தன்னம்பிக்கை
Published:Updated:

துணிவுக்கு மறுபெயர் ரஜனி!

துணிவுக்கு மறுபெயர் ரஜனி!
பிரீமியம் ஸ்டோரி
News
துணிவுக்கு மறுபெயர் ரஜனி!

- துப்பறியும் சாம்ராஜ்யம் நடத்தும் பெண்மணி...பிசினஸ் ஸ்பெஷல்!

துணிவுக்கு மறுபெயர் ரஜனி!

ரபரப்பான மும்பையின் மாஹேம் பகுதியில் வசிக்கும் ரஜனி பண்டிட்... இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர். நம் பக்கத்துவீட்டுப் பெண்ணைப் போன்ற முகத்தோற்றம், உடல்வாகு. ஆண்களே அதிகம் கோலோச்சும் இந்தத் துறையில், 25 வருடங்களுக்கு முன்னரே சுயம்புவாக துணிந்து இறங்கியவர் ரஜனி. தன்னுடைய `ரஜனி பண்டிட் டிடெக்டிவ் சர்வீசஸ்' நிறுவனத்தின் மூலம், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான துப்பறியும் விங், 75,000-க்கும் அதிகமான வழக்குகள் என துப்பறியும் துறையில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக்கொண்டிருக்கிறார்.

‘‘என் தந்தை மஹாராஷ்டிர மாநில சி.ஐ.டி போலீஸில் பணிபுரிந்தார். மகாத்மா காந்தி கொலைவழக்கு விசாரணையில் பங்கேற்றவர். வழக்குகள் சம்பந்தமாக என் தந்தையை சந்திக்க பலர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் நான் கூர்ந்து கவனிப்பேன். சில வழக்குகள் குறித்து தனிப்பட்ட முறையில் நான் என் தந்தையிடம் விவாதிப்பது உண்டு.

கல்லூரியில் படிக்கும்போது என் வகுப்புத் தோழி ஒருத்தி, சில மாணவர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பது, மது அருந்துவது என தகாத பழக்கவழக்கங்களில் ஈடுபட்டாள். நல்ல குடும்பத்துப் பெண், அப்படி தீயவழியில் செல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல், அதை அவளுடைய தந்தையிடம் தெரிவித்ததோடு, அவரை ஒரு டாக்ஸியில் அழைத்துச் சென்று அவளது நடவடிக்கைகளை நேரடியாகக் காண்பித்தேன். அவர் தன் மகளைக் கண்டித்து நல்வழிப்படுத்தினார். ‘நல்ல சமயத்தில் உதவினாய். நீ இந்தப் பிரச்னையை என்னிடம் கொண்டுவந்த சேர்த்த விதம், மிகவும் துணிச்சலானது. நீ துப்பறிவதைத் தொழிலாகச் செய்யலாமே?’ என்றார் தோழியின் அப்பா. அந்த வார்த்தைகள் என் மனதில் ஊறிக்கிடந்தன.

கல்லூரிப் படிப்பை முடித்தபின், தற்காலிகமாக ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணின் குடும்பத் தில் நிகழ்ந்த நகைத் திருட்டைக் கண்டறிய களமிறங்கி, உண்மையை வெட்டவெளிச்சமாக்கினேன். அப்போதுதான், துப்பறிவதற்கென்று பயிற்சியோ, சிறப்புத் தகுதியோ, கல்வியோ தேவையில்லை; மனதை ஒருமைப்படுத்துவது, விடாமுயற்சி, சமயோசிதம், துணிச்சல், உள்ளுணர்வு, துணிகரச் செயல்களைச் செய்யும் சாகசம் மற்றும் மனோதிடம் இவையெல்லாம்தான் வேண்டும் என்பதை உணர்ந்தேன். துப்பறிவதை முழு நேரத் தொழிலாகச் செய்ய முடிவெடுத்தேன்’’ எனும் ரஜனி, தான் தொடங்கிய துப்பறியும் நிறுவனம் குறித்த விளம்பரத்தை, பிரபல மராட்டிய நாளிதழில் வெளியிட முயன்றிருக்கிறார்.

‘‘நான் பெண் என்ற ஒரே காரணத்தினால், அந்த நாளிதழின் ஆசிரியர் என் விளம்பரத்தை வெளியிட முன்வரவில்லை. எதேச்சையாக, அந்த ஆசிரியரின் நண்பர் ஒருவரின் வழக்கு ஒன்றைத் துப்பறிந்து பிரச்னையைத் தீர்த்து வைத்தேன். அதற்குப்பின் அந்த நாளிதழின் நிருபரே என்னைத் தேடிவந்து பேட்டி கண்டு, என் புகைப்படத்துடன் சிறப்புக் கட்டுரையை  வெளியிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை, என் நிறுவனத்துக்காக விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை’’ என்றபோது, ரஜனியின் குரலில் கம்பீரம்.

துணிவுக்கு மறுபெயர் ரஜனி!

மாறுவேடத்தில் புலனாய்வது, வேலைக்கார பெண், கர்ப்பிணி, கண் பார்வையற்ற பெண் போன்ற போர்வையில் ஒருவரின் வீட்டில் தங்கி துப்பறிவது என பலப்பல அவதாரங்களில் துப்பறிந்திருக்கிறார் ரஜனி. பயம் என்ற வார்த்தைக்கு இவரது அகராதியில் இடம் இல்லை. மறக்கமுடியாத ஓர் அனுபவம் பற்றிப் பகிர்ந்தபோது, ‘‘மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரின் நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார். தன் சொந்த சகோதரர் கொலைவழக்கை விசாரிக்க வேண்டினார். நான் அவரது வீட்டில் ஆறு மாதங்கள் பணிப்பெண்ணாக வேலை செய்தேன். அவருடைய தாயைச் சந்திக்க ஒரு நபர் அடிக்கடி வருவார். ரகசியமாக ஏதோ பேசிக்கொள்வார்கள். எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் பேசுவதை என்னால் டேப் செய்ய முடியவில்லை.

ஒருநாள், ‘போலீஸ் தீவிரமாகக் கண்காணிப்ப தால் இனி இங்கு வராதே’ என அந்த நபரிடம் கூறினார் எஜமானி. நான் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, என் காலில் ரத்தம் வருமாறு கீறினேன். கத்தி தவறுதலாகக் காலில் விழுந்துவிட்டது எனக் கூற, எஜமானி, ‘பாண்டேஜ் போட்டுக் கொண்டு வா’ எனச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.  உடனே நான், வெளியே வந்து என் வாடிக்கையாளருக்கு போனில் தகவலைத் தெரிவித்தேன். அவரும் போலீஸுடன் விரைந்து வந்து அந்த நபரையும் தாயையும் கைதுசெய்தார். தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன’’ என்றவர்,

‘‘பாலிவுட் நடிகர், நடிகைகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் என் வாடிக்கையாளர்கள். அவர்களது பிரச்னைகள் எல்லாம், தங்கள் கணவன் அல்லது மனைவியின் எக்ஸ்ட்ரா மேரிட்டல் பழக்கம் பற்றியதாக இருக்கும். அது உண்மைதானா என்று கண்டறியும் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பார்கள். இதனால், படப்பிடிப்புத் தளங்கள் தொடங்கி, சின்னத் திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அலுவலகங்கள் வரை எங்கள் பணியாளர்களை நிரந்தரமாகவே வேவுப் பணிக்கு அமர்த்தியுள்ளோம். மேலும், குடும்ப வழக்குகள், நிறுவனங்கள் சம்பந்தமான விஷயங்களை வேவுபார்ப்பது, காணாமல் போனவர்களைக் கண்டறிவது, கொலை வழக்குகளை கையாள்வது, என இந்தத் துறையின் திகிலையும் த்ரில்லையும் ரசித்து அனுபவித்துவருகிறேன்’’ என்று சொல்லும் ரஜனி, அது தொடர்பான தன் அனுபவங்களைத் தொகுத்து ஃபேசஸ் பிஹைண்ட் ஃபேசஸ் (Faces Behind Faces), `மாயாஜால்’ (Mayajal) என இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை நிறைய விருதுகளைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘காவல்துறையைப்போல, எங்களுக்கென்று சிறப்புப் பாதுகாப்போ பயிற்சியோ இல்லை. ஆனால், காவல்துறை அதிகாரிகள் எங்கள் சிரமத்தைப் புரிந்துகொண்டு உதவுகிறார்கள். திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு வழக்கை விசாரித்து உண்மையை வெளிப்படுத்தும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கும் பாராட்டுகளுக்கும் ஈடு இணை எதுவும் இல்லை!’’

சல்யூட் மேடம்!

ஸ்ரீலோபாமுத்ரா படங்கள்:லவ் பர்மர்

லேடி ஜேம்ஸ்பாண்ட்!

‘‘சாதாரண மக்களில் இருந்து, பணக்காரர்கள், சமூகத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் என பலரும் என் வாடிக்கையாளர்கள்! வாடிக்கையாளர்களாக என்னிடம் அறிமுகமாகிறவர்கள், அவர்கள் வழக்கில் நான் காட்டும் அக்கறையால் என் நண்பர்களாகிவிடுவது வழக்கம்’’ என்று சொல்லும் ரஜனி, தூர்தர்ஷன் வழங்கும் பெண் சாதனையாளர்களுக்கான

‘Hirkani’ விருதைப் பெற்றிருக்கிறார். தினகர் ராவ் என்பவர், இவரைப் பற்றி ‘லேடி ஜேம்ஸ்பாண்ட்’ என்ற குறும்படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.