Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``அந்த வேலி யாரால் உண்டாக்கப்பட்டது? பதில் இல்லாத கேள்வியாய்... நடிகை சுஜாதா!" #SujathaMemories

சுஜாதா

ண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்..!
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..?
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்..?

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் வரும் இப்பாடல் வரிகள் பலருக்கும் பரிட்சயம். இப்பாடலைப் பாடி நடித்த இப்படத்தின் நாயகியின் நிஜ வாழ்க்கையும் இப்பாடல் வரிகளும் ஒன்றிப்போகும் விந்தையை என்னவென்று சொல்வது? நடிகையாகப் பல கதாபாத்திரங்களிலும் அசத்தினார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நிஜ வாழ்வில் இவர் யார்? என்ன சூழலில் வாழ்ந்தார்? எப்படித் தவித்தார்? - இதற்கெல்லாம் நடிகை சுஜாதாவின் மனசாட்சிக்கு மட்டுமே பதில்தெரியும். இறுதிவரை அந்த மனசாட்சியை சிலரைத் தவிர்த்து மற்ற எவராலும் நெருங்க முடியவில்லை.

சுஜாதா

100-க்கும் மேற்பட்ட படங்களின் நாயகி; 200-க்கும் அதிகமான படங்களில் மனதில் நிற்கும் பலவித கேரக்டர் ரோல்கள். திரையில் பல சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடி. சிறந்த நடிகைக்கான பல மொழி விருதுகள். சிறப்பான புகழ். இதுமட்டும் போதுமா நிறைவான வாழ்க்கைக்கு? நடிப்பு ஒரு தொழில். அது வணிகத் தேடலுக்கானது. ஆனால், குடும்பம், குழந்தைகளே நிஜ வாழ்க்கையின் அர்த்தங்கள். இதனைத் தானும் உணர்ந்திருந்தார், சுஜாதா. ஒருகட்டத்தில் அந்தக் குடும்பக் கூட்டினுள் ஏதோ ஒரு நிர்பந்தத்தில் தன்னைச் சிக்கவைத்துக்கொண்டவர், மீள முடியாத பறவையாக மறைந்துபோன தினம் (06.04.2011) இன்று. 

1952-ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார், சுஜாதா. இளம் வயதில் கேரளா வந்து செட்டில் ஆனவர், அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சினிமா மீது பெரிதாக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் இவரைத் தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன. 1971-ம் ஆண்டு `தபஷ்வினி' என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். `எர்ணாகுளம் ஜங்ஷன்' படத்தில் இவர் நடித்துக்கொண்டிருந்த தருணம், இயக்குநர் கே.பாலசந்தர் கண்ணில் படுகிறார். சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவர்கிறது. அவரின் `அவள் ஒரு தொடர்கதை' படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் சுஜாதா. அறிமுக நடிகை என்று யூகிக்க முடியாத அளவுக்கு அபார நடிப்பு. அந்தக் கவிதாவை, தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கவிதா பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன் உமன்தான். 

அடுத்தடுத்து பல மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்தார்.சுஜாதா சிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். அப்போதைய ஹிட் லிஸ்ட் நாயகிகளில் முன்னிலை பெறுகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இவரின் அனைத்து கேரக்டர்களுமே ஹோம்லியானவை. `மச்சானைப் பார்த்தீங்களா' எனக் கிராமத்துப் பெண் அன்னமாக (அன்னக்கிளி), வாழைத் தோப்புக்குள்ளும், மலை மேடுகளிலும் ஆடிப்பாடிப் பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெற்றார். 1977-ல் மீண்டும் கே.பாலசந்தரின் இயக்கத்தில் 'அவர்கள்' படத்தில் நடிக்கிறார். அந்த அனுபமா, வெளிப்படையானவள். அதனால் உண்டாகும் இல்லறப் பிரிவும் இறுதியில் ரயில் பயணத்தின் போது துடிக்கும் தாய் மனத் தவிப்பும் இவரை இன்னும் தேர்ந்த நடிகையாக அடையாளப்படுத்தியது.

`கடல் மீன்கள்', `அந்தமான் காதலி', `தீர்ப்பு', `தீபம்', `விதி' என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள். 70, 80-களில் நடிப்பில் பிஸியனார் சுஜாதா. முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார். இரு குழந்தைகள். திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்படுகிறது. எப்படி? யாரால்? அந்த வேலியை மீறி சுஜாதாவால் ஏன் வர முடியவில்லை? இதற்கெல்லாம் சுஜாதாவின் மரணம் வரை பதில் கிடைக்கவில்லை. இனி கிடைக்கப்போவதும் இல்லை.

ஒருகட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும், ஷூட்டிங் விஷயங்களைத் தெரிவிப்பதுமே பெரிய சவாலாக இருந்திருக்கிறது. இவரின் இருப்பே அடிக்கடி மர்மமாகிவிடும் அந்த அளவுக்கு இவரிடம் எளிதில் பேசுவதும் நெருங்குவதும் சினிமா துறையினருக்கே சவாலான காரியமாகியிருக்கிறது. ஏதோ ஒரு பிரச்னையில் இருக்கிறார் என அறிந்திருந்தும், அவரின் சுமையை இறக்கிவைக்கும் வடிகாலாக யாராலும் இருக்க முடியவில்லை. அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும், சினிமாவில் நடித்தார்; ரசிகர்களை மகிழ்வித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் சென்டிமென்ட் அம்மா ரோல்களில் அசத்தினார்; உருகவைத்தார். தான் ஜோடியாக நடித்த பல நாயகர்களுக்கும் தாயாக நடித்தார்.

சுஜாதாநடிகர் சிவாஜி கணேசன் மறைந்தத் தருணம். சென்னை தி.நகர் பாண்டி பஜாரிலிருந்து சினிமா கலைஞர்கள் அஞ்சலி ஊர்வலம் நடத்துகின்றனர். அதில் நடிகை மனோரமாவின் கரம்பிடித்து குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்கிறார், சுஜாதா. சிவாஜி கணேசனின் நினைவுகளை ஒவ்வொரு சினிமா கலைஞர்களும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர். அப்போது சிவாஜியின் வீட்டில் இருந்த சுஜாதாவிடம் பேட்டி எடுக்கப் பல ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. அம்முயற்சியில் எவருக்கும் வெற்றிகிடைக்கவில்லை. நடிப்பு, வீடு... இதுதான் சுஜாதாவின் வாழ்க்கையாகவே இருந்தது. சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டதும் மிக அரிதுதான்.  

சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், `வரலாறு'. இதில்  கனிகாவின் அம்மாவாக நடித்திருப்பார். 2006-ல் தெலுங்கில் வெளியான `ஶ்ரீராமதாசு' இவரின் கடைசிப் படம். உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர், 2011-ம் ஆண்டு காலமானார். அப்போது தமிழகச் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால், சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா தொடர்கதையாகவே முடிந்துவிட்டது. தமிழைவிடத் தெலுங்கு ரசிகர்கள் சுஜாதாவின் நடிப்பைக் கொண்டாடினர். இவரின் மறைவுச் செய்தி ஆந்திர தேசத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. கே.பாலசந்தரும் இவரும் பேசியே பல ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், சுஜாதாவின் மறைவுச் செய்தி பாலசந்தருக்குச் சென்றடைகிறது. சுஜாதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விரைந்தவர், அவர் உடலைப் பார்த்துக் கலங்கினார். அப்போது தன் அருகில் இருந்த கமல்ஹாசனிடம் சுஜாதாவின் நினைவுகளைப் பற்றி வருத்தத்துடன் பேசினார். ``மிக மிக ஒழுக்கமான பெண்மணி", ``நடிப்பு ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதவர். இவர் வாழ்க்கையும் ஒரு தொடர்கதையாகிவிட்டது ஏனோ?" - இந்த வார்த்தைகளெல்லாம் சுஜாதாவுடன் பணியாற்றிய மூத்த கலைஞர்களின் இரங்கல் செய்திகள்.

நினைவுகள் மீட்டெடுக்க... நினைத்துப் பார்த்தால்... `அவள் ஒரு தொடர்கதை' கவிதாவுக்கும், நிஜ சுஜாதாவுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள்? சுஜாதா, தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்