Published:Updated:

``தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா?'' - ஜி.வி.பிரகாஷ்

தார்மிக் லீ
``தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா?'' - ஜி.வி.பிரகாஷ்
``தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா?'' - ஜி.வி.பிரகாஷ்

தமிழ்நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் கண்டிப்பாக ஜி.வி.பிரகாஷிடமிருந்து காரசார ட்வீட்டை நாம் எதிர்பார்க்கலாம். போஸ்ட் செய்யும் ஒவ்வொரு ட்வீட்டிலும் அவரிடம் இருக்கும் கோபம் புரியும். தற்போது நடந்து வரும் காவிரி பிரச்னையில் தொடங்கி நியூட்ரினோ பிரச்னை வரை அவரின் கருத்து என்ன என்பதை தெரிந்துகொள்ள அவரை தொடர்புகொண்டோம்.

``போராட்டத்துக்கு வந்தது எப்படி?''

``முதல்ல இருந்து மீம்ஸ், ட்வீட்ஸ்னு பண்ணிட்டுதான் இருந்தேன். அதுவும் இல்லாம நிறைய விஷயங்கள் செஞ்சுட்டுதான் இருந்தேன். ஜல்லிக்கட்டு டைம்ல நான் ஷேர் பண்ண மீம்ஸ் ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ணவங்க எல்லோரும், `நீங்க இதை வெச்சு ஒரு பாட்டு பண்ணுங்க, இந்தச் சூழலுக்குத் தகுந்த மாதிரியான ஒரு பாடல் கண்டிப்பா வேணும்'னு கேட்டாங்க. அப்போதான் நானும் அருண்ராஜாவும் சேர்ந்து `கொம்பு வெச்ச சிங்கம்டா’ சாங் பண்ணோம். உலகம் முழுக்க இருக்க தமிழ் மக்களுக்கு அந்தப் பாட்டு போய் சேர்ந்துச்சு. அப்போ சில பேர், 'நீங்க பாடல் மட்டும் பண்ணா போதாது, களத்துக்கு வாங்க'னு கேட்டாங்க. இப்படிதான் நான் இது உள்ள வந்தேன்.'' 

``காவிரி மேலாண்மை வாரியம் பற்றி என்ன நினைக்குறீங்க?''

``சுப்ரீம் கோர்ட் பிப்ரவரில தீர்ப்பு கொடுத்தாங்க. தமிழ்நாட்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கணும்னு சொன்னாங்க. அதை கர்நாடக அரசாங்கம் ஃபாலோ பண்ணலை. அதை அவங்ககிட்ட போய் கேட்கணும்னு அவசியமும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சா அவங்க முடிவு பண்ணுவாங்க. இந்த விஷயத்துல மூணு, நாலு தடவைக்கு மேல முடிவு வந்திருச்சு. கர்நாடக அரசாங்கம் இதுக்கு ஒரு சரியான தீர்வைக் கொடுக்கலைன்னா இதுக்கு மேலயும் கேட்கணும்னு அவசியம் இல்லை. ஏன் தமிழ்நாடு என்ன புறக்கணிக்கப்பட்ட ஒரு மாநிலமா? சர்வதேச விதிமுறைகள்படி ரெண்டு ஊருக்கு நடுவுல தண்ணி பிரச்னை ஏற்பட்டா அதுக்கு தகுந்த ஒரு முடிவை எடுப்பாங்க. நம்முடைய விவசாயத்தை நாம்தான் பாத்துக்கணும். பெட்ரோலுக்காகவே அவ்வளவு போராடும்போது சாப்பிடுற சாப்பாடுக்காவும் நாம் போராடணும். மத்திய அரசு கண்டிப்பா இதுக்கு ஒரு முடிவு பண்ணணும்.''

``ஸ்டெர்லைட் பிரச்னையில உங்க பார்வை என்ன?''

``மூன்று மாநிலங்கள்ல நிராகரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுல எதுக்காக கொண்டு வந்து திணிக்கணும், தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா? மக்களுக்கு புற்றுநோய் உண்டாக்குற ஒரு விஷயத்தை எதுக்காக பண்ணணும்னுதான் நான் ஃபீல் பண்றேன். அங்க இருக்கிற மக்களுக்கு கேன்சர் வந்ததுனாலதான் மக்கள் போராட்டம் நடத்துறாங்க. கண்டிப்பா ஸ்டெர்லைட்டை தடை பண்ணணும்.'' 

``நியூட்ரினோ?''

``இது ரொம்பத் தேவையான ஆராய்ச்சிதான். இதுக்காக அவங்க எடுத்துருக்க இடம்தான் ரொம்ப தவறான தேர்வு. ஜெர்மனியில இதுக்காக ஆராய்ச்சி பண்றவங்க, கடல்லேயும், பாலைவனத்துலேயும்தான் பண்றாங்க. நம்ம ஏன் இதை இயற்கை சூழ்ந்திருக்க இடத்துலேயும், மலைப் பகுதிகளிலேயும் பண்ணணும். இதுனாலதான் அங்க இருக்க சுற்றுப்புறம் சிதைந்து போகுது. இதுக்காக தண்ணீரை முல்லைப் பெரியார்ல இருந்து எடுக்குறாங்க. அதனால அதைச் சுற்றி இருக்கிற மாவட்டங்கள் பாதிக்கப்படும்.'' 

``மக்கள் கோவமெல்லாம் ஐ.பி.எல் மேல ஏன் திரும்பியிருக்கு?''

``ஐ.பி.எல் எங்களுக்கு வேணாம்னு சொல்லலை. உள்ள வர்றதுக்கு ஏன் இவ்வளவு ரூல்ஸ் போடுறாங்க. அவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்காக அந்த மேட்ச்சை பார்க்கணும். அப்படிங்கிற ஒரு கேள்விதான் எழுப்பப்படுதே தவிர, அதை வேண்டாம்னு யாரும் சொல்லலை.''