``இப்போ ஒண்ணு, அப்புறம் நாலு!" - ஐ.பி.எல் `குஷி'யில் தியேட்டர் உரிமையாளர்கள்

``இப்போ ஒண்ணு, அப்புறம் நாலு!

கடந்த மார்ச் 1- ம் தேதி முதல் தென்னிந்தியாவில் இருக்கும் திரையரங்கத்தில் புதுப்படங்கள் ரிலீஸாகாது என்று அறிவித்தனர். அடுத்து மார்ச் 16- ம் தேதி முதல் விஜய், அஜித்,  சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் எனத் தமிழ்சினிமாவின் அனைத்துத் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் உள்ளிட்ட சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சியும் இல்லை என அறிவிக்கப்பட்டது.

தமிழ்சினிமாவே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. குழந்தையைப் பிரசவிக்கும் வலியோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்துக்கொண்டிருந்த சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள். தமிழகத் திரையரங்கங்களுக்கு வாரம் ஒருமுறை சென்று தங்கள் வேலைப் பளுவை மறந்து ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்த தமிழ் ரசிகர்கள் தவித்துப் போனார்கள். ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் செகண்ட் ரிலீஸ், ஐந்தாவது ரிலீஸ் என்று வெளியிட்டு மகிழ்வார்கள். அந்தக் காலம் மறைந்தபிறகு, வாரந்தோறும் ரிலீஸாகும் புதுப்படங்களுக்கே தமிழ்நாட்டில் தியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் திண்டாடினார்கள், திக்குமுக்காடி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இப்போது, `நாடோடி மன்னன்', `காக்கிச்சட்டை' போன்ற பழைய திரைப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமா ஸ்டிரைக் தீவிரமாகிக்கொண்டிருப்பதால், போராட்டம் முடிவுக்கு வந்து புதுப்படங்கள் ரிலீஸாகும் சுமுகமான சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை. இந்தச் சூழலுக்கு இடையேதான், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தீவிரமாகியிருக்கிறது.

ஏப்ரம் 7- ம் தேதி முதல் ஆரம்பமாகிறது, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். தமிழகத்தில் சினிமாவுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு ஈக்குவலாக கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா ரிலீஸ் இல்லை என்ற சூழலில், `ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்பினால் என்ன?' என்ற யோசனையை முன்னெடுத்திருக்கிறார்கள், சில திரையரங்க உரிமையாளர்கள். சென்னை அசோக் நகரில் இருக்கும் நான்கு திரையரங்குகளைக் கொண்ட உதயம் காம்ப்ளக்ஸ், `ஐபிஎல் போட்டிகளைத் திரையிட விரும்புகிறோம். அதற்கு முறையான அனுமதி வேண்டும்' எனக் காவல் துறைக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

 

தியேட்டரில் ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகள் திரையிடுவது குறித்து, உதயம் காம்ப்ளக்ஸ் மேனேஜர் ஹரிஹரனிடம் பேசினோம். ``இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்த ஐபிஎல் போட்டியை சத்யம் காம்ப்ளக்ஸிலும், ஐநாக்ஸ் தியேட்டரிலும் திரையிட்டனர். இப்போது, எங்களுக்கு முன்பே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு தியேட்டர்கள் ஐபிஎல் போட்டியைத் திரையிடுவது குறித்து காவல்துறையை அணுகியிருக்கிறார்கள். நாங்களும் அனுமதி கேட்டிருக்கிறோம். முதலில் உதயம் தியேட்டரில் மட்டும் திரையிட முடிவு செய்திருக்கிறோம். ரசிகர்களுடைய வரவேற்பு அதிகமாகக் கிடைத்தால், எங்களுடைய நான்கு தியேட்டர்களிலும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஐடியா இருக்கிறது. நாங்கள் மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான தியேட்டர்கள் கிரிக்கெட் போட்டிகளைத் திரையிட முனைப்பு காட்டி வருகிறார்கள்.'' என்று விளக்கினார்.

உதயம் தியேட்டரின் இந்த முடிவு குறித்து சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் மேனேஜர் மாரியப்பனிடம் கேட்டோம். ``எங்களுக்கு இதுவரை அப்படி ஒரு ஐடியா இல்லை. ஒருவேளை எங்கள் தியேட்டர் நிர்வாகம் அப்படி ஒரு முடிவெடுத்து, அதைக் காவல்துறை அனுமதிக்கும் பட்சத்தில், நாங்களும் ஐபிஎல் போட்டிகளைத் திரையிட ரெடி!" என்கிறார். 

அபிராமி ராமநாதன்

சென்னைத் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனிடம் இதுகுறித்துப் பேசினோம். ``காவல்துறை அனுமதி கொடுத்தபிறகு உதயம் தியேட்டரில் ஐபிஎல் போட்டிகள் திரையிடப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எங்களுக்கு ஐபிஎல் போட்டிகளைத் திரையிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க யாரும் குடும்பத்தோடு வரமாட்டார்கள். இளைஞர்கள், குறிப்பாக 18 வயதிலிருந்து 22 வயதுள்ளவர்கள் மட்டுமே தியேட்டருக்கு வருவார்கள். நண்பர்களோடு சேர்ந்து தியேட்டரில் போட்டிகளைப் பார்க்கும்போது சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பிடித்த கிரிக்கெட் வீரர் சிக்ஸர் அடித்தால் கும்பலாக டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுவார்கள். பிடித்த அணி தோல்வி அடைந்துவிட்டால், கோபத்தில் தியேட்டரின் சேர்களை ஆத்திரத்தில் உடைத்து விடுவார்கள். டிக்கெட் கட்டணத்தைவிட தியேட்டரில் உள்ள சேர்களின் விலை அதிகம். தவிர, கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க வரும் இளைஞர்கள் கும்பலாக முப்பது பேர் ஒன்றாகச் சத்தம் போட்டால், அவர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. நாங்கள் ஐபிஎல் போட்டிகளைத் திரையிட்டு சம்பாதிக்கும் பணத்தைவிட, எங்கள் தியேட்டர்களில் இருக்கைகள் சேதம் அடையாமல் பார்த்துக்கொண்டாலே போதும் என்று முடிவெடுத்திருக்கிறோம்!" என்றார். 

காவல்துறை அனுமதி கொடுத்தால், தியேட்டரில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!