Published:Updated:

விஜய்சேதுபதி, தெறி, மெர்சல் கதை சொல்லும் ரமணகிரிவாசன்!

விஜய்சேதுபதி, தெறி, மெர்சல் கதை சொல்லும் ரமணகிரிவாசன்!
விஜய்சேதுபதி, தெறி, மெர்சல் கதை சொல்லும் ரமணகிரிவாசன்!

`தெறி', `மெர்சல்' படத்தில் வொர்க் செய்த ஸ்க்ரிப்ட் ரைட்டர் ரமணகிரிவாசன் அவருடைய புதிய தொடர் `நாம் இருவர் நமக்கு இருவர்' பற்றியும், அட்லியுடன் சேர்ந்து வேலை பார்த்த அனுபவத்தையும், விஜய் சேதுபதியை இயக்கிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.

"என் சொந்த ஊர் திருச்செந்தூர். சென்னை வந்து செட்டிலாகி பல வருடமாச்சு. எனக்குப் பிடித்த வேலையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்'' - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், ரமணகிரிவாசன். `கனா காணும் காலங்கள்', `மதுரை',  `மாப்பிள்ளை' உள்ளிட்ட சீரியல்கள், `தெறி', `மெர்சல்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் வொர்க் செய்தவர், இப்போது, `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலுக்குக் கதை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினேன். 

``விஜய் டி.வி.யில் கிட்டதட்ட பதினைந்து வருடங்களாகப் பணிபுரிகிறேன். `மதுரை' சீரியலிருந்து தொடங்கியது, என் பயணம். நடிகர் செந்திலுடன் என் பயணமும் நெடியதுதான். அவர் நடித்த நிறைய சீரியல்களுக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன். `தவமாய் தவமிருந்து' படத்துல செந்தில் நடிச்சிட்டிருந்தப்போ `மதுரை' சீரியலோட ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம். அவர் ஒரு நல்ல நடிகர். மறுபடியும் அவரை வைத்து நான் தயாரிக்கும் சீரியல்தான், இந்த `நாம் இருவர் நமக்கு இருவர்'.

எனக்காக `ரமணன் ஸ்க்ரிப்ட் வொர்க்'னு ஒரு டீம் வெச்சிருக்கேன். டெலிவிஷன், ஃபிலிம்ஸ் எல்லா ஸ்க்ரிப்ட் வொர்க்கும் இங்கேதான் நடக்கும். என் டீமில் சத்ரியன், பிரவீன், சந்துரு, ஜெயபிரகாஷ்னு நாலு பேர் இருக்காங்க. `நாம் இருவர் நமக்கு இருவர்' ஸ்க்ரிப்டை எங்களுடைய டீமில் இருக்கும் நபர்கள் எழுதி, இயக்குநர் தாய் செல்வமுக்குக் கொடுத்தோம். `கல்யாணம் முதல் காதல் வரை', `மெளனராகம்' சீரியலுக்கு இவர்தான் இயக்குநர்.  

`மாப்பிள்ளை' சீரியல் முடிஞ்சதும், வேற லெவல்ல ஒரு சீரியல் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதுதான், `நாம் இருவர் நமக்கு இருவர்'. உண்மையைச் சொல்லணும்னா, `மாப்பிள்ளை' சீரியலோட பார்ட்  2 எடுக்கலாம்னுதான் முதல்ல முடிவு பண்ணோம். ஆனா, அதுக்கு முன்னாடியே இந்த ஒன்லைன் எங்களுக்குக் கிடைச்சது, அது ரொம்ப நல்லாவும் வொர்க் அவுட் ஆகியிருக்கு. இந்த சீரியலில் செந்திலுக்கு டபுள் ஆக்டிங். எமோஷனல் டிராமா ஜானர்ல இந்த சீரியல் உருவாகியிருக்கு. காதல், காமெடிகளையும் சீரியல்ல பார்க்கலாம்! 

ஶ்ரீஜாவும் செந்திலும் சேர்ந்து நிறைய சீரியல் பண்ணியிருக்காங்க. ஶ்ரீஜாகிட்ட இந்தக் கதையைச் சொன்னப்போ, `செந்தில் மட்டும் நடிக்கட்டும்; நான் நடிக்கலை. ரெண்டு பேரையும் ஒண்ணாப் பார்த்து ஆடியன்ஸூக்கு போர் அடிச்சிரும்'னு சொன்னாங்க. ஶ்ரீஜா எப்பவுமே இப்படித்தான்... மெச்சூரிட்டியா பேசுவாங்க. மனசுல பட்டதை வெளிப்படையா சொல்வாங்க. நானும், செந்திலும் சீரியல் காதல் காட்சிகளை டிஸ்கஷ் பண்ணும்போது, ஶ்ரீஜா என்ன சொல்லப்போறாளோனு செந்தில் பயப்படுவார். இந்த சீரியல்ல ஶ்ரீஜா இல்லை. ஆனா, அவங்க ரெண்டுபேரும் தனித்தனி வெப் சீரிஸ்ல நடிக்கப்போறாங்க." என்றவரிடம், சினிமாவுக்கும் அவருக்குமான தொடர்புகள் குறித்துக் கேட்டேன்.  

``சீரியல் தவிர சினிமாவிலும் உதவி இயக்குநரா வொர்க் பண்ணியிருக்கேன். இயக்குநர் அழகம் பெருமாள் சார்கிட்ட உதவி இயக்குநராவும், அட்லியோட `தெறி', `மெர்சல்' படங்களுக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டராவும் இருந்திருக்கேன். அட்லிக்கும் எனக்கும் பத்து வருட நட்பு. விஜய் டி.வி. மகேந்திரன் சார்தான் எனக்கு அட்லியை அறிமுகப்படுத்தி வெச்சார். என் பலம் அட்லிக்குத் தெரியும். `பாகுபலி' கதாசிரியர் விஜேந்திர பிரசாத் சாரோட வொர்க் பண்ற வாய்ப்பை `மெர்சல்' மூலமா ஏற்படுத்திக்கொடுத்தார். `தெறி', `மெர்சல்' படங்களுக்குப் பிறகு அவரோட அடுத்த படத்திலும் வொர்க் பண்ணப்போறேன். தவிர, டைரக்‌ஷன் ஆசையும் இருக்கு. கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும். எனக்கு விஜய்சேதுபதி நடிப்பு பிடிக்கும். அவரை வெச்சு ஏற்கெனவே `காதல்'ங்கிற சீரியலை விஜய் டிவிக்காக இயக்கியிருக்கேன். நாலு வாரத்தோட அது நின்னுடுச்சு. சீரியல்ல அவரை இயக்கியிருக்கேன், சினிமாவுலேயும் விஜய்சேதுபதியை இயக்கணும்; பார்ப்போம்!'' தம்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார், ரமணகிரிவாசன். 
 

அடுத்த கட்டுரைக்கு