Published:Updated:

'' '22 ஃபீமேல் கோட்டயம்' இது, ஆண்களுக்கான எச்சரிக்கை!" - மலையாள கிளாசிக் பகுதி 5

'' '22 ஃபீமேல் கோட்டயம்' இது, ஆண்களுக்கான எச்சரிக்கை!" - மலையாள கிளாசிக் பகுதி 5
'' '22 ஃபீமேல் கோட்டயம்' இது, ஆண்களுக்கான எச்சரிக்கை!" - மலையாள கிளாசிக் பகுதி 5

'மலையாள கிளாசிக்' என்ற பெயரில் வெளியாகிக்கொண்டிருக்கும் இத்தொடரின் ஐந்தாவது பகுதியான இதில், '22 ஃபீமேல் கோட்டயம்' (22 Female Kottaym) படத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

பிரான்ஸில் எழுந்த சினிமாவின் புதிய அலையின் தாக்கத்தை வேறு ஒரு தினுசாகப் புரிந்துகொண்ட கோஷ்டிகள் சில இந்தியாவில் இருந்தன. அவர்கள் புரட்சிக் கருத்துகளைக் கொட்டினார்கள். துச்சாதனம் பண்ணுவதில் சிகரத்தைத் தொட்ட 'தோரகா' என்கிற படத்தைப் பார்க்கும்போது நான் சிறுவன். ஸ்டண்ட் காட்சிகளில் பார்வையாளன் அடி, குத்து என்று உணர்ச்சிவசப்படுவதைப்போல ஒரு பெண்ணைப் பாலியல் வதை புரிகிற காட்சியில் ஜனங்கள் அதை உற்சாகப்படுத்தவே செய்தார்கள் என்று ஒரு நினைவு. குறைந்தபட்சம் முன்னால் வருகிற பந்தய வீரருக்கு இருக்கிற வரவேற்பு மிஸ்டர் துச்சாதனருக்கு இருந்தது. சினிமா மெல்ல மெல்ல தன்னைப் புரிந்துகொண்டே வந்தது என்பதற்கு இந்தப் படம் சாட்சி. கவுடா என்கிற ஒரு காசுள்ள பொறுக்கி செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று படத்தின் கதாநாயகியைத் தொடும்போது, பார்வையாளர்கள் திடுக்கிட்டார்கள். அது அவர்களுக்கு வெறுப்பாக இருந்தது.

மாறித்தான் விட்டிருந்தது சினிமாவின் முகம். '22 ஃபீமேல் கோட்டயம்'(22 female kottayam) புதிய உணர்வுகளைத் தோற்றுவித்தது. பெண்ணிய படங்கள் என்றெல்லாம் வகைப்படாத கேரள சினிமாக்களைப் பொறுத்தமட்டில் கதாநாயகி டெசா கே ஆப்ரகாம் புதியதாகவே இருந்தாள். அவளுடைய பழிக்குப் பழி முந்தைய கிளிஷே கிடையாது. அவள் தன்னை நிதானித்து உயர்ந்தெழுவதும், சீற்றம் கொண்டு கதைகளை முடித்து வைப்பதும் ஜனங்களின் ஆசையைப் பூர்த்தி செய்வதாகவே இருந்தன.

டெசா கோட்டயம்காரி (ரீமா கலிங்கல்). நர்சிங் படித்தவள். காதல் அனுபவம் உண்டாகி ஒரு நேரத்தில் அவளுக்குக் கெட்ட பெயரெல்லாம் உண்டாகியிருக்கிறது. தங்கையைத் தவிர எந்த சொந்தமுமில்லை. வெளிநாட்டுக்குக் கிளம்பிச் செல்கிற மும்முரத்தில் டூரிஸ்ட் ஏஜெண்டான சிரிலிடம் பழக நேர்ந்து. அவனை முழுமையாய் நம்பிக் காதலித்து, அவனோடு லிவிங் டூ கெதர் வரைக்கும் அவள் முன்னேறிச் சென்றது தனது கள்ளமற்ற நம்பிக்கையால்தான். அவனில்லாத தருணத்தில் கவுடா வந்து அவளை நாசம் செய்த பிறகும் சிரில் தன்னோடு இருக்கிறான் என்கிற பிடி அவளைத் தம் பிடிக்க வைக்கிறது.

அவள் அவனால் மறுபடியும் ஒருமுறை கூட்டிக் கொடுக்கப்படுகிறாள். அது அவளுக்குத் தெரியவந்த பிறகு இந்தப் பழிவாங்கும் கதை துவங்குகிறது. அப்போது அவள் கஞ்சா வழக்கில் சிறைச்சாலையில் இருக்கிறாள்.

எனக்குத் தெரிந்து இந்தப் படத்தின் ஜீவன் முழுக்க அந்த சிறைச்சாலை அத்தியாயத்தில் இருக்கிறது. ரீமா கலிங்கல் அந்த ரோலை எடுத்துக்கொண்டு எவ்வளவு ஆழத்துக்குப் போகிறாரோ, அந்தத் திரைக்கதையும் அவருக்கான வளைவுகளை நகர்த்தியவாறே இருக்கின்றன. அந்தப் பெண்களின் சிறையில் எப்படியும் அழகுப் பதுமைகள் உலவப் போவதில்லை அல்லவா? ரத்தமும் சதையும் கொண்ட பெண்களின் அசல் முகங்கள், அவர்களுடைய கதைகள் டெசாவிற்குப் புதியது. துரோகமும் அநீதியும் செய்த புருஷன்களை அந்தப் பெண்கள் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். அதை நியாயமென்றும் நம்புகிறார்கள். அவர்கள் வேற்றுலகில் இருந்து வந்தவர்கள் அல்ல, அனைவைரையும் நேசிக்கத் தெரிந்த நம் எல்லோரையும்போல இயல்பான பெண்கள்தான். டெசாவிற்கு இருந்த தொட்டால் சிணுங்கித்தனம் தானாய் விலகுகிறது. மெதுவாய் உறுதியைப் படிய வைத்துக்கொண்டே வருகிறாள்.  

நர்ஸாக மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவளது பராமரிப்பில் இருந்த முதியவர் ஒருவர், சாகிற நாளுக்காகக் காத்திருந்தார். வாழ்வை மிகவும் நேசிக்கிற ஒரு ஆள் அவர். அவருக்கு டெசாவின் மீது ஒரு தனி அன்பு உண்டு. இறக்கிற நேரத்தில் இவளுக்கு ஒரு பகுதி சொத்தை எழுதி வைத்து ஒரு கடிதம் அனுப்புகிறார். ஜெயிலில் கண்ணீரோடு டெசாவினால் படிக்கப்படுகிற அந்தக் கடிதத்தில், நீ என்ன மாதிரி பெண் தெரியுமா? என்கிற வியப்பு ததும்புகிறது. ஆமாம், இந்த அநீதிகள் எனக்கு நடந்திருக்கக் கூடாது. அப்படி நடந்திருப்பதை ஏற்க முடியாது என்று அவள் உணர்ந்தாக வேண்டிய தருணம்.    

முக்கியமாக, சுபைதா. தமிழ்ப் பெண். அவள் ஒரு ரவுடியாகத்தான் சித்திரிக்கப்படுகிறாள். புருஷனையும் அவனது உறவினர்களையும் கொன்றுவிட்டு வந்த அவள், கர்ப்பமாகவும் இருக்கிறாள். துவக்கத்தில் கை காலை அமுக்க வேண்டியிருந்தாலும், ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் புரிந்து கொள்வதாகவே இருந்து சுபைதா மெல்ல டெசாவின் காட்மதர் ஆகிறாள் என்று சொல்ல வேண்டும். அவள் தனது நெருப்பை மற்றவளுக்குள்ளும் பற்ற வைக்கிறாள்.

சுபைதாவின் குழந்தைப் பிறப்பில் பெரும் பங்கு வகித்த டெசாவிற்கு அவள் பல யோசனைகளையும் சொல்கிறாள். சிறிது சிறிதாய் டெசாவினுள்ளே அந்தத் தீ எழுகிறது. கவுடாவும், சிரிலும் அவளைக் கொன்றுவிட்டிருக்க வேண்டும். வெறுமனே எங்கேயாவது வீசி எறிந்து விட்டுக்கூட போயிருக்கலாம். அவளை ஜெயிலில் தள்ளின சூழ்ச்சி வேறு ஒரு வடிவம் எடுத்துக்கொண்டு நின்றுவிட்டது. இனி அவளைத் தடுக்க யாருமில்லை. டெசாவிற்கு எதிர்பார்த்த விடுதலை வந்துவிட்டது.

வெளியே வருகிறாள்.

முதலில் கவுடாவின் கதை முடிக்கப்படுகிறது.

சிரிலையும் அப்படி முடித்திருக்க முடியும். அது அவளுடைய எண்ணமில்லை. அவனைப் பழிவாங்கப் போய் அவனிடம் பிடிபடுகிறாள். பெயரை மாற்றி, ஹேர் ஸ்டைலை மாற்றி, ஒரு கூலிங் கிளாசை வைத்துக்கொண்டு வந்தால் உன்னை எனக்கு அடையாளம் தெரியாதா? என்று அடித்து வீழ்த்துகிறான், சிரில். அவளைக் கொல்வதற்குள் அவள் காட்டுகிற கண்ணீர் அவனைப் பெருமிதம் கொள்ளச்செய்கிறது. உளவியலாகவே தனது முன்னால் அழுகிற பெண்ணைக் காணும்போது ஆண்மை எழுச்சியடைகிறது என்பார்கள். அதுதான். அவனது செருக்கு உயர்கிறது. நீ இல்லாமல் என்னால் முடியவில்லை என்று விம்முகிற அவளை அணைத்துக்கொண்டு, உன்னால் எதுவும் முடியாது செல்லம், ஏனென்றால் நீ வெறும் ஒரு பெண் என்கிறான். அவள் முழுமையாய் தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டதாகப் படுக்கைக்குக் கொண்டு போகிறான்.

மறுநாள் பகலில் எழுந்து அவன் டெசாவுக்கு காலை வணக்கம் சொல்லும்போது அவனது ஆண்குறி நீக்கப்பட்டிருக்கும்.

ஒரு நர்சாக இருந்து தனது வாழ்க்கைக்காக அவள் செய்துகொண்ட மகத்தான காரியம். இனி ஒரு பெண்ணின் முன்னால் அவனால் ஒரு ஆணாக நம்பிக்கையுடன் நிற்கவே முடியாது.

இதற்கு மேலும் படம் தொடர்கிறது.

ஒரு படத்தின் இறுதிக் காட்சியை வர்ணிக்க ஆகாது. அதுவும் மெல்லிய உணர்வுகளால் வேறு ஒரு தரத்துக்கு உயரும் க்ளைமாக்ஸ் பற்றிச் சொல்லவே கூடாது. காரணம், அது நமது அனுபவமாகக் கூடியது. வழக்கமான படங்களில் இருந்து இந்தப் படத்தை தனித்ததாக மாற்றக்கூடிய அளவு வல்லமை கொண்ட காட்சிகளுடன் படம் முடிகிறது என்று சொன்னால் போதுமானது அல்லவா?!. இறுதியில் சிரில் அவளிடம் அதைச் சொல்லத்தான் செய்கிறான்.

டெசா, பெண்ணென்றால் அது நீ தான்!

முன்னமே சொன்னதுபோல, ரீமா கலிங்கல் இந்தப் படத்தின் பொக்கிஷம். அவரது புன்னகை, அவரது துக்கம் அனைத்தும் நம்முள் சுழன்று முடியாதவை. அவரது கீச்சுக் குரலேகூட என்னமாய் வெடிக்கக் கூடியது என்பதைப் பார்க்கலாம். பஹத்துடன் இருக்கும்போது தன்னை அவசரமாகச் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் நம்பிக்கை, அதன் காதல் ஒளிர்ந்தவாறு இருந்து, பின்னர் கனல் காட்டும்போது எனக்கு ரீமாவை அவ்வளவு வியப்பாயிருந்தது. சியாமா பிரசாத்தின் 'ரித்து' என்கிற படத்தில் முதிர்ந்த அவரை வியப்பதேகூட தவறு என்கிற எண்ணமுமிருந்தது.

Baa வராத டெசாவின் faa வை பஹத் திருத்தும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் செய்கிற அவர் முகம் ஒளிர்வதைப் பார்ப்பதற்காகவே இன்னும் ஒருமுறை படம் பார்க்க முடியும். இந்தப் படம் வரும்போது இருந்த பஹத் ஃபாசில் முழுமையாய் அறியப்படாதவர். ஆனால், ஒருவனால் அலட்டியே கொள்ளாமல் இப்படி நடித்துத் தீர்த்துவிட முடியுமா என்பதை சகலரும் துணுக்குற்றார்கள் என்பது நடந்தது. இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவர் அந்தப் படத்தில் பிரம்மாதமாய் நடித்திருந்தார் என்று சொல்லிக் கொண்டிருப்பது விரயமல்லவா...

பிரதாப் போத்தனின் கவுடா ஒரு முக்கியமான சாதனை. சத்தார் கதாபாத்திரம் அவ்வளவாய் எடுபடவில்லை. எல்லோரையும் காதலிப்பதாகச் சொல்லி அவர் அசடு வழிவதும், படத்தின் ஆளுமைக்குக் கீறல் விழுந்ததுதான்.

அபிலாஷ் எஸ் குமாரும், ஷ்யாம் புஷ்கரனும் திரைக்கதை எழுதியிருந்தார்கள். பகத்தின் மோசடியை பார்வையாளர்களுக்கு எப்போது சொல்வது, டெசாவிற்கு எப்போது அது தெரிய வேண்டும் என்பது சரியாய் வந்தபோதே, அவர்களின் திரைக்கதை வீரியம் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவில் இடறல்களே இல்லையென்று கவனிக்கலாம். இன்னபிற தொழில்நுட்பங்களில் குரங்குத் தாவுதல்களும் இல்லை.

மலையாளப் படங்களின் பாடல்கள், இசை இவைகளைப் பற்றியெல்லாம் பின்னர் ஒருநாள் எழுத வேண்டும். பெரும்பான்மையான படங்களில் ஜீவன் இல்லை. இந்தப் படத்தில் தேறியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும். ஒரு விசேஷமுமில்லை என்று மட்டுமே படுகிறது. அதிலும், பாவனைகளைக் குறைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம் என்பதைச் சொல்லியாக வேண்டும். நல்ல படங்கள் இசையால்கூட ஃபோக்கஸ் ஆகாமல் கெட்டு குட்டிச்சுவராவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆஷிக் அபு இப்படத்தின் இயக்குநர். சமீபத்திய 'மாயாநதி'யைப் பார்த்து வியக்காதவர் இல்லை. எனக்கும் அவ்வளவு பிடித்த படமாக இருந்தது அது. அவர் வளர்ந்து, 'மாயாநதி' அளவுக்கு வந்துசேர இந்தப் படமெல்லாம் முக்கியக் காரணமாக இருந்திருக்கும். தெளிவான பார்வை, அசலான மனித உணர்வு, முதிர்ந்த ஆக்கம். ஆஷிக் அபு இன்னமுமே வளர்ந்த படங்களைத் தருவார் என்பதற்கு இதுவரை வந்த படங்களே சாட்சி.

பின்னணியில் கதை சொல்லி, தனது கதையைச் சொல்லி முடிக்கும்போது ஒரு முழக்கம்போல் இல்லாவிட்டாலும் ஒன்றை சாதாரணமான குரலில் சொல்கிறார். இது ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கைதான். அது சரியே. அவன் தன்னை சரியான இடத்தில் இருத்திக் கொள்ளவே வேண்டும். வேறு வழியே கிடையாது.

பின் செல்ல