Published:Updated:

"வாடகை வீடு தேடுறவங்களின் கனவுக்குக் கிடைத்த விருது!" 'டூ லெட்' பட நாயகி ஷீலா

வி.எஸ்.சரவணன்
"வாடகை வீடு தேடுறவங்களின் கனவுக்குக் கிடைத்த விருது!" 'டூ லெட்' பட நாயகி ஷீலா
"வாடகை வீடு தேடுறவங்களின் கனவுக்குக் கிடைத்த விருது!" 'டூ லெட்' பட நாயகி ஷீலா

65-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில், தமிழின் சிறந்த திரைப்படமாக, `டூ லெட்' படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என சினிமா ரசிகர்கள் கணித்திருந்தனர். காரணம், சென்ற ஆண்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வ தேசிய திரைப்பட விழாவில், சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. `டூ லெட்' பட இயக்குநர் செழியன், தமிழ்த் திரை உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர். பல விருதுகளைப் பெற்றவர்.

`டூ லெட்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காகப் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர், ஷீலா. பரதநாட்டியக் கலைஞரான ஷீலா, நாடக நடிப்பிலிருந்து திரைக்கு வந்தவர். ஜீ தமிழின் `அழகிய தமிழ்மகள்' சீரியலில் நாயகியாகப் பல குடும்பங்களில் ஓர் உறுப்பினராக வலம்வருபவர். படப்பிடிப்பில் இருந்த அவருடன் பேசினோம்.

``நீங்கள் நடித்த படத்துக்கு விருது கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள்"

``ரொம்ப நன்றி... இந்த விருது நம்பிக்கையுடன் எதிர்பார்த்ததுதான். காரணம், செழியன் சார் எழுதிய கதை. நாட்டில் எந்த ஒரு பிரச்னை வந்தாலும், அதிகம் பாதிக்கப்படுவது மிடில் கிளாஸ் மக்கள்தான். மேலேயும் போகமுடியாமல், கீழேயும் வரமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் படம் நெருக்கமானதாக இருக்கும். சொந்த வீடு இல்லாது பிழைக்க வந்த எல்லோரின் கனவுக்குக் கிடைத்த விருதாக இதைப் பார்க்கலாம்.''

`` `டூ லெட்' படத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?"

``ஓவியர் மருது சார், `செழியன் சார் படத்தில் என்னை நடிக்கவைப்பது தொடர்பாகப் பேசியதைச் சொல்லியிருந்தார். அதனால், நான் `டூ லெட்'டில் நடிப்பது செழியன் சார் சொல்வதற்கு முன்பே எனக்குத் தெரிந்துவிட்டது. பிறகு, அவர் கதை மற்றும் என் கேரக்டர் எப்படியானது என்பதை டீடெய்லாகச் சொன்னார். வாடகைக்கு வீடு தேடுவதில் சிரமப்பட்ட அனுபவங்கள் எனக்குமே நிறைய உண்டு. வாழ்க்கை நம்மை எந்த இடத்துக்குக் கொண்டுபோகுதோ போகட்டும் எனும் மனநிலைகொண்ட கேரக்டர் எனக்கு. இந்த வாய்ப்பை அளித்ததற்குச் செழியன் சாருக்கு மனார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துகொள்கிறேன்."

``படத்தில் உங்களோடு நடித்தவர்கள் பற்றி சொல்லுங்களேன்..."

``படத்தில் மூன்றே மூன்று பேர்தான் நடித்திருக்கிறோம். சந்தோஷ் ஒரு கேமராமேன். நடிப்பது அவருக்குப் புதிது. ஆனாலும், அது தெரியாத வகையில் இளங்கோ எனும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார். செழியன் சாரின் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் கவித்துவத்துடன் பதிவாக்கியுள்ளார்."

`` `டூ லெட்' பற்றி சில வரிகள்..."

``ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு வீடு தேடுவதுதான் டூ லெட் படத்தின் மையம். அதில் இருக்கும் சிக்கல், அரசியல் என நம் வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பார்ப்பதுபோல இருக்கும். பரபரப்பான காட்சிகள் இருக்காது. ஆனால், `இவர்களுக்கு எப்படியாவது வீடு கிடைத்துவிட வேண்டும்' என்ற உணர்வைப் பார்வையாளர்களிடம் உண்டாக்கும்.''

``திரைப்படங்களில் என்ன விதமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?"

``பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களாக இருந்தால் நல்லது. `டூ லெட்' நடிக்கும்போதே, மேக்கப் போடாமல் நடிப்பது பற்றி தெரிந்து கவலையோடு விசாரித்தார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு கேரக்டரின் தன்மையை ஆடியன்ஸுக்கு வெளிகாட்டத்தான் மேக்கப் என நினைக்கிறேன். அதனால், அவர்கள் சொன்னவை என்னைப் பாதிக்கவில்லை. இன்னும் சிலரும் பெண்களை மையப்படுத்தி, அழுத்தமான கதைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் படத்துக்கு விருது கிடைத்திருப்பதன் மூலம், அந்தக் கதைகள் விரைவில் திரையாகும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது."