Published:Updated:

"நான் நடிகையா இருக்குறது என் அம்மாவுக்கு சுத்தமாப் பிடிக்கலை!” ராய் லட்சுமி

சுஜிதா சென்

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராய் லக்ஷ்மி தனது சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொண்ட எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இது.!

"நான் நடிகையா இருக்குறது என் அம்மாவுக்கு சுத்தமாப் பிடிக்கலை!” ராய் லட்சுமி
"நான் நடிகையா இருக்குறது என் அம்மாவுக்கு சுத்தமாப் பிடிக்கலை!” ராய் லட்சுமி

``பிரேக் வேணும்னு விருப்பப்பட்டேன். அதனால வட இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள்னு நிறைய பயணம் பண்ணினேன். புதுப்புது மனிதர்களைச் சந்தித்தேன். மொழி தெரியாம ஏதேதோ பேசி, ஊர் சுத்துனது புதுவித அனுபவம். என்னதான் சினிமாவுல பிஸியா இருந்தாலும் நமக்கான நேரத்தை ஒதுக்குறதும் முக்கியம். அந்த நேரத்துல, `நமக்கு பட வாய்ப்புகள் கம்மியா வருது’னு ஒருபோதும் வருத்தப்பட்டது கிடையாது.

ஆனா, இப்போ இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் பல மொழிகள்ல பட வாய்ப்புகள் வருது. கூடிய சீக்கிரம் பஞ்சாபி, மராத்தி மொழிகள்லயும் நடிக்கப்போறேன். ஒரு வருஷத்துக்கு மூணு படங்களுக்கு மேல நடிக்கக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன்.” - ``எங்க இத்தனை நாளா ஆளையே காணோம்'’ என்று கேள்விக்குத்தான் இப்படி பதில் சொல்கிறார் ராய் லக்ஷ்மி. இந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு தமிழ்ப் படங்களுடன் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி.

``தமிழ், மலையாளம் ரெண்டுலயுமே பிஸியா படங்கள் பண்ணிட்டு இருக்கேன். மலையாளத்தில் மம்மூட்டி சார் படம் முடிந்தபிறகு, `நீயா-2’ பட ஷூட்டிங் தொடங்கிடும். அடுத்து `யார்' படம் ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர். நான் நடிச்சதுலேயே மிகக்குறைந்த இடைவெளியில் எடுக்கப்பட்ட படம். ஒரு மாசத்துல ஷூட்டிங்கே முடிஞ்சிடுச்சு. சினிமா வேலைநிறுத்தம் முடிஞ்சதும் இந்த ரெண்டு படங்களும் திரைக்கு வந்துடும்." 

`` `நீயா-2' படத்துல க்ளாமர் அதிகமா இருக்கும்னு சொல்றாங்களே..."

``இந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. `நீயா-2' படத்துல கமிட்டானதும் அதோட முதல் பார்ட்டைப் பார்த்துட்டேன். அதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கதை இந்தத் தலைமுறைக்கு ஏற்றமாதிரி மாறியிருக்கு. கதைக்கு கிளாமர் அவசியமா இருந்ததுனா, கட்டாயம் பண்ணுவேன். வெறும் கமர்ஷியல் நோக்கத்துக்காக மட்டும் கிளாமர் பண்ணணும்னு சொன்னா, நான் பண்ணமாட்டேன். நீயா-2 அப்படிப்பட்ட ஒரு படம் இல்லை."

``மம்மூட்டியோட நடிக்குறீங்க... அவரோட சேர்ந்து எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவுல பதிவிட்டு இருந்தீங்க. அந்த ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கு?"

``மலையாளத்துல நான் முதல் படம் பண்ணும்போது எனக்கு 16 வயசு. அப்ப இருந்தே மம்மூட்டி சாருடன் நல்ல பழக்கம். என் படங்களைப் பார்த்துட்டு, முதல் ஆளா கமென்ட் பண்ணுவார். சினிமாவில் என் வளர்ச்சியை உடனிருந்து பார்த்தவங்கள்ல மம்மூட்டி சார் முக்கியமானவர். இப்ப அவருடன் சேர்ந்து படம் நடிக்கும்போது, என்னால நிறைய விஷயங்களை கத்துக்க முடியுது. குறிப்பா ஒரே டேக்ல எப்படி நடிக்கணும் என்பதற்கு மம்மூட்டி சார் சிறந்த உதாரணம். அவ்வளவு திறமையான மனிதர். அதேசமயம் எளிமையான நபரும்கூட. அப்பா ஸ்தானத்தில் இருந்து என்னைப் பாராட்டுவார், அறிவுரை சொல்வார். சுருக்கமா சொல்லணும்னா சார் என் குடும்பத்தில் ஒருத்தர்!"

``மலையாளப் படமான `ஒரு குட்டநாடன் பிளாக்' என்ன மாதிரியான கதை?"

``இந்தப் படம் நகரம்-கிராமத்துக்கான வித்தியாசங்களைப் பற்றி பேசக்கூடியது. சிட்டி மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். மாடர்னா இருந்தாலும் அந்த ஊர் பழக்க வழக்கங்களையும் அத்துப்படியா பின்பற்றுகிற ஒரு குழப்பமான கதாபாத்திரம். `நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க'னு சொல்வாங்கள்ல... அதுதான் இந்தப் பட ஒன்-லைன்.!"

`` `ஜூலி-2 படம் நினைச்ச அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. நிறைய நெகடிவ் கமென்ட்ஸ். அதை நினைச்சு வருந்துறீங்களா?”

``ஜூலி-2 படத்துல நடிக்கிறதுக்கு முன்பே இந்தி ரசிகர்களுக்கு `அகிரா' படம் மூலமா அறிமுகமாகியிருந்தேன். `ஜூலி-2’ படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமா இருந்தது. `இந்த மாதிரியான கேரக்டர்ல நடிக்க தைரியம் வேணும்’னு நிறைய பேர் பாராட்டினாங்க. நாங்க நடிக்கிற படங்களைப் பார்த்துட்டு, `நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்போம்'னு ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வரக் கூடாது. எதிர்பார்த்த அளவுக்கு இந்தப் படம் பாக்ஸ் ஆபீஃஸ் ஹிட் அடிக்கலை. ஆனாலும், எனக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்துச்சு. இப்படி ஒரு படத்துல நடிச்சதை நினைச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்லை."

``குடும்பம் பற்றி சொல்லுங்க..."

``அம்மா, அப்பா, ரெண்டு அக்காக்கள். எல்லாரும் கர்நாடகா மாநிலம், பெல்காம் நகர்ல இருக்காங்க. இரண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. என் அம்மாவுக்கு நான் நடிகையா இருக்குறது சுத்தமா பிடிக்கலை. இருந்தாலும், இப்போ சினிமாவுல எனக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கிறதால எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காம இருக்காங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட் குடும்பம். சின்ன வயசுல இருந்தே ஹோம்லியா டிரஸ் பண்ணணும்னு விரும்புவாங்க. அம்மாவுடன் ஒப்பிடும்போது அப்பாவும் அக்காவும் சினிமாவுல எனக்கு நல்ல சப்போர்ட் பண்றாங்க. ஆனா, சினிமாவுக்கும் குடும்பத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. சின்ன வயசுலயே சுதந்திரமா வளர்ந்துட்டேன். சினிமாவுல தனி ஆளா இருந்துதான் இத்தனையையும் சாதிச்சிருக்கேன்."

``உங்க நண்பர் ராகவா லாரன்ஸ் பற்றி சொல்லுங்க. காஞ்சனா-3 படத்தை எப்ப எதிர்பார்க்கலாம்?"

``லாரன்ஸ் எடுக்கும் படங்கள் போலவே அவர் பேச்சும் பயங்கர காமெடியா இருக்கும். கறுப்பு- வெள்ளை படங்கள் மாதிரிதான் எங்க ஜோடி இருக்குனு எல்லாரும் சொல்வாங்க. காஞ்சனா படம் தமிழ்ல எனக்குக் கிடைத்த ரீ-என்ட்ரி. `காஞ்சனா’வில் நடிச்ச அத்தனை ஹீரோயின்களையும் வெச்சு `காஞ்சனா-3' பண்ணலாம்னு முடிவெடுத்தோம். என்கூட சேர்ந்து வேதிகா, டாப்ஸி நடிக்கிறதா இருந்துச்சு. அதை லாரன்ஸ்தான் அதிகாரபூர்வமா சொல்லணும். 

சினிமாவுல எனக்குத் தெரிந்து லாரன்ஸ் மாதிரி திறமையான ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை. நல்ல டான்சர், மியூசிக் டைரக்டர், இயக்குநர். இன்னும் வேறு எந்த டாஸ்க் கொடுத்தாலும், `எனக்கு இது தெரியாது'னு சொல்லவே மாட்டார். `நீங்க ஒரு படம் இயக்கி, அதுக்கு `எல்லாமே நான்தான்'னு பேர் வெச்சுடுங்க’னு கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பேன். எல்லாத்தையும் விளையாட்டுத்தனமா எடுத்துக்கக்கூடிய மனிதர். லாரன்ஸை கடவுளின் வரம்னுதான் சொல்லணும்.” 

``தோனியின் தோழியான நீங்க ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் திரும்ப வந்திருப்பதைப் பற்றி என்ன நினைக்குறீங்க?”

``இரண்டு வருஷங்களா இந்த டீம் இல்லாம ஐபிஎல் பார்க்கவே பிடிக்கலை. இப்போ மேட்ச் பார்க்கணும்னு ஆசை வந்துருக்குறதே சி.எஸ்.கே விளையாடுறதாலதான். டீமுக்கு பல புது வீரர்களின் வருகை ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்னு நினைக்கிறேன். ஹர்பஜன் சிங் டீமுக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய பலம். தோனி திரும்ப வந்துட்டார். அதனால சிஎஸ்கே வெறித்தனமா களமிறங்கப் போகுது. இப்போ மட்டுமல்ல, எப்பயுமே என் சப்போர்ட் சிஎஸ்கேவுக்குத்தான்.”

``கல்யாணம் எப்போ?"

``இந்தியக் கலாசாரப்படி கல்யாணம் முக்கியமான விஷயம். ஆனா, மக்கள் அதை மதிக்கிறதே இல்லை. `குடும்ப அமைப்புக்குள் போகணும் குழந்தைகள் பெத்துக்கணும் வாழ்நாள் முழுக்க ஒருத்தவங்ககூட மட்டுமே வாழணும்’னு விருப்பம் இருக்குறவங்கதான் கல்யாணம் பண்ணிக்கணும். ஆனா, இனி வர்ற தலைமுறை கல்யாணத்துல அதிக கவனம் செலுத்தமாட்டாங்கனுதான் நினைக்கிறேன். எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை இருந்தாலும் பொறுப்புணர்வோடு இருக்குற ஒருத்தரை இன்னும் பார்க்கலை. அதனால உடனடியா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியான எந்தத் திட்டமும் இப்போதைக்கு இல்லை."