Published:Updated:

சின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை! #HortonHearsAWho #MovieRewind

சின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை! #HortonHearsAWho #MovieRewind
சின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை! #HortonHearsAWho #MovieRewind

சின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை! #HortonHearsAWho #MovieRewind

மிகமிக சுவாரஸ்யமானதொரு கருப்பொருளைக் கொண்ட அனிமேஷன் திரைப்படம் Horton Hears a Who. Dr.சீயஸ் எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு சின்னஞ்சிறிய உலகத்தைக் காப்பாற்ற ஒரு யானை எதிர்கொள்ளும் அல்லல்களை நகைச்சுவையாக விவரிக்கும் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கின்றன. 

ஹோர்ட்டன் என்கிற அந்த யானை மிகவும் துறுதுறுப்பானது. மற்றவர்களுக்கு உதவும் இரக்க குணமும் உடையது. அது கோடைக்காலம் என்பதால் ஆற்றில் குதித்து ஜாலியாக நீந்திக்கொண்டிருக்கிறது. அப்போது பஞ்சு உருண்டை போன்ற மிக மிகச் சிறியதொரு பொருள் அதன் காதைக் கடந்துசெல்கிறது. அதனுள் இருந்து சில பேர் உதவி கேட்டு கத்தும் சத்தம் ஹோர்ட்டனுக்குக் கேட்கிறது. தான் கேட்டது சரிதானா என்கிற சந்தேகம் யானைக்கு வர, அந்த உருண்டையைத் துரத்திச் சென்று மீண்டும் கேட்டுப் பார்க்கிறது. சந்தேகமேயில்லை. உள்ளிருந்து யாரோ அபயம் கேட்டு குரல் தருகிறார்கள். 

ஒரு பூவின் மேற்பரப்பில் சிறிய கடுகு அளவில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தூசிக் கறையின் உள்ளே ஓர் உலகமே இயங்குகிறது. அதனுள் சிறிய அளவில் நூற்றுக்கணக்கான உருவங்கள் இருக்கின்றன. அந்த உருண்டை எதனாலோ மோதப்பட்டு, பாதுகாப்பான இடத்திலிருந்து விலகி, காற்றில் பறக்கும்போதுதான் ஹோர்ட்டனின் கண்ணில் பட்டுவிடுகிறது. அவர்களின் குரல்களை ஹோர்ட்டனால் தெளிவாகக் கேட்க முடிகிறது. 

Whoville எனப்படும் அந்த உலகத்தில் Ned McDodd என்பவர்தான் மேயர். அவருக்கு 96 மகள்களும் ஜோஜோ என்கிற மகனும் உண்டு. தனது முன்னோர்களின் வழியில் தன் மகனை அடுத்த மேயராக்க வேண்டும் என்கிற கனவு அவருக்கு உண்டு. ஆனால், அவனோ பேசாமடந்தையாக இருக்கிறான். தந்தை உற்சாகத்துடன் எதைச் சொன்னாலும் `என்ன இப்ப..” என்பதுபோல் மையமாக வெறித்துப்பார்க்கிறான். இவனை எப்படித் தலைவராக்குவது என்கிற கவலை தந்தைக்கு ஏற்படுகிறது. 

இந்த மேயரை எதிர்க்கட்சிகள் ஒரு புல்லுக்குக்கூட மதிப்பதில்லை. இவரது அணியில் இருப்பவர்கள் கூட இந்தாள் எப்போது சாய்வார் என்று, கூடவே குழி பறிக்கிறார்கள். ``நீ எதுக்குதான்யா லாயக்கு?” என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏசுகிறார்கள். இந்தக் குழப்பமான சூழலில்தான் அவர்களின் வசிக்கும் பிரதேசம் பாதுகாப்பில்லாமல் உருண்டுகொண்டிருக்கிறது. 

ஹோர்ட்டன் தன் பலம் அனைத்தையும் சேர்த்துக் கூவுவது மேயருக்கு மெலிதாகக் கேட்கிறது. தங்களின் உலகத்தை மேலேயிருந்து எவரோ கட்டுப்படுத்த முடியும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. ஹோர்ட்டன் அந்தக் கடுகு உருண்டையைக் காதினால் மூட, அந்தப் பிரதேசம் இருண்டு இரவு போல் ஆகி விடுகிறது. மறுபடியும் காதை எடுக்க வெளிச்சம் வருகிறது. அப்போதுதான் மேயருக்கு நம்பிக்கை வருகிறது. 

``எங்கள் உலகத்தை எங்காவது பாதுகாப்பாக வைத்து உதவுங்கள்’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார் மேயர். இரக்க குணமுள்ள ஹோர்ட்டன் அதற்கு சம்மதிக்கிறது. ஆனால், அதற்கொரு பெரிய இடையூறு வருகிறது. ஹோர்ட்டன் இருக்கும் காட்டின் தலைவராக இருப்பது ஒரு பெண் கங்காரு. 

ஹோர்ட்டன் ஏதோவொரு சிறிய உருவத்திடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது அந்தக் கங்காருக்குப் பிடிப்பதில்லை. ``நீ இப்படி பைத்தியம்மாதிரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் காட்டிலுள்ள இதரக் குழந்தைகளும் கெட்டுப் போவார்கள்” என்று ஹோர்ட்டனைக் கடுமையாக ஆட்சேபிக்கிறது. ``இதற்குள் ஓர் உலகம் இருக்கிறது. அதில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். பாதுகாப்பாக ஓரிடத்தில் வைக்க வேண்டும்” என்று ஹோர்ட்டன் சொல்வதைக் கங்காரு மட்டுமல்ல எந்தவொரு விலங்கும் நம்பவில்லை. ``ஹேஹே’ என்று சிரிக்கிறார்கள். அதனுள் ஒலிக்கும் குரல்கள் ஹோர்ட்டனுக்கு மட்டும்தான் கேட்கிறது. 

இதே பிரச்னைதான் Whoville-ல் இருக்கும் மேயருக்கும் ஏற்படுகிறது. `நாம் வாழும் பிரதேசம் ஆபத்தில் இருக்கிறது. ஹோர்ட்டன் எனும் யானைதான் நம்மைக் காப்பாற்றப் போகிறது. அதனுடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறேன். பிரச்னை தீரும்வரை நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று மேயர் தரும் எச்சரிக்கையை எவரும் நம்புவதில்லை. ``ஏற்கெனவே இந்தாளு மறை கழண்ட கேஸூ. முத்திடுச்சு போல” என்று ஏளனமாகவே பார்க்கிறார்கள். 

இதனிடையே ஹோர்ட்டனிடம் இருக்கும் பூவைப் பறித்து வர ஒரு வல்லூறை அடியாளாக அனுப்புகிறது கங்காரு. அது கொலைவெறியுடன் ஹோர்ட்டனைத் துரத்துகிறது. அந்தப் பக்கம் மேயர் தன் மக்களுடன் தவித்துக்கொண்டிருக்கிறார். 

பிறகு என்ன நிகழ்ந்தது? அந்தச் சின்னஞ்சிறு உலகத்தை ஹோர்ட்டனால் காப்பாற்ற முடிந்ததா? மேயர் உள்ளிட்ட அந்த மக்களுக்கு என்னவாயிற்று என்பதையெல்லாம் ரொம்பவே சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். 

ப்ளூ ஸ்கை ஸ்டூடியோஸ் மற்றும் 20th சென்ச்சுரி பாக்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் வணிகரீதியாகவும் அதிக வசூலைப் பெற்றது. பொதுவாகவே யானை என்றால் குழந்தைகளுக்குப் பிடிக்கும். இதில் ஹோர்ட்டன் செய்யும் கோணங்கித்தனங்களும் குறும்புகளும் சாகசங்களும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

அந்தப் பூவைக் கொண்டுபோய் மலையுச்சியில் பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சுமாரான பாலத்தை ஹோர்ட்டன் கடக்கும் ஒரு காட்சியே போதும். நகைச்சுவையும் பரபரப்புமாக இணைந்து மிரட்டியிருக்கிறார்கள். பிரபல நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி ஹோர்ட்டனுக்குக் குரல் தந்திருப்பதால் இந்தப் பாத்திரத்தின் சுவாரஸ்யம் இன்னமும் கூடுகிறது. சிறிய உலகத்தைத் தாங்கும் பூவை, அதேபோன்ற தோற்றத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பூக்களின் நடுவில் சென்று வல்லூறு போட்டு விட, ஹோர்ட்டன் சலிக்காமல் ஒவ்வொரு பூவாக எடுத்து குரல் தந்து தேடும் காட்சி நெகிழ்வானது. 

படத்தின் இறுதிக்காட்சி பரபரப்பு மிக்கது. ஹோர்ட்டனின் பேச்சைக் காட்டிலுள்ள எவரும் நம்பாததால் பூவை அழித்து விட முனைகிறார்கள். `உங்கள் இருப்பை அழுத்தமாகத் தெரிவியுங்கள். அப்போதுதான் இவர்கள் நம்புவார்கள்” என்று ஹோர்ட்டன் எச்சரிக்க, Whoville-ல் இருக்கும் அத்தனை நபர்களும் இணைந்து ஓர் இசைக்கச்சேரியே நடத்தி விடுகிறார்கள். அதுவரை பேசாமடந்தையாக இருந்த மகன் செய்யும் அதிசயம் வேறு மேயரை வாய்பிளக்க வைக்கிறது. `கைப்புள்ள’யாக அதுவரை தென்பட்ட மேயரை மக்கள் ஹீரோவாகக் கொண்டாடும் காட்சியும் அற்புதமானது. 

Jimmy Hayward மற்றும் Steve Martino இணைந்து அற்புதமாக இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம், நமக்கு தத்துவார்த்தமான பொருளையும் உணர்த்துகிறது. Whoville மக்களைப் போலவே இந்தப் பூமி பிரம்மாண்டமானது என்று கிணற்றுத் தவளை போல நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அண்ட வெளியில் இருக்கும் எத்தனையோ பிரம்மாண்டமான ரகசியங்களுள் பூமி மிகச்சிறிய பந்து மட்டுமே என்கிற உண்மையை இத்திரைப்படம் நமக்குக் கச்சிதமாக உணர்த்துகிறது. ஹோர்ட்டன்கள் தலையிடாத வரை நாம் அந்த உண்மையை அறிவதில்லை. நமக்குக் கீழேயும் பல சின்னஞ்சிறு உலகங்கள் இருக்கலாம் என்கிற நுட்பமான செய்தியையும்  இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது. 

அடுத்த கட்டுரைக்கு