Published:Updated:

“தயவுசெய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க!” ‘கயல்’ சந்திரன் ஷேரிங்

சுஜிதா சென்

சினிமா பின்னணி இல்லாமல ஹீரோக்களாக மாறிய சில நடிகர்களுள் முக்கியமானவர் கயல் சந்திரன்.இவர் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றியும், பெர்சனல் வாழ்க்கை பற்றியும் பேசுகிறார்

“தயவுசெய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க!” ‘கயல்’ சந்திரன் ஷேரிங்
“தயவுசெய்து அஞ்சனா பற்றி மட்டும் கேட்காதீங்க!” ‘கயல்’ சந்திரன் ஷேரிங்

"தயவுசெய்து... அஞ்சனா பற்றி மட்டும் எதுவும் கேட்காதீங்க. கிட்டத்தட்ட இரண்டு வருஷமா எங்க காதல் கதையை சொல்லிச் சொல்லி அலுத்துப் பேச்சு" - சிரித்தபடியே வந்து அமர்கிறார் கயல் சந்திரன். ‘பார்ட்டி’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ‘டாவு’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

"பள்ளி நாள்கள்லயே சினிமா பார்க்கிற பழக்கம் அதிகம். பள்ளியில் நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். அதனாலேயே படிப்புமேல் நாட்டமில்லாமப் போயிருச்சு. அட்வர்டைசிங் அண்ட மார்க்கெட்டிங்'ல பட்டப்படிப்பு முடிச்சுட்டு, சூரியன் எஃப்.எம்ல (Suryan FM) வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அங்க எனக்கு ஒர்க்கிங் டைம் சரிவரலை. பிறகு சத்யம் சினிமாஸ்ல (Sathyam cinemas) சேல்ஸ்மேனா வேலைக்குச் சேர்ந்தேன்.  

அங்க சேர்ந்ததுக்கு முக்கிய காரணமே மீடியாவுடன் தொடர்பில் இருக்கணும் என்பதுதான். அப்ப தியேட்டரில் ஃப்ரீயா நிறையப் படங்கள் பார்த்தேன். நிறைய இயக்குநர்களைச் சந்திச்சேன். அவங்ககிட்ட வாய்ப்பு கேட்டு ஆடிஷன்ஸ் நடக்கிற இடங்களுக்குப் போயிட்டு வருவேன். வேலையில சேர்ந்து ஒரு வருஷத்துககுள்ள படத்தில் நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதுக்காக மூன்று மாசம் லீவு வேணும்னு கேட்டேன். 'அத்தனை நாள் லீவ் கொடுக்க முடியாது. நீங்க வேணும்னா வேலையை விட்டுப் போயிடுங்க. ஒருவேளை உங்களுக்கு நடிப்பு செட்டாகலைன்னா, நீங்க எப்ப வேணும்னாலும் சத்யமுக்கு திரும்ப வேலைக்கு வரலாம்'னு சொல்லி அனுப்பினாங்க.  

என் முதல் சினிமா வாய்ப்பு 'ஆதலால் காதல் செய்வீர்'. அதில் ஒரு சின்ன ரோல். தன் காதலியின் கருக்கலைப்புக்காக நாயகன் தன்  நண்பர்களிடம் பணம் கேட்பார். நிறையப் பேர் இல்லைனு சொல்வாங்க. அதுல நானும் ஒருத்தன். படத்துக்காக நிறையக் காட்சிகள் எடுத்தாங்க. ஆனால் எதையும் காட்டாம சுருக்கமா முடிச்சுட்டாங்க. அதுதான் அந்தப் பட வெற்றிக்கான காரணம்னுகூட சொல்லலாம். அந்த ஒரு சின்ன சீனுக்காகத்தான் மூன்று மாசம் லீவ் போட்டேன். 

பிறகு குறும்படம் பண்ணிட்டு இருந்த ஒரு நண்பன் மூலமா பிரபு சாலமன் சாரின் நம்பர் கிடைச்சது. 'கும்கி' பட ஆடிஷனுக்கு போட்டோஸ் அனுப்பினேன். எந்தப் பதிலும் வரலை. அவரோட அடுத்த படத்துக்கும் போட்டோஸ் அனுப்பினேன். அதுக்கு என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. ஸ்கிரீன் டெஸ்ட், டயலாக் டெஸ்ட், போட்டோஷூட்..னு ஏகப்பட்ட திறனாய்வுகளை சுமார் 7 மணிநேரம் நடத்தினாங்க. அப்ப சார்கிட்ட, 'எதாவது சின்ன ரோலா'னு கேட்டேன். 'அட... ஹீரோவே நீதான்டா'னு சொல்லி என்னை அதிர்ச்சியடைய வெச்சுட்டார்.”

"'பார்ட்டி' பட அனுபவம் பற்றி சொல்லுங்க?" 
"வெங்கட் பிரபு சார் இயக்கின சரோஜா, கோவா, பிரியாணி... படங்களில் இருந்து இது மாறுபட்டக் கதை. முழுக்க முழுக்க பிஜி தீவுல ஷூட் பண்ணினோம். முதல்முறையாக மல்ட்டி ஸ்டாரர் படத்துல நடிக்கிறேன். ஷூட்டிங்ல எப்படி பொறுமையா இருக்கணும், எல்லாரையும் எப்படி அனுசரித்து நடந்துக்கணும்... இப்படி நிறைய விஷயங்களைப் இந்தப் படம் பாடமா அமைத்துக் கொடுத்தது. சிவா, ஷாம், நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன் மேம், நாசர் சார், ரெஜினா, சஞ்சிதா செட்டி...னு  பலர் இதுல நடிச்சிருக்காங்க. கலர்- க்ளாமர்- ஹியூமர்னு இந்திப் பட ஸ்டைல்ல எடுத்திருக்கிறோம்.”

"'பார்ட்டி' டீசர்ல நிவேதா பெத்துராஜுடன் நீங்க நெருக்கமா இருக்குற காட்சிகளைவெச்சு சோஷியல் மீடியாவுல மீம்ஸ், ட்ரோல் பண்ணினாங்க. அதுக்கு அஞ்சனா டிவிட்டரில் ரியாக்ட் பண்ணியிருந்தாங்க. அதை எப்படி பார்க்குறீங்க?" 
"என்னைக்கு அஞ்சனாவோட கமிட்டானேனோ, அன்னையில இருந்தே நிறைய மீம்ஸ், ட்ரோல்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு. அஞ்சனா என்னைப் பற்றி முழுசா புரிஞ்சுகிட்ட ஒரு பெண். சினிமா என் தொழில்னு தெரிந்ததுக்குப் பிறகு, அவங்க இந்தமாதிரி பிரச்னைகளை ஈஸியா டீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. திரையில் நெருக்கமான காட்சிகளைப் பார்த்து சண்டை போடுற ஆள் இல்லை. குடும்பம்தான் எல்லாமேனு நினைக்கிற பொறுப்பான பெண். எனக்கு இந்தமாதிரி ஒரு மனைவி அமைந்தது வரம்னுதான் சொல்லணும்.”

"' ‘திட்டம் போட்டுத் திருடுறக் கூட்டம்' படம் பற்றி சொல்லுங்க..." 
"பார்த்திபன் சார் எப்படி குண்டக்க மண்டக்க பேசுவாரோ, அப்படித்தான் இந்தப் படத்துலயும் பேசியிருக்கிறார். டயலாக்ல இல்லாததையெல்லாம் பேசி, செமயா கவுன்ட்டர் கொடுப்பார். அதுக்கு ஏற்றமாதிரி நானும் கவுன்டர் கொடுக்கணும். அது எனக்கு மிகப்பெரிய சவால். படம் முழுக்க சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. அடுத்து ராம்பாலா சாரோட 'டாவு' படத்தில் நடிச்சுட்டு இருக்கிறேன். பாதி ஷூட்டிங் முடிஞ்சுருச்சு. ஸ்ட்ரைக் முடிந்ததும் ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம்.

அடுத்து மகாவிஷ்ணு இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். இது ஆண்களுக்குச் சவால் விடும்படியான படம். அதனால, பெண்களுக்கு நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கிற பெண்களோட பாய் ஃப்ரெண்ட்ஸுங்க செத்தானுங்க. இதுல நடிக்க நான் ஒப்புக்கொண்டதுக்கே அதுதான் காரணம்.” 

"நடிகரா இருந்து தயாரிப்பாளரா மாறிய அந்த அனுபவம் எப்படி இருக்கு?”
"என் அண்ணனும் ஆரம்பத்தில் நடிக்க முயற்சி பண்ணினார். அவருக்கு அது செட் ஆகலை. பிறகு தயாரிப்பாளரா மாறினார். நான் அவருக்கு உதவியா இருக்கிறேன். ஆனால் ஒரு நடிகரா இருக்கிறதைவிட தயாரிப்பாளரா இருக்கிறது பயங்கர கஷ்டம். பணப்பிரச்னை, கடன் தொல்லைகள் அதிகம் வரும். முதல் படத்திலேயே இப்படி நிறைய பிரச்சினைகளை சந்திச்சோம்.

எந்த ஒரு தயாரிப்பாளரும் நாம எடுக்கிறப் படம் ஓடாதுனு நெனச்சு படம் எடுக்கமாட்டாங்க. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை நம்பி எடுக்குறாங்க. படம் எடுத்து முடித்ததுக்கு அப்புறம் அதை ரிலீஸ் பண்றதுக்கு அவங்க படுற பாடு இறுக்கே... அதெல்லாத்தையும் சமாளிக்கிறதுக்கு தனிப் பக்குவம் தேவை. அதுக்கு வெறும் நடிகனாகவே இருந்துட்டு போயிடலாம்.”