Published:Updated:

``விக்ரம், சூர்யா, விஷால் ... மூவரில் யார் பெஸ்ட்?" இயக்குநர் ஹரி

``விக்ரம், சூர்யா, விஷால் ... மூவரில் யார் பெஸ்ட்?" இயக்குநர் ஹரி
``விக்ரம், சூர்யா, விஷால் ... மூவரில் யார் பெஸ்ட்?" இயக்குநர் ஹரி

இயக்குநர் ஹரியின் இரண்டாவது படம் `சாமி’. அந்தப் படம் வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான `சாமி-2’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். விக்ரம், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஹரியை ஆனந்த விகடனுக்காக சந்தித்துப் பேசினேன். அவர் பேசியதிலிருந்து...

``சினிமா ஆசையில் சென்னை வந்த நான், முதன்முதலாக ஏவி.எம் ஸ்டூடியோவுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன். ரஜினி சார் நடிக்கும் `ராஜா சின்ன ரோஜா' படப்பிடிப்பு அங்கு நடந்துகொண்டிருந்தது. வெளியில் வந்த எஸ்.பி.முத்துராமன் சாரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்கிறேன். சினிமாவைப் பற்றி நிறைய அறிவுரை கூறியவர் பிறகு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து 10 வருடங்கள் பல்வேறு டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தேன். 

எந்த ஏவி.எம் ஸ்டூடியோவில் 1990-ம் ஆண்டு ஏமாற்றத்தோடு திரும்பினேனோ அதே ஸ்டூடியோவில் 2001 ம் ஆண்டு பிரசாந்த் நடித்த `தமிழ்' படத்துக்கு பூஜை போட்டேன். நான் தெய்வபக்தி மிகுந்தவன். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறான். நம் கடுமையான உழைப்பின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதற்காக, `நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கடவுளே பார்த்துக் கொள்வார், நாம் தேமே என்று இருப்போம்’ என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்குக் கிடையாது. `தமிழ்' படத்தில் ஆரம்பித்த என் சினிமா பயணம் இன்றுவரை கடவுள் மற்றும் மக்கள் ஆதரவோடு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.”

`` `தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்கிற அளவுக்கு கமர்ஷியலில் தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிக்கிறீர்கள். அதன்பின் உள்ள ரகசியம் என்ன?”
``சினிமாவில் உதவி டைரக்டராக சேர்வதற்கு முன்பே மளிகைக்கடை, ஹார்டுவேர்ஸ், ரியல் எஸ்டேட், டைலர் கடை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறேன். ஒவ்வோர் இடத்தில் வேலை செய்யும்போதும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன். முதலாளிக்கு நாம் சம்பாதித்துக் கொடுத்தால்தான் அவர் நமக்குச் சம்பளத்தைக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையோடு உழைத்தேன். அப்போதே, `சினிமாவில் இயக்குநரானால் முதல்போடும் தயாரிப்பாளர் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும்’ என்று மனதில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டேன். ஒரு தயாரிப்பாளரின் சக்திக்கு ஏற்றபடி அவர் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும். அன்று முதல் இன்றுவரை இதுமட்டுமே என் விருப்பம். 

பட்ஜெட்டில் ஒரு லட்சம் ரூபாய் மிச்சம் செய்தால்கூட தயாரிப்பாளர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதை புரிந்துகொண்டு வேலை பார்ப்பேன். ஏனெனில், அப்படி மிச்சம்பிடிக்கும் ஒரு லட்சம் ரூபாயில் அந்தப் படத்துக்கு அதிகமாக போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யலாம் இல்லையா? அதனால்தான் என்னவோ எனக்கு இன்றுவரை தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருக்கிறது. `சாமி-2' படத்துக்காக விக்ரம் சாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பினேன். அப்போது என்னைப் பார்த்த சிபு தமீன், `விக்ரம் சாரை பார்த்துட்டு போறீங்க. `சாமி-2' ப்ராஜெக்ட்னா நான்தான் புரொடியூஸர், மறந்துடாதீங்க' என்றார். 

அடுத்த சந்திப்பில் விக்ரம் சாரிடம் இதைச் சொன்னேன். ஏற்கெனவே `இருமுகன்' படத்தில் இருவருக்கும் பழக்கம். அதனால் ஷிபுவுக்கு உடனே ஓ.கே சொல்லிவிட்டார். இப்போது `சாமி-2' படத்துக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவுசெய்ய தயாராக இருக்கிறார் ஷிபு. நான்தான் படத்துக்குத் தேவையான செலவுகளை மட்டும் செய்தால்போதும் என்று அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். `தமிழ்' பட தயாரிப்பாளர் துரைராஜ் சார் நலனில் ஆரம்பித்த அக்கறை. இப்போது `சாமி-2' படத்தை தயாரிக்கும் ஷிபு சார் வரை தொடர்கிறது.”

``ஒரு படத்தை அடுத்தடுத்த பாகங்களாகச் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?”
``என் முதல் படமான `தமிழ்' இயக்கியபோது அப்படி ஓர் எண்ணம் எழவில்லை. `சாமி' எடுத்தபோது இரண்டாம் பாகத்துக்கான ஸ்கோர் லாக் காட்சிகளை உருவாக்க திட்டமிட்டேன். அதில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஏற்படும் உணர்வுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அந்தத் திட்டத்தை கைவிட்டேன். `சிங்கம்' படத்திலும் அந்த ஐடியாவைப் பயன்படுத்தினேன். அது இப்போது தொடர் வெற்றியைத் தருவதால் `சாமி-2' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன்.”  

``விக்ரம், சூர்யா, விஷால் ... உங்கள் ஹீரோக்களில் யார் பெஸ்ட்?"
``இது, என்னை வம்பில் மாட்டிவிடும் வேலை. சரத்குமார் சார் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். ஆனால், `ஐயா'வில் பெரியவர் வேடத்தில் நடிக்கும்போது யாரிடமும் அதிகம் பேசமாட்டார். அவரது தோற்றம் அப்படியே எங்கள் அப்பாவை ஞாபகப்படுத்துவதால் நானும் நெகிழ்ந்து போயிருந்தேன். அவ்வளவு ஏன் இப்போது அதிகமா விமர்சனம் செய்யப்படுகிற சிம்புவும் எனக்கு கம்ஃபர்டபுளான ஹீரோதான். `கோவில்' படப்பிடிப்பு மூணாறில் அதிகாலை நாலரை மணிக்குத் திட்டமிட்டோம். சிம்பு அதிகாலை நாலு மணிக்கே ஆஜராகி காத்திருந்தார். இவைதான் என் அனுபவம். என் அனுபவத்தில் சொல்வது என்றால், என் ஹீரோக்கள் அனைவருமே பெஸ்ட்தான்.".

``உங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் மறைவு குறித்து ..."
``அவர் எங்களுடைய ரோல் மாடல். அவருடைய இழப்பால் எங்கள் யூனிட்டே நிலைகுலைந்து போனது. ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்சி நன்றாக வருவதற்காக பலமுறை எங்களிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்படிச் சண்டை போடுபவர் மாலை பேக்கப் ஆனதும் அன்பால் கரைந்து போவார். நாங்கள் காரில், விமானத்தில் எத்தனை ஆயிரம் மைல்கள் பயணித்தோம் என்பது கணக்கிட முடியாது. அப்படி பயணித்தவர் இப்போது சொல்லாமல்கொள்ளாமல் தனியான பயணம் சென்றுவிட்டார். ப்ரியன் சாரைப் பற்றி இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது, நெஞ்சம் பதறுகிறது. தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு ".

``எல்லாப் படங்களிலும் ஒரேமாதிரி கூட்டுக் குடும்பக் கதையையே வெவ்வேறு விதமாகச் சொல்கிறீர்கள் என்று உங்கள்மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து ..."

``ஒரு மனிதன் தனியாக இருப்பதுபோன்ற கதையை என்னால் யோசிக்கவே முடியாது. அப்படி நான் எடுத்த படம் `ஆறு'. அதனாலேயே எனக்கு `ஆறு' சூர்யாவைவிட `வேல்' கூட்டுக்குடும்ப சூர்யாவைத்தான் பிடிக்கும். என் குடும்பம், என் மனைவி குடும்பம் இரண்டுமே பெரிய கூட்டுக்குடும்பம். அதனால்கூட எனக்கு அந்த பாதிப்பு இருக்கலாம். `தாமிரபரணி'யில்கூட வில்லன் குடும்பத்துக்குள் நான்கைந்து அண்ணன், தம்பிகள் என்று எட்டுவிதமான கேரக்டர்களை வைத்து பிண்ணியிருப்பேன். இவை உங்களுக்கு வேண்டுமானால் ஒரேமாதிரியாகத் தெரியலாம். ஆனால், என் ஹீரோக்களுக்கு அவை புதுமாதிரியான கதைகள்தான். பலபேர் இயக்க முன்வராத கிராமத்துக் கூட்டுக்குடும்ப கதைகளை நான் இயக்குவதில் என்ன தவறு?"

பின் செல்ல