Published:Updated:

இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா

இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா

ஒழிவுதிவசத்தெ களி

இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா

ஒழிவுதிவசத்தெ களி

Published:Updated:
இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா
இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா

னல் குமார் சசிதரன் இயக்கிய `ஒழிவு திவசத்தெ களி’ (விடுமுறை தின விளையாட்டு) என்ற மலையாளப் படம், சினிமா பற்றி இதுவரை எனக்கு இருந்த பல கருத்துக்களை அடியோடு மாற்றிவிட்டது.   முக்கியமாக அதன் தயாரிப்புச் செலவு. தமிழில் மாற்று சினிமா என்றால்கூட செலவு 2 கோடியைத் தொடுகிறது. இசையமைப் பாளருக்கே கோடிகளில் சம்பளம் கொடுக்கவேண்டியிருக்கிறது. `ஒழிவு திவசத்தெ களி’யில் பின்னணி இசையே கிடையாது. இயற்கை சப்தங்கள் மட்டும்தான். மழை சப்தம்;  பட்சிகளின் சப்தம். மற்றபடி நம்முடைய யதார்த்த வாழ்க்கை எப்படி பின்னணி இசையின்றி நகர்கிறதோ அப்படியேதான் படமும் நகர்கிறது. ஆனால் துளிகூட சுவாரஸ்யம் குன்றவில்லை. 

`ஒழிவுதிவசத்தெ களி’யின் பட்ஜெட் வெறும் 20 லட்ச ரூபாய்தான் என்கிறபோது, இது இந்தியத் திரைப்பட வரலாற்றில் நடந்திருக்கும் ஆகப் பெரிய புரட்சி என்றே நினைக்கத் தோன்றுகிறது. பொதுவாக இப்படிப்பட்ட படங்கள் அதன் உருவாக்கத்திலும் இறுதி வடிவத்திலும் ஒரு கலாசிருஷ்டியின் முழுமையான அழகைக் கொண்டிராமல் பலவீனமாக இருக்கும்.  பணப் பற்றாக்குறையில் எடுக்கப்பட்ட படம் என்பது, அதன் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்து பார்வையாளர்களைச் சங்கடத்தில் ஆழ்த்தும். ஆனால், `ஒழிவுதிவசத்தெ களி’யில் அப்படிப்பட்ட வறுமைத் தோற்றங்கள் எதுவும் இல்லை. கீஸ்லோவ்ஸ்கியின் ஓர் அற்புதமான படத்தைப் பார்த்தது போன்ற முழு நிறைவைத் தருகிறது. 

அடுத்த சாதனை... படத்தின் கதை. தமிழ் சினிமா இயக்குநர்கள் அனைவரும் கதை பற்றிய கவலையைத் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  கதை இல்லாமல் கொரியா, ஹாலிவுட், மும்பை என அலைந்துகொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களுக்குக் கதையே கிடைக்கவில்லை.  `ரீமேக்’கில்தான் பெரும்பாலும் அவர்களின் எண்ணம் சுழன்றுகொண்டிருக்கிறது. இலக்கியத்தில் இருந்து கதைகளை எடுத்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு சில எழுத்தாளர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் வெறுமனே ஒரு துணை இயக்குநர் செய்யும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கே இயக்குநர்கள் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திரைக்கதையில் வசனங்களைச் செருகும் வேலைதான், தமிழின் ஆக முக்கியமான எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.  அவர்களும் தங்கள் வாழ்நாளில் காணமுடியாத பண மூட்டையை உத்தேசித்து அந்த `Fill up the blanks’ வேலையைச் செய்கிறார்கள். இது தவிர இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் தமிழில் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையை மாற்றிவிட லாம் என்ற நல்லெண்ணத்தில் எழுத்தாளரை அதிக அளவுக்கு நம்பினால், அதன் விளைவு கழுதையும் இல்லாமல் குதிரையும் இல்லாமல் வேறு ஏதோ ஒரு விபரீத மிருகம் பிறந்து எல்லோரையும் பீதியுறச் செய்து விடுகிறது. மணிரத்னத்தின் `கடல்’ ஓர் உதாரணம். 

இப்படியாக, மாற்று சினிமாதான் தமிழ் சினிமாவின் பெரும் பிரச்னையாக இருக்கிறது.  மாற்று சினிமா இயக்குநர்களுக்கு இலக்கியம் தெரியும்; உலக சினிமா தெரியும்.  ஆனால் அவர்கள்தான் வணிக சினிமாவிலும் அடங்காத, நல்ல சினிமா என்றும் சொல்ல முடியாத அரைவேக்காடுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது? வணிக சினிமா எல்லா மொழிகளிலும் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. அது பற்றி நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால், மாற்று சினிமா ஏன் ஐந்து நிமிடங்கள்கூட உட்கார முடியாத அளவுக்கு நம்மைத் துரத்தியடிக்கிறது? என்ன யோசித் தும் எனக்குக் காரணம் தெரியவில்லை. 

 `ஒழிவுதிவசத்தெ களி’யின் கதை என்ன? ஐந்து நண்பர்கள் தேர்தல் நேரத்தில் கிடைத்த விடுமுறை தினத்தில் ஒரு வனப்பகுதிக்குச் செல்கிறார்கள். கையில் கொண்டு போயிருக்கும் சரக்கைக் குடித்துத் தீர்க்கிறார்கள்.  பேச்சு... பேச்சு... ஓயாத பேச்சு. கேரளத்தின் காடுகளில் மழைக்குக் கேட்க வேண்டுமா? பேச்சைப்போலவே ஓயாத மழை. ஐவரில் ஒருத்தன் அரசியல் ஆர்வம் உள்ளவன் என்பதால், தேர்தல் செய்திகளைக் கேட்ட வண்ணம் இருக்கிறான். நண்பர்கள் குடித்து, பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பக்கம் தேர்தல் செய்தி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கீதா என்ற மத்திம வயதுப் பெண் அவர்களுக்குக் கோழி சமைத்துக் கொடுக்கிறாள். 

இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேறு எதுவும் நிகழ்வது இல்லை. அந்தப் பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து கொல்லப்போகிறார்கள் அல்லது அந்தப் பெண்ணின் மூலம் வேறு ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று நம் சினிமா ரசனை எதிர்பார்க்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடப்பது இல்லை. கோழிக் கறி தயார் செய்வதற்குத் தன்னால் கோழியைக் கொல்ல முடியாது என்கிறாள் கீதா.  நண்பர்கள் இடையே யார் கோழியைக் கொல்வது என்று வாக்குவாதம் கிளம்ப, கடைசியில் ஒருவனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அவனுக்கும் கோழியின் கழுத்தை அறுக்கத் துணிவில்லை என்பதால் சுருக்குப் போட்டு மரத்தில் மாட்டி, கொல்கிறான்.

பாட்டில் தீர்ந்துவிடவே அவர்களில் ஒருவன் நகரத்துக்குப் போகிறான். நகரம் அந்த வனத்தில் இருந்து மூன்று நான்கு கிலோ மீட்டர். தேர்தல் நேரமாதலால் கறுப்புச் சந்தையில் பாட்டில் கிடைக்க கொஞ்சம் கஷ்டம் ஆகிறது. இருந்தாலும் ஒரு முழு பாட்டிலுடன் திரும்புகிறான். குடி தொடர்கிறது. பேச்சும் தொடர்கிறது. 

கீதாவை நண்பர்களில் ஒன்று இரண்டு பேர் கண்களால் மேய்கிறார்கள். பிறகு கிட்டத்தில் நெருங்கியும் முயற்சிக்கிறார்கள். ஒருவன் அவளுடைய முறைப்பிலேயே ஒதுங்கிவிடுகிறான். இன்னொரு துணிச்சல் காரன், அவள் கத்தியை எடுத்ததும் திரும்பி விடுகிறான். அவள் சமையல் வேலை முடிந்து கூலியை வாங்கிக்கொண்டு போய்விடுகிறாள். இடைவேளை. 

கதையில் ஏதாவது ஒரு திருப்பம் நிகழும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பிய பெண்ணும் இல்லாமல் மீண்டும் ஐந்து பேரின் குடிப் படலம் இடைவேளைக்குப் பிறகு ஒரு விளையாட்டுடன் தொடங்குகிறது. நவீன மலையாளச் சிறுகதையில் குறிப்பிடத்தக்க ஒருவரான உண்ணி ஆர் எழுதிய சிறு
கதையைத்தான் சசிதரன் படமாக்கியிருக்கிறார். உண்ணியின் சிறுகதையில் நான்கு நண்பர்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கொண்டாட, ஒரு லாட்ஜில் அறை எடுத்து குடிக்கிறார்கள். அப்போது அவர்கள் சிறுவயதில் ஆடிய திருடன் போலீஸ் ஆட்டம் ஆட முடிவுசெய்கிறார்கள்.  ராஜா, மந்திரி, போலீஸ், திருடன் என்று நாலு சீட்டுகளில் எழுதிப் போட்டு ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்க வேண்டும். போலீஸ் என்ற சீட்டை எடுத்தவன் மற்ற மூவரில் யார் திருடன் என்று யூகித்துச் சொல்ல வேண்டும். ராஜாவைத் திருடன் என்று அழைத்து விட்டால் கையில் பிரம்படி கிடைக்கும்.  கடைசியில் திருடன் விசாரணை செய்யப்படுவான். அவ்வளவுதான் உண்ணியின் கதை. உண்ணியின் கதை படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் தொடங்குகிறது. இப்படி ஒரு கதையை நாம் தமிழ்நாட்டில் எந்த சினிமா இயக்குநரிடமோ தயாரிப்பாளரிடமோ நடிகரிடமோ சொல்ல முடியுமா? சொன்னால் அடித்துத் துரத்திவிட மாட்டார்களா? 

இங்கேதான் சினிமாவில் இலக்கியத்தின் பயன்பாடு பற்றி நாம் பேசவேண்டியுள்ளது.  `ஒழிவுதிவசத்தெ களி’ போன்ற ஒரு கதையைப் படமாக்க வேண்டுமானால் அதற்கு இலக்கியம், சினிமா தவிர வேறு ஒரு தகுதி தேவைப்படுகிறது. அது, இந்தக் கலைகளின் மூலம் நாம் உருவாக்கிக் கொள்ளும் அறிதல் முறை (Perception).  இதை Wisdom என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இப்படியில்லாமல் இலக்கியமும் சினிமாவும் வெறும் தகவலாக மட்டுமே நமக்குள் சேகரமாகும்போது, அது வெறும் அறிவாக (knowledge) எஞ்சிவிடுகிறது.  `ஒழிவுதிவசத்தெ களி’ படத்தின் இரண்டு கதைக் கருக்கள் என பெண்கள் மற்றும் தலித் வாழ்வின் அவலத்தைச் சொல்லலாம்.  இப்படிச் சொல்வதால் இந்தப் பிரச்னைகள் குறித்து இதுகாறும் நாம் பார்த்துவந்த படங்களெல்லாம் நம் நினைவில் வந்து தாக்கும். `ஒழிவுதிவசத்தெ களி’ அப்படிப்பட்ட படம் அல்ல. சமையல்காரி கீதாவின் இடுப்பை ஒருவன் பார்க்கிறான். ஒருசில நொடிகளில் வந்துபோகும் அந்தக் காட்சியில் பெண் என்பவள் அந்த இடத்தில் ஒரு கோழியைப்போல், மதுவைப்போல், ஆண்களின் உடல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு பண்டம் மட்டுமே என்று காண்பிக்கப்படுகிறாள். தமிழில் ஒரு முழுப் படத்தில் காண்பிக்க முயற்சித்துத் தோற்றுப் போகும் ஒரு விஷயம் இங்கே ஒருசில நொடிகளில் சாத்தியமாகிறது. இன்னொருவன் கீதாவிடம் மெள்ளப் பேச்சுக் கொடுக்கிறான். 

கீதா அவன் பேச்சைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஆள் படியவில்லை என்பதால், அவன் அவளைவிட்டு நகர்கிறான். பிறகு குடி செஷனில் பெண்களைப் பற்றி விவாதிக்கிறான். `பெண் இஷ்டப்பட்டால் போகலாம்; நாமாக பலவந்தப்படுத்தக் கூடாது; அது ரேப் ஆகிவிடும்.’ `அது எப்படி?  எப்போதுமே ஆண் மேலே... பெண் கீழேதானே?’ என்று மறுக்கிறான் இன்னொருவன். `அப்படியென்றால் நீ இதுவரை உன் மனைவியை ரேப்தான் பண்ணிக் கொண்டிருக்கிறாய்’ என்று அவன் சொல்ல, `பேசிக் கொண்டிருக்கும்போதே என் மனைவியை இழுக்கிறான் பார்’ என்று ஒரே ரகளை ஆகிறது. மற்றவர்கள் போய் சமாதானம் செய்த பிறகு குடி செஷன் தொடர்கிறது. இப்படியாக சிறுசிறு வாக்குவாதங்களோடு குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். வாக்குவாதத்தில் ஒருவன் கோபித்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான். அவனைச் சமாதானம் செய்யும் காட்சி ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஓடுகிறது. இப்படி எல்லாமே ஓர் அபத்த நாடகமாக நீண்டுகொண்டேயிருக்கிறது.  

`ஒழிவுதிவசத்தெ களி’யைத் திரைப்படம் பயிலும் மாணவர் முதல் 100 கோடி ரூபாயில் படம் எடுக்கும் சூப்பர் இயக்குநர் வரை அணுஅணுவாகப் பார்க்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன். காரணம், 106 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் வெறும் 70 ஷாட்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தில் இங்கே எத்தனை ஆயிரம் ஷாட்டுகள் எடுக்கப்படுகின்றன என்று நமக்குத் தெரியும். `ஒழிவு திவசத்தெ களி’யில் ஐந்து நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை நீள்கின்றன சில ஷாட்கள். சில ஷாட்களில் கேமரா ஆடாமல் அசையாமல் இருக்கிறது.  இடைவேளைக்குப் பிறகு வரும் திருடன்-போலீஸ் ஆட்டம் மட்டுமே  47 நிமிடங்கள் ஓடும் ஒற்றை ஷாட்.

பொதுவாக இப்படிப்பட்ட படங்கள் மிகுந்த சலிப்பை ஏற்படுத்தக்கூடியவை.  ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தப் படம் நம்மில் பெருத்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. முடிவு வரை ஒரு க்ளைமாக்ஸை நோக்கியே நகர்த்திச் செல்கிறது படம்.  இவ்வளவுக்கும் படத்துக்கு திரைக்கதை (Screenplay) எழுதப்படவில்லை.  ஸ்கிரிப்ட்டும் இல்லை. லொக்கேஷனிலேயே வசனங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம், கதை.  கதையில் உள்ள அரசியல். கோழியைக் கொல்லும் காட்சியே படத்தின் பிரதான Motif. அதே Motifதான் திருடன்-போலீஸ் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. தாஸன் ஒரு தலித்.  அவன்தான் தேர்தல் செய்தியைக் கேட்பதில் ஆர்வம் காட்டுகிறான். பாட்டில் வாங்க நகரத்துக்குச் செல்லும் தர்மபாலன் ஒரு பிராமணன். இதற்கு மேல் விவரித்தால் படத்தின் முக்கியமான கண்ணி கலைந்து போய்விடும். 

இப்போது நாம் கவனிக்கவேண்டிய விஷயம்,  ஐந்து பேர் தேர்தல் விடுமுறையில் காட்டுக்குப் போய் குடிக்கிறார்கள் என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு எப்படி ஒரு மகத்தான படத்தை எடுக்க முடிந்தது என்பதுதான்.  இடைவேளை வரை வெறும் குடி; பேச்சு. இடைவேளைக்குப் பிறகு திருடன்-போலீஸ் விளையாட்டு. அதுவும் ஒரே அறையில் வைத்து, 47 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி.  பின்னணி இசையும் கிடையாது. காட்சியும் படு சுவாரஸ்யமாக உள்ளது.

இந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா

`ராமன் ராகவ்’ படத்தைப் பற்றி அனுராக் காஷ்யப் குறிப்பிடும்போது `ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது அதன் லொக்கேஷனும் நடிகர்களும்தான்’ என்றார். `ஒழிவுதிவசத்தெ களி’யை இந்திய சினிமாவில் நிகழ்ந்த அதிசயமாக்கியது அதன் லொக்கேஷனும் கதையும் ஒளிப்பதிவும்தான்.

மலையாளத்தில் `பைங்கிளி எழுத்து’ என்பார்கள். ஆங்கிலத்தில் Pulp. தமிழில் `ஜனரஞ்சக எழுத்து’ எனச் சொல்லலாம்.  ஒரே ஒரு முறை பொழுதுபோக்காகப் படித்துவிட்டுத் தூக்கியெறியும் எழுத்து.  அதைத்தான் நாம் தமிழில் இலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல் எது சினிமா இல்லையோ, அதையே சினிமா என நினைக்கிறோம்.  சினிமா என்றால் என்ன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், பெர்க்மன், டர்க்காவ்ஸ்கி, ஃபெலினி, பஸோலினி, மிக்லோஸ் யான்ஸ்கோ, கிறிஸ்தோஃப் யானுஸ்ஸி போன்ற இயக்குநர்களின் படங்களைப் பார்க்க வேண்டும். அவை சினிமா பற்றிய வேறு ஓர் அனுபவத்தை நமக்குத் தரும். இதன் பொருள், சினிமா என்றால் மிகவும் சலிப்பூட்டக்கூடிய, தத்துவார்த்தமான விஷயங்களைப் பேசும் புத்திஜீவிகளுக்கானது என்பது அல்ல. 

2015-ம் ஆண்டில் Sebastian Schipper <https://en.wikipedia.org/wiki/Sebastian_Schipper> இயக்கிய ஜெர்மன் படம் `விக்டோரியா’. இது ஒரு த்ரில்லர். பெர்லினில் நான்கு நண்பர்கள் சேர்ந்து குடித்துவிட்டு வரும்போது சாலையில் விக்டோரியா என்ற பெண்ணைச் சந்திக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து பெர்லின் வந்து ஒரு கஃபேவில் வேலை செய்யும் பெண் விக்டோரியா.  அந்த நான்கு பேரும் அன்று இரவு ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். நால்வரில் ஒருவன் போதை அதிகமாகி மல்லாந்துவிடுகிறான். அதன் காரணமாக, விக்டோரியாவை குழுவில் சேர்க்கிறார்கள். அடுத்து என்ன நிகழப்போகிறதோ என நம்மை இருக்கையின் முனையில் அமரவைக்கிற ஒரு த்ரில்லர் விக்டோரியா.  இந்தப் படத்தின் விசேஷம் என்னவென்றால், இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதன் அர்த்தம் புரிகிறதா? படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிக் காட்சி வரை இரண்டரை மணி நேரமும் ஒரே ஷாட். (ஒளிப்பதிவாளர் அதிகாலை நாலரையில் இருந்து காலை ஏழு மணி வரை படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்தார்!) சம்பவங்கள் நடக்க நடக்க, ஒளிப்பதிவு ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். யாரும் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. ஓர் உதாரணம் தருகிறேன். நான்கு நண்பர்களும் குடித்துக்கொண்டே சாலையில் நடக்கிறார்கள். அவர்களோடு விக்டோரியாவும் இருக்கிறாள். நள்ளிரவு முடிந்து அதிகாலை மூன்று மணி.  அப்போது சாலையில் எதிரே வரும் சிலர் இவர்களிடம் ஏதோ தகராறு செய்ய, நால்வரில் ஒருவன் சமரசம் செய்து அவர்களை அனுப்பிவிடுகிறான். அப்போது ஒரு போலீஸ் கார் வருகிறது. `ஏதேனும் பிரச்னையா?’ எனக் கேட்கிறார் போலீஸ்காரர். 

படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படுகிறது என்பதை நினைவுகூருங்கள். லேசான கசமுசா நடந்து முடிந்து, எதிரே வந்தவர்கள் கிளம்பிய பிறகு, சரியாக அங்கே போலீஸ் கார் வர வேண்டும்.  மயிரிழை அளவுகூட காலப்பிழை இருக்கக் கூடாது. இல்லாவிட்டால் போலீஸ் வந்து கேட்பதற்கு அர்த்தம் இருக்காது. மிகச் சரியான நேரத்தில் துல்லியமாக அது நடக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ரீடேக்.  அதுவரை எடுத்த அத்தனையும் வீணாகி விடும்.  சடசடவென்று சம்பவங்கள் விழுந்துகொண்டேயிருக்கும் ஒரு வங்கிக் கொள்ளை த்ரில்லரை இரண்டே கால் மணி நேரத்துக்கு சிங்கிள் ஷாட் படமாக எடுக்க முடியுமா என்பதை சற்றே யோசித்துப்பாருங்கள். (வங்கிக் கொள்ளை முடிந்ததும் போலீஸ் படை வருகிறது; திருடர்கள் தப்பி ஓடி ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் உள்ளே ஒளிந்து கொள்கிறார்கள்; துப்பாக்கிச் சூடு நடக்கிறது;  இவ்வளவு களேபரத்துக்கும் சிங்கிள் ஷாட்!) 

சினிமா என்றால் என்ன என்பதை `விக்டோரியா’ பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.  இதை `சந்திரமுகி’யில் வரும் `கொஞ்ச நேரம்’ பாடல் காட்சியோடு நாம் ஒப்பிடுவோம். நான்கு நிமிடம் 15 நொடிகள் கொண்ட இந்தப் பாடலில் சுமார் 100 ஷாட்கள் உள்ளன. கடிகார முள் நொடிக்கு நொடி நகர்வதுபோல் ஷாட்டுகள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றன.  நான் ஒரு முத்த ரசிகன் என்பதால், இந்தப் பாடலைப் பல நூறு முறை பார்த்திருக்கிறேன்.  (நயன்தாராவை முத்தமிட்டுவிட்டு - நம் பார்வைக்கு அது தெரியாமல் நயனின் தலை மறைப்பதுபோல் ஒளிப்பதிவாளர் வித்தை காட்டியிருப்பார் - தன் உதட்டைத் துடைத்துக்கொள்வார் தலைவர். அது நயனின் எச்சில் இல்லாமல் வேறு என்ன?  அதில் நமக்கு ஏதும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று ஒளிப்பதிவாளர் நயனையும் காட்டுவார். என்ன இருந்தாலும் பெண் அல்லவா? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதற்கு ஏற்ப நயன் கையால் உதட்டைத் துடைக்காமல் மேல் உதட்டாலேயே கீழ் உதட்டைத் துடைப்பார்.)

சினிமாவை நாம் கால்பந்தாட்டமாகவும் 20 - 20 கிரிக்கெட்டாகவும் உருவகித்து வைத்திருக்கிறோம். அதனால்தான் ஆயிரக்கணக்கான ஷாட்களில் படம் எடுக்கவேண்டியிருக்கிறது. `பேலா தார்’ (Bela Tarr) என்ற ஒரு ஹங்கேரிய சினிமா மேதை. அவருடைய முக்கியமான ஒரு படம் `The Turin Horse’. இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப் படம் வெறும் முப்பதே ஷாட்களில் எடுக்கப்பட்டது. துரின் (இத்தாலி) நகரில் 1889-ம் ஆண்டு, ஜனவரி மூன்றாம் தேதி ஃப்ரெட்ரிக் நீட்ஷே ஆறாம் நம்பர் வீட்டில் இருந்து வெளியே வருகிறார்.  அப்போது அங்கே ஒரு கோச் வண்டியில் பிணைக்கப்பட்டுள்ள குதிரை திமிறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.

நகர மறுக்கும் அந்தக் குதிரையை, வேறு வழியில்லாமல் அந்தக் குதிரைக்காரர் அடிக்கிறார். அதைக் கண்டதும் பொறுக்க முடியாமல் ஓடிச்சென்று குதிரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்குகிறார் நீட்ஷே. அவரது நண்பர் உடனடியாக வந்து நீட்ஷேவை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

வீட்டுக்குள் இரண்டு நாட்கள் அசையாமல் படுத்திருக்கும் நீட்ஷே, கடைசியாக, ‘Mother, I am stupid’ என்று சொல்கிறார். இதன் பின் 10 வருடங்கள் பேசாமலும் மனநிலை பாதிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்த நீட்ஷேவை அவரது தாயும் சகோதரிகளும் கவனித்துக்கொண்டனர். அந்தக் குதிரையின் கதி தெரியவில்லை.’

`The Turin Horse’ படம் தொடங்குவதற்கு முன்னால் பேலா தாரின் குரல் மேற்கண்ட விஷயத்தை நம்மிடம் சொல்வதோடு படம் தொடங்குகிறது. நீட்ஷேவைப் பைத்தியமாக்கிய அந்தக் குதிரை பிறகு என்னவானது?  அந்தக் குதிரைக்காரர் யார்?  அதுதான் `துரின் குதிரை’ படத்தின் கதை.  சுருக்கமாகச் சொன்னால், படத்தில் நாடகீயமாக எதுவுமே நடப்பது இல்லை.  `ஒழிவுதிவசத்தெ களி’யில்கூட இரண்டாம் பாதியில் திருடன்-போலீஸ் ஆட்டம் உண்டு.  `துரின் குதிரை’யில் எதுவுமே இல்லை. 

மொத்தத்தில், `ஒழிவுதிவசத்தெ களி’ இந்திய சினிமாவில் நிகழ்ந்துள்ள ஓர் அதிசயம்.  வெறும் தொழில்நுட்ப சாதனை அல்ல; இலக்கியமும் சினிமாவும் இணைந்ததன் விளைவு அந்தப் படம்.  இப்படித்தான் இலக்கியம் சினிமாவுக்குப் பங்காற்ற முடியும். மிகத் தீவிரமாகவும் ஆக்ரோஷமாகவும் இந்தியாவின் சாதி அரசியலைப் பேசுவதாலும் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் புதிய சினிமாவை நோக்கிய ஒரு முதல் பாய்ச்சல் ‘ஒழிவுதிவசத்தெ களி.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism