Published:Updated:

"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன்.

"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன்.
"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன்.

இந்த ஆண்டு சிறந்த தேசிய விருது வென்ற டூ-லெட் படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜனின் பேட்டி.

"நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இடையிடையில சினிமா வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன்." ஆர்வமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், தேசிய விருது வென்ற 'டூ-லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். 

"கணவன்-மனைவி இரண்டு பேர் வீடுதேடிப் போறதுதான் 'டூ-லெட்' படக்கதைனு சொல்றாங்களே..."

"2007-ல மென்பொருள் துறை தாக்கதுனால சென்னையில ஏற்பட்ட மாற்றங்களை மையமா வெச்சுப் படம் எடுக்கப்பட்டிருக்கு. அதாவது, ஐ.டி துறையினால சென்னையில ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கு. மக்கள் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்குக் குடியேறுனாங்க. பொருளாதாரக் காரணமாக சென்னைக்குள்ள அவங்களால குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாச்சு. வேலை சென்னைக்குள்ள இருக்கும். ஆனா, வீடு சென்னைக்கு வெளிப்புறத்துல இருக்கும். அந்தமாதிரி நானும் இந்தப் படத்துல என் மனைவியா நடித்த ஷீலா ராஜ்குமாரும் வீடு தேடிப் போவோம். எங்களுக்கு ஒரு மகனும் இருப்பான். இந்தச் சவாலை எப்படி சமாளிக்கிறோம், எங்களோட வாழ்க்கைத் தரம் என்ன என்பதுதான் கதை." 

"சுயாதீனப் படங்களுக்குப் பின் இருக்குற போராட்டத்தைப் பற்றி சொல்லுங்க..."

"சுயாதீனப் படங்கள் ஓடாதுனு பரவலான ஒரு கருத்து இருக்கு. கமர்ஷியல் ஹீரோவை வெச்சுப் பல கோடி செலவுல படம் பண்றதைவிட, ஒரேயொரு படம் கதைக்காக பண்ணலாம். அதோட ரீச் நமக்கு வேற லெவல் பக்குவத்தைக் கொடுக்கும். தமிழ்ல சுயாதீனப் படங்கள் (Independent movies) மிகக் குறைவு. இந்தப் படம் விருது வென்றதன் மூலமா, சுயாதீனப் படங்கள் தமிழ்ல அதிகரிக்கலாம். தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எல்லாமே செழியன் சார்தான் பண்ணியிருக்கார். உண்மையான உழைப்புக்கும் திறமைக்கும் கிடைச்ச அங்கீகாரமாகத்தான் இதைப் பார்க்குறேன்."

"செழியனோட வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

"ஒரு இயக்குநரா செழியன் சாரோட முதல் படம் 'டூ-லெட்'. சார் இயக்குநரா ஆகணும்னு நெனைச்சுத்தான் சினிமாவுக்கு வந்தார். நிறைய கமர்ஷியல் படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அவற்றை மறுத்துட்டார். நல்ல கதையை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கணும்ங்கிற எண்ணம் மட்டும்தான் சாருக்கு இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு சாரோட சொந்த செலவுல இந்தப் படத்தை எடுத்திருக்கார். 

செழியன் சாரோட உதவியாளர்கள்தான் இந்தப் படத்துலேயும் வேலை செய்திருக்காங்க. சில கமர்ஷியல் படங்களுக்கு இடையிலும், இந்தப் படத்துல வேலை செஞ்சதுக்காக அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம். 2003-ல இருந்தே செழியன் சாரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட 13 வருட நட்பு. 2005-ல நான் அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். 'கல்லூரி', 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி' ஆகிய படங்கள்ல சாரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். இந்தப் படங்கள்ல வேலை பார்க்கும்போது, ஹீரோவோட காட்சிகளின் ஷாட் டெஸ்டுக்காக நான்தான் கேமரா முன்னாடி போய் நிற்பேன். அதுக்காகவே இந்தப் படத்துல என்னை ஹீரோவாக்கிட்டார்.

சினிமா தவிர்த்து பெர்சனல் விஷயங்களைப் பேசினால்கூட, அதுக்கு ஏற்ற மாதிரி அறிவுரைகளைக் கொடுப்பார். வெளிய இருக்கும்போது சார்னு சும்மா பெயருக்குக் கூப்பிடுவேன். உண்மையிலேயே செழியன் சார் எனக்கு அண்ணன் மாதிரி."

"படத்தைத் தியேட்டர்ல ஏன் வெளியிடலை?"

"ஆன்லைன்ல படங்களை வெளியிடுவதற்கான வசதி நம்மகிட்ட இருக்கு. அதனால, வர்த்தக ரீதியா இந்த மாதிரியான படங்கள் வெற்றியடையுமாங்கிற பயம் எங்களுக்கு இல்லை. இந்தப் படத்தை முதல்ல ஆன்லைன்ல ரிலீஸ் பண்ற ஐடியாவுலதான் இருந்தோம். இப்போ ரெஸ்பான்ஸைப் பார்த்தப் பிறகு, ஸ்டிரைக் முடிந்ததும் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு முடிவுக்கு வந்துருக்கோம். என்னைப் பொருத்தவரை, கதையும் கதை சொல்ற விதமும்தான் முக்கியம். ஹீரோ முக்கியமே இல்லை. இந்தப் படத்துல வேலை பார்த்தவங்க எல்லாருமே புது ஆட்கள்தான். உலகளவுல அங்கீகரிக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா இது. 'விசாரணை', 'காக்கா முட்டை', 'அருவி' போன்ற படங்கள்கூட, 'டூ-லெட்' அளவுக்கு அங்கீகரிக்கப்படலை. 

"இதுவரை எந்தெந்த ஃபிலிம் பெஸ்டிவல்ல இந்தப் படம் விருது வாங்கியிருக்கு?"

"கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், ஹ்யூமன் ரைட்ஸ் அவார்ட்ஸ், கொலம்பியா இன்டர்நெஷனல் காம்படீஷன், நியூயார்க் இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவல், இந்திய தேசிய விருது உட்பட இதுவரை 12 விருதுகள் வாங்கியிருக்கு. அடுத்ததா எனக்குப் படம் பண்ணனும்னு ஆசை. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து அதுக்கான திட்டங்களை உருவாக்கிக்கிட்டு இருக்கோம்." என்று நம்பிக்கையுடன் முடித்தார், சந்தோஷ் நம்பிராஜன்.  

அடுத்த கட்டுரைக்கு