் மிக அருமையாகக் கையாண்டிருப்பார்கள். அதனால்தான், பேட்மேனுக்கு சிறந்த `Antagonist'ஆக (எதிராளியாக) ஜோக்கர் சிறந்து விளங்குகிறார். படத்தில் இருக்கு நுணுக்கமான விஷயங்களைக் கவனித்திருந்தால் இது தெரிந்திருக்கும். பேட்மேன் என்ற ஒரு சூப்பர் ஹீரோவின் முழுத் திறமையும், ஜோக்கர் போன்ற ஒரு ஆள் இருந்தால் மட்டுமே தெரியவரும். 

இப்படிச் சிக்கல் நிறைந்த ஜோக்கர் கதாபாத்திரத்திற்காக தன்னைத் தயார்செய்துகொண்டார், ஹீத். யாருடனும் பழகாமல், 43 நாள்கள் தன்னைத் தானே சிறையிலடைத்துத் தனிமைப்படுத்திக்கொண்டார். அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின்போது முக்கியமான பல காட்சிகளில் நோலனிடம் இவர், `இந்த மாதிரி பண்ணலாம்' என்று பரிந்துரை செய்தாராம். அது, நோலனுக்கும் பிடித்துப்போனது. இப்படி ஒரு கதாபாத்திரத்துக்காக பல மெனக்கெடல்களைச் செய்த மனிதர், ஹீத் லெட்ஜர்

பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீத்! 

அடுத்த கட்டுரைக்கு