Published:Updated:

" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..!" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4

" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..!" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4
" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..!" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4

" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..!" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4

விக்ரம், லயோலா கல்லூரியில் எனக்கு சீனியர். சினிமா, விளம்பரங்கள், தனிப்பட்ட போட்டோஷூட்டுகள்... என்று அவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கிறேன். வித்தியாசமான நடிப்பு, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள், கடின உழைப்பு, பரிட்சார்த்த முயற்சிகள்... என்று என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். 

லயோலாவில் பழகியிருந்தாலும் ‘சாமுராய்’ படத்துக்காக ஷூட் செய்யும்போதுதான் போட்டோகிராஃபராக அவருடனான முதல் சந்திப்பு. அப்போது ‘சாமுராய்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார், கதையின் அடிப்படை ஐடியாக்கள் சிலவற்றை ஷேர் பண்ணினார். அதை அடிப்படையாக வைத்து சில கெட்டப்களில் ஷூட் செய்தோம். 

முதலில் ஒரு பாடல் காட்சிக்காக போர் வீரர் போன்ற கெட்டப். ஆரம்பம் முதலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் விக்ரம். அதில் அடிபட்டதுபோன்று காயங்களுடன் எடுத்த ஃபைட் சீக்வென்ஸ், மேன்லியாக பவர்ஃபுல்லாக வந்திருந்தன. நான் எப்போதும் சொல்வதுபோல் விக்ரமின் ரசிகர்களின் கலெக்ஷனில் அந்தப் படங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

விக்ரமும் அடுத்து ஒர்க் பண்ணிய படம், ‘பீமா’. அந்த ஷூட்டை என்னால் மறக்கவே முடியாது. இவை, படப்பிடிப்புக்கு முன்பே பூஜைக்கான அழைப்பிதழ் ப்ரவுச்சருக்காக எடுக்கப்பட்டவை. எப்போதும் உழைப்பும் உற்சாகமுமாக இருக்கும் லிங்குசாமி சார் இயக்கிய படம். பின்னி மில்லில் இரண்டு நாள்கள் ஷூட் செய்தோம். ஒவ்வொரு இடமும் வித்தியாச லைட்டிங், வெவ்வெறு வகையான குணம் என, ஒரு போட்டோகிராஃபராக பின்னி மில் எனக்கு ரொம்பவே பிடித்த லொக்கேஷன். 

த்ரிஷா காம்பினேஷன், ஆக்ஷன் சீன்ஸ்... என்று அங்கும் மொத்தம் 18 ஃப்ரேம்கள் எடுத்தோம். ஒரு கட்டடத்தில் இருந்து யாரோ விக்ரமை ஷூட் பண்ணுவதுபோன்ற சீன். அதை எப்படி எடுப்பது என்று ரொம்பவே குழம்பினோம். அந்த ஜன்னல் கதவில் அவரை யார் ஷூட் செய்கிறார்கள் என்ற ரிஃப்ளெக்ஷன் தெரிய வேண்டும். மேலும், அந்தக் கண்ணாடியில் நிறைய புல்லட்ஸ் ஷாட்ஸ் இருக்க வேண்டும். அதற்காக கிளாஸ் பெயின்ட் செய்து எடுத்தோம். மூளை குழம்பும் அளவுக்கு அவ்வளவு கடினமான ஷாட்ஸ். போட்டோகிராஃபியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஷாட் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருக்கும். ‘தினம்தினம் கற்றல்தான்’ என்று நினைவுபடுத்திய நாள் அது. 

தரையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் துப்பாக்கியுடன் நடந்துவர வேண்டும். பின்னணியில் எலெக்ட்ரிக்கல் லைன் தீப்பற்றி எரிய, தீப்பொறி பறக்கும். அந்த ரிஃப்ளெக்ஷன் தண்ணீரில் தெரிய வேண்டும். அந்த ஷாட் ரொம்பவே நன்றாக வந்திருந்தது. இதுபோல் ஆக்ஷன் மூட் ஷாட்டுக்காக எப்போதும் உடம்பு கின்னென இருக்க வேண்டும். அதற்காக அங்கேயே ஒரு ஜிம் அட்டாச் பண்ணியிருந்தோம். ஒவ்வொரு ஷாட் இடைவெளியிலும் போய் ஒர்க்கவுட் செய்துவிட்டு வருவார் விக்ரம். 

ஆக்ஷனில் இப்படி என்றால் த்ரிஷா உடனான காம்பினேஷன் ஷாட்டில் ரொமான்ஸில் வேற லெவலில் இருப்பார் சியான். மரத்தடி, பைக் என்று அந்தப் போட்டோக்களை இப்போது பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். எத்தனையோ படங்களுக்கு ஷூட் செய்திருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமானவை என சில போட்டோக்களே அமையும். ‘பீமா’ ஷூட்டில் அமைந்த படங்களை அந்த வகையில் சேர்க்கலாம்.

விக்ரமுடன் பண்ணிய அடுத்த பெரிய ஷூட், ‘கந்தசாமி’ படத்துக்கான ஷூட். மீண்டும் தாணு சாரின் தயாரிப்பில் பண்ணிய படம். ‘உங்க ஸ்டைல்ல என்ன வேணும்னாலும் பண்ணுங்க தம்பி. போஸ்டர்ஸைப் பார்த்து பிரமிக்கணும் மிரளணும். மொத்தத்தில் ரசிக்க வைக்கணும்’ என்று என்கரேஜ் செய்துகொண்டே இருப்பார். அப்படி தாராளம் காட்டும் தயாரிப்பாளர் கிடைப்பது போட்டோகிராஃபர்களுக்கான வரம் என்றே சொல்லலாம். ஏனெனில் நமக்குப் பிடித்தது, பரிசோதனை முயற்சிகள் என்று நிறைய மெனக்கெடலாம். இந்தப்பட இயக்குநர் சுசி கணேசனும் நிறைய ஐடியாஸ் பிடிப்பார். 

மொத்தம் மூன்று நாள் நடந்த இந்த போட்டோஷூட்டும் என் மனதுக்கு நெருக்கமானது. உடல் முழுவதும் பெயின்ட் செய்த விக்ரம்-ஸ்ரேயா இருவரையும் ஃப்ளோரசென்ட் ரூமில் வைத்து எடுத்த போட்டோக்கள், ஆப்பிரிக்கன் முகப் பூச்சு-காஸ்ட்யூமில் குதிப்பது, ரோயிங் பேடல் கொண்டு அடியாட்களை அடித்து தண்ணீரில் தள்ளுவது... இப்படி சினிமா ஷூட்டிங் செட்டப்பில் ஷூட் செய்தோம். கனல் கண்ணன் மாஸ்டர்தான் போட்டோஷூட்டுக்கான ஆக்ஷன் சீக்வென்ஸை அமைத்தார். இதை முட்டுக்காடில் ஷூட் செய்தோம். 

சூப்பர் ஹீரோ காஸ்ட்யூமில் கோட்டைச் சுவரை ஏறிவரும் ஸ்பைடர் மேன் போல் வருவதை வேறொரு நாள் எடுத்தோம். இதற்காக தோட்டாதரணி சார் பிரமாதமான செட் அமைத்துத் தந்தார். சுத்தியலை தோளில் வைத்துக்கொண்டு டை பறக்க நடந்து வரும் ஷாட்டில் பின்னால் லைட்டிங் செய்து எடுத்தோம். அவ்வளவு ஹேண்ட்ஸ்மாக இருப்பார். ஒரு போட்டோகிராஃபராக என்னால் இந்த ஷூட்டில் நிறைய எக்ஸ்பெரிமென்ட் பண்ண முடிந்தது. அவருக்கும் இப்படியான பரிட்சார்த்த முயற்சிகள் ரொம்பவே பிடிக்கும். லைட்டிங் செய்ய எவ்வளவு நேரமானாலும் அமைதியாக காத்திருப்பார். அவருடன் மறக்கமுடியாத படங்களை ஷூட் செய்துள்ளேன் என்பது சந்தோஷமான விஷயம். 

அடுத்து விக்ரமுக்கு நான் பண்ணிய படம், ‘ராஜபாட்டை’. சுசீந்திரன் டைரக்ஷன் செய்த படம். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி அடுத்தநாள் காலை மூணு மணிவரை ஒரே நாளில் ஏழெட்டு கெட்டப்பில் ஷூட் செய்தோம். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பிராஸ்தெடிக்ஸ் மேக்அப் என அத்தனை லுக்ஸ், கெட்டப். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். சிறிது நேரம்கூட ஓய்வு எடுக்காமல் 22 மணிநேரம் தொடர்ந்து ஷூட் செய்தது மறக்கமுடியாத அனுபவம்.

ஏ.எல்.விஜய் சாருடன் ‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப்பிறகு ‘தெய்வத் திருமகள்’ பண்ணினோம். அதில் சற்றே மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளியாக விக்ரம். அதில் இரண்டு மூன்று வேரியேஷன்ஸ் இருக்கும். அந்த மாற்றங்களை ஒரேநாளில் நடக்கும் போட்டோஷூட்டில் கொண்டுவர வேண்டும். சொட்டருடன் ஊட்டியில் இருப்பது போன்ற ஒரு ஃபீலை ஸ்டுடியோவில் எடுக்கும் ஷாட்டில் கொண்டுவர வேண்டும். அமலாபால், அனுஷ்கா உடன் காம்பினேஷன். மோட்டார் பைக்கில், குளிர் காற்றை கடக்கும் உடல்மொழி... இப்படி ஒவ்வொன்றுக்கும் வித்தியாச உடல்மொழி என்று வியக்கவைத்தார். 

அடுத்தும் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தாண்டவம்’ படத்தில் உளவாளி கேரக்டர். இடையில் கண் பார்வை போய்விடும். மனைவி அனுஷ்காவை  கொலை செய்துவிடுவார்கள். கண் தெரியாவிட்டாலும் மனைவியை கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறார் என்பதே கதை. கூடவே ஏமி ஜாக்ஷன். ஆக்ஷன் கதை. ஏவி.எம்மில் செட் போட்டு ஷூட் செய்தோம். சூழலில் வரும் சத்தத்தை வைத்து எதிரிகள் எந்தத் திசையில் வருகிறார்கள் என்பதைக் கண்டறிந்து தாக்கும் அசாத்திய திறமை கொண்ட கேரக்டர்.  இதை வீடியோவில் காட்சிப்படுத்துவது எளிது. ஆனால், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை ஒரே ஒரு போட்டோவில் விளங்கவைப்பது கஷ்டமான விஷயம். ஆனால், விக்ரம் ரொம்பவே அழகாக, எளிதாகச் செய்தார். 

ஒரு ப்ராஜெக்ட் முடித்து ஒரு இடைவெளி கிடைக்கிறது என்றால் சும்மாவே இருக்கமாட்டார். ‘கமான் வெங்கட், லெட்ஸ் டூ சம்திங்’ என்று சொந்த ஆர்வத்தின் பேரில் கெட்டப் மாற்றி போட்டோஷூட்டுக்கு தயாராவார். அப்படி இவரை தனிப்பட்ட முறையிலும் நிறைய போட்டோஷூட் செய்துள்ளேன். சினிமாவுக்காக எடுத்ததைவிட இப்படி போர்ட்போலியோவுக்காக எடுக்கப்பட்ட ஷாட்கள்தான் நிறைய. அவரின் வீட்டுக்குச் சென்று காஸ்ட்யூம்ஸ் பார்த்து தேர்வு செய்து, நிறைய ரெஃபரன்ஸ் தேடி, ஷூட் செய்வோம். நிறைய லொகேஷன்களில் அப்படி எடுத்து இருக்கிறோம். அதில் பாண்டிச்சேரியில் எடுத்த ஷூட் ரொம்பவே ஸ்பெஷல். 

‘ஷங்கர் சாரின் ‘ஐ’ படத்துக்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறேன். இந்த லுக்கில் ஷூட் பண்ணலாமா’ என்றார். மெல்லிய டிஷர்ட், டெனிம்ஸ், கூலர்ஸ்... என்று அவரை இயல்பான லுக்கில் ஷூட் செய்தேன். இன்னும் இளமையாக, அழகாக இருந்தார். ஆனால், அவரைப்பார்க்க பாவமாகவும் பயமாகவும் இருந்தது. ‘இதுக்குமேல வெயிட் குறைக்காதீங்க’ என்றேன். சிரித்துக்கொண்டார். அந்த ஷூட்டில் எடுத்தப் படங்கள், அட்டைப் படங்களாக பல இதழ்களில் இடம்பிடித்தன.

விக்ரம், விலங்குகள், பறவைகள் வளர்ப்பதில் அலாதியான ஆர்வம் உடையவர். அவரின் செல்லக் கிளியை வைத்தும் ஷூட் செய்து இருக்கிறேன். அப்படி ஒருமுறை சத்யம் இதழுக்காக ஷூட் செய்தது நல்ல அனுபவம். ஒரு காலியான நீச்சல் குளத்தில் அருகில் அந்தக் கிளி காம்பினேஷனில் பண்ணிய போட்டோஷூட் ரொம்பவே நன்றாக வந்தது. 

20-வது ஆண்டுகளுக்கு முன் எடுத்த முதல் ஷூட்டில் எப்படி என்னை ஆச்சர்யப்படுத்தினாரோ அப்படித்தான் இன்றும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இப்படி சீயானுடனான ஒவ்வொரு போட்டோஷூட்டும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக அமையும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மாதிரியான மாற்றங்கள், கற்றல்கள்!

அடுத்த கட்டுரைக்கு